இப்போதெல்லாம் சென்னையில் இலக்கிய கூட்டங்கள் அதிகம் நடைபெறுவதில்லை. நடக்கும் கூட்டங்களில் கூட்டமில்லை. வரும் இருபது முப்பது பேர்களில் தலை நரைத்தவர்களே அதிகம். இளைஞர்களைக் காண முடிவதில்லை.
தமிழ் நூல்களின் விற்பனை ஒரு சோகக் கதை. பெரும்பாலும் பதிப்பகங்கள் புதிய புத்தகங்களைக் கூட 300 பிரதிகளுக்கு மேல் அச்சடிக்க முடியாத நிலை. அவைகளையும் விற்க ஒரு வருடத்திற்கு மேலாகிறது.
தமிழ்ச் சமூகத்தில் சினிமாக்காரர்களுக்கு இருக்கிற மதிப்புகூட எழுத்தாளர்களுக்கு இல்லை. எழுத்தாளராக வேண்டும் என்கிற இலட்சியக் கனவு யாருக்கும் வருவதில்லை. அதனால் தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
மேற்கண்ட மூன்று பிரச்சினைகளுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன. எனக்குத் தெரிந்த ஒரு முக்கிய காரணம் இங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இலக்கியம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.
ஆணிவேரை ஒத்தது குழந்தை இலக்கியம். சிறுவயதிலேயே படிக்கும் பழக்கம் இருந்தால் தான் பெரியவர்களான பிறகும் படிப்பார்கள். ஆக பெரியோர் இலக்கியத்திற்குக் கூட அடித்தளம் குழந்தை இலக்கியம்தான். அமெரிக்காவில் ஒரு ‘சர்வே’ எடுத்திருக்கிறார்கள். முப்பது வயதில் புத்தகம் படிப்பவர்கள் யாரென்று பார்க்கும் போது குழந்தையாக இருக்கும்போது படித்தவர் களாக அவர்கள் இருந்தனர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் குழந்தைகளின் ஆளுமைத் தொடர்பான பாதிப் பணிகளை நூலகமே செய்து விடுகிறது. நம் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும் நூலகத்திற்கும் உள்ள உறவை எண்ணிப் பார்க்கும் போது வேதனையே வருகிறது.
ஒரு குழந்தைக்கு நீங்கள் தரும் ஆகச் சிறந்த பரிசு புத்தகமாகத்தான் இருக்கும் என்று அறிஞர்கள் சொல் கிறார்கள். நகைநட்டு, துணிமணிகள் என்று விலை உயர்ந்தவற்றைப் பரிசாகத் தரும் பெற்றோர்கள் புத்தகங்கள் தருவதை இன்னும் நினைத்துப் பார்க்க வில்லை. ஆன்மீகக் கோயில்களுக்குக் குழந்தை களை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் அறிவுக் கோயிலாக விளங்கும் நூலகத்திற்குக் கூட்டிச் செல்கிறார்களா என்றால் அதுவுமில்லை.
நூலகம் குழந்தைகளுக்கு வழங்கும் அளப் பரிய வளர்ச்சிகளைத் தமிழ்க் குழந்தைகள் பெற என்ன செய்வது?
குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைத்தல் வேண்டும். பொது நூலகத்தை குழந்தைகளுக்குரிய தாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு நூலகங்களிலும் சிறுவர் பகுதி (children Corner) தொடங்கப்பட வேண்டும். இதை அரசு செய்யும் காலம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. குழந்தை எழுத்தாளர் களும் சமூக நல ஆர்வலர்களும் அவரவர் வசிக்கும் ஊர்களில் உள்ள நூலகங்களில் சிறுவர் பகுதி களை ஏற்படுத்த வேண்டும். மாதத்தோறும் நூலகங் களில் கதை சொல்லும் நிகழ்ச்சிகளை (Story telling Programme) நடத்த வேண்டும். தமிழ்க் குழந்தைகள் வாசிப்பில் நுழைய இதுவே வழி.
குழந்தைகளுக்கும் நூலகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துவதற்காக குன்றத்தூர், மாங்காடு, பூவிருந்தவல்லி கிளை நூலகங்களில் சிறுவர் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குக் கதை கேட்பது விருப்பம் என்பதால் சிறுவர் பகுதியில் மாதந்தோறும் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கதை கேட்பதின் மூலம் குழந்தைகளுக்கு கற்பனை, சிந்தனை, படைப்பாற்றல், படிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது.
நூலகங்களில் சிறுவர் பகுதி ஏற்படுத்துவது என்பது சிறு விஷயந்தான். ஆனால் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு ஒன்றும் பெரிய செலவு ஆகப் போவதில்லை. சிறுவர் பகுதியில் குழந்தைகளுக்குரிய நாற்காலிகள், சிறிய மேசை போடப்பட வேண்டும். இதற்கு ரூ. 4000/-க்கு மேல் செலவு ஆகாது. ஒரு முக்கியமான விஷயம் செய்யப் பட வேண்டும். நூலகங்களில் சிறுவர் நூல்கள் பெரியோர் நூல்களோடு கலந்திருக்கிறது. அவற்றைப் பிரித்து தனி அலமாரியில் வகைப்படுத்தி அடுக்க வேண்டும், சிறுவர் பகுதியில் குழந்தைகளைக் கவரும் அலங்காரங்கள் செய்ய வேண்டும்.
படிப்பு என்றால் பாடப்புத்தகங்களைப் படிப்பது மட்டுந்தான் என்ற நிலையை மாற்றிட நூலகங்களை குழந்தைகளுக்குரியதாக்குவோம்! நல்ல நூல்களைப் படிப்பதற்கும் அதன் மூலம் சமூக மனிதனாக குழந்தைகள் வளர்வதற்கும் நூலகம் உதவமுடியும். சிறுவர் பகுதி என்ற சிறு முயற்சி சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். நீங்களும் நம்புவீர்களாக!