“மனிதர்கள்தான் பூமிக்குச் சொந்தம். ஒருபோதும் பூமி மனிதனுக்குச் சொந்தமில்லை” என்ற செவ்விந்தியர்களின் வார்த்தைகளோடு தொடங்குகிறது இந்நூலின் இரண்டாவது அத்தியாயம். மனிதனுக்கும் பூமிக்குமான உறவை இதைவிடச் சரியாக வேறு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

சூழலியல் கருத்தாளர், தேர்ந்த எழுத்தாளர், சிறந்த இதழிளயலாளராகத் திகழும் ப.திருமலை எழுதியுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களுள், இந்நூல் சமீபத்தில் எழுதி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டதாகும். மனித மனங்களின் மேன்மைகளை மற்றும் சூழலியல்களைச் சார்ந்ததாகவே பெரும்பாலும் இவரது நூல்கள் அமைந்துள்ளன. வன உயிரின சூழல் குறித்த தியோடர் பாஸ்கரன் எழுத்துக்களும், சாயக் கழிவுகளின் தீமை குறித்த அழுத்தமான பார்வை கொண்ட சுப்ரபாரதிமணியன் எழுத்துக்களும், பரந்துபட்ட சூழல் பிசகுகளின் மீதான ப.திருமலை அவர்களின் பார்வையும், தமிழ் எழுத்துலகில் சிறந்த கவனம் பெற்றவைகளாகும்.

thirumalai book'எங்கெங்கும் மாசுகளாய்... மண் முதல் விண் வரை' என்ற இந்த நூல் 17 தலைப்புகளில் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப்பட்டு மிகுந்த பொறுப்புணர்வுடன் எழுதப்பட்டுள்ளது. பல்வேறு பிரபலமான வார இதழ்கள், நாளிதழ்களில் முக்கிய பொறுப்பு வகித்துவிட்டு தற்போது மதுரையிலிருந்து வெளியாகும் ‘நமது மண்வாசம்’ மாத இதழ் ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர் முன்னரே, வைகை நதியின் தடம் தேடி ஆய்வுப் பயணம் செய்தவர்.

‘கொத்தடிமைகள் சங்ககாலம் முதல் சுமங்கலித்திட்டம் வரை' என்ற நூல் திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த நூலுக்கான விருதினைப் பெற்றது. இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘காந்தி தேசம்', ‘புதிய தேசம்' ஆகிய நூல்கள் மாநில அளவிலான சிறந்த கட்டுரை நூல்களுக்கான விருதினை அடுத்தடுத்த ஆண்டுகளில் பெற்றன. ‘மண்ணும் மக்களும் அழிவை நோக்கி..' என்ற நூல் ‘நாங்கள் இலக்கியகம்' விருதினைப் பெற்றது.

‘குற்றங்களே நடைமுறைகளாய்..' நூல் திருப்பூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை, ஷாலோம் டிரஸ்ட், நாங்கள் இலக்கியகம், பாரதி இலக்கியப் பேரவை, புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விருது மற்றும் கவிதை உறவு ஆகிய அமைப்புகளால் சிறந்த கட்டுரை நூலாகத் தேர்வு செய்யப்பட்டது. தீர்வைத் தேடும் பார்வை நூல் சிறப்பு விருதினைப் பெற்றது

‘மண்மூடிப் போகும் மாண்புகள்' 2018ல் வெளியான சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கான பாரதி இலக்கியப் பேரவை, பொதிகை மின்னல், கரூர் திருக்குறள் பேரவை விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருது ஆகிய விருதினைப் பெற்றது.

கடந்தாண்டு வெளியான கொரோனா உலகம் நூல் 2020ஆம் ஆண்டு வெளியான சிறந்த கட்டுரை நூலுக்கான கவிதை உறவு விருதினைப் பெற்றுள்ளது.

இவரது ‘மதுரை அரசியல்' நூல் ஒரு மாவட்டத்தின் அரசியல் நிகழ்வுகளைச் சொல்லும் முதல் நூலாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

‘எங்கெங்கும் மாசுகளாய்' என்னும் ஆய்வுக்குரிய இந்நூல் சூழலியல் தரவுகளின் உச்சம் தொட்டுள்ளது. ‘மண் முதல் விண் வரை’ என்ற தலைப்பிற்கு ஏற்ப நிலம், நீர், காற்று, ஆகாயம், வானம் எனப் பூமிப்பந்தில் அனைத்து விதமான சூழலியல் சீர்கேடுகளையும் தேர்ந்த தரவுகளுடன், உலக நாடுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்கிறது.

‘உலகின் முதல் பிளாஸ்டிக் கடல்' எது தெரியுமா? என்ற கேள்வியோடு அமைந்த கட்டுரையை வாசித்து துணுக்குறுகிறோம். “கடந்த ஆண்டின் இறுதியில் ‘ஹோண்டுராஸ்’ நாட்டின் அருகில் உள்ள ரோட்டன் தீவுப் பகுதியில் உள்ள கடல் பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்தது. சூரிய ஒளியைக் கடலுக்குள் செல்லவிடாதபடி அவை அடைத்துக் கொண்டதால் ‘உலகின் முதல் பிளாஸ்டிக் கடல்' என இது அடையாளப்படுத்தப்படுகிறது என விளக்குகிறார்.

புலன்களுக்கு எட்டக்கூடிய அறிவுப் பாதைகள் ஒவ்வான்றும் சூழல் சீர்கேடுகளால் தாக்குண்டு கிடப்பதை இந்நூல் தெளிவாகப் புலப்படுத்துகிறது. அமெரிக்கா, ஆண்டுக்கு 50 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்களைத் தயாரிக்கிறது. இங்கிலாந்து ஆண்டுக்கு 16 மில்லியன் பாட்டில்கள் என உலகம் முழுதும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் சேர்ந்த பல நூறு மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், அவற்றுள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுபவை 20 விழுக்காட்டிற்கும் கீழே என்ற அபாயத்தை அறிந்தும், அறியாததுபோல் கடந்து செல்லும் மனிதகுலத் தவறுகள் இந்நூலில் படம்பிடித்துக் காட்டப்படுகிறது.

பிளாஸ்டிக் பைகளுக்கு நாடு முழுதும் தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ‘பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் மாசு, அணுகுண்டை விடவும் மோசமானது' என்று நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, முகோபாத்யாயா ஆகியோரின் அறிவுறுத்தலைத் தக்க இடத்தில் நினைவுபடுத்துகிறார் நூல் ஆசிரியர்.

பிளாஸ்டிக் மறுசுழற்சி கொள்கையில் சுவீடன் நாடு உலகத்திலேயே சிறந்து விளங்குவதைப் பேசும் அதே சமயம், 2002-இல் அயர்லாந்து பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருள்களுக்கு கடுமையான வரிவிதிப்பு செய்திருப்பதையும், 2008இல் சீனா, இலவசமாக பிளாஸ்டிக் பைகள் வழங்குவது சட்டவிரோதமாக அறிவித்திருப்பதையும், 2016இல் இந்தியா பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான 6 விதிகளை வகுத்திருப்பதையும், 2019 சனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகம் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்திருப்பதையும் சேர்த்தே இந்நூல் விவாதிக்கிறது.

பிளாஸ்டிக் பைகள் தடைசெய்யப்படலாம், ஆனால் கார்பரேட் கம்பெனிகளின் உணவுப் பொருள்களும், சமையலறைச் சாதனங்களும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருப்பதை எவ்விதம் தவிர்க்கப் போகிறோம்? என்பதையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. இது தொடர்பில், இந்தியா பயணம் செய்ய வேண்டிய இலக்கு, மிகத் தொலைவில் இருப்பதாகக் கணிக்கிறார் நூல் ஆசிரியர். ஒரு காலத்தில், தனது எழில்மிகு இயற்கை வனப்புகளால் ‘கடவுளின் தேசம்’ எனப் புனையப்பட்ட கேரளா மாநிலம் இன்று சூழலியல் சீர்கேடுகளால் ‘கழிவுகளின் தேசம்’ ஆகி நிற்கும் நிலை பேசப்படுகிறது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு பெரும்பங்காற்றிவந்த காடுகள், அதன் நீண்டநெடிய மரங்களாலும், சூழ்ந்து பல்கிப் பெருகி வளரும் செடி கொடிகளாலும், அதனூடே செழித்து வளர்ந்த பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் அதுசார்ந்த ‘பன்மைச் சூழல்’ காரணமாக மண்ணின் வரங்களாகவே வனங்கள் பார்க்கப்பட்டன. ஆனால், இன்று சுரங்கத் தொழிலுக்காகக் காடுகள் அழிப்பு, சுற்றுலா வருவாய்க்காக ஏற்படுத்தப்பட்ட கட்டிட ஆக்கிரமிப்பு போன்ற மனிதர்களின் சுயலாபச் சிந்தனைகளால் பெரிதும் சிதைவுண்டு கிடப்பதும் காடுகள்தான் என்பது விவரிக்கப்பட்டுள்ளது.

வனாந்திரங்களின் ஊடே ஒற்றையடிப் பாதைகளை உருவாக்குவதன் மூலம் யானைகள், காட்டில் உள்ள பிற விலங்குகள் நடமாடுவதற்கு வழிவகுக்கின்றன என்பதும், யானைகள் காடுகளில் வெளித்தள்ளும் கழிவுகளை உணவாகக் கொண்டு வண்டு இனங்களும், புழுக்களும் பல்கிப் பெருகுகின்றன என்பதையும், மேற்படி சிறிய உயிரினங்களே காடுகளின் ‘உயிர்ச் சங்கிலி’யை (Biological Chain) அறுந்துபடாமல் பாதுகாக்க முடியும் என்பதையும் நம்மில் எத்தனைபேர் அறிவோம்?

யானைகள் காடுகளில் வளர்ந்துள்ள நாட்டு மரங்களாகிய மூங்கில், உசிலம், உன்னு, வெட்பாலை, மறுக்காரை, இருவாட்சி, வெட்டலம் போன்றவற்றின் இலை, தழைகளை உண்பவை என்பதையும், யானைகள் சாப்பிட்டுப் பின் கீழே விழும் இலை, தழை, செடி, கொடிகளைப் பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் போன்றவை உண்ணும் என்பதையும், மரக்கிளைகளை உடைத்துச் செடிகளை யானைகள் உண்பதால், வெயில் படாத இடங்களில்கூட சூரிய ஒளிபட்டு புற்கள் வளரும் என்பதையும், அதை நம்பி முயல் போன்ற சிறு உயிரினங்கள் வாழ்கின்றன என்பதையும் இந்நூல் நுட்பமாக விளக்குகிறது.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் காரணமாக தானிய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுவதையும், உலக சராசரி வெப்பம் சுமார் ஒரு டிகிரி உயர்ந்துவிட்டால், சுமார் 10 சதவீதம் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் என்ற ஆய்வு முடிவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு கவலை அடையத்தக்க வகையில் இந்தியாவில் பெருகி வருவதையும், தலைநகர் தில்லி வாகனப் புகையாலும், அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் குப்பைகளின் புகையாலும் சிக்கித் திணறி வருவதை சமீப ஆண்டுகளில் பார்த்து வருகிறோம். நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் எல்லாம், சூழல் சீர்கேடுகள் குறைவதற்கான சாத்தியப்பாடுகளைக் காட்டக் கூடியவைகளாக இல்லை.

இயற்கை சார்ந்த அக்கறைகளை மனிதன் தூக்கி எறிந்து வெகுநாள்கள் ஆகிவிட்டது. அதிலும், காடழிப்பு என்பது சமீப காலங்களில் அதிதீவிரமான சிக்கலாக உருவெடுத்துள்ளது. காடழிப்பால் பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்பட்டு, காலநிலை மாற்றமும், புவிவெப்பமாதல் மற்றும் கொரோனா பரவல் போன்ற சூழல் பிரச்னைகளும் உருவாகிப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில், இதுபோன்ற புத்தகங்கள் பெரிதும் கவனிப்புக்கு உள்ளாகிறது.

வாசிப்பாளர்களுக்கு இந்நூல் ஏராளமான தரவுகளை வாரி வழங்குவதுடன், நூலாசிரியர் ப.திருமலை கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் கவனிக்கத்தக்க வாசகங்களோடு முடித்து வைக்கிறார். இந்த பூமி நாம் “நமது முன்னோர்களிடமிருந்து உரிமையாகப் பெற்றதில்லை. மாறாக, நம் குழந்தைகளிடமிருந்து இரவலாகப் பெற்றிருக்கிறோம்” என்பது எவ்வளவு பொருத்தமுடைய வாசகம்.

நமது பாரம்பரிய சூழலியல் அறிவு, இப்போது போன இடம் தெரியவில்லை. எங்கெங்கு காணினும் மாசும், தூசுமாக இந்த பூமிக்கு ஏற்பட்டிருக்கும் சூழல் சுளுக்கிற்கு மருத்துவம்தான் என்ன? என்ற கேள்வி இந்நூலினை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் எழும். அதனால்தான், இந்நூல் ஆசிரியரும், உலகின் பிரபலமான மூன்று ‘ஆர்' தத்துவங்கள் எனப்படும் மருத்துவத்தைப் பரிந்துரைத்து வழிமொழிகின்றார்.

மூன்று ‘ஆர்' தத்துவங்கள் என்பவை 1) Reduce 2) Reuse and 3) Recycle  என்பவையாகப் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுதல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் என்பனவற்றைச் சிறப்பாக இந்நூலில் விளக்குகிறார்.

இனி விழித்துக் கொள்ள வேண்டியது நாம் தான்.

எங்கெங்கும் மாசுகளாய்...

மண் முதல் விண் வரை

ப. திருமலை

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

விலை - ரூ.110/-

மு.செல்லா

Pin It