thapandian mutharasanஇந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்ற முழக்கம் 1965இல் மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் எழுப்பிய முழக்கம்.

கல்வி நிலையங்கள் அனைத்திற்கும் விடுமுறை. ஊரில் சென்று என்ன செய்வது, சும்மா இருக்க முடியுமா? இந்தி ஒழிக, தமிழ் வாழ்க, உயிர் மண்ணுக்கு உடல் தமிழுக்கு என்ற முழக்கம் கிராமத்திலும் ஒலித்தது.

ஊர் மாணவர்கள் பத்து, பதினைந்து பேர் திரண்டு, ஊர்வலம்; ஊர்வலம் செல்லும் வழியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் வீடு; வீட்டைக் கண்டதும் ஆவேசம்.முழக்க சத்தம் முன்னைக் காட்டிலும் வேகமெடுக்கின்றது. காரணம் கம்யூனிஸ்ட் கட்சி இந்திக்கு ஆதரவான, தமிழுக்கு எதிரான கட்சி என்ற கருத்து மற்றவர்களிடம் குடிகொண்டிருந்தது.

ஜனசக்தி வார ஏட்டில் கடைசி பக்கம் சவுக்கடியில் மொழிப் பிரச்சினை குறித்தும், தமிழ் மொழி வளர்ச்சிக்குக் கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றிய பணிகள் குறித்தும் இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது என்பதில் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் குறித்தும் தொடர்ந்து தா.பா. எழுதி வந்த கட்டுரைகள் மூலம், கட்சி மீது கொண்ட கருத்து தவறானது என்பதனை உணர்த்தியது.

குடந்தையில் நடைபெற்ற மாநில அரசியல் மாநாட்டில் முதன் முதலாக அவரது சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது!

அம்மாநாட்டில் பேசிய ஓர் இளைஞர், சிறந்த எழுத்தாளர், பேச்சாளரும் ஆவார்.

அவர் உரையாற்றும்போது நமது கட்சியில் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சென்று சம்பாதித்தது போதும்; தொழிலைவிட்டு கட்சிக்கு முழு நேரமாகப் பணியாற்ற வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்துப் பேச வந்தவர், தோழர் கூறிய கருத்தை ஏற்கிறேன்.இனி முழு நேர ஊழியராகப் பணியாற்றுகிறேன் என முன்னவரின் வேண்டுகோளை ஏற்றார். வேண்டுகோள் விடுத்தவர் தம்பி தா.பொன்னிவளவன். ஏற்றவர் அண்ணன் தா.பாண்டியன்!

மிகச் சிறந்த தோழன் தா.பொன்னிவளவனை நம்மிடம் இருந்து இயற்கை அநியாயமாகப் பறித்துக் கொண்டது.

1967 தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. மாணவர்கள், இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாமல் போய்விட்டார்கள் என்பது போன்ற ஓர் மாயத்தோற்றம் நிலவிய நிலையில், வேலையின்மை எதிர்ப்பு மாநாடு மதுரையில் 1969இல் நடைபெற்றது.மாநிலம் முழுவதும் இருந்து இளைஞர் பெருமன்றத் தோழர்கள் மிகுந்த எழுச்சியோடு பங்கேற்றனர். மாலையில் மாபெரும் பொதுக்கூட்டம்.

பொதுக் கூட்டத்திற்குத் தோழர் வி.எஸ்.காந்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் எம்.என். கோவிந்தன் நாயர்.

கூட்டத் தலைவர் வி.எஸ்.காந்தி தோழர் தா.பாண்டியன் நான்கு, ஐந்து நிமிடங்கள் பேசுவார் என்றார்!

தலைவரின் அறிவிப்பு, கூடியிருந்த ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்குப் பெரும் ஏமாற்றமாய் இருந்தது.

தோழர் தா.பா. மைக் முன்நின்று, தனது இடக்கையில் கட்டியிருந்த கடிகாரத்தை கழற்றி வலக் கையில் தனது முகத்திற்கு நேராகப் பிடித்துக் கொண்டு தலைவர் நான்கு, ஐந்து நிமிடங்கள் பேசுவார் என்று குறிப்பிட்டார்.

ஆம் நான்கும், ஐந்தும் கூட்டினால் ஒன்பது நிமிடங்களில் எனது உரையை முடிக்கின்றேன் என்று அறிவித்து கிடைத்த ஒன்பது நிமிடத்தில் ஒன்பது மணி நேரத்தில் சொல்ல வேண்டிய கருத்தை சுருக்கமாக, அதே வேளையில் ஆவேசம் பொங்கப் பேசி முடித்த போது பேய் மழையும் பெய்து நின்றது போல் இருந்தது.உரை கேட்ட இளைஞர்களின் ஆரவாரம் அடங்க பல நிமிடங்கள் பிடித்தன.

அடுத்துப் பேசிய தோழர் எம்.என் கோவிந்த நாயரின் ஆங்கில உரையைத் தமிழாக்கம் செய்தவரும் தோழர் தா.பா.வே.

மாணவர்களை - இளைஞர்களை பெருமளவில் அணிதிரட்டுவதில் மட்டுமல்ல, நம்பிக்கையூட்டுவதிலும் வெற்றி கண்டார்.

பொதுக் கூட்டங்களில் சிறப்புப் பேச்சாளர் மேடையில் இருப்பார். முன்னால் பேசும் உள்ளூர்ப் பேச்சாளர்கள், சிறப்புப் பேச்சாளர் பற்றிக் கவலைப்படாது, உலக, தேசிய, மாநில அரசியல் என பேசிக் கொண்டே இருப்பார்கள்.

சிறப்புப் பேச்சாளர் முகம் சுளிப்பார், முகம் கடு கடு என்று இருக்கும்.இவற்றைப் புரிந்துகொண்ட மாவட்டச் செயலாளர்கள் என்ன செய்வது என்று அறியாது கைப் பிசைந்து நிற்பார்கள். இத்தகைய நிலையை இன்றும் நாம் காணலாம்.

இவைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் தோழர் தா.பா. முன்னாள் பேசுபவர்கள் என்ன பேசினாலும் எவ்வளவு நேரம் பேசினாலும் அதனைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாது, முகம் சுளிக்காது இருப்பார். அவரைப் பேச அழைக்கும் போது, முன்னவர்கள் கூறிய செய்திகளைத் தொடர்ந்து புதிய செய்திகளைக் கூறிடுவார்!

இவரிடம் மிகுந்து நிற்பது எது? அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது எது? என்பதே முக்கியப் பிரச்சினை. ஒன்று அரசியல் ஆர்வம், இரண்டு தன்னம்பிக்கை, இவையிரண்டையும் அவரிடம் இருந்து அனைவரும் பாடம் படிக்க வேண்டும்.

அவருக்கு உள்ள அரசியல் ஆர்வம் என்பது சாதாரணமானதல்ல! அரசியல் ஆர்வம் எளிதாக எல்லோருக்கும் வந்து விடக்கூடியதுமல்ல.

கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.

என்கிற குறளை அடிக்கடி தா.பா. பயன்படுத்துவார்! பயன்படுத்துவது மட்டுமல்ல, வள்ளுவப் பெருந்தகை கூறியது போல் கற்றார், கசடறக் கற்றார். கற்றுத் தெளிந்தது மட்டுமல்ல, நிற்க அதற்குத் தக என்பதிலும் உறுதிபட உள்ளார்.

தந்தை பெரியார் பொதுக்கூட்டத்தில் பேசி முடிக்கும் போது தான் கூறிய கருத்துக்களைக் கேட்ட நீங்கள், அவைகள் சரியானதா என்று நீங்களே சிந்தித்து முடிவெடுங்கள், சரியெனப் பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள், ஏற்றுக் கொண்டவர்கள் என்னுடன் வாருங்கள் என்று கூறுவார்.

தான் படித்த தத்துவத்தை ஏற்றார் - ஏற்றது மட்டுமல்ல, எம் தாய் மண்ணில் வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பணியாற்றுகின்றார் - சாதாரண முறையில் அல்ல - ஆர்வத்தோடு, சாதாரண ஆர்வத்துடன் அல்ல உணர்வுபூர்வமான ஆர்வத்தோடு, இவரது ஆர்வத்துடன் எவரும் போட்டியிட முடியாது என்ற நிலையில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றார்.

முடிவு எடுப்பது மிகச் சுலபம், செயல்படுத்துவது கடினம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!

முடிவு எடுத்துவிட்டால் அதனைச் செயல்படுத்திட அவர் மேற்கொள்ளும் முன் முயற்சிகள் சாதாரணமானவையல்ல, சாதிக்கும் வரை சளைக்காமல் உழைப்பார். இங்கேயும் அவர் வள்ளுவர் கூறிய,

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

என்ற குறளோடு இணைந்து நிற்பவர். நம் எல்லோருக்கும் இருப்பதுபோல் அவருக்கும் இரண்டு கால்கள்தான் உள்ளன.ஆனால் அவரது பாதங்களில் ஆயிரம் சக்கரங்கள் உள்ளன.அச்சக்கரங்கள் உருண்டு கொண்டே இருக்கின்றன.சக்கரங்கள் ஓடாமல் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தாலும் நிறுத்த முடியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தோழர் ஆர்.நல்லகண்ணு உட்பட அனைத்து உறுப்பினர்களும் இருந்தார்கள். கூட்டம் தொடங்கியவுடன், கூட்ட நிகழ்ச்சி நிரல் குறித்துக் கூறும்போது தனக்கு இரண்டு மாதம் விடுப்பு வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் உள்ள தோழர்கள் அதிர்ந்தனர். ஏன், எதற்கு விடுப்பு எனக் கேட்டனர்.

என் மனைவிக்கு உடல்நலமில்லை; மிக மோசமாக இருக்கின்றது. என்னைத் தவிர மற்றவர்கள் உதவி செய்வதை அவர் ஏற்கவில்லை. நானும் எல்லா வைத்தியமும் செய்து விட்டேன்.

இதற்கு மேல் வைத்தியமும் இல்லை என டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். ஆகவே உடன் இருந்து நான் உதவிட வேண்டும். அதற்குத்தான் விடுப்பு கேட்டேன் என்றார். அவரது மனைவி கடும் நோய்வாய்ப் பட்டிருப்பதே அன்றுதான் தோழர்களுக்குத் தெரிய வந்தது.

விடுப்பு எடுக்க வேண்டாம், வெளியூர்ப் பயணங்களை முழுமையாக ரத்து செய்துவிட்டு சென்னையிலே இருங்கள், அலுவலகம் மட்டும் வந்து செல்லுங்கள், மற்ற பணிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினோம்.

அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். ஆனால் முன்னைக் காட்டிலும் அதிக நாட்கள் வெளியூர்ப் பயணத்தை மேற்கொண்டார். அவரது கைப்பை சற்றுப் புடைப்பாக இருக்கும், திறந்து பார்த்தால் இரயில் பயண டிக்கெட்டுகளே பை நிரம்ப இருக்கும். சளைக்காத சுற்றுப்பயணம்.

அவர் கற்ற வள்ளுவனை, பாரதியை, பாரதிதாசனை, பட்டுக்கோட்டையை, மார்க்ஸை, ஏங்கல்சை, லெனினை, ஸ்டாலினை, மாவோவை, ஹோசிமின்னை, காஸ்ட்ரோவை வியாபாரப் பொருளாக்கி மேடைக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என விலை பேசி விற்கவில்லை.

மாறாக, பட்டிதொட்டி எங்கும் சென்று பாமர மக்களுக்காக, உழைப்பாளி மக்களுக்காக, ஒதுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக, விவசாயிகளுக்காக, விவசாயத் தொழிலாளர்களுக்காக சிம்மக் குரல் எழுப்பிப் போர்ப் பிரகடனம் செய்யும் போர்ப்படைத் தளபதியாக விளங்குகின்றார்.

அவரை நோக்கி அம்புகள் வீசப்படுகின்றன.பல முனைகளில் இருந்தும் அம்புகள் வருகின்றன. அவரை மட்டுமே குறி வைத்து வருகின்றன. ஏன் வருகின்றன?

அவர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கையால் பலரது உண்மையான முகவிலாசங்கள் வெளிச்சத்திற்கு வந்து விட்டன. இனியும் தங்களால் தப்பமுடியாது என்பதனை நன்கு புரிந்து கொண்டவர்கள் அம்பை விடுகின்றனர். ஆனால் அவர்கள் விடும் அம்பு முறிவது மட்டுமல்ல, விட்டவர்களைத் திருப்பித் தாக்குகின்றது.

வயதால் மட்டுமல்ல, கல்வியால், உழைப்பால், பேச்சால், எழுத்தால், தளராத தன்னம்பிக்கையால் உயர்ந்து நிற்கின்றார்! மேலும் உயர்ந்தே நிற்பார்! வரலாறு சொல்லும் அவரது போக்கை.

(தோழர் தா.பாண்டியன் 80வது ஆண்டு சிறப்புமலர்)

- ஆர்.முத்தரசன்

Pin It