va mu komuபாரதி புத்தகாலயத்தின் ஒரு அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன் ஆகஸ்டு – 2017 வெளியீடு வா.மு.கோமு எழுதிய “கட்டெறும்பு” என்ற சிறார் நாவல். இதன் வண்ணமயமான அட்டைப் படமும், மிகப் பெரிய அளவிலான எழுத்து வடிவமும், ஆங்காங்கே காணப்படும் கோட்டோவியமும் இந்நாவலை வாசிக்கத் தூண்டும் தூண்டுகோள்கள்.

ஆங்கில திரில்லர் படத்தில் வருவதுபோல் அதீத கற்பனையையும் அட்டகாசமான புனைவுகளையும் ஒருங்கிணைத்து குழந்தைகளுக்கே பிடித்தமான பாணியில் இந்நூலைப் படைத்திருக்கிறார் வா.மு.கோமு. ”பிரியா என்ற சிறுமியால் உணவளிக்கப்படும் ஒரு கட்டெறும்பு, ஒரே வாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி பெற்று அவளை முதுகில் சுமந்து கொண்டு வலம் வருகிறது. அப்படி வருவது மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் எதிர்ப்படும் நாய்களையும் ஆடுகளையும் கொன்று தின்கி|றது” என்ற தொனியில் மிரட்டலுடன் தொடங்குகிறது இந்நாவல். சில பக்கங்களை வாசிக்கத் தொடங்கியதுமே விறுவிறுப்பு கூடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

குழந்தைகளுக்கான நாவல் என்பதால் பள்ளி வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்திராத பிரியா என்ற குட்டிப்பாப்பாவை மையமாகக் கொண்டு பயணிக்கிறது. அழுத்தமான முன்னுரை, பொறுத்தமான தலைப்பு, விறுவிறுப்பு குறையாத எழுத்து நடை, வர்ணனையற்ற வரிகள், சுற்றுச்சூழலை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் பாங்கு, எதார்த்தமான உரைநடை, குழந்தைகளுக்கேற்ற முடிவுரை என அனைத்து அம்சங்களையும் ஒருங்கே கொண்டிருக்கிறது இந்த “கட்டெறும்பு” என்ற சிறார் நாவல்.

அதிகப்படியான வட்டார வழக்குச் சொற்களை கொண்டிருப்பதே இந்நாவலின் பலமும் பலவீனமும். சில இடங்களில் நீண்டதொரு வரிகள் ஆரம்ப வாசிப்பு குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் சிறு சிறு வரிகளாய் அமைத்திருக்கலாம் என்று குறிப்பிடத் தோன்றுகிறது. தாத்தா மற்றும் பேத்தி பிரியாவின் உரையாடல் எதார்த்தமாய் இருந்தாலும் ஆங்காங்கே காணப்படும் மரியாதை குறைவான வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம். மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு கொண்ட வார்த்தைகளை கையாண்டிருந்தால் இந்நாவல் அடுத்த கட்ட உயர்வுக்கு செல்ல உறுதுணையாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிறார்களுக்கான நாவல் என்பதால் லாஜிக் பார்க்க அவசியமே இல்லை என்ற போதும் பள்ளி ஆசிரியர், கலெக்டர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீஸ் எனக் குறிப்பிடும் உரையாடலில் உபயோகப் படுத்தியிருக்கும் வார்த்தைகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஏனெனில் ஒரு புத்தகம் என்பது சிறுவர்களின் மனதி்ற்குள் ஊடுருவி இனம் புரியா இன்பத்தை வழங்குவதோடு மட்டும் இல்லாமல் ஒழுக்க நெறிமுறைகளையும் கற்றுத்தர வேண்டும் என்பதே என்னைப் போன்ற புத்தக ஆர்வலர்களின் விருப்பமும்கூட.

ஒரு மிகப் பெரிய அளவிலான கட்டெறும்பின் செய்கையை பார்த்து பிரமித்தது அடங்கு முன்னே, இக்கதை முடிவுரை நோக்கி முன்னேறிவிடுகிறது. கடைசியில் அந்தக் கட்டெறும்புக்கு என்னவாயிற்று என்பதையும் ஒரு குழந்தையின் உன்னதமான பதை பதைப்பையும் ஒருசேர சஸ்பென்சுடன் முடித்திருக்கிறார் இந்நூலாசிரியர். கதை முடிந்து விட்டது என்று நினைத்து புத்தகத்தை மூடிவைக்கும் வேளையில் அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமாக இக்கதை முற்று பெறுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான கற்பனைத் திறனை வளர்க்கும் சிறார் நாவல் என்ற முறையில் இந்நாவலை அனைவருக்கும் பரிந்துரை செய்யலாம். 

- வே.சங்கர்