வட்டார வழக்கு என்பதைக் கையின் விரல்களைப் போலக் குறிப்பிடலாம். எல்லோருக்கும் தெரியும் சொல், புரியும் பொருள் என்பவை பொது மொழி உள்ளங்கை என்றால் வட்டார வழக்குகள் விரல்கள். சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல், ஆள்காட்டி (சுட்டு) விரல், கட்டை விரல் எனப் பெயர்கள் இருக்கின்றன. கரிசல் வட்டார வழக்கு, நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு, செட்டி நாட்டு வட்டார வழக்கு, சோழ நாட்டு வட்டார வழக்கு, கொங்கு நாட்டு வட்டார வழக்கு எனத் தமிழுக்குப் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன.

ஒரு சொல்லுக்கு உள்ள பொதுப்பொருளோடு இன்னொரு பொருளைப் பெற்றிருப்பதாலும் பிற வட்டார வழக்கில் இல்லாமல் அந்த வட்டார வழக்கில் மட்டுமே பல சொற்கள், பழமொழி, விடுகதை போன்றவை இருப்பதாலும் தனித்தனி வட்டார வழக்குகள் ஆகும்.

ki rajanarayanan 700இந்தியாவிலும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாவட்டத்திலும் எனத் தற்போதுவரை இருபத்தாறு திராவிட மொழிகளில் கண்டறியப்பட்டுள்ளன (Bh.Krishnamurti, 2003:19). இலக்கணம், மொழியமைப்பு அடிப்படையில் இம்மொழிகளைத் தென்திராவிட மொழிகள் (11), நடுத்திராவிட மொழிகள் (12), வடதிராவிட மொழிகள் (3) எனத் திராவிட மொழியியல் அறிஞர்கள் பாகுபாடு செய்துள்ளனர். இவை அனைத்தும் ஒரு மூல மொழியில் (Proto-Lan­guage) இருந்து பிரிந்தவை ஆகும். ஒட்டு மொத்தமாக இதுவரை அறியப்பட்ட திராவிட மொழிகளின் மீட்டுருவாக்கம் (Reconstruction) செய்யப்படும் தொன்மை மொழியை மூலதிராவிடம் (Proto-Dravid­ian) என்பர்.

திராவிடம் வேறு, தமிழ் வேறு என்னும் அரசியல் வேறு பேசப்படுகின்றது. அதற்குள் விரிவாகப் போக வேண்டியதில்லை. ஆனால் இன்னொரு உண்மையையும் மறந்துவிடக்கூடாது. ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்பது உண்மையான வரலாறு (ஆர்.எஸ். சர்மா, ஆரியரைத் தேடி, ப.14, ந.சுப்பிரமணியன், இந்தியவரலாறு, ப.30). இந்தியாவில் அருகிய வழக்கில் உள்ள சமஸ்கிருதம், பெரு வழக்கில் உள்ள இந்தி, மராத்தி, குஜராத்தி போன்ற மொழிகளும் இலங்கையில் பேசப்படும் சிங்களமும் இந்தோ-ஆரிய மொழிகள். இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகிய கிரேக்கம், இலத்தீன் போன்ற தொன்மையான மொழிகளோடு இரத்த உறவு கொண்டவை இந்தோ-ஆரிய மொழிகள். முதன்முதலாகச் சர் வில்லியம் ஜோன்ஸ் (1788) என்பவர் சமஸ்கிருதத்திற்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள தொன்மை உறவை வெளிப்படுத்துகின்றார். பலர் இக்கோட்பாட்டை விரிவாகப் பேசுகின்றார்கள்.

மண்ணுக்கு வந்த குதிரை மனைக்குச் சடுத்தம் (உரிமை) போட்டுதாம் என்று ஒரு பழமொழி உண்டு. அப்படி, தமிழ் மற்றுமுள்ள திராவிட மொழிகளுக்குச் சமஸ்கிருதம் தாய்மொழி என்று வெளிநாட்டினர் பேசுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் மண்ணில் ஊறிய நீரைக் குடித்தும் விளைந்ததை உண்டும் வாழ்ந்தவர்களே கூறியுள்ளார்கள். 11ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரனார் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை வடமொழி இலக்கண மரபு அடிப்படையில் தமிழுக்கு எழுதியுள்ளார். அவரின் மாணவர் பெருந்தேவனார் தமிழ்ச் சொல்லிற்கு எல்லாம் வடநூலே தாயாகி நிற்கின்றமையின் அங்குள்ள வழக்கு எல்லாம் தமிழும் பெறும் (வீரசோ. 60 உரை). திராவிட மொழிகளும் இந்தோ-ஆரிய மொழிகளும் வேறுவேறு மொழிக் குடும்பங்களைச் சார்ந்தவை என்பதை வெளிநாட்டு அறிஞர்களே சான்றுகளுடன் மறுத்தார்கள் (Francies White Ellis, 1816; Robert Caldwell, 1856)

எனவே, தமிழுக்கும் பிற திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள உறவை மறுத்தால் ஆரியர் இந்தோ-ஐரோப்பியருடன் தொடர்புடையவர் அல்லர் என்னும் வரலாற்றுப் பிழையையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆரியர் இந்தியாவின் தொன்மைக் குடியினர் என ஏற்கனவே தொகுதி தொகுதியாக எழுதித் தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள் (தமிழக அந்தணர் வரலாறு1,2, 2008). அரசியல் பேசுவதும் வரலாறும் ஒன்றல்ல என்பதற்குப் பல சான்றுகள் இருந்தாலும் மொழிகளில் காணப்படும் ஆயிரக்கணக்கான இணைச் சொற்கள் (Cognate words) இன உறவை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். சான்றுக்கு ஒரு சொல்லைக் குறிப்பிடலாம்.

நால் என்பது நான்கைக் குறிக்கும் வேர்ச்சொல் எண்ணடையாகச் செயல்படும். பல்வேறு திராவிட மொழிகளில் இதன் இணை வடிவம் காணப்படுகின்றது. மலையாளம் na:l, குடகு na:l, தெலுங்கு na:l, நாய்கி na:l, தோண்டி na:l, கூயி na:l, குரூக் na:x (DED-3655), இவை ஒரு குடும்ப மொழி இல்லை என்றால் ஒரே பொருள் தரும் வேர்ச்சொல் எவ்வாறு எல்லா மொழிகளிலும் இருக்க முடியும்?

ஒன்று இரண்டு அல்ல, நால் என்னும் வேர்ச்சொல் போல ஆயிரக் கணக்கான வேர் இணை வடிவங்கள் ஒலி இழப்பு, மாற்றம், சேர்த்தல் என்னும் அடிப்படையில் ஒரு குடும்ப மொழிகளுள் காணப்படும். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துடன் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் தொடர்புடையது என்பதையும் இணை வடிவங்கள் காட்டிக் கொடுக்கும். எவ்வளவு காலம் ஆனாலும் தொலைவில் இருந்தாலும் ஒப்பியல் மொழியியல் (Comparative Linguistics) ஆய்வு காட்டிக் கொடுத்து விடும்.

ஒரு மொழி பேசுவோரின் தொன்மையை அறியப் புதை பொருட்கள் எவ்வளவு அடிப்படையாக இருக்கின்றனவோ அந்த அளவுக்குக் குடும்ப மொழிகளின் இணை வடிவங்களும் இருக்கும். கால ஓட்டத்தில் பிரிந்து பல பகுதிகளில் வாழ்பவர்களையும் பல நாடுகளில் வாழ்பவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்க உதவும். மற்றபடி அவர்களை ஒன்று சேர்த்துக் கட்டமைத்து ஒரு குடும்ப மொழி பேசுவோரின் நாடாக உருவாக்க முடியாது. திராவிட மொழிகளைப் பேசுவோரையே சான்றாகக் குறிப்பிடலாம்.

இந்த அடிப்படையில்தான் ஒரு குடும்ப மொழிகள் போலப் பொது மொழியும் அதன் வட்டார வழக்குகளும் சேர்ந்தே ஒரு முழுமையான மொழி எனப்படும். வட்டார வழக்குக் கோட்பாடு புதிதாக உருவானது அன்று! மரபிலக்கணங்களிலேயே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

பவணந்தி முனிவர் (நன்.273) செந்தமிழ் பேசக்கூடிய நிலத்தோடு அதன் வட்டார வழக்குகளாகப் பன்னிரண்டு பகுதிகளைக் குறிப்பிடுகின்றார். உரையில் கொடுக்கப்படுபவை தமிழின் வட்டார வழக்குகள். உரையில் இன்னும் பதினேழு நாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மரபிலக்கணப்படி இரண்டு வகையும் திசைச் சொற்கள்.

மொழியியல் அடிப்படையில் முன்னர்க் குறிக்கப்படும் பன்னிரண்டும் வட்டார வழக்குகள். பின்னர்க் குறிக்கப்படும் பதினேழு வழக்குகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒருவகை தமிழோடு தொடர்புடைய திராவிட மொழிகள்; மற்றவை வேறு குடும்பமொழிகள்.

தமிழில் தற்காலத்தில் குறிக்கப்படும் வட்டார வழக்குகள் எல்லாமே ஒரே மதிப்புடையவை. இருப்பினும் கரிசல் வட்டார வழக்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகின்றது. அதற்குக் காரணம் கரிசல் வழக்கை நூல்களில் பதிவு செய்தவர் கி.ராஜநாராயணன்.

கரிசல் வட்டார இலக்கியம் வளர்ச்சி அடைந்ததன் தாக்கத்தால் தான் தமிழ் மொழியின் பிற வட்டார வழக்குகளிலும் இலக்கியங்கள் வளர்ச்சி அடைந்தன. பழமொழி, விடுகதை, வழக்குச் சொற்கள் போன்றவை காலங்காலமாக இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டாலும் கி.ராஜநாராயணன் வழியாகவே வட்டார வழக்கு இலக்கியம் பேரளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே தான் கிரா வட்டார வழக்கிற்கு ஓர் அண்ணல் ஆகின்றார். இவருக்கு முன்னத்தி ஏர் கு.அழகிரிசாமி என்றாலும் இவர் அளவிற்கு அவர் எழுதவில்லை (கரிசல் கதைகள் 2002:6).

கிரா கரிசல் காட்டு இலக்கியத்திற்குச் செய்துள்ள பணி அளப்பரியது. பல ஆய்வாளர்கள் குறிப்பதைப் போல அவருடைய பணியை இலக்கிய உலகம் முழுமையாகக் கண்டு கொள்ளவில்லை.

நம்முடைய இலக்கண, இலக்கிய மரபுகளும் உழைக்கும் மக்களை - அதாவது, பிறரிடம் அடிமைத் தொழில் செய்வோரை ஐந்திணை ஒழுக்கத்திற்குள் அடக்கவில்லை. அவர்களின் உணர்வுகளை கைக்கிளை, பெருந்திணை என ஒதுக்கியே பார்க்கின்றன (தொ.பொ.25, 26).

சங்க கால மக்களின் வாழ்வியலை அறியும் அளவிற்குப் பிற்கால இலக்கியங்களைக் கொண்டு அறிய முடியவில்லை. வளமிக்க சோழநாடு ஆய கலைகளை வளர்த்த பெருமைக்கு உரியது. படித்தவர்கள் நிறையப் பேர் இருந்தமையால் புதினம், சிறுகதை போன்றவை சோழ மண்ணில் நிறைய எழுதப்பட்டன. உழைக்கும் மக்களைப் பற்றிய பதிவே குறிப்பாகப் பொதுவுடைமை, திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்னர் இல்லை. இருந்தாலும், அப்பதிவு மேட்டுக்குடி மக்களுக்கு அடிமை வேலை செய்தவர்களைப் பற்றியதாக இருக்கும். அவர்களின் உணர்வுகளைக் காணமுடியாது.

               கிரா அந்த வகையில்தான் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றமை போலக் கரிசல் காட்டு இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் வட்டார வழக்கு இலக்கியத்தின் பிதாமகன் ஆகின்றார்.

 தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கிரா நாட்டாரியலும் செவ்வியலும் நவீனவியலும் இயைந்த புள்ளியில் இயங்கினார் என்பதும் பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்கும் இடையே அவருடைய படைப்புகள் பாலமாக அமைந்தன என்பதும் அவருடைய தனித்துவம் ஆகும். தான் சார்ந்த கரிசல் மண்ணையும் அதன் மனிதர்களையும் தமிழ் இலக்கியத்தின் மையப் பரப்புக்குக் கிரா கொண்டு வந்த பிறகே தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பகுதிகளிலிருந்தும் மண்ணை மையமாகக் கொண்ட இலக்கியங்கள் உருவெடுத்தன.

என இந்து-தமிழ்-திசை (2-1-5.2021:6) தலையங்கம் குறிப்பது எதார்த்தமான உண்மையாகும்.

எழுபது - எண்பதுகளில் மாணவர்களும் பேராசிரியர்களும் பொதுவாக மக்களும் இலக்கியங்களை - குறிப்பாகப் படைப்பிலக்கியங்களைப் படிக்கக் கொண்டிருந்த ஆர்வம் தற்போது இருக்கின்றதா என்பது தெரியவில்லை. மாணவர்கள் கல்கி, சாண்டில்யன் எழுதிய வரலாற்றுப் புதினங்களையும் மு.வ., அகிலன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி போன்றவர்களின் சமுதாயம் சார்ந்த படைப்புகளையும் தேடிப்பிடித்துப் படிப்பார்கள்.

இவ்வாறு படித்த சூழலில் பின்னாளில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகிய மதுரைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பொன்னீலனின் ‘கரிசல்’ என்னும் புதினத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மார்க்சிய சிந்தனையுடன் எழுதப்பட்ட புதினமாகும். அக்காளும் தங்கையும் தந்தைக்கும் மகனுக்கும் மனைவி ஆகின்றனர். அக்காள் மகள் என்ற முறையில் மூத்தவள் தந்தைக்கு மனைவி ஆகின்றாள். அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு அத்தை மகள் என்ற முறையில் அம்மாவின் தங்கை - சித்தி கட்டி வைக்கப்படுகின்றாள். இரண்டுமே முறையான திருமணம் தான். இருந்தாலும் படிக்கும் போது வியப்பாக இருந்தது.

kira karisal kathaikalகிராமப்புறங்களில் காலங்காலமாக உள்ள வழக்கம்தான். பங்காளி வீடுகளில் அக்காள் சித்தப்பனுக்கும் தங்கை அண்ணன் மகனுக்கும் வாக்கப்பட்டிருப்பார்கள். ‘கரிசல்’ புதினத்தைப் படித்த பிறகுதான் கிரா வைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

படைப்பிலக்கியத்திற்குத் தேவையான கரு கிடைப்பதற்கு வளமான சோழ மண், வறண்ட கரிசல் மண் என்னும் வேறுபாடில்லை. சொல்லப் போனால் வறண்ட மண்ணில் தோன்றும் படைப்புகளிலேயே ‘பரக்கப் பரக்கப் பாடுபட்டேன் படுக்கப்பாயில்ல; தட்டானுக்கு வாக்கப்பட்டேன் அறுக்கத்தாலி இல்ல’ என மக்கள் வாழ்க்கை தெரிவதோடு அம்மண்ணில் வாழும் உயிரினங்களின் நிலையும் தெரியும்.

பொதுவாக, படைப்பாளர்கள் விளைந்துள்ள கடலைக் கொடியை அரித்து அதிலுள்ள கடலையை ஆய்வார்கள் என்றால் கிரா மண்ணில் தங்கி உள்ள தப்பு கடலையைக் களைக் கொட்டால் சீய்த்து எடுப்பது போலச் சமுதாயத்தில் விடுபட்ட அல்லது விலக்கப்பட்டவற்றை எல்லாம் தோண்டி எடுத்துப் பதிவு செய்துள்ளார்.

ஒரு படைப்பு அல்லது ஆய்வைப் படிக்கும் போது அது இன்னொன்றை எழுதத் தூண்ட வேண்டும்; அல்லது மனதில் மறைந்து கிடப்பவற்றை வெளிப்படுத்த வேண்டும். ஏறக் குறையத் தமிழ்ப் படைப்பாளர்களில் கிரா வின் படைப்புகள் செய்துள்ள தாக்கம் மற்றவர்களின் படைப்புகள் செய்துள்ளவற்றை விட அதிகம் என்றே குறிப்பிடலாம். அவர் சார்ந்து எழுதியவை நாட்டுப்புறவியல் (Folklore) தொடர்பானவை.

கிரா கரிசல் காட்டு மண்ணைப் பற்றி எழுதினாலும் அவை எல்லா மண்ணுக்கும் உரியவை. அவர் எல்லாவற்றையும் நினைத்து, நினைத்துத் தோண்டி வெளிப்படுத்துகின்றார்.

உறவுமுறை உள்ளவர்கள் செய்து கொள்ளும் கிண்டலுக்கு அளவே இருக்காது. வயது வேறுபாடு இல்லாமல் உறவுமுறைக்காரர் ஒருவரைப் பார்த்தால் பரிகாசம் பண்ணத் தோன்றும். ஆண், பெண் என்னும் வேறுபாடும் இருக்காது. எப்போதும் கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பவர்களுக்குக் கூட உறவுமுறைக்காரர்களைப் பார்க்கும்போது கிண்டல் பண்ணத் தோன்றும். அந்தக் கிண்டல் திட்டமிட்டு வருவதில்லை; இயல்பாக வரும்.

‘எனக்கு ரெண்டு ஆளு வேணும் அமசு’ என்கிறார் அத்தை மகன். ‘நீங்க வேற அத்த மகனே, எனக்கு நாலு ஆளு வேணும்; நானும் நாலு நாளா கெடந்து அலையுறேன், ஒரு ஆளு கூடக் கெடக்கல!'

நடவு நேரத்தில் நடவு ஆள் திண்டாட்டம் அதிகமாக இருக்கும். எதிரும் புதிருமாக வரும் அவர்கள் இயல்பாகக் கூறிக் கொண்டு கடக்கிறார்கள். அவரோடு வந்தவர், ‘வயதான காலத்துல ஆளுக்கா அலையுறிய’ என்று போகிற போக்கில் கூறிப் பொருளையே புரட்டிப் போட்டுவிட்டார். நடவு நட்டுக் கொண்டிருப்பார்கள். மாமா, மாமன் மகன், அத்தை மகன் என்று யாராவது நாற்று முடி எடுத்துப் போடுவார்கள். திடீரென்று முறை உள்ள இளவட்டப் பெண்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரைச் சுற்றி வட்டமாக நாற்றை நட்டுவிடுவார்கள். அவர் பத்து - இருபது பணத்தைக் கொடுத்த பிறகுதான் வட்டத்தை விட்டு வெளிவர முடியும்.

புதுமாப்பிள்ளை விருந்து சாப்பிடும்போது மணப்பெண்ணின் தங்கைகள் அக்காள் கணவனைச் செய்யும் கிண்டலுக்கு அளவே இருக்காது. விருந்து சாப்பிடும் இடம் மின்சாரம் இல்லாத காலத்தில் இருட்டாக இருக்கும். மாப்பிள்ளை பாயில் உட்காரும் போது பட பட என்னும் சத்தம் காற்று பறிவது போல வரும். பாய்க்குக் கீழே பானை ஓட்டை வைத்திருப்பார்கள். சாப்பிடும் வாழை இலையின் நரம்பில் நூலைக் கட்டிச் சோற்றில் கை வைக்கும்போது இலையை இழுப்பார்கள். இப்படி ஐம்பது - அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்ப் பரிகாசங்களை நிறையக் கேட்கலாம்; காணலாம்.

கோபல்ல கிராமம்

எழுபதுகளில் கோபல்ல கிராமம் (1976) வெளிவந்த போது படித்த நிகழ்வொன்று இத்தனை ஆண்டுகள் உருண்டோடிய பிறகும் மனதை விட்டு நீங்கவே இல்லை. உறவு முறை உள்ளவர்களுக்குள் செய்யும் பரிகாசம் அல்லவா! எப்படி மறந்து போகும்?

அக்கையாவும் சுந்தரப்ப நாயக்கரும் மாமன்-மச்சான் முறை உள்ளவர்கள். முன்னவர் கிண்டல் பண்ணுவதில் கொஞ்சம் தூக்கலான பேர்வழி. உறவுமுறை உள்ளவர்கள் விளையாடும் இடமாக இருந்தாலும் வேலை இடமாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பார்கள். எப்படி இருந்தாலும் ஒருத்தர் ஏமாந்துதான் போக வேண்டும்.

வேலை முடிந்தபிறகு சுந்தரப்ப நாயக்கர் வெளியே போக ஒதுங்குகின்றார். தண்ணீர் இல்லாத கரிசல் காட்டில் மேயப் போகும் மாடு கொம்பில் புல்லைக் கட்டிக் கொண்டு போகாது; ஆனால் வெளியே போகின்றவர் தண்ணீர் கொண்டு போக வேண்டும்.

சுந்தரப்ப நாயக்கரிடம் ‘கால் கழுவத் தண்ணீரை ஊற்றவா?’ என்று அக்கையா கேட்கின்றார். இவரும் ஒரு உள்நோக்கத்துடன் கேட்கின்றார். அவரும் ஒரு உள்நோக்கத்துடன் ஊற்றச் சொல்கின்றார்.

சுந்தரப்ப நாயக்கர் கழுவக் கையை வைத்தபோது கொஞ்சம் ஊற்றியவர் திடீரென்று தோண்டித் தண்ணீரைத் தரையில் ஊற்றிவிட்டு அக்கையா ஊரை நோக்கி ஓடுகின்றார்.

‘உன்மேல் இதைத் தேய்க்காமல் விடமாட்டேன்| என்று சுந்தரப்ப நாயக்கர் பின்னால் துரத்திக் கொண்டு ஓடிவர ஒரே களேபரம்| (2014 : 62-63)

அறுபது-எழுபது ஆண்டுகளுக்குமுன் தற்போது நாட்டுக்குள் மதுபானம் பெருக்கெடுத்து ஓடுவது போல வயற்காட்டில் பங்குனி மாதம் வரை சேறும் சகதியுமாகத்தான் இருக்கும். தை மாதம் அறுவடை முடிந்தாலும் பாதைகள் இல்லாத வயற்காட்டிற்குள் இருந்து நெல், வைக்கோலைப் பூமி காய்ந்த பிறகு பங்குனி மாதம் தான் வெளியே கொண்டு வர முடியும். அதுவரை தேவைப்படும்போது வைக்கோலைக் கட்டித் தலைச் சுமையாகத்தான் தூக்கி வருவார்கள்.

அத்தை மகன் முரடன், விவரம் தெரியாது. அத்தை சொன்னதால் மாமன் மகன்கள் வைக்கோலைக் கட்டி அவன் தலையில் தூக்கி விடுகின்றார்கள். சிறுகட்டுதான், இருந்தாலும் தூக்கி வர முடியவில்லை, அவ்வளவு கனம்! கொண்டு வந்து போட்டு விட்டுக் கழுத்தை அத்தை மகன் இப்படியும் அப்படியும் சுளுக்கு எடுக்கிறான்.

அத்தைக்கு ஒரு ஐயம். கட்டை அவிழ்க்கிறார். உள்ளே இரண்டு கிராய்கள்! புல்லோடு சேர்த்து வெட்டிக் கட்டி மாமன் மகன்கள் தூக்கி விட்டுள்ளார்கள். அவற்றைப் பார்த்துவிட்டு, ‘இதனாலதான் கட்டுக் கனமா இருந்துச்சா?’ என்று அப்பாவித்தனமாக ஆயாவிடம் கேட்டானாம்.

இப்படிப்பட்ட நிகழ்வுகளை எல்லாம் நாட்டுப்புற இலக்கியங்களில் தான் காண முடியும். இப்படித்தான் மகாகவியைத் தொடர்புபடுத்தி ஒரு நிகழ்வைக் கூறுவார்கள். பாரதியார் தெரு வழியாக நடக்கின்றாராம். குழாயடிச் சண்டை இலக்கியப் பதிவில்லாத வார்த்தைகள்; பாம்பைப் பிடித்துச் சுற்றும்போது முழுமுழு எலிகள் வந்து விழுவது போலப் பல சொற்கள் அவர் காதில் பாய்கின்றனவாம்.

மகாகவி ஆவலோடு கேட்டுக் கொண்டு நிற்கின்றாராம். துணையாக வந்தவர் ‘அசிங்கமான பேச்சு வாங்க’ என்றாராம் ‘ஓய் இந்த வார்த்தைகளை எந்த இலக்கியத்திலும் படிக்க முடியாதுங்காணும், இன்னும் சற்றுக் கேட்போம்’ என்றாராம்.

இலக்கண நூல்கள் நாட்டுப்புற மக்களின் புழங்கு மொழியைப் பயன்படுத்துவதற்கு விதிகள் விடுத்துள்ளன. சாணம் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றது. மாட்டுச் சாணத்தைக் குறிக்கவில்லை. சாணம், சாணி என்பவை வழக்கில் உள்ளன.

பசுவின் சாணத்தைக் குறிக்க (ஆப்பீ-ஆப்பி) வரும் புணர்மொழிக்குத் தொல்காப்பியர் பின்வருமாறு விதி கூறுகின்றார். ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் / தான் மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே (தொ.எ.234) ஆன்-பீ.ஆ-பீ.ஆப்பி.ஆப்பி, வருமொழியாக வரும் பீ என்பதைக் குறிக்கத் தொல்காப்பியர் ஈகாரப் பகரம் என்கின்றார். பெருமாள்முருகன் பீக் கதைகள் என்னும் தலைப்பில் சிறுகதைத் தொகுதி ஒன்றை எழுதியுள்ளார். தொல்காப்பியர் இவ்வாறு கூறுவதை அவையல் கிளவி (தொ.சொ.436) என்பார். பவணந்தி முனிவரும் (நன். 267) மொழிப்பயன்பாட்டை இயல்பு வழக்கு (இலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ) தகுதி வழக்கு (இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி) எனப் பகுத்து விளக்குகின்றார்.

நாட்டுப்புற இலக்கியங்கள் வழியாகவே புதுப்புது செய்திகள், சொற்களை எல்லாம் அறிந்து கொள்ள முடியும். நாட்டுப்புற இலக்கியங்கள் வழிப் பல புதியவற்றை அறிந்து கொள்ளலாம். இருப்பினும், அவை பதிவாகாமல் இருந்த பழையவையே.

பழமொழி, விடுகதை போன்றவை 19-20 ஆம் நூற்றாண்டுகளிலேயே அறிஞர்களால் தொகுக்கப்பட்டிருந்தாலும் நாட்டுப்புறவியலின் அனைத்துக் கூறுகளையும் கரிசல் காட்டு இலக்கியங்கள் வழி வெளிக் கொண்டு வந்து, பிறரும் அவ்வாறு எழுத வேண்டும் என்று ஆவலைத் தூண்ட வைத்த பெருமை வட்டார வழக்கின் பிதாமகர் கிரா வையே சாரும்.

பெண் குறியைக் குறிக்கக் ‘கருமுகமந்தி’ எனவும் ஆண் குறியைக் குறிக்கச் ‘செம்பின் ஏற்றை’ எனவும் அவையல் கிளவியைக் குறிப்பிட வேண்டும் (நன்.266 கழனியூரன்: மயிலை). கிராவும் கழனியூரனும் சேர்ந்து நாட்டுப் புறப் பாலியல் கதைகள் (நீலக்குயில் 1994) என்னும் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். கிரா வட்டார வழக்குக் கூறுகள் அனைத்தையும் விட்டுவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதியுள்ளார். எல்லாமே தமிழ்மொழிக்கு வளம் சேர்ப்பவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

‘இப்போது இந்த வசவுகளைத் திரட்டிக் கொண்டிருக்கின்றேன். விஷயம் தெரியாதவன் சொல்வான், இந்தக் கிராவுக்குக் கிறுக்கா? வசவுகளைத் திரட்டிக்கிட்டு அலையுறதான் என்று நையாண்டி செய்வான். நான் கதை எழுதுவதைத் தள்ளி வைத்துவிட்டு, இதைச் செய்ய யாருமில்லாததால் செய்கிறேன் (நாட்டுப்புறப் பாலியல் கதைகள், பின்அட்டை)

பீக்கதைகள் (2004: 13) என்னும் சிறுகதைத் தொகுப்பிற்குப் பொ.வேலுசாமி எழுதிய முன்னுரையைக் கிராவுக்கும் சேர்த்துக் கொள்ளலாம்.

‘சமூகத்தால் ஒதுக்கப்பட்ட விஷயங்கள் என்று முன் அனுமானம் செய்து கொண்டு சில பகுதிகளைப் பார்க்க விரும்பாத ஒரு பொதுமனம் உள்ளது. உண்மையில் அவை ஒதுக்கப்பட வேண்டியவை தானா, அவை பொருட்படுத்த வேண்டாத விஷயங்கள் தானா என்பது முடிவானதல்ல, விவாதத்திற்குரியது.

அக்கினிக் குழந்தைகள்

மனதிற்குள் இளம்வயதில் விழுந்த சில கரு விதைகள் அப்படியே கிடக்கும். படைப்பாளர்களாக இருந்தால் அவை முளைத்து வெளிவரும்; இல்லை என்றால் அப்படியே மக்கி மண்ணாகிப் போய்விடும்.

பொன்னீலனின் கரிசல், சி.ஏ.பாலனின் தூக்குமர நிழல் போன்ற பொதுவுடைமை சார்ந்த படைப்புகளைப் படித்தபோது ஐந்து - ஆறுவயதில் மனதிற்குள் விழுந்த ஒரு பொதுவுடைமைப் போராளியின் மரணம் மாவீரன் வாட்டாக்குடி இரணியன் (1999) என்னும் வரலாற்றுப் புதினமாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சாம்பவான் ஓடைச் சிவராமன் (1999), ஆம்பல் ஆறுமுகம் (2002), பொதுவுடைமைப் போராளி ஏ.எம்.கோபு (2010) போன்ற படைப்புகள் வெளிவந்தன.

கோபல்ல கிராமம் (1976) என்னும் புதினத்தைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இன்னொரு கதைக் கருவும் மனதிற்குள் கிடந்தது நினைவிற்கு வந்தது. மன்னன் பெண் கேட்பது, இனக் குழுத் தலைவர், குடிமக்கள் மறுப்பது என்னும் நிகழ்வுகள் தொன்றுதொட்டே நிகழ்ந்துள்ளன.

சங்க இலக்கியங்களில் நிறையப் பதிவுகள் உள்ளன. மகட்பாற் காஞ்சி என்றொரு துறையே வகுத்து இலக்கணங்களில் விளக்கப்பட்டுள்ளது. கோபல்லபுரத்து மக்கள் புதினம் விளக்குவது போன்றே சோழ நாட்டில் இடைக்காலச் சோழர்காலத்தில் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. எப்போது இந்தச் சாதிப்பாகுபாடு சமுதாயத்தில் களையாக மண்டி வளர்ந்து தழைத்ததோ அப்போதிருந்தே இப்படிப்பட்ட நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இரண்டு கிராமங்கள் புதினத்தில் அக்கினிபுரம், சூரியபுரம்; அவற்றின் பெயர் முறையே கட்டக்குடி, அருமுளை இலக்கியம், கல்வெட்டு என எதிலும் இந்த நிகழ்வு பதிவானதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த ஊர்களில் மக்கள் வாழ்ந்து அழிந்ததற்கான எச்சங்கள் இன்றும் கிடைக்கின்றன.

ஐந்து-ஆறு கிலோ மீட்டர் இடைவெளியில் இரண்டு ஊர்களும் இருக்கின்றன. இந்த இரண்டு ஊர்களும் அழிந்ததற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று சாதிக் கலப்பு, மற்றொன்று மன்னன் பெண் கேட்டு வருவது; இரண்டு ஊர்களிலும் வெள்ளாளர்கள் வாழ்ந்தார்கள். இரண்டுமே இனக்குழு மரபின் எச்சங்கள்.

அக்கினிபுரத்தில் உள்ள ஒரு பெண்ணை வெளியூரில் இருந்து வந்தவன் அதே இனம் என்று சொல்ல அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்கள். குழந்தையும் பிறந்துவிட்டது. சூரியபுரத்தில் பிறந்த பெண்ணை இளவரசன் பார்த்து விட்டான்; அவள் அழகில் மயங்கி, அவளையே மணப்பேன் என்கின்றான். மன்னர் பெண் கேட்டு ஆள் அனுப்புகின்றார்.

அக்கினிபுரத்தில் சாதிக்கலப்பு நிகழ்ந்துவிட்டது; சூரியபுரத்துக்குப் பெண் கேட்டு மன்னனின் ஆள் வருகின்றார்கள். தங்கள் வெள்ளாளர் இனத்தைவிட எதுவும் உயர்ந்ததில்லை எனக் கருதிய உறவுமுறையில் உள்ள இரண்டு ஊராரும் தீ மூட்டி வீழ்ந்து மடிந்து விடுகின்றார்கள்.

கட்டக்குடியில் தீப்பாய்ந்தான் குளமும், அருமுளையில் சாம்பல் பள்ளமும் இப்போதும் சாட்சியங்களாக உள்ளன. வாய்மொழியாகவே காலங்காலமாக வழக்கில் இருந்த கதை புதினமாக எழுதப்பட்டுள்ளது. (ச.சுபாஷ் சந்திரபோஸ், அக்கினிக் குழந்தைகள், 2000)

எனவே, கிரா வின் கரிசல் இலக்கியப் பணியை ஒரு வட்டாரத்துக்குள் சுருக்கி விட முடியாது. மேலே குறிப்பிட்டது போல அவரின் எழுத்துக்களைப் படிக்கும்போது மங்கிக் கிடந்த நினைவுகள் வெளி வருகின்றன. பலர் எழுதவும் ஆராயவும் உந்து சக்தியாக இருந்துள்ளார்.

கரிசல்காடு

கிராவுக்கு தம் மண்ணின் மீது இருந்துள்ள பற்றை அவருடைய எழுத்துகளின் மூலை முடுக்குகளில் எல்லாம் அறியலாம். நல்லவர், கெட்டவர் என எல்லோரையும் இனங்கண்டுள்ளார். ஒட்டுமொத்தமாகக் கரிசல் காட்டு மக்களைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

என்னுடைய இந்த மக்களிடத்தில் அன்பு இருக்கின்றது. பிரியமிருக்கிறது. பூமி வறண்டிருந்தாலும் மனசில் ஈரம் இருக்கிறது. வேட்டி கருப்பாக இருந்தாலும் மனசு வெள்ளையாக இருக்கின்றது. உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கின்றது. (கரிசல் கதைகள், ப.4)

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள். கிராவுக்குத் தம்முடைய பூமியாகிய கரிசல்காடு காவிரி பாயும் புண்ணிய பூமியாக இல்லையே என்னும் வருத்தம் ஆழ் மனதில் இருப்பதைக் கரிசல் கதைகள் முன்னுரை வழி அறிய முடிகின்றது. இப்படியான ஒரு புனித நதி ஓடும் பாக்கியம் செய்யவில்லை இந்தக் கரிசல் மண் (ப.5). மேலும் காவிரி பாய்வதால் சோழ நாட்டில் எவ்வளவு செழிப்பாக உள்ளது என்பதை தி.ஜானகிராமனின் எழுத்தை மேற்கோளாகக் காட்டுகின்றார். ‘தண்ணீர் குழாயிலும் தான் வருகின்றது, ஆனால் ஒரு ஆற்றில் ஓடும் போது இப்படியா பாட்டாகக் கேட்கும், கோயிலாக உயரும், கூர் அறிவாக வளரும் (ப.4)

தி.ஜானகிராமன் நாணயத்தின் ஒரு பக்கத்தைக் குறிப்பிடுகின்றார். காவிரி ஆற்றில் நீர் ஓடும் போது பாட்டு முதலிய ஆய கலைகளும் வளர்ந்தன. இருகரைகளிலும் காவிரித் தொடக்கம் முதல் கடைமடை வரை கோயில்கள் உயர்ந்தன, ஒரு குலத்துக்கு ஒரு நீதியும் வளர்ந்தது. எல்லாமே உண்மைதான்.

நிலவுடைமை முழுவதும் யாரிடம் இருந்தது? கதிரோன் தோன்றினான் / கவலை கொண்டு ஏங்கினோம் / உடையோ கோவணம் / உணவோ நீராரம். நிலவுடைமையோடு பண்ணைத் தொழிலாளர்கள் பல நூற்றாண்டுக் காலம் பிணைக்கப்பட்ட சங்கிலியைப் பொதுவுடைமைச் சித்தாந்தம் நொறுக்கித் தள்ளியது. திராவிடச் சித்தாந்தம் விழிப்புணர்வு, கல்வி, வேலை வாய்ப்பைக் கொடுத்தது.

கரிசல் மண்ணில் காவிரி போன்ற வளமான நதி பாய வேண்டும் எனக் கிரா ஏன் விரும்பினார் என்றே தெரியவில்லை. அப்படிப் பாயும் சூழல் ஏற்பட்டிருந்தால் வழக்கமாக எல்லா ஆற்றுக் கரைகளிலும் புற்றுக்களைப் போல வழிபாட்டுத் தலங்கள் வளர்ந்திருக்கும். காவிரியாற்று மக்கள் போலக் கரிசல் மண் மக்களும் கதிரோன் தோன்றினான்... என்று ஒப்பாரி வைத்து இருப்பார்கள்.

(தொடரும்)

- ச.சுபாஷ் சந்திரபோஸ்

Pin It