சமதர்மம்

தோழர்களே! இன்று இக்கூட்டத்தில் "சமதர்மம்" என்னும் பொருள் பற்றிப் பேசும்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். சமதர்மம் என்பதற்குப் பலவேறு தேசங்களிலும், சமூகங்களிலும் பலவேறு அர்த்தத்தில் வழங்கி வருகிறது. சமதர்மம் என்பது சிற்சில இடங்களில் மதத்துக்கும், சில இடங்களில் கடவுளுக்கும், பிறிதும் சில இடங்களில் பணக்காரனுக்கும், புரோகிதனுக்கும் விரோதம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பொதுவாக இன்று சமதர்மம் என்னும் சொல் நாட்டிலுள்ள ஏழை மக்களின் உள்ளத்திலே கிளர்ச்சியூட்டி ஆவலோடு சமதர்மமொன்றே தங்களின் வாழ்வை இன்பமயமாக்கும் என்கின்ற மனப்பான்மையை உண்டாக்கி யிருக்கிறது. ஆகவே இன்று சமதர்மத்தை உச்சரிப்பது மிக சகஜமாகப் போய் விட்டது. சமீபத்தில் ராஞ்சியிலும் பாட்னாவிலும் கூடிய சமதர்மவாதிகளால் சமதர்ம திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. காந்தியாரும் கூட சமதர்மம் ஆ÷க்ஷபகரமானதல்ல என்கிறார். தோழர் ஜவஹர்லால் தான் சமதர்மவாதி என்றும், மக்கள் சமூக நலனுக்கேற்றது சமதர்மம் ஒன்றே என்றும் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். மனித சமூகத்தில் 100க்கு 90க்கு மேற்பட்ட பாமர மக்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள் பூராவும் இன்று இக்கொள்கை வளம் பெறும் நாளை எதிர்நோக்கி நாவூர ஏங்கிக் கோறி நிற்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மை.periyar anna 501சமதர்மம் என்றால் சாதாரணமாக பாரபக்ஷமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால் இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல்கீழ்நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து, யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால் மதக்காரர்களுக்கும் கடவுள் நம்பிக்கை கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி மக்கள் உடல் வருந்தியுழைத்த பின்னும் குடிக்கக் கூழின்றியும் கட்டக் கந்தையின்றியும், குடி இருப்பதற்கு ஓட்டைக் குடிசைகூட இல்லாமல் பரிதவிக்கும் பொழுது எந்தவிதமான வேலையும் செய்யாது பணக்காரனாக இருக்கின்ற சந்தர்ப்பத்தால் அக்கிரமமாக அநீதியாக தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, தான் மட்டும் படாடோபமாக டம்பாச்சாரித்தனமாக வீண் விரையமாக்குவது சரியல்ல.

எல்லோரும் கஷ்டப்பட்டு வேலை செய்து பலனை எல்லோரும் சமமாக அநுபவிக்கலாம் என்று சொன்னால் அது முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும், ஜமீன்தார், மிட்டாதார் முதலியவர்களுக்கும் விரோதம் என்று வீண் கூக்குரலிடப்படுகிறது. சாதாரணமாக இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அது போலவே ஒரு கிராமம், ஒரு ஜில்லா, ஒரு மாகாணம் அல்லது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், உள்ள பூமியும் பொருளும் எல்லாம் குடும்ப பொதுச்சொத்து போல் எல்லா மக்களுக்கும் பொதுவாகிய அக்குடும்பத்துக்குச் சொந்தமே அன்றி தனித்தனியாக அவனவன் இஷ்டம்போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கொரு வேலை செய்து உண்டு, உடுத்தி, இன்பவாழ்வு வாழ வேண்டுமென்பதுதான் சமதர்மம். மற்றபடி இதில் பயப்படத்தக்க காரியமும் புரியாத காரியமும் இல்லை.

இந்த சமத்துவமான வாழ்க்கை வேண்டுமென்று கூறும் பொழுது சமதர்ம விரோதிகளான மதவாதிகளும், ஆஸ்திகர்களும் துள்ளிக் குதித்து அது கடவுளுக்காகாது: அவனவன் முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்றாற் போல் சுகமான வாழ்க்கையோ, கஷ்டமான வாழ்க்கையோ நடத்துகிறான். பணக்காரனாகவோ, ஏழையாகவோ இருப்பது கடவுள் சித்தம், அவர் கடாட்சத்தால் அவனுக்கே தனிவுரிமை கொடுக்கப்பட்ட பொருள்களைப் பொதுவுடமை ஆக்கப்படல் அநீதம், கடவுள் கட்டளைக்கு விரோதம் என்று கூப்பாடு போடுகிறார்கள். இன்றைக்கு முனிசிபல் கட்டடத்தையோ, பொது ரஸ்தாவையோ ரயில்வேயையோ எடுத்துக் கொள்ளுங்கள். இதில் யாருக்கு உரிமையில்லையெனக் கூற முடியும்? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவற்றை அநுபவிக்கிறார்களா? இல்லையா? இதனால் எந்தக் கடவுளுக்கு, மதத்துக்கு, அல்லது பணக்காரனுக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கூற முடியுமா?

"மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததான பல வசதிகளையும், சாதனங்களும் வேறொருவரும் அனுபவிக்கக் கூடாது; அந்த சாதனங்களினின்றி மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. எனக்கு தேவைக்கு மேலிருந்தாலும் நான் அநுபவிப்பதற்கு வேண்டிய அளவுக்கு மேலிருந்தாலும் அது சும்மா இருந்து வீணாக அழிந்து போவதானாலும் பிறர் அநுபவிக்க நான் பார்க்கக் கூடாது" என்னும் குறுகிய புத்தியும், கீழான எண்ணமும், சுயநல உணர்ச்சியும் கொண்டவர்களுக்கும், தான் உழைக்கக் கூடாது, உடல் வளையக் கூடாது, ஆனால் பிறமக்கள் உழைப்பதினால் விளையும் பயனைத் தட்டிப் பறித்து அனுபவிக்க வேண்டும் என்னும் சூழ்ச்சிமிக்க சோம்பேறிகளுக்கும்தான் சமதர்மம் கசப்பாகவோ வெறுப்பாகவோ விரோதமாகவோ இருக்குமே தவிர அவர்கள் இதைப்பற்றி மறுப்பார்களே தவிர மற்றபடி உடலைச் சாராகக் கசக்கிப் பிழிந்து வேலை செய்யும் பாட்டாளி மக்களுக்கு இந்த கொள்கை ஒரு நாளும் விரோதமானதல்ல. பெரிதும் சாதகம் செய்யவல்ல வாழ்க்கை நிலையை உயர்த்தவல்ல ஜீவதாது இது என்று தான் கூற வேண்டும். உலக ஜனத்தொகையில் 100க்கு 90 பேருக்கு மேற்பட்ட தொழிலாளிகள் பாமர மக்கள் ஆகியவர்களுக்கு அனுகூலமாயிருக்கிற இந்தத் தத்துவத்தை ஞான புத்தியும் நேர்மையான நோக்கமும் பரந்த மனப்பான்மையும் கொண்ட அனைவரும் ஆதரித்துத் தான் தீருவார்கள்.

ஏற்றத் தாழ்வுகள் மலிந்த இன்றைய சமூக அமைப்பால், ஏற்பாட்டால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ, சாந்தியோ சமாதானமோ உண்டு என்று கூற முடியுமா? இல்லாத ஏழைக்கு கஞ்சியில்லை, கட்டத் துணியில்லை, இருக்க வீடில்லை, ஓய்வில்லை, பிள்ளைக்குக் கல்வி வசதியில்லை என்பன போன்ற பல ஓயாக் கவலையே கவலையால் சதா வறுமைக் கடலிலே கிடந்துழல்கிறான். பணம் படைத்த, பூஸ்திதி படைத்த பணக்காரர்களுக்கோ இருப்பதைக் காக்க வேண்டும், மேலும் பெருக்க வேண்டும், பிறர் கவராமல் காப்பாற்ற வேண்டும் என்னும் கவலையோடு பேராசை மிகுதியால் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கவே ஆசைப்படுகின்றார்கள். சாதாரணமாக ஒரு தோட்டி வேலை செய்யும் கீழ்தர நிலையில் உள்ளவன் ஆடு, கோழி வளர்த்துக் கொஞ்சம் பணக்காரனாக வேண்டும். பின்னர் கிராம மணியகாரனாக ஆக வேண்டும் என்றெண்ணுகிறான். மணிய வேலை கிடைத்தாலும் தாசில்தாராக வேண்டுமென்று ஆசிக்கிறான். அப்படியானாலும், கலெக்டர் ஆக வேண்டும், கவர்னர் ஆக வேண்டும், வைஸ்ராயாக வேண்டும், ஏக சக்கிராதிபதியாய் உலகாள வேண்டும்; இன்னும் இதற்கு மேல் வேறு உலகங்கள் இருந்தாலும் அவற்றையும் தான் ஒருவனே கட்டி ஆள வேண்டும் என்று கருதுகின்றான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்ன வென்றால் கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு நடத்துவதும், தேவைக்கு மேற்பட்ட சொத்துக்களுக்கு சொந்தக்காரனாக இருப்பதும் ஒரு கௌரவம் என்றும், தனிமதிப்புக்குப் பாத்திரமானது என்றும், கண்ணியமானது என்றும் கருதுகின்ற ஒரு "மூட நம்பிக்கையே" தவிர வேறில்லை.

இந்த மூடநம்பிக்கையின் பயனாய்த்தான், மனிதன் தேவைக்கு மேற்பட்ட பொருள் போகங்களைத் தானும் அனுபவியாது பிறரையும் அநுபவிக்க விடாது, வைக்கோல் போரைக் காக்கும் நாய் போல் வாழ்கின்றான். இந்தத் தனிவுடமை வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன்படக் கூடிய பல பொருள்கள் சாதனங்கள் வீண் விரையம் செய்யப்படுகின்றன.

உதாரணமாக மோட்டார் காரை எடுத்துக் கொள்வோம். ஒரு செல்வந்தர் குடும்பத்துக்கு தனியாக ஒன்று அல்லது மேற்பட்ட கார்கள் வைத்துக் கொண்டிருப்பது இன்றைய அநுபவம். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு மனிதனுக்கு 3 அல்லது 4 மணி நேரமே மோட்டார் வேண்டியிருக்கும். இந்த 3 அல்லது 4 மணி நேரத் தேவைக்காக உபயோகப்படும் மோட்டார் ஒரு நாளில் 20 மணி நேரம் வீணாக யாதொரு பயனுமின்றி இருக்கிறது. இதில் வீணாக பணம் முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலை மாறி பஞ்சாயத்து போர்டு அல்லது முனிசிபாலிட்டிகளில் ஜனத்தொகைக்குத் தக்கவாறு 10, 15, 20 கார்கள் வைத்துக்கொண்டால், பொதுவில் தேவைப்பட்டவர்கள், தேவைப்பட்ட நேரங்களில் உபயோகித்துக் கொண்டால், வீணாக பணம் முடங்கிக் கிடக்க வேண்டிய தேவையில்லை. இம் மாதிரியான முறைகளை அநுசரிப்பதால் வீண் விரையங்கள் தடுக்கப்பட்டு, மக்கள் எல்லோரும் மனித வாழ்வை இன்பமயமாக்கும் பல சாதனங்களையும் அநுபவித்துப் பயன்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படும். இதற்கு பாடுபடாது பிறருழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும், கண்ணியமான, பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழிய வேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும் மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.

(குறிப்பு: திருப்பூரில் செங்குந்தர் 12ஆவது மாநாடும் செங்குந்தர் 2ஆவது வாலிபர் மாநாடும் 20, 21.05.1934 தேதிகளில் நடந்தபோது இரண்டாம் நாள் மாநாட்டில் "சமதர்மம்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை.

புரட்சி சொற்பொழிவு 10.06.1934)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.