u vesiஉ.வே.சாமிநாதையரைக் குறிப்புரைகாரர், அரும்பதவுரைகாரர், உரையாசிரியர் என்கிற மூன்று படிநிலைகளில் பிரித்தறியலாம். பதிப்பாசிரியரிலிருந்து உரையாசிரியராக மாற்றம் பெறக் காரணமாக இருந்த பின்னணியை அவர் பதிப்பித்த சங்கநூல்கள்வழி விளக்க முயல்கிறது இவ்வாய்வுரை.

ஐங்குறுநூற்றின் பழையவுரை

ஐங்குறுநூறு 1903-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டாலும் உரை வரலாறு என்பது 1938-ஆம் ஆண்டு ஔவை சு.துரைசாமிப்பிள்ளையிடமிருந்து தொடங்குகிறது. அதுவும் ஐங்குறுநூற்றின் மருதத்திணைக்கு மட்டுமானதாக அமைந்திருக்கிறது. இதன்பின்னர் 18 உரைகள் எழுந்துள்ளன. உ.வே.சாமிநாதையர் தாம் பதிப்பித்த இரண்டு பதிப்புகளிலும் (1903, 1920) பழையவுரை ஒன்றை இணைத்துப் பதிப்பித்துள்ளார். இப்பழையவுரையானது ஆழ்வார் திருநகரி ஸ்ரீ தே.லஷ்மண கவிராயர் கொடுத்த கையெழுத்துப் பிரதியில் இடம்பெற்றுள்ள உரையாக உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகின்றார். இவ்வுரையின் இயல்பு குறித்து உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுவதைக் (1903:5) கீழ்வருமாறு பகுத்தளிக்கலாம்.

 • இவ்வுரை, பதவுரையுமன்று; பொழிப்புரையுமன்று.
 • பெரும்பாலும் உள்ளுறை, இறைச்சியை விளக்குகின்றது.
 • சிலவிடங்களில் திரிசொற்களின் பொருளைப் புலப்படுத்துகிறது.
 • சிறுபான்மையாக இலக்கணக் குறிப்பை அளிக்கின்றது.
 • சொல்முடிபு, பொருள்முடிபு கூறுகின்றது.

இத்தகைய இயல்புகளைக் குறிக்கின்ற உ.வே.சாமிநாதையர் மூலபாடத்தை ஒப்பிட்டுப் பார்த்தலில் பழையவுரையையும் கவனத்தில் கொண்டுள்ளார். இதனை ‘இந்நூற் பழையவுரையாசிரியர் கொண்ட பாடம் வேறாகவும் காணப்பட்டன’ (உ.வே.சா., 1903:5) என்று குறிப்பிடுவதன்வழி அறிந்து கொள்ளலாம். ஆனால், எந்தப் பாடம் பழையவுரைகாரர் கொண்ட பாடம் என்பதை உட்பகுதியில் உ.வே.சாமிநாதையர் குறிக்கவில்லை. பழையவுரையை மூலபாடத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஓரிடத்தில் சினை சீக்கும் (ஐங்.20) என்பதற்கு மாற்றாக சினைச்சேக்கும் எனும் பாடம் இருப்பதைக் காணவியலுகின்றது.

பழையவுரை உள்ள பாடல்கள் மொத்தம் 196 ஆகும். இவற்றுள் வேழப்பத்து, வெள்ளாங்குருகுப்பத்து, சிறுவெண்காக்கைப்பத்து, கேழற்பத்து, குரக்குப்பத்து ஆகிய பத்துகளுக்கு விடுபாடின்றிப் பழையவுரை கிடைத்துள்ளது. 13 பத்துகளுக்கு முற்றிலும் உரை கிடைக்கப் பெறவில்லை. இவை தவிர சிற்சில பாடல்களுக்குப் பழையவுரை கிடைத்திருக்கிறது. இவற்றைக் காணும்பொழுது பழையவுரைகாரர் ஐங்குறுநூறு முழுமைக்கும் உரையெழுத முயன்றுள்ளாரா அல்லது தனது மனப்போக்கிற்கு ஏற்ப அங்கொன்றும் இங்கொன்றும் உரையெழுத முயன்றுள்ளாரா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். இப்பழையவுரைகாரர் பின்பற்றியுள்ள எழுத்துரையானது வாசகனுக்கான நகர்த்தலாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக, புலமையறிவு பெற்றோருக்கான குறிப்பாக அமைந்திருக்கிறது. அந்தப் புலமையறிவு உடையோர் பிறிதொரு உரையாசிரியராக இருக்கலாம் அல்லது பிரதி பெயர்த்தெழுதுவோராக இருக்கலாம். இக்கருத்தைக் கீழ்வருமாறு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

 • எந்தெந்தப் பாடல்களுக்கு குறிப்பளிக்க வேண்டும் என்பதை வாசிப்பினூடாகத் தன்னளவில் முடிவுசெய்து உரையெழுதுதல்.
 • பழையவுரைகாரர் உள்ளுறை, இறைச்சி சுட்டுதல், பதவுரை, பொழிப்புரை அமைத்தல் என்று எந்தவொரு நோக்கத்தையும் நூல் முழுமைக்கும் பின்பற்றாமை.
 • தனது வாசிப்பில் ஏற்பட்ட சிக்கல்களைக் களைவதாகவும் அடுத்தகட்ட வாசகர்களை சிக்கல்களிலிருந்து விடுவிப்பதாகவும் பழையவுரை காணப்படுதல்.

ஐங்குறுநூற்றுக்குப் பழையவுரைகாரரின் இத்தகைய எடுத்துரைப்பிலிருந்து உ.வே.சாமிநாதையர் எனும் அரும்பதவுரைகாரர் ஐங்குறுநூற்றிற்குத் தோன்றுவதன் தேவையைப் புரிந்துகொள்ளவியலும். இனிவரும் பகுதி அதனை விளக்க முயல்கிறது.

உ.வே.சா. எனும் அரும்பதவுரைகாரர்

1894-ஆம் ஆண்டு புறநானூற்றைப் பதிப்பிக்கும்பொழுது உ.வே.சா.விற்கு ஐங்குறுநூற்றின் பழையவுரை கிடைக்கவில்லை (1894:2). அதேபோன்று பரிபாடலுக்குக் கிடைத்திருக்கும் உரையைப் ‘பழையவுரை ஒன்றுள்ளது’ என்றுதான் குறிப்பிடுகிறார் (1894:4). பரிமேலழகர் உரை என்பதை அப்போது கண்டறியவில்லை. பத்துப்பாட்டை நச்சினார்க்கினியர் உரையுடனும் (1889), புறநானூற்றைப் பழையவுரையுடனும் (1894) பதிப்பித்ததன் வழியாகச் சங்க இலக்கிய வாசிப்பை உ.வே.சா. உள்வாங்கிக் கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி அக்காலக்கட்டத்தில் உ.வே.சா. பதிப்பித்து வெளியிட்ட நூல்கள் உரைபற்றிய சிந்தனைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. அந்நூல்கள் வருமாறு, சீவகசிந்தாமணி - 1887, பத்துப்பாட்டு - 1889, சிலப்பதிகாரம் (அரும்பதவுரை) - 1892, புறநானூறு - 1894, புறப்பொருள் வெண்பாமாலை - 1895, மணிமேகலை - 1898. இத்தகைய பழைய நூல்களின் வாசிப்பு அனுபவமும் புராணங்கள், சிற்றிலக்கியங்கள் பற்றிய வாசிப்பு அனுபவமும் உ.வே.சாமிநாதையரைப் பதிப்பாசிரியரிலிருந்து உரையாசிரியராக மாற்றியிருக்கிறது.

முதன்முதலில் மணிமேகலைக்கு உரையெழுதிப் பதிப்பித்திருந்தாலும் (1898) சீவகசிந்தாமணியைப் பதிப்பித்த காலம் முதலே உரையெழுதுகின்ற முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தொன்மையான இலக்கியங்களைப் பதிப்பிப்பதில் உ.வே.சா. மிகுந்த சிரத்தை எடுத்துள்ளார். சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும் முன்னர் ஜைனர்களின் கருத்துகளையும் மணிமேகலையைப் பதிப்பிக்கும் பௌத்தர்களின் கருத்துகளையும் நன்கு அறிந்து குறிப்பெடுத்துக் கொண்டுள்ளார். இக்குறிப்புகள் அவரைக் குறிப்புரைகாரராக மாற்றியிருக்கிறது. இத்திறம் நச்சினார்க்கினியரின் உரைமரபைப் பின்பற்றியிருத்தலால் உருவாகியிருக்கலாம். நச்சினார்க்கினியரின் உரையினால் புதிய செய்திகள் பலவற்றை உணர்ந்து கொண்டாலும் அவர்தம் உரையில் பின்பற்றியிருந்த ‘மாட்டு’ உத்தியும் ‘என்றார் பிறரும்’ என்கிற நூற்பெயரற்ற சான்றுக்குறிப்புகளும் உ.வே.சா.வை வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளது. நச்சினார்க்கினியரிடம் இத்தகைய இயல்பு இருந்தாலும் உ.வே.சா. தனது உரைத்திறனுக்கான முன்னோடியாகக் கொள்வதற்கு அவரே காரணமாகியிருக்கிறார் என்பது புலப்படுகிறது.

அந்த மகோபகாரியின் அரிய உரைத்திறத்தின் பெருமையை நான் மறக்கவில்லை. சுருக்கமாக விஷயத்தை விளக்கி விட்டு எது நுணுக்கமான விஷயமோ அதற்கு அழகாகக் குறிப்பு எழுதுகிறார். அவர் எழுதும் பதசாரங்கள் மிக்க சுவையுடையன. அவர் அறிந்த நூல்களின் பரப்பு ஒரு பெருங்கடலென்றே சொல்ல வேண்டும். இவ்வளவு சிறப்புக்களுக்கிடையே முன் சொன்ன இரண்டு குறைபாடுகளும் மறைந்துவிடுகின்றன (என் சரித்திரம், 566).

என்று குறிப்பிடுகிறார். இக்காலக்கட்டத்தில் நச்சினார்க்கினியரால் உரையெழுதப்பட்ட மூன்று நூல்கள், சீவகசிந்தாமணி (1887), கலித்தொகை (சி.வை.தாமோதரம்பிள்ளை, 1887), பத்துப்பாட்டு (1889) வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவற்றுள் கலித்தொகையைத் தவிர்த்து ஏனைய இரண்டு நூல்களில் உள்ள நச்சினார்க்கினியர் உரையை உ.வே.சா. நன்கு உள்வாங்கிக் கொண்டிருந்தார் என்பதும் மனங்கொள்ளத்தக்கது. மேற்கண்ட கருத்துகளின் பின்னணியில்தான் உ.வே.சா. என்கிற ‘குறிப்புரைகாரர் (அ) அரும்பதவுரைகாரர்’ என்கிற அடையாளத்தை மீட்டெடுக்கவியலுகிறது.

உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் பலவற்றுள் பழையவுரைகள் இருப்பதால் அவ்வுரையிலிருந்து வேறுபடுத்திக்காட்ட குறிப்புரை, அரும்பதவுரை என்கிற உரை வகைமைகளைக் கையிலெடுக்கிறார். சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்த காலங்களிலிருந்து குறிப்பு எடுப்பதையும் அரும்பதங்களை அகரவரிசைப்படுத்திக் கொள்ளுதலையும் வாசிப்புப் பழக்கமாகக் கொண்டிருந்த உ.வே.சா.விற்குத் தொன்மையான நூல்களுக்குக் குறிப்புரை எழுதுதல் அல்லது அரும்பதவுரை எழுதுதல் என்பது இயல்பானதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

மேலும், பழையவுரையுடன் கொண்டுள்ள தொடர்பு அவரது உரையாசிரியப் பங்களிப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. உ.வே.சா. பதிப்பித்த எட்டுத்தொகை நூல்கள் ஐந்தனுள் நான்கு நூல்களுக்குப் பழையவுரை உள்ளது. புறநானூறு (பழையவுரை,1894), ஐங்குறுநூறு (பழையவுரை,1903), பதிற்றுப்பத்து (பழையவுரை,1904), பரிபாடல் (பரிமேலழகர் உரை,1918), குறுந்தொகை (உ.வே.சா.உரை,1937). பத்துப்பாட்டு முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை உள்ளது. உ.வே.சா. பதிப்பிக்காமல் விடுத்தவை, கலித்தொகை (சி.வை.தாமோதரம்பிள்ளை, 1887), நற்றிணை (பின்னத்தூர் அ.நாராயணசாமி, 1915), குறுந்தொகை (தி.சௌ.அரங்கநாதன், 1915), அகநானூறு (இராஜகோபாலையங்கார், 1920) என்பனவாகும். குறுந்தொகைக்கு மட்டும் பழையவுரை கிடைக்கவில்லை. அதற்கு உ.வே.சா. எழுதிய உரை மிக விரிவானதாகும்.

உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த சங்கத் தொகை நூல்களில் இத்தகைய பழைய உரை எதனையும் பெறாது அமைந்த நூல் குறுந்தொகை ஒன்றே. சங்க இலக்கியப் பதிப்பு வரிசையில் இறுதியாக அமையும் இந்நூலுக்கு மட்டுமே உ.வே.சா. அவர்கள் பதவுரை, விசேட உரை, மேற்கோள் விளக்கம், ஒப்புமைப் பகுதி ஆகியவற்றை வழங்கியுள்ளார். பிறவற்றிற்குப் குறிப்புரை மட்டுமே பொருந்துகின்றது (குளோறியா சுந்தரமதி,1984:34).

குறுந்தொகைக்கு உ.வே.சா. எழுதிய உரையானது பல்வேறு கருத்தியல்களைக் கொண்டமைகிறது. குறிப்புரை, அரும்பதவுரை என்கிற வட்டத்தில் ஆய்வுப்புலமை கொண்ட உ.வே.சா., குறுந்தொகையில்தான் உரை, ஆராய்ச்சி என்கிற பெருவெளியைக் கண்டடைகிறார். இவ்வுரை, உ.வே.சா. என்கிற பேராளுமையின் அறிவுமுதிர்ச்சியில் விளைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1937-ஆம் ஆண்டு குறுந்தொகைக்கு முன்னர் உரையாசிரியராகச் செயல்பட்டுள்ளாரா எனில், அதற்குச் சான்றுதான் மணிமேகலை.

மணிமேகலைக்கு உரைப்பிரதி எங்குத் தேடியும் கிடைக்காமையால் தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க தாமே உரையெழுதி வெளியிடுகிறார் (மணிமேகலை,1898:7). ‘இந்நூலுக்கு அரும்பதவுரையென்ற ஏதொவொன்றை எழுதத் தொடங்கினேன்’ (மேலது,1898:7) என்கிறார். அரும்பதவுரையை எழுதுகையில் உ.வே.சா. பின்பற்றிய நெறிமுறைகள் மிக முக்கியமானவையாகும். அவற்றைக் கீழ்வருமாறு பகுத்தளிக்கலாம்.

 • அரிய சொற்களுக்கு மட்டும் பொருள் அளித்தல்.
 • மேற்கோள் விளக்கம் அளித்துப் பொருளைப் புலப்படச் செய்தல்.
 • பொருள் விளங்காத இடங்களில் கேள்விக்குறியை(?) அமைத்துக் கொள்ளுதல்.
 • பாடவேறுபாடுள்ள சொற்களில் இன்றியமையாதவற்றிற்குப் பொருள் அளித்தல்.
 • பொருள் புலப்படுவதற்காக வடசொற்களைப் பெரும்பாலும் விரவுவித்தல்.
 • சங்க மருவிய நூல்கள் கிடைக்காமையால் பிற்கால நூல்களிலிருந்து சான்றுகள் காட்டுதல்.

என்று அரும்பதவுரை எழுதுவதற்கு நேர்த்தியான திட்டமிடலை வகுத்துக் கொண்டுள்ளார் என்பதை அறியவியலுகிறது. குறிப்புரை, அரும்பதவுரை என்கிற அடையாளத்தை மிக நெடிய காலம்வரை பின்பற்றியுள்ளார் என்பதை ஏனைய சங்க இலக்கியப் பதிப்புகளின்வழிக் காணவியலுகின்றது.

‘கவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் பயின்று என்று கம்பநாடரும் செல்லாறு தோறும் பொருளாழ்ந்து தெளிந்து' எனப் பரஞ்சோதி முனிவரும் அருளிச்செய்த திருவாக்குகளுக்கு இலக்காக விளங்குங் கவிகளினுடைய வரிசையிலே நிற்குந் தகுதியுள்ள பாட்டுக்களையுடைய இந்நூலுக்கு யானா அரும்பதவுரையெழுதுபவன்? இதுசெய்தற்குத் துணிந்து வந்த எனது தறுகண்மையைப் பொறுத்தருளும்படி இத்தமிழுலகத்தை மிகவும் வேண்டுகிறேன் (மணிமேகலை, 1898:8).

இதேபோன்று, சீவகசிந்தாமணி, பரிபாடல் ஆகியவற்றிற்குத் தாம் நூதனமாக எழுதிய பலவகைக் குறிப்புகளுடனும், மணிமேகலையை அரும்பதவுரையாகவும் பத்துப்பாட்டு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களைப் பழையவுரையுடனும் குறுந்தொகையை முழுமையான உரையாகவும் பதிப்பிக்கிறார். இந்நூல்கள் இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு என்று விரிகையில் உ.வே.சா.வும் குறிப்புரைகாரர், அரும்பதவுரைகாரர், உரைகாரர் என்று தனித்த அடையாளம் பெற்று விடுகிறார். இதில் குறிப்பிடத்தக்கது யாதெனின் பதிப்பியலில் ஈடுபட்ட உ.வே.சாமிநாதையர் உரையாசிரியர் எனும் அடையாளத்தைப் பழையவுரைகளில் இருந்து தான் வளர்த்துக் கொள்கிறார். ஐங்குறுநூற்றைப் பதிப்பிக்கும் பொழுதே அதற்கு அரும்பதவுரை ஒன்றையும் உ.வே.சா.எழுதியுள்ளார். இந்நூலையும் (ஐங்குறுநூறு) இவ்வுரையையும் உற்றுநோக்கும் பொழுது உண்டாகிய அச்சத்தால் தாம் எழுதி வைத்திருந்த அரும்பதவுரையைப் பதிப்பிக்கவில்லை என்று குறிப்பிடுகின்றார் (ஐங்குறுநூறு, 1903:5). எனில், உ.வே.சா. உரைச்சிந்தனையுடன் தொடர்ந்து இயங்கியுள்ளார். ஆங்காங்கே வெளிப்படுத்தியும் தவிர்த்தும் வந்துள்ளார்.

முற்பகுதியில் விளக்கப்பட்ட ஐங்குறுநூற்றின் பழையவுரை, நச்சினார்க்கினியரின் உரை முதலான உரைத்தன்மைகளைத் தமது குறிப்புரையிலும் அரும்பதவுரையிலும் கையாண்டு, பின்னர்க் குறுந்தொகையில் நேர்த்தியான உரையாசிரியராக உ.வே.சாமிநாதையர் முழுமையடைகிறார்.

துணைநின்றவை

 • 1903 ஐங்குறுநூறும் பழையவுரையும், 1903(மு.ப.), சாமிநாதையர், உ.வே.(ப.ஆ.), வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை.
 • 1955 குறுந்தொகை, 1955 (மூ.ப.), சாமிநாதையர் உ.வே. (ப.ஆ.), கபீர் அச்சுக்கூடம், சென்னை.
 • 1887 சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், 1887 (மு.ப.), சாமிநாதையர் 
 • உ.வே.(ப.ஆ.), திராவிடரத்நாகரம், கும்பகோணம்.
 • 1907 சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், 1907 (இ.ப.), சாமிநாதையர்    
 • உ.வே.(ப.ஆ.), ப்ரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை.
 • 1889 பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், 1889 (மு.ப.), சாமிநாதையர்
 • உ.வே.(ப.ஆ.), திராவிடரத்நாகரம், கும்பகோணம்.
 • 1894 புறநானூறு மூலமும் உரையும், 1894 (மு.ப.), சாமிநாதையர் உ.வே. (ப.ஆ.), வெ.நா.ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை.
 • 1898 மணிமேகலை மூலமும் உரையும், 1898 (மு.ப.), சாமிநாதையர் உ.வே. (ப.ஆ.),
 • வெ.நா.ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை.

பிற நூல்கள்

 • என் சரித்திரம், சரவணன் ப.(ப.ஆ.), காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2017.
 • உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் (தொகுதி-1), வேங்கடாசலபதி ஆ.இரா. (ப.ஆ.),டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, 2018.
 • தாமோதரம், சரவணன் ப.(ப.ஆ.), காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2017.
 • டாக்டர் உ.வே.சா.சங்க இலக்கியப் பதிப்புகள், குளோறியா சுந்தரமதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1984.

- ம.லோகேஸ்வரன், சென்னை பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்துக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்

Pin It