கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று (மார்ச் 24,2011) தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான இரண்டு கடுமையான சட்ட முன்வடிவுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் முன்வைக்கப்பட்ட ஒரு மசோதா  “தொழிலாளர் சட்டங்கள், திருத்த முன்வடிவு 2011” என்பதாகும். இன்னொன்று நாடாளுமன்ற மக்களவையில் முன்வைக்கப்பட்ட “ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய சட்ட முன்வடிவு (Pension Fund Regulatory and Development Authority Bill)” என்பதாகும்.

தொழிலாளர் சட்டங்கள் திருத்த மசோதா ஒரே அடியில் மிகப்பெரும்பாலான தொழிலாளர் களைத் தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கி வைக்கிறது. இச்சட்டத்திருத்தத்தின்படி ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிகை 40க்கும் குறைவாக இருந்தால் அந்நிறுவனங்கள், எல்லா தொழிலாளர் சட்டங்களிலிருந்தும் விலக்குப் பெறுகின்றன. அதாவது தொழிற்சாலைச் சட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம், உள்ளிட்ட எந்தச் சட்டத்தின் பாதுகாப்பும் இந்நிறுவனத் தொழிலாளர்களுக்குக் கிடையாது.

இந்தியாவின் தொழிலாளர்களில் மிகப்பெரும் பாலோர் 50 பேருக்கும் குறைவாகப் பணியாற்றும் சிறு தொழிலகங்களில்தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் சிறு தொழிலகங்கள் தாம் முதன்மையான இடங் களாக உள்ளன. தமிழ்நாட்டுத் தொழிலாளர் களில் மிகப்பெரும் பாலோர் 50 பேருக்கு கீழ் பணியாற்றும் தொழிலகத் தொழிலாளர்கள் தாம்.

இந்நிலையில் 40 பேருக்கும் குறைவாகப் பணிபுரியும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு பெற்றால், தமிழ்நாட்டுத் தொழிலாளர்களில் மிகப்பெரும்பாலோர் இருக்கிற அரைகுறை சட்டப் பாதுகாப்பு கூட கிடைக்காமல் நிறுத்தப்படுவார்கள்.

ஏற்கெனவே 12 மணி நேர வேலை என்பது சிறு தொழிலகங்களில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. அந்நிறுவனத் தொழிலாளர்கள் விபத்து பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் இத்திருத்தச் சட்டம் செயலுக்கு வருமானால் 200 ஆண்டுகளுக்கு முந்தைய வேலை நிலைமைக்கு தொழிலாளர்கள் விரட்டப் படுவார்கள்.

காங்கிரசு அரசு முன்மொழிந்த இச்சட்டத் திருத்த முன்வடிவிற்கு அறிமுக நிலையிலேயே முதன்மை எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளித்தது. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த முன்வடிவு சட்டமாக நிறைவேற்றப்படும் ஆபத்து தொழிலாளர்களின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஒழுங்கமைக்கப்படாத மற்றும் சிறு தொழிலகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது மேற்கண்ட சட்டத் தாக்குதல்கள் என்றால் ஒழுங் கமைக்கப் பட்ட தொழில் நிறுவனப் பணியாளர்கள் மீது ஓய்வூதிய சட்டத்திருத்தம் இன்னொரு தாக்குதலைத் தொடுக்கிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் அரசுத்துறை தொழில் நிறு வனத் தொழிலாளர்கள் ஆகி யோருக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. அதனை நிலைப்படுத்தவே இவ்வரைவுச்சட்டம் நாடாளு மன்றத்தில் முன்வைக்கப்பட் டுள்ளது.

முதியோர் வாழ்வியல் சிக்கல் என்பது அண்மைக்காலமாக இந்தியாவையும், தமிழ்நாட்டையும் தீவிரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினை ஆகும். முதலாளிய--நுகர்வியம் மற்றும் நகர்மயமாதல் ஆகி யவை இணைந்து கூட்டுக் குடும்பங்களைச் சிதறடித்து வருகின்றன. குடும்பம் என்ற அலகு மிகவும் சுருங்கிவிட்டது. உழைத்து சம்பாதிக்க முடியாத முதியோர் வேண்டாத சுமை யாகப் பார்க்கப்படுகிறார்கள். உயர் வருமானம் உள்ளோரி டையே கூட இப்பிரச்சினை முதியோர்களைத் தாக்குகிறது. இப்பிரிவினரிடையே மே லோங்கியுள்ள நுகர்விய- தன் னலப் பண்பாடு முதியோரிடம் அன்பு பாராட்டுவதை, அவர் களுக்காக சிறு சிறு பணிகளைச் செய்து தருவதை பெரும் சுமையாக கருதவைக்கிறது. இந்நிலையில்  உழைத்துக் களைத்த வயது முதிர்ந்தோர் தற்சார்பான வாழ்க்கை நடத்த பணமின்றி தவிக்கும் அவலம் தீவிரப்பட்டுள்ளது. ஓய்வூதியம் (பென்சன்) என்பது அரசு ஊழியர்களுக்கும் அரசுத் துறை தொழிலாளர்களுக்கும் வாழ்வின் கடைசி காலப் பாதுகாப்பாக இருந்தது.

ஆனால் ஓய்வூதியப் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள முயல்கிறது. ஏற்கெனவே அனைத்துத் தொழில்துறை தொழிலாளர் களுக்கும் ஓய்வூதியம் கிடைப்ப தில்லை. இந்தியாவில் மொத்த முள்ள 50கோடி தொழிலாளர் களில் 3.5 கோடி தொழிலாளர் களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மக்களின் வாழ்நாள் அதிகரித்து வருவதால் பணிஓய்வுக்குப் பிறகு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உயிருடன் வாழும் காலம் அதிகரித்து, அதன் காரணமாக ஓய்வூதியம் வழங்கும் தன்னுடைய நிதிச் சுமை அதிகரித்து வருவதாக அரசு கூறுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் திட்டங்கள் தீட்டி வருகின்றன.

அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில் ஓய்வூதியம் என்பது கொடுபடாத சம்பள மாக ஏற்கப்பட்டு பணி ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கும், அவர்கள் இறப்புக்கு பிறகு அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அரசுத் துறை தொழிலாளர்களுக்கும், வருங்கால வைப்பு நிதியில் உள்ள தனியார் துறை தொழி லாளர்களுக்கும் தொழிலாளர் பங்கேற்பு முறையுடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் செயலில் உள்ளது.

இவற்றை முற்றிலும் மாற்றியமைத்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை 2004-ஆம் ஆண்டு இந்திய அரசு செயல்படுத்தியது. இதன்படி 2004 சனவரி 1-ஆம் நாளிலிருந்து இந்திய அரசுப் பணியிலும் அரசுத்துறை பணியிலும் சேரும் தொழி லாளர்கள் புதிய திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப் பட்டார்கள். இதற்கான ஆணையை 2003 டிசம்பர் 22-ஆம் நாள் இந்திய அரசின் நிதித்துறை பிறப்பித்தது. ஆயினும் இதற்கு முன்னர் பணியில் இருக்கும் ஊழியர் களும் பல்வேறு வகையில் வலியுறுத்தப்பட்டு புதிய ஓய்வூ தியத்திட்டத்திற்கு விரட்டப்பட்டு வருகிறார்கள்.

இத்திசையில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழக அரசு விளங்கியது. தமிழ் நாட்டில் 2001-ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் மாநில அரசால் தொடங்கப் பட்டு பெரும்பாலான ஊழியர்கள் அதன் கீழ் கொணரப்பட்டனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மைய நோக்கமே ஓய்வூதிய நிதியை தனியாரிடம் ஒப்படைப்பதுதான்.

உலகமயம் - திறந்த பொருளாதாரக் கொள்கை ஆகியவை 1990- களில் தீவிரப்பட்ட பிறகு இதற்கான திட்டமிட்ட முயற்சிகள் தொடங்கின.

1999-ஆம் ஆண்டு உலக வங்கியின் ஆலோசனைப்படி இந்திய அரசு அமைத்த ஒரு குழு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைக்கும் ஆலோச னையை முன்வைத்தது. இதற்கு இரண்டாண்டுகள் கழித்து 2001-இல் காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணைய அறிக்கை உறுதியான சில முன்மொழிவுகளை அரசுக்கு வழங்கியது. ஓய்வூதிய நிதியை நிர்வாகம் செய்து அதனை உரியோருக்கு வழங்கும் பொறுப்பை தனியாரிடம் விடுவது என்றும், அந்நிதியைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்றும் ஆலோசனை வழங்கியது.

இதே போல் அரசு ஊழியர் தொடர்பான ஓய்வூதியம் குறித்து ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட பட்டாச் சார்யா குழுவும் இதையொத்த பரிந்துரைகளை வழங்கியது. அரசு ஓய்வூதியத்திற்கு முழு பொறுப்பு ஏற்பதிலிருந்து விலக்களிக்கப் பட்டு ஊழியர்களும் அரசும் சமஅளவில் நிதி பங்கேற்கும் ஓய்வூதியத்திட்டம் ஒன்றை இப்பரிந்துரை முன் வைத்தது. ஓய்வூதிய நிதியை தனியாரிடம் ஒப்படைக்கவும் அந்நிதியை பங்குச்சந்தையில் ஈடுபடுத்தவும் ஆலோசனை வழங்கியது. இந்த ஆலோசனைகளே 2004-லிருந்து செயலுக்கு வந்தன.

இதன்படி தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10%ஐ ஓய்வூதிய நிதிக்கு வழங்கு கிறார்கள். அது தொழிலக நிர்வாகத்தால் சம்பளத்தி லிருந்து பிடித்தம் செய்யப் படுகிறது. இதே போன்று 10% அளவு தொகையை நிர்வாகமும் தனது பங்காக வழங்குகிறது. இவை இரண்டும் சேர்ந்தே ஓய்வூதிய நிதியாக சேமிக்கப் படுகிறது. ஓய்வு பெறும் முன் கடைசி 12 மாதங்களில் தொழிலாளர் பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியும் சேர்த்த தொகையில் ஒருமாத சராசரி கணக்கிடப்பட்டு அதில் 50% (பாதி) தொகை என்பது ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது முதலில் அறிவிக்கப் பட்ட திட்டமாகும்.

ஆயினும் இத்தொகையை தனியார் துறை நிதி நிறுவனங்களும் நிர்வாகம் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட பிறகுதான் இதிலுள்ள சிக்கல் தெளிவாகத் தெரியத் தொடங்கியது.

எடுத்துக்காட்டாக ஒரு தொழிலாளிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 35 ஆண்டுகளுக்கு பிடித்தம் செய்து வைப்பு நிதி சேர்க்கப்படுவதாக கொள் வோம். இதற்கு வட்டி 9% ஆகும். பணிக்கால இறுதியில் அவருடைய கணக்கில் 29,41,780 ரூபாய் சேர்ந்திருக்கும். இந்நிதியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் போது அதற்கு நடப்பில் உள்ள நுழைவுக் கட்டணம் 5 விழுக்காடு ஆகும். தனியார் நிறுவனங்கள் நிதி நிர்வாகத்திற்காக வசூலிக்கும் கட்டணம் 2% ஆகும். இது பார்வைக்கு சிறிதாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பிடித்தம் செய்யப்படுகிற தொகைக்கு 2 விழுக்காடு என்று கணக்கிடும் போது அதன் கூட்டுத்தொகை 7 இலட்சத்தை தாண்டும். இது தவிர இப்போதைய சந்தை நிலவரப்படி தனியார் நிறுவனங்கள் விளம் பரம், நிர்வாகம் மற்றும் குறைந்த பட்ச இலாபம் போன்ற வற்றிற்காக 15 விழுக்காடு எடுத்துக் கொள்கின்றன. இவற்றையெல்லாம் கழித்தால் தொழிலாளர்கள் கணக்கில் உள்ள ஓய்வூதிய நிதியில் குறைந்தது 50 விழுக்காடு போய்விடும்.

இந்த இழப்பு இல்லாமல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதி யத்தை வழங்க வேண்டுமானால் அந்நிதி நிறுவனம் மிகப்பெரும் அளவிற்கு இலாபம் பெறத் தக்க வகையில் சந்தையில் முதலீடு செய்தால் தான் சாத்தியமாகும்.

இங்குதான் சூதாட்டம் தொடங்குகிறது. முதலில் ஓய்வூதிய நிதியை தன் பொறுப்பில் கொண்டுள்ள நிறுவனமானது ஒன்று, இதனை அதிக இலாபம் தரும் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். இது எல்லா நேரத்திலும் வாய்க்காது. அந்நிலையில் கூடுதல் வட்டி வழங்க உறுதி அளிக்கும் வேறொரு நிதி நிறுவனத்திடம் இந்நிதியைக் கைமாற்றிவிடும். அது அதைவிட கூடுதல் வட்டியை எதிர் நோக்கி வேறொருகைக்கு மாறும்.

இதே போன்று வங்கிக் கடன்கள் கைமாற்றி விடப்பட்டதால் தான் கடந்த 2008-ல் அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவ னங்கள் அடுத்தடுத்து ஓட்டாண்டியாயின. அவ்வங்கிகளில் பணம் போட்டவர்கள் அனைத்தையும் இழந்து வீதியில் நிறுத்தப்பட்டனர். இவ்வாறான நிலை ஓய்வூதிய நிதிக்கும் ஏற்படும் ஆபத்து உண்டு.

இவ்வாறான ஆபத்து நேர்ந்தால் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை உறுதி செய்யும் பொறுப்பை அரசு ஏற்காது என்பது இச்சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. இதற்கான இழப்பு அச்சம் (ரிஸ்க்) முழுவதும் தொழி லாளர்களைச் சார்ந்தது. தங்கள் ஓய்வூதிய நிதி எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்படலாம் என்று எழுத்துப் பூர்வமாக கட்டளையிடும் வாய்ப்பு ஆண்டுக்கு ஒருமுறை அத்தொழிலாளிக்கு உண்டு என்று அச்சட்டம் கூறுகிறது.

சந்தை சூதாட்டத்தைப் புரிந்துக்கொண்டு இலாபகரமாக முதலீடு செய்யவைக்கும் வாய்ப்பு இந்நாட்டு தொழி லாளர்களில் எவ்வளவு பேருக்கு இருக்கிறது? கிட்டத்திட்ட யாருக்கும் அவ்வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. ஆயினும் தொழிலாளர்கள் ஒப்புதலோடு அவர்களது ஓய்வூதிய நிதி பங்குச்சந்தை சூதாட்டத்திலும், நிதி நிறுவனப் போட்டியிலும் இறக்கிவிடப் படுவதாக ஒரு சட்ட ஏற்பாடு நடக்கிறது.

பங்குச்சந்தையில் இறக்கிவிட சம்மதிக்கவே முடியாது என்று ஒரு தொழிலாளி மொத்தமாக மறுத்துவிடவும் முடியாது என இச்சட்டம் நிபந்தனை விதிக்கிறது. 35 வயது வரை அத் தொழிலாளியின் ஓய்வூதிய நிதியில் குறைந்தது 50% நிதி பங்குச்சந்தையில் இறக்கி விடப் பட்டே ஆக வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. 36 வயதுக்கு பிறகு பங்குச்சந்தையில் இறக்கிவிடப்படும் தொகை படிப்படியாக குறைந்து அது அரசு கடன் பத்திரத்தில் முதலீடு செய்யப்படுவது அதிகரிக்கும்.

ஓய்வு பெறும் போது ஒரு தொழிலாளி தன்னுடைய ஓய்வூதிய நிதியிலிருந்து அதிகப்பட்சம் 60 விழுக்காட்டு தொகையை மொத்த பணமாக பெறலாம். மீதி உள்ள 40% விழுக்காட்டு தொகை கட்டாயம் ஓய்வூதிய நிதி நிறுவனத் திடம் விட்டு வைக்கப்பட வேண்டும். அதிலிருந்து மேற் சொன்ன வகையில் மாத ஓய்வூதியம் வழங்கப்படும். ஒரு வேளை ஓய்வு பெறும் வயதுக்கு முன்பாகவே விருப்ப ஓய்வில் செல்வதானால் அவரது ஓய்வூதிய நிதியிலிருந்து 20% வரை மட்டுமே மொத்தப் பணமாக வழங்கப்படும். மீதமுள்ள 80 விழுக்காடு தொகை நிதி நிறுவனத்திடமே இருக்கும். அதிலிருந்து கிடைக்கும் ஓய்வூதியமும் 58 வயதிலிருந்துதான் கிடைக்கும்.

பங்குச்சந்தையிலோ, நிதிச் சந்தையிலோ இறக்கிவிடப்படும் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதி அந்நிதிநிறுவனத்திட மிருந்து கைநழுவிப் போகுமானால் தொழிலாளர்கள் தாங்கள் உழைத்து சேமித்த தொகை அனைத்தையும் இழக்க வேண்டியதுதான். அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று அரசு தெளிவாக அறிவித்து விட்டது.

ஓய்வூதிய நிதியை நிர்வாகம் செய்வதற்கு ஒழுங்காற்று ஆணையம் நிறுவுவதற்கான அவசரச் சட்டம் ஒன்றை 2004 -டிசம்பரில் இந்திய அரசு பிறப்பித்தது. அதை நிரந்தரச் சட்டமாக்கும் முயற்சியில் அதற்கான சட்ட முன்வடிவு 2005-ல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக அம்மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் காக அனுப்பபட்டது. அந்நிலைக்குழு சில திருத்தங்களை முன்வைத்தது. ஆயினும் விவா தத்திற்கு முன்பாகவே அந்நாடாளுமன்ற மக்களவையின் வாழ் நாள் முடிந்து தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அத்தோடு அம்மசோதாவின் வாழ்நாளும் முடிந்தது.

இந்நிலையில் இதனை உயிர்ப்பித்து புதிய சட்ட வரைவாக நாடாளுமன்ற மக்களவையில் இந்திய அரசு இப்போது முன்வைத்துள்ளது. ஓய்வூதியம் பெற வாய்ப்புள்ள தொழிலாளர்களே எண்ணிக்கையில் மிகக்குறை வானவர்கள். அவர்களது ஓய்வூதியமும் மேற்சொன்னவாறு தனியார் கைகளில் விடப்படுகிறது. தொழிலாளர்களுக்கு எதிராக இந்திய அரசு தொடுத்துள்ள மிகப்பெரும் தாக்குதல்கள் இச்சட்டங்களின் வாயிலாக செயலுக்கு வருகின்றன.

இந்திய அரசு முன் வைத்துள்ள  “தொழிலாளர் சட்டங்கள் திருத்த மசோதா 2011”  “ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி மசோதா” ஆகியவற்றைத் தொழிலாளர்களும் ஒட்டு மொத்த சனநாயக சக்திகளும் ஒன்றுப்பட்டு எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
Pin It

கேரளாவின் என்மகஜே பஞ்சாயத்தில் உள்ள படர் கிராமத்தில் வசிப்பவர், நாராயண பட். அவரது தந்தை புற்றுநோயினால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். தாய் சிறுநீரகப் புற்றுநோயால் இறந்தார். 35 வயதான அவரது தங்கையும், 22 வயதான மருமகனும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இன்னொரு மருமகன் விஷ்ணுவுக்கு வலிப்பு நோயின் பாதிப்போடு மனநிலை பாதிப்பும் இருந்தது. விஷ்ணுவின் இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்த போது அவரது இரத்தத்தில், 108.0 பி.பி.எம்.(Parts-Per-Million) அளவிற்கு என்டோசல்பான் (Endoú§lfan) என்கிற பூச்சிக் கொல்லி(?) மருந்து இருந்ததைப் பரிசோதனையில் கண்டறிந்தனர்.

2002 இல் ஆறு வயதான சிறுவன் பாலகிருஷ்ணன் மூளையில் கட்டி ஏற்பட்ட நிலையில் இறந்து போக, அவனைக் காப்பாற்று வதற்கு வசதி, வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் விதியென அவனை அழுகையுடன் வழியனுப்புகின்றனர், அவனது ஏழைப் பெற்றோர்.

நாராயண பட், பாலகிருஷ்ணன் குடும்பத்தைப் போல இவர்களது இருப்பிடத்தைச் சுற்றி அமைந்துள்ள பல்வேறு கிராமங்களிலும் இதுபோன்ற கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. மனிதர்களுக்கு மட்டுமின்றி, அப்பகுதி மக்களால் வளர்க்கப்பட்டு வந்த கால்நடைகளுக்கும் உடற்கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்பட்டன. நரம்பு மண்டல பாதிப்பு களுடனும், மனநிலை பாதிப்புகளுடனும், உடல் ஊனமுற்ற நிலையிலும் குழந்தைகள் பிறந்தன. வயதானவர் களுக்கு தோல்நோய், புற்றுநோய் என பல்வேறு பாதிப்புகளும் உண்டாகின.

இந்த அசாதாரண உடற்கோளாறுகளின் மூல காரணத்தைக் கண்டறிய யாரும் அவ்வளவு சிரமப்படவில்லை. அவர்கள் வாழும் பகுதி முழுவதிலும் கேரள அரசின் முந்திரித் தோப்பில் தெளிக்கப்பட்டு வந்த என்டோசல்பான் என்கிற பூச்சிக் கொல்லி மருந்தின் பாதிப்பே இது என்று கண்டு பிடிக்கப்பட்டது.

ஏறத்தாழ 1978லிருந்து கால் நூற்றாண்டாக அந்தப் பகுதி யில் 15க்கும் மேற்பட்ட கிராமங் களில் உள்ள முந்திரித் தோப்பு களில் தெளிக்கப்பட்டு வந்த இப்பூச்சிக் கொல்லி மருந்தால் தான் அப்பகுதி முழுவதிலும் வாழும் மக்கள் பல்வேறு உடற்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

1990களில் இருந்தே இதன் பாதிப்புகள் பெரிய அளவில் வெளிப்பட்டு வந்த நிலையில், கேரள அரசும் இந்திய அரசும் இணைந்து இதுவரை 11 குழுக்கள் அமைத்து இது குறித்து விசாரணை நடத்தி யிருக்கின்றன. ஆனால் நிரந்தரத் தீர்வு ஒன்றும் எட்டப்பட வில்லை.

வெறும் பூச்சிக் கொல்லி மருந்து என அறிமுகப் படுத்தப் பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த என்டோசல்பான், பூச்சிக் கொல்லி மருந்து மட்டுமல்ல மனித உயிர்களைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லி யாகவும் அது செயல்பட்டு வந்ததை பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வந்தன.

முதியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி கருவில் இருந்த குழந்தைகளை யும் பாதிப்படையச் செய்த இந்த பூச்சிக் கொல்லி மருந்து ஆண்டுக்கு 3 முறை என 1978லிருந்து 2001ஆம் ஆண்டு வரை கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள முந்திரிப் பயிர்களில் தெளிக் கப்பட்டு வந்ததாகக் கேரள அரசு இது குறித்து ஆராய்ந்து அளித்த தமது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. கேரள முதல் வர் அச்சுதானந்தன் இம் மருந்தை இந்திய அளவில் தடை செய்ய ஒருநாள் அடை யாள உண்ணாநிலை மேற் கொண்டார். ஆனால், இந்திய காங்கிரஸ் அரசு இம்மருந்தை தடை செய்ய விரும்பவில்லை என அறிவித்தது.

என்டோசல்பானில் ஏற் பட்ட பாதிப்புகளை கணக்கில் கொண்டு, 2001ஆம் ஆண்டு திருமதி. லீலா குமாரி என்பவர் கேரளாவின் மாவட்ட நீதி மன்றம் ஒன்றில், என்டோசல் பான் தெளிப்பதற்கு இடைக் காலத் தடை ஆணையைப் பெற்றார். எனினும், பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனங் களின் தலையீட்டால் இந்தத் தடை தகர்க்கப்பட்டது. பின் னர், 2003இல் கேரள உயர்நீதி மன்றம் என்டோசல் பான் மருந்தைத் தெளிக்க தடை விதித்த மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி மீண் டும் தடைஉத்தரவு பிறப் பித்தது. தொழில் வழி சுகாதாரத் திற்கான தேசிய நிறுவனம் அளித்த அறிக்கையை முன் னிட்டு கேரள அரசு அம் மருந்தை நிரந்தரமாகத் தடை செய்தது.

அம்மருந்து கேரளாவில் மட்டுமின்றி, கர்நாடகத்திலும் தடை செய்யப்பட்டது. ஆனால், இந்தியா முழுவதிலும் உள்ள மற்ற மாநிலங்களில் இது பயன்பாட்டில் இருப்பது குறிப் பிடத்தக்கது. இந்தியக் காங் கிரஸ் அரசு என்டொசல்பான் மருந்தைத் தடை செய்ய மறுத்து வரும் நிலையில், இந்திய அரசின் அம்முடிவுக்கு எதிரான போராட்டம் வலுத்து வரு கின்றது. உலகளவில் என் டோசல்பானை அதிகளவில் பயன்படுத்தும் முதன்மை நாடு இந்தியாவே என்பதும் கவனிக் கத்தக்கது.

உணவை உற்பத்தி செய்து உலகின் பசியாற்றும் உழவுத் தொழில் இன்றைக்கு உலகமயப் பொருளியல் வளர வளர நலிந்து போயுள்ளதை நாம் அறிவோம். ஆயினும், உணவு உற்பத்தியை தேவை அடிப் படையில் செய்யாமல், இலா பத்தின் அடிப்படையில் செய் திட பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்டவற்றை ‘விஞ்ஞான வளர்ச்சி’ என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் உழவர் களிடையே வலிந்துத் திணித்தது முதலாளியம்.

இரசாயன வேளாண்மை உழவர்களுக்கு இலாபம் தர வில்லை. மாறாக அவர்களைக் கடனாளி ஆக்கியது. ஆனால் பூச்சிக் கொல்லி நிறுவனங்கள் இலாபத்தில் கொழுத்தன.

பருவநிலை மாறுதலால் புதிய புதிய நோய்கள் உருவாகி பயிர்களை அழிப்பது ஒருபுறம் இருந்தாலும், இரசாயனப் பொருட்களாலும் மருந்து களாலும், பயிர்களை குறைந்த காலத்தில் வேக வேகமாக வளர்த்திட புதிது புதிதான வேதி மருந்துகளும், புகுத்தப் பட்டன. புதிய புதிய பூச்சிகளும், நோய்களும் பயிர்களைத் தாக்கின. பின், புதிதாக வளர்ந்த பூச்சிகளைக் கொல்வதற்கென பூச்சிக் கொல்லி மருந்துகள் கண்டறியப் பட்டு, உழவர்களை அம்மருந்துகளின் மேல் மோகம் கொள்ள வைத்தன, மருந்து நிறுவனங்கள்.

உழவுத் தொழிலில் மட்டும் 2001ஆம் ஆண்டு உலகெங்கும் பயன்படுத்தப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு 5.05 பில்லியன் பவுண்டுகள் (5005 கோடி பவுண்டு) என சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (Environmental Protection Agency - EPA) அமைப்பு கணக்கிட்டது. சற்றொப்ப 31.8 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள் அவ் வாண்டு பயன்பாட்டில் இருந்த தையும் அது அறிவித்தது. இவை அனைத்தும் நம் பூமிப்பந்தின் மீது நடத்திய இரசாயனத் தாக்குதலால் எத்தகைய மாற்றங் களை ஏற்படுத்தியிருக்கும் என்று எண்ணும் போது அதிர்ச்சியே மேலிடுகின்றது.

இவ்வாறு உற்பத்தி செய்யப் படும் பூச்சிக் கொல்லி மருந்து கள், அவை எதை அழிக்க பயன்படுத்தப்படுகின்றனவோ அதைத் தவிர 98 விழுக்காட்டுப் பொருட்கள் மீதே பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1950களில் கண்டுபிடிக்கப் பட்ட என்டோசல்பான் எனப் படுகின்ற இப்பூச்சிக் கொல்லி  மருந்து, உலகெங்கும் தொட பயன்படுத்தப்பட்டு வந்ததன் விளைவாக  பல்வேறு நாடுகள் இதனால் பாதிப்பைச் சந்தித்தன.  பல்வேறு நாடுகளில் என்டோசல்பான் தெளிக்கப் பட்ட நீரைப் பருகிய கால் நடைகளும், மீன்களும் இறந்து போயின். இதனைத் தொடர்ந்து பயன்படுத்திய உழவர்கள் மடிந்தனர் அல்லது நோய் வாய்ப்பட்டனர். 2002ஆம் ஆண்டு இம்மருந்து நீரில் நச்சுத்தன்மையை பாய்ச்சு வதாகக் கூறி வடஅமெரிக்க மீன் மற்றும் வனத்துறையினர் இம் மருந்தைத் தடை செய்ய பரிந்துரைத்தனர். இவ்வாண்டு வரை ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட நாடுகள் என்டோ சல்பான் மருந்துகளை தடை செய்துள்ளன.

1995ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme - UNEP) மனிதர் களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தியது. இதன் விளைவாக மே 2001இல் ஸ்டாக்ஹோம்மில் முடிவு எட்டப்பட்டு மனித இனத் திற்கு கேடு விளைவிக்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் அடங்கிய பட்டியலை வெளி யிட்டது. 2009ஆம் ஆண்டு இப்பட்டிய லில் என்டோசல் பானை சேர்க்கவும் அவ் வமைப்பு ஒப்புக் கொண்டது.

இப்பட்டியலில் என்டோசல் பானை சேர்த்தால், உலகளவில் அப்பொருளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும். இதனால் இதனை உற்பத்தி செய்யும் தனியார் பெருநிறுவனங்கள் நட்டமடையும். உலகளவில் அதிகமாக பயன்படுத்தும் நாடாக விளங்கும் இந்திய அரசு, உலகமயப் பெருமுதலாளி களுக்கு ஏற்படும் இந்த நட்டத்தை தடுக்கவே, இம் மருந்தை தடை செய்ய விரும்பவில்லை. ஸ்டாக்ஹோம் ஒப்பந்தத்தில் இம்மருந்தை இணைக்கவும் இந்தியா எதிர்க் கிறது.

என்டோசல்பான் மருந்திற்கு பதிலாக, மனித இனத்திற்கு கேடு விளைவிக்காத மற்றொரு பூச்சிக்கொல்லி மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இது தீர்வல்ல. மனித இனத்திற்கு கேடு விளைவிக்காத செயற்கையான வேதிப்பொருட்கள் என ஒன்றும் இருக்க முடியாது. என்டோசல்பான் போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் மட்டுமின்றி, உழவர்களின் உயிரைப் பறிக்கும் அனைத்து விதமான பூச்சிக் கொல்லிகளையும் நாம் முற்றிலும் புறக்கணித்தே ஆக வேண்டும்.

நன்மை தரும் பூச்சிகளையும், பறவைகளையும் கொண்டு தீமையான பூச்சிகளை பூச்சி விரட்டிக் கலவைகளை உருவாக்கித் தெளிப்பது ஆகியவையேவது, அல்லது கொல்வது மரபு வகை வேளாண்மையில் இருக் கும் உத்தியாகும். இதுவே இச்சிக்கலுக்குத் தீர்வாகும். என்டோசல்பானை இந்திய அரசு தடை செய்ய வேண்டும்.
Pin It

அன்பிற்கினிய நண்பர்களே!

“மனித குலமே தாயகம்” என்றார் ஹொஸெ மார்த்தி. அவரது வழித்தோன்றலான சேகுவேரா, “கியூபப் புரட்சியின் வெற்றி கியூப மக்களை மட்டுமின்றி உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்” என்றார். அவரது சர்வதேசியத்தின் செயல்வடிவமாகவே கடந்த ஐம்பது ஆண்டுகளாக உலகெங்கும் இலவசமாக மனிதநேய மருத்துவப் பணியாற்றி வருகிறார்கள் கியூப மருத்துவர்கள். உலகெங்கிலும் பேரிடர் துயர் துடைப்பில் அரும்பணி ஆற்றுகிறார்கள். நாடு திரும்பி ஏழை மக்களுக்கு மருத்துவ உதவியாற்ற உறுதியேற்கும் உலகின்பல நாட்டு ஏழை மாணவர்கள் ஹவானாவில் இலவச மருத்துவப் பட்டப்படிப்பை மேற் கொள்கிறார்கள்.

ஆனால் மார்த்தியும் சேகுவேராவும் ரத்தம் சிந்திய கியூப மண்ணின் இன்றைய தலைவர்கள் ஈழத்தமிழர் படுகொலையை ஏன் ஆதரித்தார்கள்? ஈழத்தமிழர் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டபோது, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசைப் பாராட்டி தீர்மானம் கொண்டு வந்த இந்தியாவின் வழியை ஏன் பின்பற்றினார்கள்? 21ஆம் நூற்றாண்டு சோசலிச முன்னெடுப்புகளின் களமான “ஆல்பா” நாடுகளின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு வாழ் தமிழர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்த எங்களைக் கடும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது. கியூபாவும் பிற இலத்தீன் அமெரிக்க நாடுகளும் ஈழத் தமிழர்கள் குறித்த நிலைபாட்டினை மாற்றிக் கொண்டு முன்னர் செய்த தவற்றினை சரி செய்யும் தருணம் வந்துவிட்டது.

2011 ஏப்ரல் 25 அன்று “சிறீலங்கா குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை” வெளியிடப் பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்துலகத் தமிழர்களும் கூறியபடி, 2009 மே 19 அன்றோடு முடிவடைந்த ஈழப்போரில் ஈழத்தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டது உண்மை என்று இந்த அறிக்கை ஆணித்தரமாக அறிவித்துள்ளது.

சிறீலங்கா அரசு போர்க்குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்தது. அதுமட்டுமின்றி, அவற்றை மூடி மறைக்கும் முயற்சியில் சிறுபான்மை தேசிய இனங்களின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறியுள்ளது' என்று உறுதிப்படுத்துகிறது.

அதாவது 2009 மே 27 அன்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் கடும் முயற்சியால் இயற்றப்பட்டு, கியூபாவினால் ஆதரவு திரட்டப்பட்டு பெரும்பான்மை வாக்குகளோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத் திலிருந்த தகவல்கள் அனைத்துமே பொய்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கை மேலும் பல உண்மைகளை வெளியிட்டுள்ளது:

(அ). இலங்கை அரசு இறுதிக்கட்ட போரின் போது பற்பல வகையான குண்டுகளை வீசி ஏறத்தாழ ஒரு இலட்சம் தமிழ் மக்களைப் படுகொலை செய்துள்ளது. பள்ளிகள், மருத்துவ மனைகள், குழந்தைக் காப்பகங்கள், பிற மனித நேய நிறுவனங்கள் இவையனைத்தும் இலங்கை இராணுவக் குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்டன.

(ஆ). போரில் உயிர் பிழைத்த தமிழ் மக்கள் - குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயர வைக்கப் பட்ட மக்களும் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற சந்தேகத்திற்கு உரியவர்களும் தொடர்ச்சி யான மனித உரிமை மீறலுக்கு ஆளாகியுள்ளனர்.

(இ). போரை எதிர்த்துக் குரல் எழுப்பிய அறிவுஜீவிகளும், ஊடகத்துறையினரும் கொல்லப் பட்டனர் அல்லது சித்திரவதைகளால் ‘மௌ னிக்கப்பட்டனர்’.

(ஈ). இலங்கை அரசு ‘போரில்லா பகுதி’ என்று அறிவித்த பகுதிகளில் நம்பிக்கையோடு வந்து சேர்ந்த மக்கள் மீது இலங்கை இராணுவம் எறி கணைத் தாக்குதல் நடத்தியது.

(உ). போர் முடிந்த பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், உணவு, மருந்துகள், மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து மனித நேய உதவிகளும் கிடைக்காமல் தடுத்துள்ளது இலங்கை அரசு.

(ஊ). முகாம்களில் தங்கியுள்ள இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பன்னாட்டு மனித நேய உதவிகள் எதுவும் போய்ச் சேராமல் தடுப்பதோடு தொடர்ந்து அம்மக்களை துயரத்தில் ஆழ்த்தி வைத்துள்ளது இலங்கை இராணுவம். தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், தீக்குண்டுகள் ஆகியவற்றை வீசி பல்லாயிரம் பேரைக் கொன்றது, முடமாக்கியது, மருத்துவ உதவியின்றி தொற்று நோய்களுக்கு இரையாக்கியது.

(எ). போரில் உயிர்தப்பியவர்களுள் பலர் புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு விசாரணையின்றி சித்திரவதைக்குப்பின் படு கொலை செய்யப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்தப்பட்டார்கள். எண்ணற்றோர் கடத்தப்பட்டு ‘காணாமல் போனார்கள்’.

(ஏ). இலங்கையின் நீதித்துறையின் வரலாற் றைக் கொண்டு ஆராய்ந்தால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஞாயம் கிடைப்பது அரிது என்பது தெளிவாகிறது. கடந்த 30 ஆண்டுகளில் அங்கே நிறுவப்பட்ட பல்வேறு விசாரணை ஆணையங்களும், மனித உரிமை ஆணையமும் ஒருபோதும் சட்டங்களை மதித்து பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டதாக சான்றே கிடையாது.

(ஒ). இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலாக கடந்த 60 ஆண்டுகளில் இயற்றிய பல சட்டங்களினால் மொழி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, தொழில், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் தமிழினம் ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழர்கள் தங்கள் உரிமைகளை மீட்க போராட வேண்டிய அவசியம் உருவானது. முதல் 30 ஆண்டுகள் வரை அறவழிப் போராட்டங்கள் நடத்தி எந்தப்பயனும் கிட்டாத நிலையில், 1977ஆம் ஆண்டுக்குப் பின்புதான் தமிழர்கள் தங்கள் தாயகத்தை மீட்க ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

(ஓ). போர் முடிந்த பின்பும் போர்க்காலச் சட்டங்கள் நீடிப்பதும், ஊடகத்துறை மீதான தடைகளும் மக்களை நிரந்தர அச்சத்திலும் நம்பிக்கையற்ற நிலையிலும் இருத்தி வைத் துள்ளன. அனைத்து மீறல்களும் சாட்சியின்றி நடைபெற்று வருகின்றன.

(ஓள). தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியது, சிறுவர்களை போராளிகளாகச் சேர்த்தது, போர்க்கருவிகளை மக்கள் வாழிடங்களுக்கு அருகாமையில் சேமித்து வைத்தது ஆகிய குற்றங்களைப் புரிந்திருக் கிறார்கள். எனினும், உலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது இலங்கை அரசுதான். இவற்றை அறிந்திருந்தபோதும் போரின் இறுதிக் காலத்தில் ஆயிரக்கணக்கில் பொது மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யாமல் ஐ.நா.வின் நிறுவனங்கள் தவறிவிட்டன. இதன் தொடர்ச்சியாக ஐ.நா. மனித உரிமை மன்றமும் இந்த விடயத்தில் தவறு செய்தது.

எனவே, இந்த விசாரணைக் குழு,

“2009 மே 27ஆம் நாள் ஐ.நா. மனித உரிமை மன்றம் தனது சிறப்புக் கூட்டத்தில் சிறீலங்கா நிலைமை குறித்து இயற்றிய தீர்மானத்தை (கி/பிஸிசி/8-11/லி.மி.-ஸிமீஸ்.2) எங்களது இந்த அறிக்கை யின் வெளிச்சத்தில் மீளாய்வு செய்ய வேண்டும்” என்று ஐ.நா. தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்துகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம் கியூபா, பொலிவியா, நிகராகுவா, வெனிசுவேலா உள்ளிட்ட ‘ஆல்பா’ நாடுகளுக்கும், இதர இலத்தீன் அமெரிக்க முற்போக்கு அரசுகளுக்கும் கூடுதலாக சில தகவல்களைக் கூற விரும்புகிறது:

(1). ஈழத்தமிழ் மக்களைப் பெருமளவில் கொன்று குவித்த (2008-2009) காலத்தில் இந்திய அரசு இப் போரில் நேரடியாகப் பங்கேற்றுள்ளது. உளவு பார்ப்பதற்கான செயற்கைக் கோள்கள், ராடார்கள் உள்ளிட்ட பற்பல கனரக போர் ஆயுதங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் பண உதவி என அனைத்து உதவிகளையும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு அளித்துள்ளது.

(2). இதற்குக் காரண மில்லாமல் போகவில்லை. இலங்கை போலவே இந்தியாவும் பிரிட்டனின் காலனியாக இருந்த நாடு. நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு இருநாடு களிலுமே காலனி ஆட்சியின் போது பல் வேறு தேசிய இனங்களின் வரலாற்றுத் தாய கங்கள், செயற்கையாக ஒன்றிணைக் கப்பட்டன. காலனி ஆட்சியின் முடிவில், தன்னாட்சி பெற்ற போது வெவ் வேறு தேசிய இனங்களுக்கு தனிஆட்சி அதிகாரமும் ஆட்சிப்பரப்பும் வழங்கப்பட வில்லை. இந்த முறையற்ற காலனிய நீக்கமே இரு நாடுகளிலும் தனி தேசிய இனங்கள் தாயக மீட்புப் போராட்டங்களில் ஈடுபடக் காரணமாயிற்று. காஷ்மீர், வடகிழக்கு தேசங்கள், தமிழ் நாடு என இந்தியாவிலும், ஈழப்போராட் டமாக இலங்கை யிலும் தொடர்வது தேசிய இன விடுதலைப் போராட்டங்களே.

(3). இந்திய வல்லரசு இந் தியப் பெருங்கடல் பகுதியில் தனது மேலாதிக்கத்தை நிறுவு வதற்காகவே தனி ஈழக்குடியரசு ஏற்படுவதைத் தடுத்து ஈழ விடுலைப் போராட்டத்தை ஒடுக்கியது என்பதே உண்மை. ஆனால், இதன் மூலம் தன் னாட்சி கோரிப் போராடும் காஷ்மீரிகளுக்கும், இந்தியாவில் உள்ள தமிழருக்கும், இன்னபிற தேசிய இனங்களுக்கும் மறை முகமாக இந்திய அரசு அச் சுறுத்தல் விடுத்துள்ளது என் பது கவனிக்கத்தக்கது.

மேற்கூறிய தகவல்களின் அடிப்படையில் “ஆல்பா” உறுப்பு நாடுகள் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க முற் போக்கு அரசுகளிடம் இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம் பின்வருமாறு கோருகிறது:

(அ). 2009 மே 27 அன்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பொய்யென விசாரணைக்குழு நிரூபித்துவிட்ட நிலையில், அத் தீர்மானத்தை மன்றத்தின் பதிவி லிருந்து நீக்கக் கோர வேண்டும்.

(ஆ). இன ஒதுக்கலுக்கும், இனப்படுகொலைக்கும் ஆளான ஈழத்தமிழ் மக்களது போராட்டம் தாயக மீட்புக்கான தேசிய விடு தலைப் போராட்டமே என்று அங்கீ கரிக்க வேண்டும்.

(இ). தமிழ் இனப்படுகொ லையை நிகழ்த்திய இலங்கையில் இராசபட்சே அரசும், அதற்குத் துணை போன இந்திய அரசும் சர்வதேச சட்டங்களை மீறிய குற்றவாளிகள் என்னும் தீர்மா னத்தை இயற்ற வேண்டும். இவ் வழக்கினை சர்வதேச நீதி மன்றத்தில் கொண்டு சென்று இலங்கை, இந்தியா மட்டுமின்றி, மறைமுகமாகப் போரில் பங் கேற்ற சீனா உள்ளிட்ட நாடு களையும் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டும்.

(ஈ). தமிழர் தாயகப் பகுதி களில் நடைபெற்று வரும் திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றத்தையும், பன்னாட்டுக் கொள்ளை நிறுவனங் களின் படையெடுப்பையும் தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்க வேண்டும்.

(உ). ஈழத்தமிழ் மக்கள் தங்கள் மரபான வாழிடங் களுக்குத் திரும்பி கௌரவமான குடிமக்களாக உரி மையுடன் வாழ்வதற்கான கட்ட மைப்புகள் உருவாகவும் அவர்தம் கருத்துகள் அரங்கேறி சுமூகமான வாழ்நிலை திரும்பவும் அனைத் துலக ஈழத்தமிழர் ஆதரவு சக்தி களுடன் கைகோக்க வேண்டும்.

இதுவே ஒடுக்கப்பட்ட/சிறுபான்மை தேசிய இனங் களுடைய விடுதலைப் போராட் டங்களின் ஞாயத்தை நிலை நாட்ட உதவும். சற்றேறக்குறைய பத்து இலட்சம் ஈழத்தமிழர் உலகெங்கிலும் புலம் பெயர்ந்து வாழ்வதும், மூன்றரை இலட்சம் மக்கள் இலங்கை அரசின் இனப்படுகொலையில் மாண்டு போனதும் இன ஒதுக்கலுக்கு ஆளான ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் ஞாய மானது என்பதற்கு போதுமான சான்றுகளாகும்.

தற்போது ஐ.நா. விசாரணைக் குழு அளித்திருக்கும் வாய்ப் பைப்பயன்படுத்தி ஈழத் தமிழரின் தார்மீக போராட் டத்தினை அங்கீகரிப்பதே மனித குலத்தின் மீதும் மனித உரிமை களின் மீதும் நம்பிக்கை கொண்டோரின் கடமையாகும்.

கியூபாவும் ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளும் ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதன் மூலம் மீண்டும் மாவீரன் சேகுவேராவின் சர்வ தேசியத்தை நிலை நாட்ட வேண்டும்.
Pin It

சென்னை, அடையாறில் இயங்கிவரும் ஸ்ரீசங்கரா மேனிலை (Sri Sankara Senior Secondary School) பள்ளி, அதில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் என்ன இருந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னதாக அரசின் சட்டமான ”அனைவருக்கும் கல்வி பெறும் உரிமை” (Right to Education - RTE ) பற்றி சொல்ல வேண்டும். இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் அதன் அருகாமையில் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்குள் வாழும் ஏழைக் குழந்தைகளைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது அப்பள்ளியின் மொத்த சேர்க்கை எண்ணிக்கையில் இருபத்தைந்து விழுக்காடாக இருக்க வேண்டும். மீதமுள்ள எழுபத்தைந்து விழுக்காட்டினரை அந்த பள்ளியே தேர்ந்தேடுத்துக்  கொள்ளலாம்.

அரசு இந்த சட்டத்தை வரும் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், அடையாறில் உள்ள அந்தப் பள்ளி அனுப்பிய சுற்றறிக்கையில், ‘நமது மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் வரவிருக்கும் இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும்‘ என்று தூண்டிவிட்டிருக்கிறது.

இப்படியொரு போராட்டம் நடத்துவதற்கு அந்தப் பள்ளியின் முதல்வர் சுபலா அனந்த நாராயணன் சொல்லும் காரணங்கள்: ஏழை மாணவர்களை தமது பள்ளியில் சேர்த்தால் ஒழுக்கக் கேடும், கல்வித்தர குறைபாடும் ஏற்படும்; ஏழைகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர் அதிகநேரம் செலவிட வேண்டும்; இதனால் பள்ளியின் கட்டணத்தை மேலும் உயர்த்த வேண்டி வரும் என்பன.

அந்தப் பள்ளியை அடுத்து மற்றொரு பள்ளியான 'லேடி ஆண்டாள் வேங்கட சுப்பாராவ் மேல்நிலை பள்ளியும்' இதுபோன்ற சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாம்.

கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பில் சேர்ந்த மாணவி ஜோதி, (பத்தாம் வகுப்பில் 500க்கு 475 மதிப்பெண்களும், பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1105 மதிப் பெண்களும் எடுத்தவர்) தற்கொலை செய்து கொண்டார். கிராமப்புற மாணவியான அவருக்கு ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியவில்லை என்று சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பல்கலையில் சேர்ந்த சில நாட்களிலேயே வீட்டுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன் சென்னை-குடிசைப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யா, வகுப்பில் பணம் திருடியதாக சொல்லி குற்றம் சாட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டார். இவ்விரு நிகழ்வுகள் நடந்த போது 'கொலைவாளி'ல் இதுபற்றி எழுதியிருக்கிறேன்.

பெரும்பாலும், உயர்சாதி நிர்வாகத்தால் நடைபெறும் இத்தகைய தனியார் பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஏழைகளுக்கு எதிரான நிலைபாட்டிலேயே இருக்கின்றன என்பதற்கு மேற்கூறிய இரு நிகழ்வுகளும் சாட்சி. சாதியத் தீண்டாமையில் சிக்கித் தவிக்கும் சமுதாயத்தில் இதுபோன்று கல்வியிலும் இவ்வாறான நவீனத் தீண்டாமையை அனுமதித்தால் சமூகம் மேலும் சீரழியும் அபாயமுள்ளது.

அந்த நிகழ்வுகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஸ்ரீ சங்கரா மேல்நிலைப் பள்ளி அனுப்பிய சுற்றறிக்கை இருக்கிறது. மேல்தட்டு குடும்ப குழந்தைகளை படிக்க வைத்து அவர்களை அறிவாளிகளாக ஆக்குவதை மட்டுமே கல்விச் சேவையாக (!) இது போன்ற தனியார் பள்ளிகள் கருது கின்றன. அரசின் அனைத்து வரிச்சலுகைகளையும் பெற்று செயல்படும் தன்நிதிக் கல்வி நிறுவனங்கள் அரசின் சட்டங் களை எதிர்ப்பதோடு அச்சட் டங்களுக்கு எதிராகப் பொது மக்களை திரட்டும் பணியையும் திட்டமிட்டு செய்வது அந்த சுற்றறிக்கை மூலம் அம்பலமாகி விட்டது.

ஏழைக் குழந்தைகள் 25 விழுக்காடு பேரை தனியார் பள்ளிகள் சேர்க்க வேண்டும் என்கிற சட்டத்தை அமல் படுத்துவதற்கு முன்பே இப்படி என்றால்,  நாளைக்கே அச் சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அந்தப் பள்ளியில் படிக்கப் போகும் குழந்தைகளை இதுபோன்ற பள்ளிகள் என் னென்ன பாடுபடுத்தப் போ கின்றனவோ? அன்றாடம் ஜோதிகளும், திவ்யாக்களும் தற்கொலை செய்து கொள்ளும் அபாயகரமான சூழ்நிலை உருவாகுமோ என்று அச்சமாக இருக்கிறது.

தனியார் பள்ளிகளிலும் ஏழைகளைச் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் அளவுக்கு நிலைமை மோச மானதற்கு என்ன காரணம்? அருகமைப் பள்ளி அமைப்பை உருவாக்க இந்த அரசு தயங்குவது ஏன்? பொதுப் பள்ளி முறை அமையத் தடையாக இருப்பது எது? அமைச்சர்களும், பணக்கார பெருமுதலாளிகளும் கல்வித் தந்தைகளாக இங்கே மாறத் தொடங்கியதிலிருந்தே கல்வித் துறையின் வாசல்கதவுகள் தனியாருக்கு திறந்து விடப் பட்டது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாறவும் அருகமைப் பள்ளி அமைப்பைக் கொண்ட தாய்மொழிவழிப் பொதுப் பள்ளி முறை அமையவும் வலுவான மக்கள் இயக்கம் வர வேண்டாமா?

கல்வியும் மருத்துவமும் அரசால் இலவசமாக தரப்பட வேண்டும். இவ்விரு துறைகளில் தனியாரை அனுமதிப்பது நாட்டைப் பெருமுதலாளி களுக்கு எழுதித் தருவதற்கு சமம். அதைத்தான் இன்றைக்கு மத்திய மாநில அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. மது பானக் கடையை நடத்தும் அரசு பொதுப்பள்ளிகளை நடத்த முடியாது என்று சொல்வது முரண்பாடுகளின் மொத்த வடிவம் தான்.

தனியார் பள்ளி வாசலில் நள்ளிரவில் வரிசையில் நின்று எல்கேஜி வகுப்பில் பிள்ளையைச் சேர்க்க விண்ணப்பம் வாங்கும் மனநிலை ஒழிந்து, பொதுப் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்க்கும் அவசியத்தை நம்மில் எல்லோரும் உணரவேண்டும். அமைச்சர் வீட்டுப் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிப்பது இருக்கட்டும். மாற்று அரசியல் பேசும் நாமும் பொதுப் பள்ளிகளை நாடினால்தான் அங்கே தரமான கல்விக்கு உறுதி உருவாகும்.

கலப்பு மணம் சாதிய வேறு பாட்டை களைய வாய்ப் பளிப்பது போல், பொதுப் பள்ளிகளை நாடிச் செல்வதன் மூலமே நவீனத் தீண்டாமையை தீயிட்டுக் கொளுத்த முடியும்
Pin It
மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டம் செய்தாப்பூரில் 9,900 மெகாவாட் அணுமின் நிலையம் கட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது மன்மோகன் - சோனியா ஆட்சி. இதற்காக பிரான்சு நாட்டின் அவேரா பன்னாட்டு நிறுவனத்துடன் அணு உலைக்கான ஒப்பந்தம் போட்டுள்ளது இந்திய அரசு.

அணுக்கதிர் வீச்சால் பேரழிவு ஏற்படும் என்று அப்பகுதி மக்களும், அணு உலை எதிர்ப்பு அமைப்புகளும் செய்தாப்பூர் அணுமின் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

கடந்த 23.4.2011 அன்று தானே மாவட்டத்தில் உள்ள தாராப்பூர் அணுமின் நிலையத்திலிருந்து செய்தாப்பூர் வரை மூன்று நாள் அணு உலை எதிர்ப்புப் பரப்புரை செய்ய தன்னார்வ அமைப்புகள் ஏற்பாடு செய்தன.

23.4.2011 காலை தாராப்பூரில் புறப்பட்ட பேரணியில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.ஜி. கோல்சே பாட்டீல், பி.பி.சாவந்தத், முன்னாள் கடற்படைத்தளபதி எல்.இராமதாஸ், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த வல்சாலி பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தப் பரப்புரை அணிக்கு மராட்டியக் காவல்துறை தடை விதித்தது. அவர்களைக் காவல் நிலையத் துக்குக் கொண்டு சென்றனர். முன்னாள் நீதிபதிகள் கோல்சேவை விட்டு விட்டு மற்றவர் களைக் காவலில் வைத்தனர்.

பி.பி.சாவந்த பேசும்போது, "புகுசிமா, செர்னோபில், மூன்று மைல்தீவு (வடஅமெரிக்கா) ஆகிய இடங்களில் நடந்த அணு விபத்துகளை மறைக்க முடியாததால் அந்த அரசுகள் அவற்றை ஒப்புக்கொண்டன. உலகத்தில் வெளியே தெரிவிக்கப்படாமல் குறைந்தது 30,000 சிறுசிறு அணு விபத்துகளாவது நடந்திருக்கும்.அவற்றால் பலர் இறந்துள்ளனர்; பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தை ஆதிக்க சக்திகள் தாம் அணுமின் திட்டங்களைத் திணிக்கின்றன’’ என்றார்.

‘’பிரதமர் மன்மோகனும், அறிவியலாளர் அனில் கதோத் கரும் அவேரா நிறுவன முகவர்கள்’’ என்று பரப்புரை அணியினர் முழக்க மெழுப்பினர் 135 பேர் தளைப்படுத்தப்பட்டனர்.
Pin It