“குழந்தை இலக்கியம் படைப்பதிலும் அவற்றைப் புத்தகமாக்குவதிலும் வயது பிரிவுகளை (by age category) கவனத்தில் கொள்வது முக்கியமானது. தமிழில் அதற்கான கவனமும் சிரத்தையும் குறைவாக உள்ளது.”
மேற்கூறிய வரிகளை நான் 2014-ஆம் ஆண்டு ‘உங்கள் நூலகம்’ இதழில் ‘குழந்தை இலக்கியத்தில் கதைகள்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
10 வருடங்கள் ஓடிவிட்டன. சிறார் இலக்கியத்தில் வயது பிரிவுகளை கவனத்தில் கொண்டு படைப்புகளை எழுதுவதிலும் வெளியிடுவதிலும் என்ன முன்னேற்றம் வந்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். பதின் பருவ சிறார்களுக்கென இதழ்கள் தேவை. நிறைய வாசிக்கவும் நிறைய எழுதவும் வாய்ப்புள்ள பருவத்தில் அவர்கள் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டம் என்னவென்றால் அவர்களுக்கு அதிக இதழ்கள் இல்லை என்பதுதான்.பதின் பருவ சிறார்களை ஈர்க்கும் இதழாக அம்புலிமாமாவும் ஓரளவு கோகுலமும் இருந்தன, இப்போது அவை இல்லை. சிறார்களின் படைப்புகளுக்கு இடமளித்து வந்த றெக்கை, குட்டி ஆகாயம், பஞ்சுமிட்டாய் ஆகிய இதழ்களெல்லாம் நின்று போயின. கல்வித் துறையிலிருந்து 6 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ எனும் இதழ் வருவது ஓரளவு ஆறுதலான செய்தி.
மழலை, சிறார், பதின் பருவத்தினருக்கென்று கலவையான படைப்புகளைக் கொண்டதாக ‘பொம்மி’ சிறார் இதழ் வருகிறது. ‘பெரியார் பிஞ்சு’ பகுத்தறிவு, அறிவியல் கருத்துக்களைக் கொண்ட இதழாக வருகிறது. பதின் பருவத்திற்கான செய்திகள் அவ்விதழில் உள்ளன.
அமெரிக்கப் பள்ளிகளில் பதின் பருவ மாணவர்களுக்கென்று 8 பக்க அளவிலான வார இதழ்கள் இலவசமாகத் தரப்படுகின்றன. அவ்விதழ்களில் இலக்கியம், அறிவியல், சுற்றுச்சூழல், விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான செய்திகள் நிறைந்துள்ளன.
நமது பதின் பருவ மாணவர்களுக்கும் இம்மாதிரியான இதழ்கள் தமிழில் தேவை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பாரதியின் முரசுப் பாடல், புதிய ஆத்திசூடி, பாரதிதாசனின் இளைஞர் இலக்கியம், ஆத்திசூடி, தமிழ்ஒளியின் குட்டிக் கதைகள், பட்டுக்கோட்டையின் சில பாடல்கள் பதின் பருவத்தினருக்குரியது.
கவிஞர் ஆசி.கண்ணம்பிரத்தினத்தின் அன்புச்சிறகு (கதைப்பாடல்கள்), குறளின் குரல், முனைவர் வாசுகி ஜெயரத்தினத்தின் பூச்சரம், பூஞ்சிறகு, பூங்குயில், பாடும் பறவைகளே ஆகிய பாடல் நூல்கள் பதின் பருவத்தினருக்கானவை.
கவிஞர் மோ.கணேசன் எழுதிய டும் டும் டும் தண்டோரா, ஓடி வா... ஓடி வா.. சின்னக்குட்டி ஆகிய நூல்களிலுள்ள பாடல்களில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் நலம், தேசியத் தலைவர்களின் பெருமை, தமிழரின் அரும்பெரும் சாதனைகள் போன்ற பொருள்களிலுள்ளவை மட்டும் பதின் பருவத்தினருக்குரியன.
பதின்பருவ சிறார்கள் சாகசக் கதைகளை மிகவும் விரும்புகின்றனர். ஜெயமோகன் எழுதிய ‘பனி மனிதன்’, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘எலியின் பாஸ்வேர்ட்’, பா.ராகவன் எழுதிய ‘புதையல் தீவு’, ‘ஐஸ்க்ரீம் பூதம்’, ஜி.காசிராஜன் எழுதிய ‘ஆரம்ப அதிசயம்’ ஆகிய நாவல்கள் அப்படிப்பட்டவை. ஞா.கலையரசி எழுதிய இரு நாவல்கள் பூதம் காக்கும் புதையல், நீலமலைப் பயணம் இளையோருக்காகவே எழுதப்பட்டவை.
பதின் பருவ சிறார்கள் நால்வருடன் ஆதிரை என்ற பதின் பருவ சிறுமி தனியாக பயணம் செய்வதை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை நீலமலைப் பயணம் பேசுகிறது. பதின் பருவ பெண் பிள்ளைகளின் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிறது. மந்திரக் கிலுகிலுப்பை, கடலுக்கடியில் மர்மம் என்று ஆர்வமூட்டும் தலைப்புகளில் இரு நாவல்களை சரிதா ஜோ எழுதியுள்ளார்.
மந்திரக் கிலுகிலுப்பை நாவலின் உள்ளடக்கம் இளையோருக்கானது. ஆனால் கதைநாயகி பாத்திரமாக வரும் ரதிக்கு ஏழு வயது தான் ஆகிறது. ஏழு வயதுக் குழந்தை மந்திரக் கிலுகிலுப்பை செய்யும் மாயங்களை கற்பனை செய்ய முடியும். விலங்கின உரிமை, உயிரின உரிமை போன்ற கருத்துகளை சிந்திக்க முடியாது.
‘கடலுக்கடியில் மர்மம்’, நாவலும் உள்ளடக்கத்தில் பதின் பருவத்தினருக்கானது. ஆனால் கடலில் வாழும் மீன்கள் பாத்திரங்களாக கற்பனை செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் எழுத வந்திருக்கும் துரை ஆனந்த் குமார் துவக்கத்திலிருந்தே சிறார்களின் வயதுப் பிரிவுகளுக்கேற்ற படைப்புகளை எழுதுவதிலும் வெளியிடுவதிலும் கவனம் செலுத்துபவராக இருக்கிறார்.
ச்சூ மந்திரக்காடு, வேற்றான் நீலக் கழுகு, இரண்டாம் மெட்ராஸ் ஆகியவை இளையோர் நாவல் என்றே குறிப்பிடப்பட்டு வந்திருக்கின்றன. ஏப்ரல் 14, நம்மில் ஒருவர் ஆகியவை இளையோருக்கான சிறுகதைத் தொகுப்புகளாகும். ‘நம்மில் ஒருவர்’ நூலில் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே பாத்திரங்கள், இத்தொகுப்பிலுள்ள ‘பார்சலில் எதிர்காலம்’ நல்லதொரு கதை. துரை ஆனந்தகுமாரின் நூல்கள் பெரும்பாலும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் அமைந்து ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கின்றன.
‘ஆயிஷா’ நடராஜனின் ‘விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்’ (பதின் பருவத்தினருக்கானது) 2014-ஆம் ஆண்டின் பாலபுரஸ்கார் விருது பெற்றது. 1729 என்பது இவருடைய சமீபத்திய சிறார் நாவல் புற்று நோயால் அல்லற்படும் சிறார் உலமைப் பற்றியது, இந்நாவலில் கணக்குப் புதிர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பதின் பருவத்தினரே இப்படைப்பை படிக்க முடியும். ‘தன்வியின் பிறந்த நாள்’ யூமா வாசுகி எழுதியது. 2024-ஆம் ஆண்டின் பால புரஸ்கார் விருது பெற்றது. இந்நூலிலுள்ளவை பதின் பருவத்தினருக்கான சிறுகதைகளாகும். யூமா வாசுகி மலையாளத்திலிருந்து ‘மீளும் நிறங்கள், மாத்தன் மண் புழுவின் வழக்கு, விடுபடும் சுடர், குட்டி இளவரசன், ஒரு நாயின் கதை ஆகிய நாவல்களையும் சார்லிசாப்ளின், பாபா ஆம்தே, பஷீர், உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ ஆகிய கட்டுரை நூல்களையும் பதின் பருவத்தினருக்காகத் தந்துள்ளார்.
தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு நிறைய படைப்புகளைத் தந்தவர் உதயசங்கர். வடிவ மைப்பிலும் உள்ளடக்கத்திலும் வித்தியாசத்தைத் தந்த ‘மாயக் கண்ணாடி’ (சிறுகதைகள்) நூல் குறிப்பிடப்படாவிட்டாலும் அது பதின் பருவத்தினருக்கானது.
அவருடைய ‘ஆதனின் பொம்மை’ இளையோர் நாவல் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. இந்நாவல் 2023-ஆம் ஆண்டின் பாலபுரஸ்கார் விருது பெற்றது. கீழடி தொல்லியல் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. ஏகலைவன், குட்டி இளவரசனின் குட்டிப் பூ ஆகியன அவரது பதின் பருவத்தினருக்கான நூல்களாகும்.
யெஸ். பாலபாரதியின், மரப்பாச்சி சொன்ன ரகசியம், 2020-ஆம் ஆண்டின் பால புரஸ்கார் விருது பெற்ற பதின் பருவத்தினருக்கான நாவலாகும். இது குழந்தைகளின் மீதான பாலியல் அத்து மீறலைப் பற்றி பேசுகிறது. ‘பூமிக்கு அடியில் ஒரு மர்மம்’ (இளையோர் நாவல்) சாகச வகை கதையாகும்.
சிறார்களுக்கு ஏராளமான நூல்களை எழுதி வருபவர் விழியன். பதின்பருவ மழலைச் செல்வங்களை ஊக்கப்படுத்துகிற விதமாக அவரது ‘மலைப்பூ’ நாவல் அமைந்துள்ளது. 1650 (முன்னொரு காலத்திலே) நாவலும் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய வரலாற்றுப் புனைவாகும்; விழியன் எழுதிய ‘காரா பூந்தி’ சிறார் சிறுகதைகளில் பெரும்பான்மை பதின் பருவத்தினர் படிப்பதற்குரியது. தேன்கணி (கணிதக் கட்டுரைகள்), பதின் பருவத்தினருக்கானது.
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ஒற்றைச் சிறகு ஓவியா நாவலின் பாத்திரங்கள் பதின் பருவத்தினர். ஓவியா 7-ஆம் வகுப்பில் படிக்கிறாள். எண்ணெய் கம்பெனியால் நிலத்தடி நீரும் விவசாயமும் பாதிக்கப்படுவது தொடர்பான சுற்றுச் சூழல் பிரச்சனையைப் பேசுகிற நாவல். அவருடைய ‘நீலப்பூ’ நாவலும் பதின் பருவத்தினருக்கானது. பாத்திரங்கள் பதின் பருவத்தினர். சாதியம் தொடர்பான கருத்துகளும் பதின் பருவத்தினருக்கானவை.
சிறார்களுக்கு சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள் என்று ஏராளமாக எழுதி வருபவர் கொ.மா.கோ இளங்கோ. பதின் பருவத்தினருக்காக இவர் எழுதிய சஞ்சீவி மாமா, பச்சை வைரம் ஆகிய நாவல்கள் பேசப்பட்டவை. ‘சஞ்சீவி மாமா’ சாதி மறுப்பு கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஆதி வள்ளியப்பன் சுற்றுச்சூழல் தொடர்பான நூல்களை பதின் பருவத்தினருக்காகத் தந்துள்ளார். ‘நீ கரடி என்று யார் சொன்னது?’ என்ற மொழிபெயர்ப்பு நாவல் காடுகளுக்குள் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் கேடுகளை சுட்டிக்காட்டும் படைப்பாகும்.
சுகுமாரன் எழுதிய நம்பிக்கை இல்லம், சூப்பர் சிவா, கடற்கன்னி கயல் ஆகிய மூன்றும் பதின்பருவத்தினருக்கான நாவல்களாகும். பாந்திரங்களாக பதின் பருவத்தினரே உள்ளனர். பொதுவாக பதின்பருவத்தினர் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவது பற்றிய கதைகளாகும். கடற்கன்னி கயல் அதி புனைவுடன் கூடிய சாகசக் கதையாகும். ஆங்கில மொழியில் வெளிவந்த சிறார் செவ்வியல் நாவல்களான அதிசய உலகில் ஆலிஸ், சிண்ட்ரல்லா, புதையல் தீவு, கருணைத் தீவு, குட்டி இளவரசி, சின்னஞ்சிறு பெண், கிரீன் கேபின்ஸ் ஆனி, டாம்சாயரின் சாகசங்கள், இரகசியத் தோட்டம் ஆகியவற்றை தமிழில் தந்துள்ளார்.
எழுத்தாளர் ஆர்.வி.பதியின் ‘கண்ணன் வழி காந்தி வழி’ நாவல் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கண்ணனைச் சுற்றி நடைபெறும் கதையாகும். இதுவே, ஆர்.வி.பதியின் முதல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
லூர்து எஸ்.ராஜ் எழுதிய ‘மனித நேய மரங்கள்’, ‘அறிவியல் விருந்து’ ஆகியவை இளையோருக்கான அறிவியல் சிறுகதைகளைக் கொண்டதாகும். இயற்கை சார்ந்த சிந்தனை, அறிவியல் பார்வை, மண் சார்ந்த சிந்தனை இவற்றை பொருண்மையாகக் கொண்ட ஈரோடு சார்மிளாவின் ‘எவன் சொன்னது ராஜான்னு’ சிறுகதைத் தொகுப்பு பதின் பருவத்தினருக்குரியது.
கல்வியாளர் ச.மாடசாமியின் ‘வித்தியாசம் தான் அழகு’ நூல் இளையோர் படிப்பதற்கானது, ‘கடைசி இலை, ஆறடி நிலம், ஆகிய இரு நூல்களும் இளையோர் வாசிப்பதற்கு ஏற்றவை. பிரபலமானவர்களால் பெரியோருக்கு எழுதப்பட்ட பிரபலமான சிறுகதைகளை இளையோருக்கு மறு ஆக்கம் (retold) செய்து வெளியிடப்பட்ட நூல்கள் இவை இந்த மறு ஆக்கங்களை எழுத்தாளர் ச.தமழ்ச்செல்வன் தொகுத்துள்ளார். ஒவ்வொரு கதையின் இறுதியிலும் விவாதத்திற்கான விளக்கங்களையும் தந்துள்ளார். இத்தகைய நூல்கள் பதின் பருவத்தினரின் சிந்தனையை வளர்த்தெடுக்க உதவும். அவர்களின் படைப்பாற்றலையும் தூண்டும்.
உமையவன் தொகுத்திருக்கும் ‘தற்கால சிறார் கதை’ நூலில் பதின் பருவத்தினருக்கான கதைகள் உள்ளன.
காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகிய சூழல் பிரச்சினைகள், காடுகள், உயிரினங்கள் தொடர்பான நூல்கள் சமீப காலமாக தமிழில் நிறைய வந்துள்ளன. இவை பதின் பருவத்தினருக்கானவை.
பொதுவுடைமை (குழந்தைகளுக்காக) பீனி அடம்ஸாக், தமிழில் எம்.பாண்டியராஜன் மொழி பெயர்த்த நூல், பொதுவுடைமை, முதலாளித்துவம், உழைப்பு, சந்தை பற்றிய கருத்துகளை பதின் பருவத்தினர் புரிந்து கொள்ளும் விதமாக எளிமையாகத் தந்துள்ளது.
இத்திசை வழியில் இன்னொரு நூல் குழந்தைகளுக்கான பொருளாதாரம், ரங்க நாயகம்மா தெலுங்கில் எழுதியது, தமிழில் கொற்றவை தந்துள்ளார். மார்க்சின் மூலதனத்தின் அடிப்படைக் கருத்துக்கள் பதின் பருவத்தினருக்கு பாடங்களாக எழுதப்பட்டுள்ளது.
கிழக்குப் பதிப்பகம் - ப்ராடிஜி - ஆங்கில சிறார் இலக்கியத்தில் உள்ளது போல் வயது வாரியாக நூல்கள் வெளியிடுவதில் கவனம் செலுத்தி பதின் பருவத்தினருக்கு 300 தலைப்புகளில் முன்பு நூல்களை வெளியிட்டது. பழநியப்பா பிரதர்ஸ் பதிப்பகமும் ‘நாட்டுக்குழைத்த நல்லவர்கள்’ வரிசையில் தலைவர்கள், விஞ்ஞானிகள் பற்றிய நூல்களை பதின் பருவத்தினருக்காக வெளியிட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் 350க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழில் அறிவியலை பரப்புவதற்கான சிறந்த நூல்களை வெளியிட்டது. இந் நூல்களில் அறிவியல் அறிஞர்கள், கண்டுபிடிப்புகள் குறித்த நூல்கள், மனிதகுலம் தோற்றம், வளர்ச்சி குறித்த நூல்கள் பதின் பருவத்தினருக்குரியதாக உள்ளன.
என்.சி.பி.எச் நிறுவனம், நெஸ்லிங் புக்ஸ் பப்ளிஷிங் மூலமாக பதின் பருவத்தினருக்காக ஏராளமான மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ற படைப்புகள் வெளியாக வேண்டும் என்ற உத்வேகத்தோடு ஓங்கில் கூட்டம், புக்ஸ் பார் சில்ட்ரன் பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்ட 17 நூல்கள் முற்றிலும் பதின் பருவத்தினருக்கானவை, தமிழ்ச் சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு உதவுகிற முனைப்பிற்குக் காரணமாக இருக்கிற
‘பஞ்சுமிட்டாய்’ பிரபுவும் துணையாக இருக்கிற கமலாலயனும் பாராட்டுக்குரியவர்கள்.
ந.பெரியசாமியின் கடைசி பெஞ்ச், ராஜேஸ் கனக ராஜனின் சாக்லேட்டி ஆகிய இளையோருக்கான கவிதை நூல்களை வாசித்த போது, ஆஹா! தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் புதிய திறப்பு வந்துவிட்டது என்று உளம் பூரித்தேன். பதின் பருவத்தினரின் உவகை, உணா¢வை, பிரச்சனைகளைப் பேசும் இந்தப் புதுக் கவிதைகள் புதியவை. நான் ஏன் நாத்திகன்? என்ற பகத்சிங்கின் நூலை பதின் பருவத்தினருக்கான நூலாக புதிய உத்தியுடன் மறு ஆக்கம் செய்திருக்கிற சிவசுப்பிரமணியன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
சலீம் அலி (ஆதி வள்ளியப்பன்), சார்லஸ் டார்வின் (அன்பு வாகினி), தோபா தேக்சிங் (உதயசங்கர்) ஹம்போல்ட் (ஹேமா பிரபா), ஸ்டீபன் ஹாகிங் (கமலாலயன்) பல்வங்கர் பலூ (கி.பா.சிந்தன்) ஜானகி அம்மாள் (கி.பா.சிந்தன்) ஆகிய ஆளுமைகளைப் பற்றிய நூல்கள் பதின் பருவத்தினரை எளிமையாகச் சென்றடையும் வகையில் உள்ளன.
17 நூல்களில் சுல்தானாவின் கனவு (ரொக்கேயோ பேகம் - தமிழில் திவ்யா பிரபு), போக்கிரி இளவரசி (கேத்லீன் எம்.முல்டூன் - தமிழில் கொ.மா.கோ இளங்கோ) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்கள் முக்கியமானவை.
நேரடி படைப்புகளாக சோசோவின் விசித்திர வாழ்க்கை (இளையோர் நாவல்) உதயசங்கர் எழுதியது. வாழ்க்கை பற்றிய ஒரு தரிசனத்தை கதை வேடிக்கையாக சொல்லியிருக்கிறது.
கொ.மா.கோ இளங்கோ எழுதிய வாசிக்காத புத்தகத்தின் வாசனை (இளையோர் குறு நாவல்) கதை நாயகனின் துயரத்தை வாசனையாக நுகர முடிகிறது. விஷ்ணுபுரம் சரவணனின் கயிறு (இளையோர் சிறுகதை) பரவலாக கவனம் பெற்ற கதை. ஆழ்கடல் (நாராயணி சுப்பிரமணியன்) தண்ணீர் என்றோர் அமுதம் (சி.வி.ராமன், தமிழில் கமலாலயன்) ஓரிகாமி (தியாக சேகர்) ஆகிய நூல்களும் இளையோரின் கவனத்திற்குரிய படைப்புகளாகும். பதின் பருவ சிறார்களே எழுதிய படைப்புகள் தமிழில் வந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
ஹிட்லரின் இனப்படுகொலைக்கு எதிராக வந்த ஆனிபிராங் (வயது 13) எழுதிய ஆனி பிராங்கின் டைரிக் குறிப்புகள், இளம் பாகிஸ்தானிய சிறுமி மலாலா (வயது 16) வின் கடைசிக் குறிப்புகள், முக்தா சால்வே (வயது 14) மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள், பருவ நிலை மாற்றம் குறித்த நூல், ரஸ்கின் பாண்டே (வயது 16) எழுதிய சிறுகதைகள், நாவல்கள், எஸ்.அபிநயாவின் (வயது 13) குரங்கும் கரடிகளும் புலிப்பல்லும் நரிக்கொம்பும் (கதைகள்), ந.க.தீப்ஷிகா (வயது 13) எழுதிய வானவில் (சிறார் பாடல்கள்) ஆகியன இளையோரே எழுதிய படைப்புகளாக சிறப்பு பெற்றுள்ளன.
ஆங்கில மொழியில் மழலையர், சிறார், பதின் பருவத்தினர் என்று வயதிற்கேற்ப பகுத்து சிறார் இலக்கியம் படைக்கின்றனர். முன்பும் ஏன் இப்போதும் கூட தமிழச் சிறார் எழுத்தாளர்கள் சிறார்களின் வயதுப் பிரிவிற்கேற்ப எழுதுவதில் போதிய பிரக்ஞை உடையவர்களாக இல்லை, எழுதுவதில் இல்லாத பிரக்ஞை நூல் வெளியிடுவதிலும் வந்துவிடாது.
சிறார்களின் வயதிற்கேற்பவே அவர்களின் உலகமும் அனுபவமும் மொழியும் புரிந்து கொள்ளுதலும் அமைந்திருக்கும். இதைக் கருத்தில் கொள்ளும் போதுதான் இயல்பான, பொருத்தமான படைப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது. சிறார்களின் வயதுப் பிரிவிற்கு ஏற்ப எழுதுவதில் இப்போது முன்னேற்றம் வந்திருக்கிறது என்பதை இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகிறது.
- சுகுமாரன்