தூத்துக்குடியில் 1994-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை வேதாந்தா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. ஆலை தொடங்கப் பட்டதில் இருந்தே அதை எதிர்த்த மக்கள் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கழிவால் காற்று, நிலம், நீர், சுற்றுச்சுழல் மாசுபாடு ஏற்பட்டு ஏராளமான மரணங்கள், ஏராளமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அதற்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அந்த மக்களின் போராட்டமும் வீரிய மடைந்துகொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாகவே கடந்த பிப்ரவரி மாதம் “தூத்துக்குடி யைக் காப்போம்” என அப்பகுதி மக்கள் அற வழியிலான போராட்டத்தைத் தொடங்கினர். அப் போராட்டத்தின் 100-ஆவது நாளன்று கடந்த மே 22 அன்று ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாய் திரண்டனர்.
அமைதியாக நடந்த அப்பேரணியில் ஸ்டெர் லைட் ஆலை முதலாளி அனில் அகர்வால் தூக்கிப் போட்ட எலும்புத்துண்டுகளை வாயில் கவ்விக் கொண்ட இனவிரோத - மக்கள் விரோத மத்திய அரசும் அதன் எடுபிடி எடப்பாடி தலைமையிலான தமிழக அரசும் காவல்துறையை ஏவி துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைப் படுகொலை செய்தனர். அத் தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகாயமடைந்தனர்.
1919-இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அனில் அகர்வாலின் வேதாந்தா கொலைக் கும்பலின் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவின் ஆபத்துகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள போராடிய பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு மிகக்கொடூரமானது. இச் சம்பவம் இந்த நாடு ஒரு சனநாயக நாடு இல்லை; குடியரசு நாடு இல்லை; மக்களுக்கான ஆட்சியாக, அரசாக இல்லை; பெரும் ஏகபோக மூலதனக்கும்பலின் ஆதிக்கத்தின் கீழ், அதிகாரத் தின் கீழ் உள்ள சர்வாதிகார நாடு என்பதை நமக்கு மேலும் வலுவூட்டக்கூடிய செயலாகவே இருந்தது.
தமிழகத்திலும், சர்வதேச அளவிலும் பெரும் கண்டனங்களையும் ஆலைக்கு எதிரான எதிர்ப் பையும் உருவாக்கிய இந் நிகழ்விற்குப் பிறகு, மக்களின் போராட்டத்திற்குப் பிறகு, புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக ஒப் புக்கு அறிவித்து, ஸ்டெர்லைட் நிர்வாகமும் தமிழக அரசும் இந்திய அரசும் இணைந்து நடத்திய நாடகமாக ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதையே 13.06.2018 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, “ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை தெளிவாக இல்லை” என்றும் “கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்” எனவும் யோசனை வழங்கியிருந்தது.
அதாவது, அமைச்சரவையைக்கூட்டி கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடத் தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று நீதிமன்றம் மறை முகமாகச் சுட்டிக்காட்டியது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் ஆணையை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை கொலைகாரக் கும்பலால் வழக்குத் தொடரப்பட்டது.
கொலைகாரக் கும்பலான வேதாந்தா நிறுவனமோ தமிழகத்தைச் சுடுகாடாக மாற்றாமல் செல்ல மாட்டேன் என்று முரண்பிடிக்கிறது. இனவிரோத இந்திய அரசும் அதற்குச் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறது. தமிழக அரசோ, முதுகெலும்பு முறிக்கப்பட்டு, ஆளத் தகுதியற்றவர்கள் - வாழத் தகுதியற்றவர்களின் கூடாரமாக இருக்கிறது. பாஜக எனும் இந்துத்துவ பாசிச விசச் செடிக்கு உரமிட்டுத் தண்ணீர் ஊற்றும் எடுபிடிகளாக இருக் கின்றது. மத்திய அரசின் அடிமைகள்தாம் மாநில அரசுகள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது தமிழக அரசு.
கடந்த ஆகஸ்ட் 9 அன்று டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசின் உத்தரவைத் தூக்கி வீசிவிட்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் அள்ளி வீசிய அற்பத் தொகைகளை வாயில் கவ்விக் கொண்டு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு இசைவளித்தது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலல் தலைமை யில் சதீஷ்சி.கர்கோட்டி, எச்.டி.வரலட்சுமி ஆகிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆலையை ஆய்வு செய்த தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வுசெய்த அறிக்கையைத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. அதில்,
- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்கள் ஆலையை மூடுவதற்கு நியாயமானவையாக அமைய வில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.
- ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் கருதும் பட்சத்தில் காற்று, நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், திடக்கழிவு மேம்பாடு குறித்து இந்தக் குழு வழங்கும் 25 பரிந்துரைகளை நிபந்தனை களாக முன்வைத்து அனுமதி வழங்கலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் 15-12-2018 அன்று தீர்ப்பு எனும் பெயரில் தமிழக மக்களின் உயிரோடு உணர்வோடு அவர்களின் வாழ்வோடு விளையாடி யிருக்கிறார்கள்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவில், “ஆய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரிப்பதற் கான காரணங்கள் எதுவுமில்லை” என்று சொல்லி யுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பிறப்பித்த உத்தரவுகளை இரத்து செய்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், “ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கவும் ஆலையை ஆய்வுசெய்ய நிபுணர் குழுவை அமைக்கவும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத் திற்கு அதிகாரம் உள்ளது” எனவும் தூத்துக்குடி மக்களின் கோரிக்கையையும், 13 பேரை நேரடி யாகச் சுட்டுக் கொன்றும், நூற்றுக்கணக்கானோர் ஆலைக்கழிவால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஆலையால் படு கொலை செய்யப்பட்ட பிறகும், அம் மக்களின் அவலக் குரல்களைக் கணக்கில் கொள்ளாமல், “மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம்” என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதன் மூலம், ஒரு பெரும் மூலதனக் கும்பலைப் பாது காப்பதுதான் இந்திய அரசின் கொள்கை என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
மேலும், பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு அறிக்கையிலுள்ள முக்கிய பரிந்துரை களை ஸ்டெர்லைட் நிருவாகம் அமல்படுத்த வேண்டும். இதில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து ஆலோசனை வழங்க வேண்டும்... உள்ளிட்ட நிபந்தனைகள் கொடுக்கப் பட்டுள்ள தாக அறிவித்துள்ளனர்.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கி யிருப்பது என்பது மக்கள் மத்தியில் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. “சட்டத்தின்முன் அனைவரும் சமம், சட்டத்தின்முன் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள்” என்ற வார்த்தைகள் எல்லாம் பொய்யானவை; போலியானவை; வெறும் நகைப்புக்குரியவை என்பதையும், இவ்வளவுபெரிய படுகொலையை அரங்கேற்றிய கொலையாளியை அரசு பாதுகாக்கிறது என்பதையும் மக்கள் தெளி வாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
சட்டம் என்பது ஒரு கொலைகார வேதாந்தா நிறுவனத்தைப் பாதுகாக்கிறது. அவனை மீண்டும் மக்களை கொலை செய்யத் தூண்டுகிறது. இந்தத் தமிழ்த் தேசத்தில் பெரும்பாண்மையாக வாழும் உழைக்கும் மக்கள் இன்று அனாதைகளாக ஆக்கப் பட்டு நிற்கிறார்கள். இன்று தமிழகத்தை ஆளுகிற கட்சிகள், ஆளத்துடிக்கின்ற கட்சிகள் இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத் தைத் தமிழகம் தழுவிய அளவில் முன்னெடுக்கத் தயங்குகின்றனர் மறுக்கின்றனர்.
ஆனால் நாளை தேர்தல் வந்துவிட்டால் மக்க ளிடம் பிச்சை(வாக்கு) கேட்டுத் தெருத்தெருவாக அலைவார்கள். மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு மக்களின் வரிப் பணத்தைச் சுருட்டிக் கொள்ளையடித்து ஆடம்பர வாழ்வை உல்லாசமாகக் கழிக்கும் அரசியல் மாற்றத்திற்கு - ஆட்சி மாற்றத்திற்குப் போட்டி போடும் இந்த அரசியல்வாதிகளை இனிமேல் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
தமிழக மக்களின் வரிப் பணத்தைக் கொள்ளை யடித்துக் கொழுத்து நிற்கும் இந்திய அரசான நடுவண் அரசும் அதன் எடுபிடிகளுள் ஒன்றான பசுமைத் தீர்ப்பாயமும் தமிழக மக்களின் கோரிக்கை யையும் தமிழக அரசின் உத்தரவையும் தூக்கி குப்பையில் வீசுகிறது.
எடப்பாடி தலைமையிலான தமிழக அரசும் ஆட்சியாளர்களும் உண்மையான மக்களின் கோரிக்கைகளைக் கணக்கில் கொள்ளாமல் ஆலை முதலாளிகளைப் பாதுகாக்கத் துடிக்கும் கேடிக ளாகவே இருக்கின்றனர். ஆக, தமிழகத்தை விட்டு இந்தியாவே வெளியேறு என்று மக்கள் சொல்வதில் என்ன தவறு?
தமிழகத்தின் இயற்கை வளங்கள், கனிமவளங்கள், மனித வளங்கள் பாதுகாக்கப்பட்ட வேண்டுமா னாலும், மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானாலும், முதலில் இந்தி யாவிலுள்ள ஒடுக்கப்பட்ட இனங்கள் விடுதலை பெற்றாக வேண்டும். தமிழ்த் தேசிய இனம் சுதந்திர அரசாக - இறையாண்மை கொண்ட அரசாக உருவாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தைவிட்டு அந்நிய நிறுவனங்கள் அவற்றின் சொத்துக்களைப் பறிமுதல் செய்துகொண்டு விரட்டி யடிக்கப்பட வேண்டும். இதற்கு, உழைக்கும் மக்களை இன விடுதலைக்குப் போராட அணியப் படுத்துவோம். உழைக்கும் மக்களின் அதிகார அமைப்பை உருவாக்கப் போராடுவோம். இந்தியாவின் - அந்நிய மூலதனத்தின் கிராமப்புற ஆதிக்கக் கும்பலின் தலையீடற்ற புதிய தமிழ்த் தேசத்தைக் கட்டமைப்போம்.