தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய பன் மொழிகளில் புலமை பெற்றிருந்தவரும், மார்க்சியச் சிந்தனையாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான தோழர் ஏ.ஜி. எத்திராஜூலு 23.02.2017 அன்று காலமானார். அவருக்கு வயது 83.

குடியாத்தத்தில் 1935-ல் பிறந்த எத்திராஜுலு உயர்நிலைக் கல்வி முடிந்ததும் காசி வித்யாபீடம் கல்வி மையத்தில் இந்தி மொழி பயின்றார். ஆந்திர மாநிலம் சித்தூரில் இந்தி ஆசிரியராய்ப் பணியாற்றினார். அவரது துணைவியாரும் ஆசிரியர். ஆரம்ப நாட்களில் அவர் பெரியார் இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். 1952-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டு ஆறு மாத காலம் சிறையில் இருந்தார்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சியோடும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தோடும் இணைந்து எழுத்துப் பணியாற்றியவர் எத்திராஜுலு. ராகுல சாங்கிருத்தியாயனின் நூல்களில் ஒன்றைத் தவிர அனைத்தையும் இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்தார். ‘சிந்து முதல் கங்கை வரை’, ‘ராஜஸ்தானத்து அந்தப் புரங்கள்’, ‘மனித சமுதாயம்’, ‘பொதுவுடமைதான் என்ன?’, ‘இந்து தத்துவ இயல்’, ‘இஸ்லாமிய தத்துவ இயல்’, ‘கிரேக்க தத்துவ இயல்’, ‘ஐரோப்பிய தத்துவ இயல்’, ‘ராகுல்ஜியின் வாழ்க்கை வரலாறு’, ‘ஊர் சுற்றிப் புராணம்’, ‘பௌத்த தத்துவ இயல்’ போன்ற பல அற்புத மான நூல்களை தமிழுக்குத் தந்தவர். அந்த நூல்கள் கடந்த 50 ஆண்டுகளாக நிலைத்து நிற்கின்றன.

1967-ல் முதன்முதலாக அவரை மதுரை என்.சி.பி.எச். அலுவலகத்தில் அதன் தலைவர் ராதா கிருஷ்ணமூர்த்தி, தோழர் எத்திராஜூலுவை எனக்கு அறிமுகம் செய்தார். அவரிடம் நீங்கள் ஏன் ‘வால்காவி லிருந்து கங்கை வரை’ நூலைத் தமிழாக்கம் செய்ய வில்லை. அதுதானே அவரது சிறந்த படைப்பு என்று கேட்டேன். அதற்கு அவர், அது 1948-லேயே கன. முத்தையாவால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. அதில் நாம் போட்டிக்கு நிற்கக் கூடாது. அதனால், அதைத் தமிழாக்கவில்லை என்று கூறினார்.

தற்போது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை முத்து மீனாட்சி அவர்களால் மறுதமிழாக்கம் செய்து பாரதி புத்தகாலயம் நூலாக வெளியிட்டுள்ளது. அவர் தெலுங்கிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுங் குக்கும் ஆங்கிலத்திலிருந்து தெலுங்குக்கும் என்று எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். சாகித்ய அகாடமிக்கும் ‘கருப்பு மண்’, ‘அவன் காட்டை வென்றான்’ போன்ற தெலுங்கு நாவல் களை மொழியாக்கம் செய்துகொடுத்தார். அவர் தெலுங்கிலிருந்து தமிழாக்கம் செய்த ‘தீண்டாத வசந்தம்’ நாவல் தமிழில் மிகுந்த புகழைப் பெற்றது.

ஒடுக்குமுறைக்கு எதிரான தலித் மக்களின் போராட்டத்தையும், அவர்களது தியாகத்தையும் அந்த நாவல் தெளிவாக்கியது. அந்த நாவல் தோழர் சீத்தாராம் யெச்சூரியால் மதுரையில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் எத்திராஜூலுவை யெச்சூரி மனமாரப் பாராட்டினார். எத்திராஜூலுவுக்கு சால்வை அணிவித்த போது கண்கலங்கி நின்றார். நான் செய்த பணிகளுக்கு இந்த கவுரவம் ஒன்றே போதும் என்று பெருமிதத்தோடு கூறினார்.

அவர் எளிமையானவர், அனைவரோடும் நல்லுற வோடு விவாதிப்பவர். அறிவார்ந்த தோழர்களோடு மிகுந்த நெருக்கமாக இருந்தவர். தமிழில் நான் எழுதிய ‘மார்க்சியம் ஒரு அறிமுகம்’, ‘கடவுள் பிறந்த கதை’ ஆகிய நூல்களைத் தெலுங்கில் மொழி பெயர்த்து அதை ‘பிரஜா சக்தி’ வெளியிட ஏற்பாடு செய்தார். தனக்கு ஏராளமான பணிகள் இருப்பதால் உன்னுடைய நூல் களை அடுத்து தெலுங்கில் கொண்டு வருவேன் என்றும் கூறினார். தோழர்களிடம் பரிவு காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் அற்புதமான மனிதர் அவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அப்போதைய தலைவர் தோழர் கே. முத்தையாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். த.மு.எ.க.ச. மாநில மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். ஆந்திர அறிவியல் இயக்கத்தின் பணிகளில் நூல்களை வெளியிடுவதில் உதவியாக இருந்தார். பல சிறு நூல்களைத் தொகுத்துக் கொடுத்துமிருக்கிறார்.

அலெக்ஸ் ஹேய்லியின் ‘ஏழு தலைமுறைகள்’ நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தெலுங்கிலும் கொண்டுவந்தார். தத்துவம், இலக்கியம், அரசியல் ஆகிய தளங்களில் சிறப்பான சேவை செய்த அவரது பங்களிப்பு மக்களுக்கான இலக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. சிறந்த மொழி பெயர்ப்புக்கான ‘த.மு.எ.க.ச. விருது’, ‘திசைகள் எட்டும்’ அமைப்பின் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ போன்றவற்றை அவர் பெற்றிருக்கிறார்.

அவர், உடல்நலம் குன்றிய நிலையில் திருப்பதியில் தன் மகன் வீட்டில் தங்கியிருந்தார். சில மாதங்களுக்கு முன் நேரில் சென்று அவரை நலம் விசாரித்துப் பேசி விட்டு வந்தேன். ‘இன்னும் நான் எழுத வேண்டிய விஷயங்கள் பாக்கி இருக்கின்றன. ஆனால், முடியவில்லை’ என்று வருத்தப்பட்டார். உடல் நலம் குன்றிய நிலையில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கேயே காலமானார். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் வாசகர்களும் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது நெகிழ வைத்த நிகழ்வு! அவரது நூல்கள் தமிழ்ச் சமூகத்துக்கு அறிவுச் செழுமையை ஊட்டியபடி என்றும் நிலைத்திருக்கும்.

நன்றி: தமிழ் இந்து

Pin It