ஒரு சமூகம் வளர்ந்து செழித்துப் பருவமேறி விட்டதன் அடையாளம் என்ன? இலக்கியப் பூக்கள் அதில் பூத்துக் குலுங்கத் தொடங்குவதே. தமிழ் சமூகம் என்ற பொதுச் சமூகம் அதன் அன்றைய மேல்தட்டுப் படிப்பாளி வர்க்கம் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலே பூத்துக் குலுங்கத் தொடங்கிவிட்டது என்பதன் அபூர்வ அடையாளம் அதனினுள் இருந்து மொட்டுக் கட்டி வளர்ந்து பூக்களான அழகழகான சங்க இலக்கியங்கள். இந்த இலக்கியப் பூக்களின் வளர்ச்சியை முறைப்படுத்துவதற்காக அதற்கு முன்னரேயே தொல்காப்பியம் என்னும் பெரும் அழகியல் வழிகாட்டி நூல் உருவாக்கி விட்டது என்றால், சங்க காலத்தின் செழுமையையும் வளமையையும் என்னென்பது!
அதன் தொடர்ச்சியாகக், கடவுள்களையும், மன்னர்களையும் பற்றிய காப்பியங்கள் பிரம்மாண்டமாக உருவாயின. கம்ப ராமாயணம் தமிழ் அழகையும் வளத்தையும் ஆழத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒப்பற்றக் காப்பிய இலக்கியம். அதை தொடர்ந்து சிற்றரசர்கள் ஜமிந்தார்கள் காலத்தில் சிருங்கார ரசம் ததும்பும் சிற்றிலக்கியங்கள் உருவாயின.
இந்தச் சிற்றிலக்கியங்களில் சலித்துப் போன 18ஆம் நூற்றாண்டு, 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலப் படிப்பாளிகளான மேற்குடிமக்கள் ஆங்கிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கில நாவல்களின் ருசியை அறிந்தார்கள். இந்த ருசியனாது அவர்களைத் தமிழில் நாவல் எழுதத் தூண்டியது. வேத நாயகம் பிள்ளை என்னும் முனிசிப் உத்தியோகத்தர் 'பிரதாப முதலிய சரித்திரம்' என்னும் நாவலை 1879-ல் எழுதினார். ராஜம் ஐயர் 1895-ல் கமலாம்பாள் சரித்திரமும், 1898-ல் மாதவ ஐயா பத்மாவதி சரித்திரமும் எழுதினார்கள்.
இந்த மூன்று இலக்கியவாதிகளும் அன்று உயர்குடிப் பிறப்பினர். ஆங்கிலம் கற்றவர்கள்.
இதற்கு முன்னாலேயே 1775-ல் முத்துக்குட்டி ஐயர் என்னும் இலக்கியவாதி சிவகங்கை மன்னர் ரவிகுல முத்து வடுகநாத துரைக்குச் செய்யுளில் ஒரு கதை சொன்னார். இது பனைஒலையில் “வசன சம்பிராதயம்” என்னும் பெயரில் எழுதப்பட்டது.
இதே காலத்தில் சேஷ அய்யங்கார் என்னும் எழுத்தாளர் செய்யுள் வடிவத்தில் ஆதியூர் அவதானி என்னும் நாவலை எழுதினார். அது ஒரு செய்யுள் வடிவச் சமூக நாவல். ஒரு பிராமணர் தன் மகளுக்கு பிராமண சாதி வரம்புகளை மீறி செய்து வைத்த திருமணம் பற்றியது அது. இதே காலத்தில், 1889-ல் மலையாளத்தில் இந்துலேகா என்னும் நாவலைச் சாந்து மேனன் எழுதினார். அவரும் ஒரு முனிசிப் உத்தியோகஸ்தரே.
பிரதாப முதலியார் சரித்திரம் தமிழ் நாவலின் தொடக்கபுள்ளி என நான் கருதுகிறேன். இந்த நாவலை புனைவியல் நாவல் Romantic Novel என்று வரையறுக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அடுத்து கமலாம்பாள் சரித்திரம் 1895-ல் ராஜம் அய்யர் எழுதினார். நவீனத்துவ வகை சார்ந்தது இது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆங்கில ஆட்சியின் விளைவாக இந்து சமூகத்தின் சாதிக் கோபுர அடுக்கு குலையத் தொடங்கிற்று. அடித்தளச் சாதிகள் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் பங்கு எனப் பெற்றுப் படிப்படியாகத் தங்களைக் கோபுரத்தின் அடித்தளத்தில் இருந்து உருவிக் கொள்ளத் தொடங்கவே, வர்ணாசிரமக் கோபுரம் குலையத் தொடங்கியது.
கோபுரத்தின் உச்சியில் சுக போகத்தை அனுபவத்தவர்கள், உச்சி தகர்ந்து கீழ்நோக்கி விழத் தொடங்கினார்கள். இது நிரந்தத் துன்பம். இதையே துன்பியல் என்பார் அறிஞர் கார்ல் மார்க்ஸ். நிலை குலைந்த மேல்தட்டுகாரர்களில் ஒரு பகுதியினர் தங்கள் இழப்பை தாங்க முடியாமல் பெரும் சேகத்தில் மாட்டிக் கொண்டு, வேறு வழி தெரியாமல் ஆன்ம விசாரத்தில் முழ்கினார்கள். இதைச் சித்திரிக்கும் கதை தான் கமலாம்பாள் சரித்திரம்.
வீழ்ச்சியடைந்த சமூக அடுக்குகளுக்கு உள்ளிருந்து புதிய மனிதர்கள் புதிய காலச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களைத் தக அமைத்து கொண்டு மேல் நோக்கி வளரத் தொடங்கினார்கள். மாதவ ஐயா காட்டும் பத்மாவதி சரித்திரம் இந்தப் போக்கின் அருமையான எடுத்துக்காட்டு.
காலம் யாருக்காகவும் காத்து நிற்பது இல்லை. நேற்று இன்றாக, இன்று நாளையாக, வாழ்வு சதா சர்வ காலமும் இயங்கிக் கொண்டே, பொங்கிக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு பொங்கி எழும்பும் சகல வல்லமை உள்ள கால ஆற்றலே எதார்த்தம் என்பது. இந்த எதார்த்தை உற்று நோக்கி, அதைத் தன் இலக்கியத்தில் படைப்பவரே எதார்த்த இலக்கிய வாதி.
க.நா.சு.வின் பொய்த்தேவு, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகள். ஜெயமோகனின் பின் தொடரும் ‘நிழல்களின் குரல்கள்’ முதலியன சமூகங்களின் வீழ்ச்சியை நுட்பமாகப் படைத்துக் காட்டும் சிறந்த நாவல்கள். சமூகத்தின் மேல்நோக்கி வளரும் யதார்த்தப் போக்கை முதலில் பதிவு செய்தவர் மாதவய்யா.
இப்படி நாவல்களின் போக்குகளைப் பிரித்துக் காட்டினாலும், நடைமுறையில் ஒரு போக்கில் இன்னொரு போக்கு பெரும்பாலும் சிறிய அளவிலாவது கலந்தே காணப்படும்.
இன்று இந்திய சமூகம் வர்ணச் சார்பான, சாதிக் கட்டமைப்பு உடைந்து அடித்தளங்கள் எழுச்சி பெறுகின்ற காலம். 1879-ல் வேதநாயகம் பிள்ளை தமிழில் முதல் நாவல் எழுதினார். ஆனால் தலித் எழுத்தாளரான சிவகாமி IAS அதன் பின் 110 ஆண்டுகள் கழித்துத் தான் 'ஆனந்தாயி' நாவலை எழுதினார். அதற்கும் 14 ஆண்டுகளுக்குப் பின் தான் மீனவரான ஜோடி குருஸ் 'ஆழிசூழ் உலகு' எழுதினார். இலக்கியப் பூக்களைத் தங்கள் சமூகங்களினுள்ளிருந்து மலர்விக்கும் ஆற்றல் உள்ள எழுத்தாளர்கள் எல்லாச் சமூகங்களுக்குள் இருந்தும் எழ வேண்டும். அப்படி எழும் போது தான் அந்த அந்த சமூகங்கள் தங்கள் அழகோடும் மணத்தோடும் பிற சமூகங்களின் பார்வைக்கும் ரசனைக்கும் வரும். இலக்கியப் படைப்புகளை இன்னும் உருவாக்காத சமூகங்கள் அடித்தளங்களில் எத்தனையோ நசுங்கிக் கிடக் கின்றன. அவைகளும் தங்கள் படைப்புகளால் பிற சமூகங்களின் கவனத்தைக் கவர வேண்டும். தங்களை இலக்கியம் மூலமாக விடுதலைப் படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே முழுமையான விடுதலை.
இலக்கியப் பெரு வெள்ளம் சமூகத்தின் அடித்தளம் வரை பாய்ந்து எல்லா சமூகங்களையும் நனைத்துப் பூக்க வைக்க வேண்டும். மிக அண்மையில் தான் சாஞ்சரம் என்னும் நாவல் மூலம் கிராமப்புற நாதஸ்வர வாழ்வைப் படைப்பாக்கி இருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இவ்வாறான படைப்புகளின் வழியே தான் பொதுச் சமூகத்திற்கு இந்தச் சமூகங்கள் பற்றி அபிமானம் உண்டாகும். ஏற்கெனவே இருக்கும் அனுதாபம் கலைப்படைப்பு மூலம் அபிமானம் ஆகும். படைப்புகளின் வழியே தான் இது சாத்தியப்படும். பாரதி சொல்லுகிறார்.
வெள்ளம் போல் கலைப்பெருக்கும் கவிப்
பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார்.
சமூகத்தை நேசிக்கும் படைப்பாளிகள் தங்கள் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி அடித்தளச் சமூகங்கள் எழத் தங்கள் எழுதுகோல் மூலம் ஊக்கம் அளிக்க வேண்டும். பாரதி சொல்வாரே.
கல்லை வைரமணியாக்கல் - செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
போத்தைச் சிங்க ஏறாக்கல் - மண்ணை
வெல்லத்து இனிப்பு வரச் செய்தல் - என
விந்தை தோன்றிட இந் நாட்டை - நான்
நாடும் படிக்கு வினைசெய்து - இந்த
நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க - கலி
சாடும் திறன் எனக்குத் தருவாய்.
சமூக எழுச்சியின் முதல் அடையாளம் அந்தச் சமூகத்தில் இருந்து இலக்கியம் உருவாவது தான். அந்த இலக்கியம் குறுகிய வட்டத்தை தாண்டி பரந்த சமூகத்தினுள் தன் ஆற்றலைச் செலுத்த வேண்டும். வரலாற்றின் உள் நுழைந்து பழமையின் நல்ல அம்சங்களைத் துலக்கி அதன் ஆற்றலை சமூகத்திற்கு ஊட்ட வேண்டும். தன் அழகாலும் ஆற்றலாலும் மானுட எழுச்சிக்கு துணை நிற்பதே சிறந்த இலக்கியம். சமகாலத் தமிழ்நாவல்கள் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்கின்றன.
சாதிக்குள் தான் நாம் வாழ்கின்றோம். சாதியத்தினுள் நாம் முடங்கி விடக் கூடாது. மதத்துக்குள் தான் நாம் வாழ்கிறோம். மதவெறிக்குள் நாம் முடங்கிவிடக்கூடாது. இனத்துக்குள்ளும், மொழிக்குள்ளும் தான் வாழ்கிறோம். இனவெறியும், மொழிவெறியும் நம்மைக் குருடாக்கி விடக் கூடாது. நம் பார்வை வெளிமுகமானதாக இருக்க வேண்டும். சுற்றுப்புறச் சமூகங்களையும் சமயங்களையும், அரவணைத்துக் கொள்ளுவதாக, நேசிப்பதாக இருக்க வேண்டும். தன்னை வளர்த்துக் கொண்டு, தன்னைச் சுற்றிச் சகல மனிதர்களோடும் சுதந்திரமான, ஜனநாயக பூர்வமான, சகிப்புத்தன்மையும், மனித நேயமும் நிறைந்த மானுட வாழ்வு வாழ வழி காட்டும் சிறந்த இலக்கியங்கள் நம்முள் இருந்து தோன்ற வேண்டும். அவையே நம்மை உலகத்தோடு இணைக்கும். நம் கலையின் மேன்மையை உலகம் உணர வைக்கும்.