ஆயிஷா என்கிற அரைமணிநேரக் கதையின் மூலம் பள்ளிக்கூடம் பலிகூடமாக ஆகி விடக்கூடாது என்கிற ஆழமான கருத்தை விதைத்தவர் இரா. நடராசன். தன் பெயரையே ஆயிஷா இரா. நடராசன் என மாற்றிக் கொண்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கும் விதத்தில் எளியநடையில் அறிவியல் கதைகளை ஏராளமாக எழுதி வருபவர். ஆயிஷா இரா.நடராசன் எழுதி, சமீபத்தில் வெளியான நூலே 1729 என்ற புத்தகம்.

1729 novelகணித மேதைகள் “ராமானுஜம்-ஹார்டி எண்” என அறியப்பட்ட 1729 என்னும் எண், புத்தகத் தலைப்பாகவும், இக்கதையில் ஏராளமான புதிர்களோடு நமக்குப் புதுமையான புரிதலுக்கும் வழிகாட்டுகிறது. கார்ல் மார்க்சின் பொதுவுடைமைக் கருத்தியலை உலகறியக் கொண்டுசேர்க்க எங்கல்ஸ் எப்படித் துணை நின்றாரோ, அப்படித்தான் ராமானுஜத்தின் கணித அறிவை உலகறியச் செய்தவர் ஹார்டி. ஆயிஷா கதையில் ஒரு சிறுமியை மட்டும் உலவ விட்ட இக்கதையாசிரியர், 1729 நாவலில் 27 குழந்தைகளை முக்கியப் பாத்திரங்களாக உலவ விட்டு இருக்கிறார்.

இந்த நாவலில் வரும் 27 குழந்தைகளுமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இவர்களுடைய பெற்றோர்களின் பொருளாதாரச் சூழலில் இக்குழந்தைகளைப் பராமரிக்க முடியாததால் பராமரிப்பு மையத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் மரணத்தை நோக்கி நடப்பவர்கள். ஒவ்வொரு வகையான மரணத்தோடு போராடிக் கொண்டு இருப்பவர்கள். குழந்தை பராமரிக்கும் உதவியாளரான மிஸ்டர் எக்ஸ் மூலம் இக்கதை சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாவலின் நாயகன் சரண் (இக்கதை தொடங்கும் முன்பே இறந்து விடுகிறான்) என்கிற பையன். எண்களோடு விளையாடுபவன். இந்த விளையாட்டை மீதி உள்ள 26 பேருக்கும் கற்றுத் தருகிறான். எண்கள் விளையாட்டின் மூலம் தங்கள் நோயையும், நோயினால் ஏற்படும் வலியையும் மறந்து அனைத்தையும் எண்களின் வழியே புரிந்து வாழப் பழகிக்கொள்கிறார்கள் அந்தக் குழந்தைகள்.

சரண், தனக்குப் பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட மடிக்கணிணி உதவியுடன் 1729.காம் என்கிற வலைத்தளத்தை உருவாக்குகிறான். விரைவில் அது உலகப் புகழ் பெற்ற வலைத்தளமாகிறது ஆனால் அதை யார் நடத்துகிறார்கள் என்பது அந்த 27 பேரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது.

பராமரிப்பு இல்லத்தில் வாரம் ஒருநாள் நம்பிக்கை வட்டம் என்கிற கூட்டம் நடக்கும். அதில் அனைத்துக் குழந்தைகளும் கலந்து கொள்வார்கள். அவர்களின் எண்ணிக்கை குறையாமல் இருந்தமைக்கு நன்றி கூறுவார்கள்.

இந்தப் பராமரிப்பு இல்லத்திற்குப் பெயர் வைக்கலாம் என ஒரு தீர்மானம் அங்கே கொண்டு வந்தபோது, அனைவரும் ஒருமித்த குரலில் 1729.com எனப் பெயர் வைக்கலாம் எனச் சொல்லிய போதுதான், மிஸ்டர் எக்ஸ் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து போனார். மிஸ்டர் எக்ஸ் பராமரிப்புப் பணிக்கு வந்து ஆறு மாத காலம் ஆனாலும், இன்றுதான் 1729 என்கிற உலகப் புகழ் பெற்ற கணிதப் புதிர் வலைத்தளத்தை நடத்துபவர்கள் நம் பிள்ளைகள் என அறிந்துகொள்கிறார்.

இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு 70 ஆயிரம் புதிய புற்றுநோய்க் குழந்தைகள் அடையாளம் காணப்படுகின்றன. தினந்தோறும் 300 குழந்தைகள் புற்றுநோய் பாதிப்பால் இறக்கிறார்கள். இப்படி அதிகளவு இறப்புக்கு நம் நாட்டில் மருத்துவ வசதி மிகவும் குறைவாக உள்ளதே முக்கியக்காரணம்.

புற்றுநோய் வருவதற்கு நாம் புகை பிடிக்க வேண்டிய அவசியமில்லை நம் அருகில் ஒருவர் புகைத்தாலே போதும், அது தந்தையாகக் கூட இருக்கலாம் என ஒரு குழந்தை சொல்வதும், இந்தக் குழந்தைகளைப் பராமரித்துப் பாதுகாக்க நிதியுதவி திரட்ட என, தன் வாழ்க்கையை இந்த மையத்திற்காக அர்ப்பணித்த மருத்துவர் மிஸ்டர் ஒய், அவருடைய கடந்த காலத் துயரங்கள் எனப் பல இடங்களில் கண்களில் நீர் திரையிட வாசிக்க நேர்கிறது. நாவலில் சொல்லப்பட்ட இந்தப் பச்சிளம் குழந்தைகளின் நோயும் வறுமையும் கொண்ட வாழ்க்கையை, நாம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைவில் பார்க்கலாம்.

மருத்துவர் மிஸ்டர் இசட்-இன் முயற்சியால் ஒரு தனியார் அமைப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கணித ஆற்றலைக் கண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் 30ஆயிரம் ரூபாய் தருவதாகவும், அந்தப் பணத்தில் அக்குழந்தைகளுக்கு விருப்பப் பட்டதை வாங்கிக் கொள்ளளாம் எனவும் அறிவித்தபோது அந்த 26 குழந்தைகளும் இணைந்து ஒரு முடிவெடுத்தார்கள்.

தங்களுக்குக் கொடுத்த பணத்தை மொத்தமாக்கி டெல்டா மாவட்டத்தில் புயல் தாக்கி முற்றிலும் சிதிலமடைந்த ஒரு பள்ளியைப் புனரமைக்க அந்த நிதியைக் கொடுப்பார்கள். இந்தக் குழந்தைகளின் அறிவும் வலியும் தியாகமும் நாவல் முழுக்க நம்மைச் சிலிர்க்க வைக்கும். இறுதியாக, குழந்தைகளின் நிதியால் கட்டப்பட்ட பள்ளியைத் திறந்து வைக்க 26 குழந்தைகளும் வர வேண்டும் என ஒரு வேண்டுகோள் வரும்.

அதற்கு மருத்துவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். வேண்டுமென்றால் மூன்று நான்கு பேர் செல்லலாம் என மருத்துவர் சொல்லும்போது அக்குழந்தைகள் சென்றால் மொத்தமாகத்தான் செல்வோம், இல்லையென்றால் நாங்கள் செல்ல மாட்டோம் என முடிவெடுக்க, இந்தக் குழந்தைகள் கொடுத்த நிதியால் கட்டப்பட்ட பள்ளியை இக்குழந்தைகளே திறந்து வைத்தார்களா..?

இப்பள்ளியைத் திறந்து வைக்கக் குழந்தைகள் வரும்போது ஓர் இன்ப அதிர்ச்சி தரலாம் என எண்ணியிருக்கும் மாவட்ட ஆட்சியரின் கனவு நிறைவேறியதா..? என நாவல் முழுக்கத் தன் எழுத்தாளுமையால் குழந்தைகளோடு பயணிக்க வைத்துள்ள ஆயிஷா இரா. நடராசன் அவர்களுக்கு நம் நன்றிகள் பல. வாசிக்க மட்டுமல்லாது, வாழ்க்கைக்கும் சிறந்த வழிகாட்டியாக இந்நாவல் அமைந்திருக்கிறது.