மலையாளத்திலிருந்து தமிழில்: ஏ.எம். சாலன்

AMbedkhar 4501935, டிசம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நிர்பீடுகாரர்களுடைய வாழ்க்கையில் ஒரு மகத்தான நாள்.  அன்றிரவு போரஸ் சாலையின் பக்கத்திலுள்ள ஜெயராம் பாய் தெருவில் பழைய டோர்சாலில் ஒரு மாபெரும் கூட்டம் நடைபெறும் என்றும், மத மாற்றம் சம்பந்தமாக டாக்டர். அம்பேத்கர் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீ சோமவம்சீய குருதத்த பிரசாதிக பஜன சங்கத்தின் 22-ஆவது ஆண்டு திருவிழா பிரமாதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  வழக்கமாக ஆண்டு தோறும் அதில் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்துகொள்வதுண்டு.

இந்த அமைப்பைத் தொடங்கி வைத்த திரு. மாதவராவ் மோரே மறைந்து போனார்.  அந்த இடத்திலிருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த திரு. பாலாஜி சுட்காஜி மோரே, சங்கர் ராவ் ஆடெ ஜாதவ், மாதவராவ் பார்கே, கங்காராம் பந்த்முக்தாதம், ரேவஜி பொவாடோஸ் போன்ற தலைவர்கள் அதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.  இங்கு நடைபெறும் இரண்டாவது நாள் திருவிழாவில் டாக்டர். அம்பேத்கரை, மத மாற்றம் பற்றி உரையாற்ற அழைத்திருந்தார்கள்.

அந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை பின்வருமாறு:

“எனக்கு தொடக்கத்தில் ஒன்று, இரண்டு விஷயங்களைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும்.  போன வருசம் நடந்த திருவிழாவில் என்னால் பங்கெடுக்க இயலாமல் ஆயிற்று.  இந்த வருடமும் ‘தத்த ஜெயந்தி’ போன்றதொரு திருவிழாவில் மத மாற்றத்தைப் பற்றிப் பேசுவது அவ்வளவு சரியல்ல! ஆனால், இது கடைசித் திருவிழாவாக இருக்கும் என்று ரேவஜி சொன்னதினால் நான் இதில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டேன்.

இம்மாதிரி இடங்களில் வைத்து மதம் மாற்றத்தைப் பற்றிப் பிரசங்கம் பண்ணுவது அவ்வளவு சரியல்ல! ஆனால், அதைப் பற்றி இரண்டு வார்த்தைகளாவது சொல்லாமல் இருக்க முடியாது.

மத  மாற்றத்தைப் பற்றி நான் முடிவு பண்ணி விட்டேன்.  ஆனால், நான் காத்திருப்பது உங்களுடைய முடிவைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகவேதான்!

நீங்கள் மொத்தம் 7 கோடி பேர் இருக்கிறீர்கள்.  நீங்கள் மதம் மாறுகிறீர்களா என்பதைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும்.  இதிலிருந்து ஒருவர் கூட விடுபட்டுப் போகக்கூடாது! சிலர் மட்டும் மதம் மாறினால் அதனால் உங்களுக்குத்தான் நஷ்டம்.  ஏழு கோடி மக்களும் கூட்டமாகத்தான் மதம் மாற வேண்டும்.  அதை விட்டுவிட்டு பத்து பேர் இசுலாமியர் களாகவும், நான்காயிரம் பேர் கிறிஸ்தவர்களாகவும் சிதறிக்கிடந்தால் நமக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது.  இது போக, உங்களில் ஒருசிலர் மட்டும் என்னோடு சேர்ந்து மதம் மாறினாலும் என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய இயலாது.  எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து என்னோடு மதம் மாற வேண்டும்! அதற்காக வேண்டி, எத்தனைக் காலம் வேண்டு மானாலும் நான் காத்திருக்கத் தயார்.

இந்து மதம் ஒரு மதம் இல்லை; அது ஒரு நோய்! மிகவும் ஆபத்தான நோய்! (இதைச் சொல்லி விட்டு டாக்டர்.  அம்பேத்கர் சுற்றுமுற்றும் பார்த்தார்.  எங்கும் ஒரே ஆரவாரமும், அதைத் தொடர்ந்து கை தட்டும் ஓசையும் எழுந்தது).  இந்த நோய் அதிகம் பாதித்திருப்பது நம் நாட்டிலுள்ள இந்துக்களைத்தான்! எங்களை (தாழ்த்தப்பட்ட, உழைப்பாளி மக்களை) இல்லை.  நாம் அவர்களோடு (மேட்டிமைச் சாதி மக்களோடு சேர்ந்து நாமும் இந்துவானால்) கூடிச் சேர்ந்தால் அது நம்மையும் பாதிக்கும்.  நம்மில் தொற்று நோய் பீடித்தவரை நாம் விலக்கி வைப்பது போல் நாம் சாதி இந்துக்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

அந்த நோய் இந்துக்களுக்குத்தான்; தாழ்த்தப்பட்ட மக்களாகிய நமக்கு இல்லை! தாழ்த்தப்பட்ட மக்களாகிய நாம் என்ன பாவம் பண்ணினோம்?

ஒரு பாவமும் பண்ணினது கிடையாது! பாவம் செய்தவர்கள் மேல்சாதி இந்துக்களே.  ஆனால், அதனுடைய எதிர்விளைவை நாமும் சேர்ந்துதான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  எனவே நாம் அதிலிருந்து விலக வேண்டும்.  அந்த நோயிலிருந்து விடுபட வேண்டுமென்றால், மேல்சாதி இந்துக்களும் அதிலிருந்து விலகி, நம்மோடு வரலாம்!

தீண்டாமை ஒழிக்கப்படும் என்று சொல்லப் படுகிறது; ஆனால் அது நடக்கப் போவதில்லை.

இந்துமதம் மதமாகக்கூட நிலை நிற்கவில்லை.  அது ஒரு மதம் என்று சொன்னால் அதை நிரூபித்துக் காட்ட யாராவது முன்வர வேண்டும்.

இந்துமதம் ஒரு விஷம்; விஷத்தை யாராவது அமுதமாக்க முடியுமா? முடியாது. ஒரு மதத்திற்குள்ளே இருக்கும் மனிதர்களை (தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களை) மனிதப் பிறவிகளாக அது கருதவில்லை.  இப்படியிருக்க, நாம் அதை எப்படி மதம் என்று ஒப்புக்கொள்ள முடியும்? (ஒரு மதம் எவ்வாறு இருக்க வேண்டும்? அதனுடைய தகுதிகள் என்னென்ன? சமூகத்தில் அதன் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதற்கு உதாரணமாக டாக்டர். அம்பேத்கர் அவற்றைப் பற்றி ஒரு அத்தியாயத்தில் தௌ¢ளத்தெளிவாகக் குறிப்பிடுவதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். -மொ-ஆர்.) விஷத்தை அமுதாக மாற்றும் வித்தை யாருக்காவது தெரிந்தால் அதை எனக்கும் கற்றுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.  விஷத்தை அமுதாக்கு வதற்கு ஒருபோதும் இயலாது! ஒருவேளை உப்பு அதிகமாகிவிட்டால் அதைக் குறைக்கலாம்; புளிப்பை இனிப்பாக்கலாம்.  ஆனால், விஷத்தை அமுதாக்க முடியாது!

எனக்குச் சமைக்கத் தெரியும்.  ஒரு பெண்ணைப் போல் நான் நன்றாகச் சமையல் பண்ணுவேன். இது பற்றி உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்! ஒரு வேளை எனக்கு வேறு வேலை எதுவும் கிடைக்க வில்லை என்றால், ஒரு சமையல்காரனாவதற்குத் தான் நான் இந்த சமையற் கலையைப் படித்ததே! (பின் இதுபற்றி அம்பேத்கர். விரிவாக விளக்குகிறார். மொ-ஆர்.) எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் குஜராத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது.  அந்தக் கதையைப் பற்றி நான் இங்கே சொன்னால் இந்து மதம் விஷம் என்பது உங்களுக்குப் புரியும்.

குஜராத்தில், ஒரு கிராமத்தில் ஜைன மாண வர்கள் தங்கிப் படிப்பதற்காக விடுதி ஒன்று இருக்கிறது.  அங்கே மேல்சாதியைச் சேர்ந்த பத்து, இருபது பிள்ளைகளும், அவர்களை மேற்பார்வையிட வயதான ஒரு காப்பாளரும் இருக்கிறார்.  அந்த விடுதிக்குள் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியரும் உண்டு.  அவர்களுக்கு மூன்று, நான்கு வயதில் ஒரு குழந்தை! அவர்கள், அந்த விடுதிக்குள் கூலிக்கு வேலை செய்பவர்கள்.

அவர்கள் விடுதிக்கு, வேலைக்குப் போகும் வேளையில் தங்கள் குழந்தையை முதுகில் தொட்டில் கட்டித் தூக்கிக் கொண்டு போவது வழக்கம்.

ஒருநாள் குழந்தையை விளையாட விட்டு விட்டு, அதன் அம்மாவும், அப்பாவும் எங்கோ, வெளியே போயிருந்தனர்.  அந்த விடுதியின் வளாகத்திற்குள்ளே தண்ணீர் நிரம்பிய குட்டை ஒன்று உள்ளது.  குழந்தை விளையாடி விளையாடி, அந்த விடுதியின் வாசல் பக்கமுள்ள தண்ணீர் நிரம்பிய அந்தக் குட்டையின் பக்கமாகப் போய் விட்டது.  எதிர்பாராத விதமாக அக்குழந்தை, அந்தக் குட்டையின் கரையோரமாகச் சென்றது.  அந்தக் குட்டை நான்கு, ஐந்து அடி ஆழமும், இரண்டு, இரண்டரை அடி அகலமும் உடையது.  எதிர்பாராத விதமாக குழந்தை அந்தக் குட்டைக்குள் விழுந்து விட்டது. இதை அந்த விடுதியிலுள்ள மேல்சாதிப் பிள்ளைகளும், காப்பாளரும் பார்த்துக் கொண்டிருந்தார் களாம்! ஆனால், அக்குழந்தையைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லையாம்! அதைப் பார்த்துக் கொண்டிருந்த மேல்சாதிப் பிள்ளைகள் அக்

குழந்தையின் தாய் - தந்தையருக்கு விவரத்தைத் தெரியப்படுத்தினார்கள்.  விஷயம் அறிந்து சற்று நேரம் கழித்து குழந்தையின் பெற்றோர், மார்பில் அடித்து அழுதவாறு அங்கு ஓடிவந்து குட்டைக்குள் விழுந்து கிடந்த தங்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்களாம்! அங்கே குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், குழந்தை இறந்து இரண்டு மணி நேரமாகிறது என்றாராம்.

இங்கு பிரச்சினை இதுதான்!

விடுதியில் தங்கியிருந்த மேல்சாதிப் பிள்ளை களும், காப்பாளரும் குட்டையில் விழுந்த அந்தக் குழந்தையை ஓடிச்சென்று தூக்காமலிருந்தது ஏன்?

அதற்குரிய காரணம் ஒன்றே ஒன்று தான்! குழந்தை தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தது.

இதுதான் இந்துமதம்!

அவர்களிடமிருந்து மனித நேயத்தை எதிர் பார்ப்பது தவறு.  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்து மதத்திடமிருந்து ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை.

இந்துமதம் ஒரு கருத்தக் குஷ்டரோகமாகும்.  தாழ்த்தப்பட்ட மக்கள் அதிலிருந்து விடுபட வேண்டு மானால் மதம் மாறுவது ஒன்றே மார்க்கமாகும்.

இது மாதிரி சமீபத்தில் நாசிக் மாவட்டத்தில் நாதூர் என்ற இடத்தில் நடைபெற்ற சம்பவத்தைப் பற்றி நீங்கள் வாசித்துத் தெரிந்து கொண்டிருக்கலாம்.

மஹர் சாதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கோதுமைக் கதிர்களைத் தங்கள் வயலிலிருந்து பறித்தெடுத்துக் கொண்டு நடந்து வந்திருக்கிறார்கள்.  மதம் மாற்ற அறிவிப்பைத் தொடர்ந்து வெறுப்பேறி யிருந்த மராட்டியர்கள், அது தங்களுடைய வயல் களிலிருந்து பறித்தெடுத்தது என்று மனப்பூர்வமாக அவர்கள் மீது குற்றம் சுமத்தினார்கள்.

‘இது உங்கள் வயல்களிலிருந்து பறித்தெடுத்தது அல்ல’ என்று, அப்பெண்கள் தாழ்ந்து மன்றாடி சொன்ன பிறகும் கூட அவர்கள் கேட்கத் தயாரில்லை யாம்! கடைசியில் அவர்கள், அப்பெண்களை தேக உபத்திரவம் செய்தார்களாம்! அதற்குப் பிறகும் மராட்டியர்களின் கோபம் அடங்கவில்லையாம்! அவர்கள், தங்களுடைய ஆடு, மாடுகளை எல்லாம் அவிழ்த்து, மஹர் சாதி மக்களின் வயல்களுக்குள் இறக்கிவிட்டு, பயிர்களை நாசம் பண்ணினார்கள்.  நம் நாட்டுத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் மேல்சாதி இந்துக்கள் இம்மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள்.

இதனால்தான் நான் சொல்கிறேன் - இந்துமதம் ஒரு நரகம் என்று.

மதமாற்றம் சம்பந்தமாக நீங்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்று, எனக்குத் தெரிய வேண்டும்.  எனக்கு உங்களுடைய தலைமை தேவையில்லை; எனக்கு வேறு எந்தவித எதிர்பார்ப்பும் கிடையாது. என்னுடைய லட்சியத்தை அடைய எனக்குத் தெரியும்.  என்னோடு சேர்ந்து மதம் மாற வேண்டுமானால் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வர வேண்டும். ஒன்று, இரண்டு மாதங்களுக்குள் இங்கே, பம்பாயில் மஹர் மக்களுடைய முதல் மாநாடு நடைபெற உள்ளது.  அப்புறம் நம் நாட்டிலுள்ள பிறசாதி மக்களையெல்லாம் சேர்த்து, கூட்டாக ஒரு மாநாடு நடத்தி, தீர்மானம் எடுக்க வேண்டும்.  அதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்படும்.

உங்களுக்கு நான் தேவையான அளவு கால அவகாசம் தருகிறேன்.  நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

மதம் மாறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று இன்று, இந்த மேடையில் வைத்துச் சொல் வதில் அர்த்தம் இல்லை.  நீங்கள் வசிக்கும் கட்டடத்திலிருந்து நிரந்தரமாக இடம் மாற எல்லோரும் மனதார நிச்சயித்தால், அதற்கான வழியைப் பற்றிச் சொல்கிறேன்.

நீங்கள் இன்னும் இந்து மதத்தைப் பின் தொடர்வது, உங்களுக்கு அதைப்பற்றிச் சரியாகத் தெரியாததினால்தான்! உங்களுக்குச் சுரணையும், தன்மானமும் இல்லாததினால்தான், நீங்கள் மனிதநேயத்தைப் பற்றி இன்னும் அறியாமல் இருக்கிறீர்கள்.  எனவேதான் நீங்கள் இன்னும் இந்து மதத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இதோடு நான், என் உரையை முடித்துக் கொள்கிறேன்.”

நிர்தீட், டிசம்பர் - 15, 1935

[டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: 38-லிருந்து எடுக்கப்பட்டது.]

Pin It