நாற்பத்தி ஒன்பதாவது சென்னைப் புத்தகக் காட்சி வரும் ஜனவரி எட்டாம் தேதியிலிருந்து இருபத்தி ஒன்றாம் தேதி வரை பதினான்கு நாட்களுக்கு சென்னை - நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்துகிற இப்புத்தகச் சந்தை சுமார் ஆயிரம் புத்தக அரங்குகளை உள்ளடக்கியது. இலட்சக்கணக்கான வாசகர்களை ஈர்க்கவல்லது. ஒரு புத்தகச் சந்தையின் வெற்றியை அளப்பதற்குப் பல அம்சங்கள் உண்டென்றாலும், அச்சந்தையை முன்னிட்டு எத்தனை புதிய புத்தகங்கள் வெளியாகின்றன என்பதைக் கொண்டு மதிப்பிடுவது ஒரு முக்கிய அளவுகோலாகும்.

மாநிலத் தலைநகரான சென்னையில் மட்டும் புத்தகச் சந்தை என்பதில் தொடங்கி நெய்வேலி, ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை என்று படிப்படியாக நீண்டு இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அரசால் நேரடியாகவோ , அரசு உதவியுடன் சமூகநல அமைப்புகளாலோ புத்தகச் சந்தைகள் சிறிதும் பெரிதுமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இப்போது மாவட்டத் தலைநகரங்களில் மட்டும் என்றிருந்த நிலை மாறி வட்டார அளவிலும், சில இடங்களில் பேரூராட்சி, ஊராட்சி என்ற மட்டங்களிலும் கூட புத்தகச் சந்தைகள் அந்தந்த ஊரின் தன்மைக்கு ஏற்ற வகையில் சில ஆர்வலர்களால் சிறிய அளவில் நடத்தப்படுகின்றன.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் மாநிலத்தின் பல பகுதிகளில் சாலையோரங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஒரு மாதம், இரண்டு மாதங்கள் என்ற கால அளவில் ஆண்டுதோறும் முறையாக நடத்தப்படுகின்றன. ஏராளமான கல்வி நிலையங்களில் இரண்டு நாட்கள், ஐந்து நாட்கள் என்று மாணவர்களுக்கான கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. வேறு சில தமிழ், ஆங்கிலப் பதிப்பகங்களும் புத்தக விற்பனையகங்களும் இவ்வாறு கண்காட்சிகளை நடத்துகின்றன.

புத்துலகை  உருவாக்கும் ஆற்றலும்  வல்லமையும் புத்தகங்களுக்கே உள்ளன. தமிழ்நாடு படிப்படியாக புத்தகங்களின் மாநிலமாக உருவெடுத்து வருவது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

நாட்டை, மக்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும் முற்போக்கு நூல்கள் - உலக அளவிலான அறிவை வளர்க்க உதவும் தலைசிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் - மக்களை அறிவியல் கண்ணோட்டத்தோடு சிந்திக்கத் தூண்டும் அரிய நூல்கள் - மக்களிடையே ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை, ஒருங்கிணைப்பை உருவாக்கும் உன்னத நூல்கள், வரலாற்றுணர்வை வளர்த்தெடுக்கும் நூல்கள், பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திடும் நூல்கள், மருத்துவத் துறை சார்ந்த மகோன்னத நூல்கள், மக்களுக்கான அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்துச் சொல்லும் சட்ட நூல்கள் , தமிழ் இலக்கியத்தையும் உலக இலக்கியங்களையும் ஆழப்பதிய வைக்கும் அற்புத நூல்கள் - கலைகள், தொழில்கள், கல்வி, ஆராய்ச்சி, உள்ளிட்ட அத்தனை துறைகள் சார்ந்த மக்களின் தரத்தை, தகுதியை, சிந்தனையை மேம்படுத்தும் சிறந்த நூல்கள் அதிக எண்ணிக்கையில் புதிது புதிதாகப் பதிப்பிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஆண்டுக்காண்டு பதிப்பகங்கள் புதிய புதிய நூல்களைப் பதிப்பிக்கும் போதுதான் புத்தகச் சந்தைகளுக்கு உயிர் இருக்கும். 

'கடைவிரித்தேன் கொள்வாரில்லை' என்ற நிலை உருவாகாமல் இருக்க வேண்டுமெனில், மக்களின் கரங்களில் புத்தெழுச்சியூட்டும் புதிய நூல்களைத் தவழச் செய்யும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற பதிப்பகங்கள் தயாராக வேண்டும்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சென்னைப் புத்தகக் காட்சியை முன்னிட்டு நூற்றுக்கும் மேலான தலைப்புகளில் புதிய நூல்களையும் நூற்றுக்கும் மேலான தலைப்புகளில் மறுபதிப்பு நூல்களையும் பதிப்பித்துள்ளது.

எந்தெந்த நூல்கள் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளன என்று அறிந்து அவற்றைப் பதிப்பிப்பதோடு, எத்தகைய நூல்கள் சமூகநலன் கருதி மக்களிடம் செல்வாக்கு பெற வேண்டுமோ அத்தகைய நூல்களைத் தேடிப்பிடித்துப் பதிப்பிப்பது, அவற்றுக்குச் செல்வாக்கு தேடித் தர முயற்சிகள் மேற்கொள்வதும் இன்றைய காலத்தின் தேவையாகும்.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.