காங்கிரஸ் என்கிற புரட்டு என்றைக்கு நம்ம நாட்டை விட்டு ஒழியுமோ, அன்றுதான் நம்ம நாடு ஒரு சமயம் ஏழைகள் கஷ்டமொழிந்து மக்கள் சமத்துவமடைந்து ஒற்றுமை ஏற்பட்டு, தரித்திரம் நீங்கி விடுதலை அடைவதானால் அடையக்கூடும் என்றும், எதுவரை இக்காங்கிரஸ் புரட்டு நமது நாட்டில் இருக்குமோ அதுவரை நமது நாட்டில் தற்காலமிருந்து வரும் கஷ்டங்கள் கொஞ்சமும் நீங்க இடமில்லாமல் மேலும் மேலும் ஊர்ந்து கொண்டே வருவதுடன் படித்த கூட்டமும், பணக்காரக் கூட்டமும் மாத்திரம் சில நாளைக்கு இனியும் கொஞ்சம் மேன்மையாய் வாழ்ந்துவிட்டு பிறகு எல்லோருமே நீங்கினவர் போலவும், வாலில்லாத குரங்கு போலவும் வாழவேண்டியது தானே ஒழிய வேறில்லை என்பது நமது அபிப்ராயம் என்பதாகப் பல தடவைகளில் எடுத்துக் காட்டியிருக்கிறோம். எவ்வளவு தூரம் நாம் எடுத்துக் காட்டியும் இன்னமும் மக்களை காங்கிரஸ் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கூட்டத்தார் கொஞ்சமும் இதை லக்ஷியம் செய்யாமல், மக்களின் அறியாமையை உபயோகப்படுத்திக் கொண்டு, எடுத்ததற்கு எல்லாம் காங்கிரசு காங்கிரசு என்று பேசி பாமர மக்களைக் குட்டிச் சுவராக்கி வருகிறார்கள். ஏனெனில் இந்த காங்கிரஸ் மந்திரத்தை பார்ப்பனரும், அவர்கள் கொள்கை கொண்ட பார்ப்பனரல்லாதாரும் மற்றும் பல பொறுப்பற்ற ஆசாமிகளும் தாங்கள் தங்கள் சுயநலத்திற்கு ஒரு பெரிய சாதனமாகக் கொண்டுவிட்டார்கள். இதை மாற்றும்படிச் செய்வதென்றால் பெரிய கஷ்டப்படவேண்டிய நிலைமையில் இருக்கிறது. தூங்குபவர்களை எழுப்புவதென்றால் சாதாரணமாய் ஒரு சப்தத்திலோ இரண்டு அல்லது மூன்று சப்தத்திலோ எழுப்பி விடலாம். தூக்கம் இல்லாமல் தூங்குவது போல வேஷம் போடுகிறவர்களை எப்படி எழுப்ப முடியும். கைகால் ஒடியும்படி தட்டினால் ஒழிய ஒருக்காலமும் எழுந்திருக்க மாட்டார்கள் என்பதே நமது அபிப்பிராயம்.

periyar 592நாம் காங்கிரஸின் புரட்டுக்களை கண்டிக்கும் போதும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும்போதும் விளக்கமாகவும், விபரமாகவும் ஒவ்வொரு விஷயமாய் எடுத்து பிரித்துப் பிரித்துச் சொல்லி அது ஏற்பட்டது முதல் அது ஏற்படாததற்கு முன் முதல் உள்ள நிலைமையும், அதனால் நமது நாட்டிற்கும் குறிப்பாய் ஏழை மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் குடியானவர்களுக்கும் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கும் ஏற்பட்ட கஷ்டங்களையும், நாட்டின் செல்வ நிலைமை, கைத்தொழில் நிலைமை, வியாபார நிலைமை, விவசாய நிலைமை, நாணய நிலைமை, ஒழுக்க நிலைமை, நீதி நிர்வாக நிலைமை முதலியதுகளையும் ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். நன்றாய் எழுதியும் வந்திருக்கிறோம். அநேகரிடம் நேரில் பேசி அவர்களை ஒப்புக் கொள்ளும்படி செய்தும் வந்திருக்கிறோம். இவ்வளவையும் தெரிந்த பலரும் பல பத்திரிகைக்காரர்களும் இவைகளுக்குக் கொஞ்சமாவது சமாதானம் சொல்லாமல் ஒன்றும் தெரியாதவர்களைப் போல் மறுபடியும் பேச்சு பேச்சுக்கு காங்கிரஸ் காங்கிரஸ் என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

சிலர் தாங்களாகப் பார்ப்பனரைத் திட்ட வேண்டிய சமயம் வந்தால் மாத்திரம் அந்த சமயம் 2 வார்த்தை ஜாடை மாடையாகக் காங்கிரசைக் கண்டித்து விட்டு, அதுவும் தாங்கள் மறுபடியும் புரண்டு கொள்வதற்கு இடமிருக்கும்படியாக வைதுவிட்டு, தங்களுக்கு அவசியமிருக்கும்போது, திரும்பவும் காங்கிரஸ், காங்கிரஸ் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். இது சமயம் சென்னை மாகாணத்திலாவது தமிழ் நாட்டிலாவது காங்கிரஸ் பேரைச் சொல்லாமல் நமது பத்திரிகை ‘குடி அரசைத்’ தவிர ஒன்று கூட இல்லை என்றே சொல்லலாம். ஏறக்குறைய எல்லாத் தலைவர்கள் என்போர்களும், தேசாபிமானிகள் என்போரும், தேசபக்தர்கள் என்போரும் இதே மந்திரமாகத்தான் இருக்கிறார்கள். சென்ற தேர்தலில் காங்கிரஸ் புரட்டுக்குக் கொஞ்சம் வெற்றி ஏற்பட்டு விட்டதாக ஏற்பட்ட பிறகு ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த சிலரும், ஜஸ்டிஸ் கட்சிப் பத்திரிகைகளுக்கும் கூட அந்த மயக்கம் கொஞ்சம் ஏற்பட்டிருப்பதாக நமக்குத் தெரிய வருகிறது. ஆகவே, இவற்றை இப்படியே விட்டுக் கொண்டு வந்தால் சில படித்தவர்களும், சில பத்திரிகைக்காரரும், சில தேசீயத் தலைவர்கள், தேசபக்தர்கள், தேசாபிமானிகள் என்போர்களும் ஏதோ ஒரு விதத்தில் பதவி, பட்டம், உத்தியோகம், வயிற்றுப் பிழைப்பு முதலியதுகள் பெற்று காலம் கழித்து வரலாமே அல்லாமல் ஒருக் காலமும் நமது நாடு முன் சொன்ன கேடுகள் நீங்கி முன்னேற்றமடையும் என்கிற எண்ணமே கடுகளவாவது நமக்கு இல்லை. அதோடும் முன் சொன்னது போலவே பாழாகிவிடுமென்றே சொல்லுவோம்.

மகாத்மா ஆதிக்கத்திலிருந்த காங்கிரசை நீக்கி இப்போதிய காங்கிரசை நாம் பேசுகிறோம். காங்கிரஸ் என்றால் என்ன? அது கொள்கைக்காக மதிக்கப்படுவதா? அதன் பெயருக்காக மதிக்கப்படுவதா? அதனால் ஏற்படும் பலனுக்காக மதிக்கப்படுவதா? இந்தியா அரசியலில் முன்னேற்றமடைய சுயராஜ்யம் பெற இந்தியர்களால் ஏற்படுத்திக் கொண்ட ஒரு மகாசபை அல்லது ஒரு இயக்கம் அல்லது ஒரு ஸ்தாபனம் என்பதானால், சுயராஜ்யம் என்றால் என்ன? இந்த சுயராஜ்யத்திற்கு காங்கிரஸ் திட்டமென்ன? இந்தியர்கள் என்றால் யார்? அவர்களில் யார் யார் காங்கிரஸில் சேர்ந்திருக்கிறார்கள்?பெரும்பான்மையான இந்திய மக்கள் வாழவும் பெரும்பான்மையான இந்தியக் குறைகள் நீங்கவும் காங்கிரசில் என்ன திட்டம் இருக்கிறது. இது நிற்க, காங்கிரஸ் ஏற்பட்ட பிறகு இந்திய மக்களுக்கு அது எந்தத் துறையில் அனுகூலம் செய்து இருக்கிறது? அது ஏற்படாததற்கு முன் அத்துறைகள் எப்படி இருந்தது? அதனால் நமக்கு ஏற்பட்ட லாபம் என்ன? காங்கிரசுக்கு முன்னால் அரசியலில் நமது சுதந்திரம் என்ன? இப்போது என்ன? காங்கிரசுக்கு முன்னால் நமது அரசியல் செலவு என்ன? காங்கிரசுக்கு முன்னால் நாம் செலுத்திய வரி என்ன? இப்போது என்ன? காங்கிரசுக்கு முன்னால் நமக்குள் இருந்த ஒற்றுமை என்ன? இப்போது என்ன? காங்கிரசுக்கு முன்னால் பார்ப்பனரல்லாதார் நிலைமை என்ன? இப்போது என்ன? காங்கிரசுக்கு முன் பார்ப்பனர் நிலைமை என்ன? இப்போது என்ன? காங்கிரசுக்கு முன்னால் அரசாங்கத்தார் நம்மிடம் வைத்து இருந்த மதிப்பு என்ன? இப்போது என்ன? காங்கிரசுக்கு முன்னால் நீதி வழங்கும் முறை என்ன? இப்போது என்ன? காங்கிரசுக்கு முன்னால் மக்கள் அறிவு, ஒழுக்கம், நாணயம் இதுகள் எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது?

காங்கிரஸ் ஒரு கூட்டத்தினர்க்கே நலனை அளித்து மற்றொரு கூட்டத்திற்கு இழிவை அளிப்பதானால் அது பொது இயக்கமாகுமா? இந்தியாவில் உள்ள பல வகுப்பார் அதாவது மகம்மதியர், கிறித்தவர், மகமதியரல்லாதார், தீண்டாதார், சீக்கியர், புத்தர், பார்சி, யூதர் முதலிய பல வகுப்பாரிலும் உள்ள பெரும்பான்மையான மக்கள் காங்கிரஸை ஒப்புக் கொள்ளுகிறார்களா அல்லது அந்தந்த சமூக வகுப்பு மகாநாடுகள் காங்கிரசை ஒப்புக் கொள்ளுகிறதா?

ஏழரை கோடி மக்களுள்ள முஸ்லீம்களின் சங்கங்கள் காங்கிரசை ஒப்புக்கொள்ளுகின்றதா? 6 கோடி உள்ள தீண்டாதார் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்கள் காங்கிரசை ஒப்புக் கொள்ளுகிறார்களா? புத்த சமூகமும் சீக்கிய சமூகமும் காங்கிரசை ஒப்புக் கொள்ளுகின்றதா? சுமார் 12 கோடிக்கு மேல்பட்ட மகமதியரல்லாதாராகிய இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோர் தங்களுக்கு உள்ள இந்து மகாசபை மூலமாகவோ, பார்ப்பன சபை மூலமாகவோ, ஆரிய சபை மூலமாகவோ, பார்ப்பனரல்லாதார் சபை மூலமாகவோ மற்றும் பல வகுப்பு சமூக மூலமாகவோ காங்கிரசு ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதா? இச்சபைகளை அரசாங்கமாவது ஒப்புக் கொண்டிருக்கிறதா?

அல்லது அரசியலுக்கு காங்கிரஸ் ஒன்றுதான்; அதைவிட வேறு ஸ்தானம் இல்லை என்பதையாவது காங்கிரஸ் சொல்ல முடியுமா? மிதவாதக் கட்சி, ஓம் ரூல் கட்சி, சுயேச்சை கட்சி, ஜஸ்டிஸ் கட்சி ஆகியதுகளைவிட சர்க்காரில் காங்கிரசுக்கு என்ன அதிகமான மரியாதை இருக்கிறது? நாட்டிலாவது என்ன மரியாதை இருக்கிறது? காங்கிரசுக்கு நிலையான ஒரு குறிப்பிட்ட கொள்கை என்ன இருக்கிறது? அதற்கெனக் குறிப்பிட்ட நாணயம் என்ன இருக்கிறது? சுமார் நாற்பது வருஷத்துக்குள்ளாக காங்கிரஸ் எந்தெந்த கட்சியார் கைக்குப் போய் வந்திருக்கிறது? காங்கிரசைக் கைப்பற்றுபவர் தன் இஷ்டம் போல் காங்கிரசை நடத்தக்கூடியதாய் இருக்கிறதே அல்லாமல், காங்கிரசில் சேருகிறவர்கள் காங்கிரஸ் சொல்கிறபடி நடக்க வேண்டும் என்கிறதாக ஏதாவது நிபந்தனை இருக்கிறதா?

அது ஏதாவது ஒரு சட்டப்படி கட்டுப்பட்ட சபையா? அதற்கு ஏதாவது கொள்கை, விதி முதலியதுகள் ஏற்படுத்தி மக்கள் கட்டுப்படத் தகுந்த மாதிரி சட்டப்படிப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? அல்லது கட்டுப்பட வேண்டிய அவசியமிருக்கிறதா? அல்லது யோக்கியர்கள் நாணயக்காரர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் ஆகியவர்கள் தவிர மற்றவர்களை அதில் சேர்க்க முடியாதபடி அதற்கு ஏதாவது பந்தோபஸ்து ஏற்படுத்தி இருக்கிறதா? நாளைக்கு வேறு ஒரு மனிதன் 10 லக்ஷமோ, 20 லக்ஷமோ, 1 கோடியோ ரூபாய் சிலவு செய்தால் காங்கிரசைத் தன் இஷ்டப்படியெல்லாம் திருப்ப முடியுமா முடியாதா? சர்க்காருக்கு உள் உளவாயிருந்து அரசாங்கத்திற்கும் ஏதோ ஒரு வகுப்புக்கும் அநுகூலமாகவும் தேசத்திற்கும் மற்ற வகுப்பாருக்கும் ஆபத்தாகவும் காங்கிரசில் தீர்மானங்கள் நிறைவேற்ற முடியுமா முடியாதா? அப்படி இதுவரை நடக்கவில்லை என்பதாக யாராவது உறுதி கூற முடியுமா?

இம்மாதிரி பொறுப்பில்லாததும், எடுப்பார் கைக்குழந்தையாகவும் கைப் பிடித்தவனுக்கெல்லாம் பெண்டாகவும் உள்ளதும் அயோக்கியர்களுக்கும் துரோகிகளுக்கும் தங்கள் தங்கள் இஷ்டம் போல் காரியத்தைச் சாதித்துக் கொள்ளக்கூடியதுமான ஒரு ஸ்தாபனத்தை இதெல்லாம் தெரிந்தும் தேசப் பொது ஸ்தாபனமென்று யாராவது சொல்வார்களானால் அவர்கள் அறிவாளிகளா? யோக்கியர்களா? ஸ்ரீமான்கள் ஸ்ரீனிவாசய்யங்காரும் எ.ரங்கசாமி ஐயங்காரும் உண்மையிலேயே நமது நாட்டு பொது அரசியல் ஸ்தாபனம் என்பதற்கு முறையே தலைவராகவும், காரியதரிசியாகவும் இருக்க யோக்கியதை உள்ளவர்களா? இவர்களைத் தெரிந்தெடுக்கும் ஜனங்களும் ஸ்தாபனங்களும் ஜனப் பிரதிநிதியாவார்களா? ஜனப் பிரதிநிதியாக யோக்கியதை உடையவர்களா? அல்லாமலும் இவற்றைச் சொல்லுவதினாலேயே நம்மை காங்கிரஸ் காங்கிரஸ் என்று கத்துகிறவர்களை விட தேசாபிமானத்தில் குறைந்தவன் என்று யாராவது சொல்லக்கூடுமா? இதைத்தவிர தேசாபிமானி என்று காட்டிக் கொள்வதற்கு உள்ள பரீக்ஷை எதிலாவது மற்றவர்களைவிட நாம் குறைந்திருக்கிறோமா? அல்லது நமக்கு தேசாபிமானம் இருக்க நியாயமில்லை என்று சொல்லுவதற்கு ஏதாவது இரகசியமோ ஆதாரமோ இருக்கிறதா?

“காங்கிரஸ் பிரசாரம் செய்கிறவர்கள் அதிகமான கஷ்டமும் தியாகமும் அடையவும், செய்யவும் வேண்டியிருக்கிறது. அதற்கு எதிர்பிரசாரம் செய்கிற நமக்கு சுகமும் லாபமும் இருக்கிறது” என்று யாராவது சொல்ல முடியுமா? காங்கிரசிலிருப்பவர்களுக்கு இன்னமும் பதவியும், பட்டமும், உத்தியோகமும், அவர்கள் பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகமும் சர்க்கார் சிநேகமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காங்கிரசின் புரட்டுகளை எடுத்துக்காட்டி கண்டிக்கிற நமக்கு இன்னமும் எங்கு போனாலும் ரகசியப் போலீசு தொடர்ந்து கொண்டும் போகிற இடங்களிலெல்லாம் வந்து துப்பு விசாரிப்பதும், சில இடங்களில் பேசுவதை எழுதிக்கொண்டு போவதுமாகத் தான் இருந்து வருகின்றது. அன்றியும் காங்கிரஸ் பெயரை சொல்லிக் கொண்டு காங்கிரஸ் பிரசாரம் செய்கிற ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், ரங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி, எம்.கே. ஆச்சாரி, பி.வரதராஜுலு நாயுடு, திரு. வி.கலியாணசுந்தர முதலியார் ஆகிய தலைவர்களானாலும் சரி அவர்கள் எவ்வளவு தூரம் சர்க்கார் உத்திரவையோ சட்டத்தையோ மீறக்கூடிய தைரியமோ அல்லது ஜெயிலுக்குப் போகக்கூடிய துணிவோ அல்லது சர்க்கார் நடத்தையைக் கண்டிக்கக் கூடிய பான்மையோ ஆகியவற்றை விட நம் போன்றவர்கள் ஏதாவது பயந்தோ பின்வாங்கியோ அலக்ஷியமாக இருக்கிறோம் என்பதாக யாராவது சொல்லக் கூடுமா? காங்கிரஸ் தலைவர்கள், பக்தர்கள், பிரசாரகர்கள் இவர்கள் காங்கிரசின் பேர் சொல்வதன் மூலம் அடையும் நஷ்டத்தை விட கொஞ்சமாவது அல்லது லாபத்தை விட அதிகமாகவாவது காங்கிரசை கண்டிப்பதன் மூலம் நாம் அடைகிறோமா? இவைகளை பொதுஜனங்கள் யோசிக்க வேண்டும். வெறும் குருட்டு பக்தியாலும் மூட நம்பிக்கையாலும் தேசம் பாழாகப் போகவிடக் கூடாது. நாம் இப்படி எழுதுவதைப் பார்த்து சில மூடபக்தியும் குருட்டு நம்பிக்கையுமுள்ள நண்பர்கள் உண்மையிலேயே நம்மீது கோபம் கொள்ளுவார்கள்.

இக்காங்கிரஸ் புரட்டைப் போலவே மதப் புரட்டையும் வெளியிலெடுத்துச் சொல்லும்போது “நீ, வேறு எதை வேண்டுமானாலும் வைது கொள். மதத்தைப் பற்றி மாத்திரம் ஒன்றும் பேசாதே. அதன் முறைகளை வேண்டுமானால் திருத்தப் பாடுபடு. அடியோடு மதத்தையே குற்றம் சொன்னால் அது மகாபாதகமாகும்” என்று சொல்ல வருகிறார்கள். ஆனால் மதம் என்றால் என்ன? என்று கேட்டால் “இதெல்லாம் விதண்டாவாதம்” என்கிறார்கள். இதுபோலவே காங்கிரசும் இருக்கிறது. இதில் ஒரு விசேஷம் மத சம்மந்தமானவர்கள் “நீ காங்கிரசைப் பற்றி சொல்வது சரி மதம் அப்படியல்ல” என்கிறார்கள். காங்கிரஸ் சம்மந்தமானவர்கள் “நீ மதத்தைப் பற்றி சொல்வது சரி காங்கிரஸ் அப்படியல்ல” என்கிறார்கள். ஆகவே, இவ்விரண்டும் சிலர் வாழப் பலரைப் பலிகொடுக்கும் ஸாதனங்களே அல்லாமல் வேறல்ல. ஆன போதிலும் காங்கிரஸ் என்பதைப்பற்றி சில விஷயங்கள் கவனிக்கும்படி வேண்டுகிறோம்.

அன்புள்ள வாசகர்களே!

காங்கிரசினால் தேசம் இதுவரை பாழானது போதும். பார்ப்பனர்கள் பதவியும், உத்தியோகமும் பெற்றது போதும். பார்ப்பனரல்லாதார் கீழ்நிலைக்கு வந்தது போதும். காங்கிரஸ் பேரைச் சொல்லிக்கொண்டு பலர் வயிறு வளர்ப்பது போதும். இனியாவது கொஞ்சம் ஏழை மக்களையும் தொழிலாளர்களையும் குடியானவர்களையும் திரும்பிப் பாருங்கள். மகாத்மா காந்தியை விட இந்த காங்கிரஸ் பக்தர்கள் பெரிய தேசாபிமானிகள் என்று எண்ணி ஏமாறாதீர்கள்.

மகாத்மா காங்கிரசில் இருந்த காரணமே 36 வருஷ காங்கிரஸ், நாட்டுக்கும் பல சமூகங்களுக்கும், ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் செய்த கொடுமையை விலக்கத்தானேயல்லாமல் வேறல்ல. அது முடியாது என்று தெரிந்த உடனேதான், தான் வேறு ஒரு இயக்கத்தை ஆரம்பித்துக் கொண்டு மெல்ல நழுவி விட்டார். மகாத்மாவைப் பூஜிக்கிறவர்கள் அவரது கொள்கைக்கு காங்கிரசில் இடம் வைத்திருக்கிறார்களா?

இக்காங்கிரஸ் கொள்கையை மகாத்மா ஒப்புக் கொள்ளுகிறாரா? போறாக் குறைக்கு தொழிலாளர்களை காங்கிரசில் சேரும்படி சில காங்கிரசின் தலைவர்கள் அதாவது ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடுவும், கலியாணசுந்தர முதலியாரும் சொல்ல ஆரம்பித்திருப்பதைப் பார்க்கும்போது நமக்கு வயிறு பற்றி எரிகிறது. தொழிலாளர்கள் கெட வேண்டுமானால் இப்போதிருப்பதை விட இன்னமும் கேவலமான நிலைமைக்கு வந்து மிருக நிலை அடைய வேண்டுமானால் தொழிலாளர் காங்கிரசில் சேரட்டும். தொழிலாளர்கள் உண்மையான தொழிலாளர்களாகி தொழிலாளர்களாலேயே உலகம் முன்னுக்கு வரத்தக்க யோக்யதை ஏற்பட்டு தொழிலாளர்களே இந்நாட்டில் ஆட்சி செலுத்தத்தக்க யோக்யதை ஏற்பட வேண்டுமானால், அவர்கள் காங்கிரசை விட்டு விலகி இருப்பதோடு, காங்கிரசு என்று சொல்லுகிறவர்களையும் தங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் இருக்கட்டும் என்று வற்புறுத்திக் கூறுகிறோம். தொழிலாளிகள் முதலாளிகளிடம் சிக்கிக்கொண்டு படுகிற பாடு போராமல் எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றுவது போல் காங்கிரசுக்காரரிடமும் சிக்கிக்கொண்டு சீரழிய வைப்பது பெரிய பாவம் என்றே சொல்லுவோம். முதலாளிகளின் கொள்கைகளை விட காங்கிரஸ்காரர்களின் கொள்கை ஒரு விதத்திலும் யோக்கியமானதல்ல. காங்கிரஸ்காரர்கள் தொழிலாளிகளுக்குப் பொறி வைப்பது “அங்கேண்டி மகளே ஆலாய் பறக்கிறாய் இங்கே வா காற்றாய்ப் பறக்கலாம்” என்பது போலிருக்கிறது அல்லாமல் வேறில்லை. காங்கிரசினால் வரப்போகும் சீர்திருத்தம், சுயராஜ்யம் இவைகளை விட வெள்ளைக்காரர் தானாகவே செய்யும் சீர்திருத்தம் மேலானதென்றே சொல்லலாம். அவன் ஒன்றும் செய்யாவிட்டாலும் இவ்வளவு மோசம் ஏற்படாமலாவதிருக்கும்.

காங்கிரஸ் என்ற பெயர் வைத்து அதிலிருந்த தலைவர்கள் என்பவர்கள் பொதுமக்களின் பணத்தில் ஆளுக்கு 1000, 2000, 3000, 5000, 7000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏதோ சிலர் பார்த்து வருவதால் நாட்டிற்கு வந்த லாபமென்ன இந்த உத்தியோகம் இவர்களுக்கு இல்லாத காலத்தில் அனுபவித்த நாட்டுக் கெடுதி என்ன.

 சட்டசபையில் 128 பிரதிநிதிகள் ஏற்பட்டதால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மை என்ன, இவர்கள் இல்லாததால் நாட்டிற்கு என்ன கெடுதி ஏற்படக் கூடும்.

வாசகர்களே! தொழிலாளர்களை விட குடியானவர்கள் அதாவது விவசாயக்காரர்கள் காங்கிரசில் சேருவது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று சொல்லுவோம். எந்த சீர்திருத்தம் வந்தாலும் எந்த உத்தியோகம் ஏற்பட்டாலும் அது நாள் முதல் குடியானவர்களின் தலையில்தான் கை வைக்கும். ஏனென்றால் இத்தனை புது உத்தியோகத்திற்கும் இத்தனை புது பிரதிநிதித்துவத்திற்கும் ஏற்படும் செலவு சுற்றிச் சுற்றி எப்படிப் பார்த்தாலும் குடியானவன் தலையில் தான் கையை வைத்து ஆகவேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. காங்கிரசினால் ஏற்பட்ட உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அனேகமாய் தபால், கார்டு, கவர், ரயில் சார்ஜ் முதல் சகல வரியும் உயர்த்தப்பட்டதே அல்லாமல் வேறில்லை. வெள்ளைக்காரருக்கு மாத்திரம் சம்பளம் கொடுக்க வேண்டுமானால் நாம் இப்போது கொடுத்துவரும் வரியில் பகுதி வரி கொடுத்தால் போதுமானது. சர்க்காருக்கு எந்தவிதமான வரி யார் கொடுத்தாலும் அது கடைசியாக குடியானவனைத்தான் பிடிக்கும் என்பதை குடியானவர்கள் மறந்துவிடக்கூடாது. ஆதலால்தான் காங்கிரஸ் குடியானவர்களுக்கு எமனாகத் தோன்றி இருக்கிறது என்று சொல்லுகிறோம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கோ காங்கிரஸ் என்பது பெரிய ஆபத்தான சாதனமாகும். அவர்களுக்கு இதுவரையில் காங்கிரசினால் ஒரு பயனும் ஏற்பட்டதில்லை என்பதும், அவர்களுக்கு இருக்கும் கஷ்டத்தைப் போக்கி மனிதத் தன்மையை உண்டாக்க காங்கிரசினிடத்தில் ஒரு கொள்கையும் இல்லையென்பதும், அவர்களுடைய முன்னேற்றமெல்லாம் கூடியவரையில் சர்க்காராலேயே செய்ததாய் ஏற்பட்டிருக்கிறது என்பதும், தாழ்த்தப்பட்ட மக்கள் பேரையும் சொல்லிக்கொண்டு சிலர் காங்கிரசின் பெயரால் பெற்ற பலன்களில் ஒரு சிறிதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவவே இல்லை என்பதும் யாரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம். அதோடு அச் சமூகத்தார்களும் இதை நன்றாய் அறிந்திருக்கிறார்கள். ஆனதால் அவர்களைப்பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

வியாபாரிகளைப் பற்றி நமக்கு அதிக கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு அடுத்தவர்கள். சர்க்காரால் என்ன வரி ஏற்படுத்தினாலும் அதற்கு மேல் லாபம் வைத்து விற்பவர்கள். தவிரவும் இன்னமும் கொஞ்சகாலத்தில் கடலைப்பொரி, சுருட்டு, சிகரெட்டு, வெத்திலை, பாக்கு வியாபாரம் போக மற்ற வியாபாரமெல்லாம் இனிமேல் நமது நாட்டில் வெள்ளைக்காரர்களாலேயே நடைபெறப் போகிறது. ஏனெனில் வெள்ளைக்காரர்கள் சீமை முதலிய இடங்களில் இருந்துகொண்டு இந்தியாவில் வியாபாரம் செய்வதை விட இங்கு வந்து இருந்துகொண்டு வியாபாரம் செய்வது அவர்களுக்கு அதிகமான லாபத்தை கொடுக்கக்கூடியதாகும். முதலாவது சாமான் போக்குவரத்து செலவு குறையும். இரண்டாவது அங்கிருந்து இங்கு வரவும் இங்கிருந்து அங்கு போகவும் சாமான்களின் மீது ஏற்படும் வரி குறையும், மூன்றாவது கூலி ஆள்களும் குமாஸ்தாக்களும் சீமையில் கிடைப்பதை விட அரைக் கூலி கால் கூலியில் கிடைக்கும். அம்முதலாளிகளுக்கு வேண்டிய சவுகரியம் செய்து கொடுப்பதற்கு நமது நாட்டில் படித்த வகுப்பார் என்கிற பார்ப்பனக் கூட்டமும் தயாராயிருக்கிறது. அல்லாமலும் இப்போது ஆங்கிலேயர் மற்ற நாட்டாருடன் வியாபாரத்தில் போட்டி போட முடியாமலிருப்பதாலும் சுங்க உபத்திரவத்தாலும் இங்கேயே தொழில் செய்ய வேண்டியது அவர்களுக்கு அவசியமாய் போய்விட்டது. அல்லாமலும் இப்போதைய வியாபார முறையும் குடியானவர்களைப் பாழாக்குவதாக இருக்கிறதே அல்லாமல் வேறில்லை. ஆதலால்தான் வியாபாரிகளைப் பற்றி நமக்கு அதிக கவலையில்லை என்கிறோம்.

படித்தவர்கள் விஷயமோ காங்கிரசை நம்பித்தான் படிக்கிறார்கள். ஆதலால் அவர்கள் காங்கிரசில் சேர்ந்தால்தான் உத்தியோகம் பெருத்த சம்பளம் முதலியதுகள் கிடைக்கும். மற்றபடி வெறும் ஆசாமிகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. இப்பொழுது வர வர வயிற்றுப் பாட்டிற்கு அதுவும் சோம்பேறி வயிற்றுப் பாட்டிற்கு காங்கிரசு ஒரு சரியான துறையாய் ஏற்பட்டு விட்டது. மகாத்மாவின் 2,3 வருஷத்திய வேலையின் பலனாகவும், ஒரு கோடி ரூபாய் செலவின் பலனாகவும், பல ஆயிரம் பேர் ஜெயிலுக்குப் போனதின் பலனாகவும் காங்கிரசிற்கு பாமர மக்களிடையே கொஞ்சம் நல்ல பெயர் வந்துவிட்டதால் அதன் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைப்பதற்கு வெகுபேருக்கு சவுகரியம் ஏற்பட்டு விட்டது. ஆதலால் வெறும் ஆசாமிகளைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டிய தில்லை. ஆகவே தொழிலாளி, விவசாயி, தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய மூன்று பேர் விஷயத்தில் நாம் அதிகமாக எச்சரிக்கை செய்கிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 08.05.1927)

Pin It