பொதுவாகக் கம்யூனிஸ்டுகள் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதில்லை. குறிப்பாக, பிறந்த நாளுக்காக பகிரங்கமாக விழாக்களை நடத்த ஒப்புவதில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியில் தனிப்பட்ட எவர் ஒருவருக்கும் பகிரங்க விழா எடுத்துக் கொண்டாடுவது அரிது! அரிதிலும் அரிது! காரணம் கம்யூனிஸ்டுகளின் சிந்தனை தனிநபர் வழிப்பட்டதல்ல, தத்துவ வழிப்பட்டது; கம்யூனிஸ்டுகளின் செயல்படும் முறை குரு - சிஷ்யன் முறையிலான குருட்டு வழிப்பயணமல்ல; கோட்பாட்டு ரீதியானது. தனிமனிதனின் செயல்பாட்டு எல்லைகளை முற்றிலும் முழுக்க உணர்ந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.
மனித குல வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் எத்தகையது என்ற சமுதாய விஞ்ஞானத்தைப் பயின்றவர்கள்; பயின்று தெளிந்தவர்கள்; தெளிந்து அறிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.
தனிநபரின் ஒவ்வொரு போக்கையும், அவர்களது சில குறிப்பான காரணங்களும்தான் தீர்மானிக்கின்றன என்ற அறிவியல் உண்மைகளை நன்கு அறிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.
விஞ்ஞானக் கம்யூனிசத்தின் மூலவர் தோழர் கார்ல் மார்க்ஸ் 1877 நவம்பர் மாதம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது ஆழ்ந்த அக்கறைக்குரியதாகும்.
... தொழிலாளர் அகிலம் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, என்னுடைய பணிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து; பல்வேறு நாடுகளிலிருந்து வந்த ஏராளமான பாராட்டுக்கள் என்னை சலிப்பூட்டி அருவருப்படையச் செய்ததை எல்லாவிதமான தனிநபர் வழிபாட்டையும் வெறுத்துப் பகைக்கிற நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன் - நான் அவற்றிற்கு ஒருபோதும் பதில் எழுதியது கூட இல்லை.
சில நேரங்களில் இவற்றைக் கண்டித்து எங்கல்சும் கம்யூனிஸ்டுகளின் ரகசிய சங்கத்தில் முதலில் சேரும்போது மூடத்தனமாக, அதிகாரத்திற்கு முன் அடிபணியத் துணைசெய்யும் சங்க விதிகளின் அனைத்துப் பகுதிகளையும் எடுத்து வீசி எறிந்து விடவேண்டும் என்று கண்டிப்பான நிபந்தனை விதித்தே அதில் சேர்ந்தோம்.
தோழர் மார்க்சின் மேற்கண்ட கடிதவரிகள் தனிநபர் வழிபாட்டுக்கு எதிராக கனல் கக்கின.
தோழர் மார்க்ஸ் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் தோழமை அமைப்பை கறாரான ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில்தான் தோற்றுவித்தார். மார்க்சியத்திற்கு முற்றிலும் அந்நியப்பட்ட, தனிநபர் வழிபாட்டிற்கு இட்டுச் செல்லும் எல்லாவற்றையும் தீர்மானகரமாகத் தடுத்து நிறுத்தினார்கள் மார்க்சும், எங்கல்சும் என்பதை, அவர்களது வாழ்வும், படைப்புகளும் ஐயம் திரிபற நிரூபித்துள்ளன.
தோழர் ஏங்கல்சிற்கு 1890இல் 70 வயதாயிற்று, அப்போது லண்டன் கம்யூனிஸ்டு தொழிலாளர் கல்விக் கழகத்தினுடைய சங்கீதக் குழுவினர் இந்த எண்ணத்தை உடனடியாகக் கைவிட்டு விடுமாறு உறுதிபடத் தெரிவித்து விழாக் கொண்டாட்டங்களைத் தடுத்து நிறுத்தினர்.
அத்தோடு சம்பந்தப்பட்ட இசைக் குழுவிற்குக் கீழ்க்கண்ட செய்தியினையும் அனுப்பி வைத்தார் தோழர் எங்கல்ஸ்.
தனிப்பட்ட மனிதர்களுக்காக பகிரங்க விழா எடுப்பதை நானும் மார்க்சும் எப்போதும் எதிர்த்தே வந்துள்ளோம். அதன் மூலம் ஏதாவதொரு பொதுக் குறிக்கோள் நிறைவேறுகிறது என்பது உறுதியானால், இதுபோன்ற விழா அனுமதிக்கப்படலாம்.
ஆனால், எங்களைப் பற்றிய கொண்டாட்டங்களை எங்கள் வாழ்நாளில் நடப்பதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம், என்று தெளிவுபடுத்தினார் தோழர் ஏங்கல்ஸ்.
தனிநபர் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக விஞ்ஞானக் கம்யூனிசத்தின் மூலவர்கள் அன்று முழங்கிய போர் முரசு இன்றுவரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
சோவித் யூனியன் கம்யூனிஸ்ட் (CPSU) கட்சியின் 20-ஆவது கட்சிக் காங்கிரஸ் தோழர் ஸ்டாலின் காலத்திய தனிநபர் வழிபாட்டு முறைகளுக்கு எதிரான நிலையை உறுதியாக மேற்கொண்டதை நாம் மறந்துவிட முடியாது.
இதன் ஒளியில் நின்று செயலாற்றிய இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தனது 7-ஆவது கட்சிக் காங்கிரசின் ஸ்தாபனத் தீர்மானத்தில் ஸ்டாலின் தனிநபர் வழிபாட்டுப் பிரச்சினையைக் கிளப்பியதன் மூலமும், தன்னுடைய 20-வது கட்சிக் காங்கிரசில் அதை எதிர்த்து உறுதியாகப் போராடியதன் மூலமும் சோவித் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மகத்தான சேவை புரிந்தது எனப் பாராட்டு தெரிவித்தது.
மேலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 7-வது கட்சி காங்கிரசின் ஸ்தாபன அறிக்கையின் 6-வது பகுதி தனிநபர் வழிபாடு குறித்த பகுதியாகும்.அதில் 7 பக்கங்கள் தனிநபர் வழிபாடு குறித்து விரிவாக, ஆழமாக பல்வேறு எச்சரிக்கைகளை முன் வைத்து வழி காட்டியுள்ளது.
அந்த வழிகாட்டுதல்தான் இன்றுவரை கம்யூனிஸ்டுகளை வழி நடத்துகிறது. கம்யூனிஸ்டுகளின் இத்தகைய வரலாற்றுப் பாரம்பரியங்களை நிகழ்கால இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்வது அவசியமானதாகும்.
நமது கம்யூனிஸ்ட் பாரம்பரியம் தனிநபர்களுக்கு பகிரங்கமாக விழா எடுப்பதற்கு எதிரானதல்ல, தனிநபர் வழிபாட்டிற்கு மட்டுமே எதிரானதாகும். எந்த வகைப்பட்ட தனிநபர் வழிபாடும் மார்க்சியத்திற்கு அந்நியப்பட்டதே ஆகும். அதை உறுதியுடன் எதிர்த்துப் போராடியாக வேண்டும்.
பகிரங்கமாக விழா எடுப்பது கட்சிக்குப் புதியதல்ல; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சில தலைமைக் குழுத் தோழர்களுக்கு விழா எடுத்ததுண்டு. ஆனால், அவை விரல் விட்டு எண்ணத்தக்க சுருக்கமான எண்ணிக்கை கொண்டதாகும்.
பொது நோக்கங்கள் ஏதாவது ஒன்றை நிறைவேற்றும் பொருட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்க விழாக்களை நடத்த முடிவு செய்ததுண்டு.
அதுபோன்ற ஒரு முடிவின் அடிப்படையில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு கட்சியின் மாநிலக் குழு இந்த விழாவை நடத்துகிறது. விழாவையட்டி ஒரு மலர் வெளியிடுகிறது.
மலரில் தகைசான்ற பெருமக்கள் பலரும் கட்டுரைகள் எழுதியுள்ளனர். விளம்பரங்களும் பெருமளவில் குவிகின்றன. இதில் கிடைக்கிற தொகை கட்சிக்கும், ஜனசக்திக்கும் போய்ச் சேருகிறது. இப்படி ஒரு நல்ல நோக்கத்திற்கு இந்த விழா பயன்பட்டிருக்கிறது.
தோழர் தா.பா. அவர்களுக்கு அகவை 80 நிறைவடைந்து விட்டது. அவரோடு எனது உறவும், தொடர்பும் நெடியது; நிறைந்த அனுபவங்களைக் கொண்டது; அடர்த்தி நிறைந்தது; அது பற்றி விரித்து எழுத இந்த மலர் பொருத்தமானதல்ல.
என்றுமே ஆரவாரங்களை, ஆடம்பர ஆலவட்டங்களை தனது அரசியல் வாழ்வில் அவர் அனுமதித்ததில்லை. எளிய தோற்றத்தோடு தமிழகமெங்கும் ஓய்வறியாது அவர் உலா வந்து கொண்டிருப்பதை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகம் நன்கு அறிந்தே இருக்கிறது.
அவரது பேச்சும், எழுத்தும் தமிழகத்திற்கு அவரை மிகச் சிறப்பாக அடையாளம் காட்டின.அரசியலோ, இலக்கியமோ, அல்லது ஏதாவதொரு சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளிலோ ஆழம் காணமுடியாத அவரது அறிவை, அரங்கேற்றுவதாக அவரது பேச்சும், எழுத்தும் விளங்கின.
அவரது பேச்சை மண் தரையில் முன்வரிசையில் அமர்ந்து உணர்ச்சி பொங்க மெய்மறந்து கேட்ட அந்தக் காலம் முதல், அவரோடு இணைந்து நின்று கட்சிப் பணியாற்றுகிற இந்தக் காலம் வரை எத்தனை எத்தனை இனித்த நினைவுகள்! எத்தனை எத்தனை அறிவார்ந்த விவாதங்கள்! எத்தனை எத்தனை கேலியும் கிண்டலுமாக கரைந்த உரையாடல்கள்! அவை எல்லாம் எனக்கு நினைவுக் குகைக்குள் பதுங்கிக் கிடக்கின்றன!
கவிஞர் சிற்பி சொன்னது போல் எத்தனை கால சருகு சண்டுகள் மூடி மறைப்பினும் நினைவுகளுக்கு மரணமில்லை.
(தோழர் தா.பாண்டியன் 80வது ஆண்டு சிறப்புமலர்)
- கே.சுப்பராயன்