தொடர்புடைய படைப்புகள்

சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில் நீண்டகாலம் புத்தகச் சந்தை நடந்து வந்தது. ஆண்டுக்கொருமுறை ஜனவரி மாதத்தில் பொங்கல் சமயத்தில் விரிந்த ஏற்பாடுகளுடன் அப்புத்தகக் கண்காட்சி நடைபெறும். அதனை பபாசி – தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் நடத்தியது. இன்றளவும் அக்கண்காட்சி மேலும் விரிவடைந்து. வேறு இடங்களில் தொடர்ந்து அதே அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நன்மை கருதி ஆண்டுக்கொரு புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. அங்குக் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் விளையாட்டு அம்சங்களையும் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்து வேறு ஒரு முறையில் நடத்தி வருகின்றனர். கண்காட்சி அவர்களது நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் நடக்கிறது. தங்குவதற்கு அங்கு நிறுவனத்தின் தேவைக்காகக் கட்டிவைக்கப்பட்டுள்ள அறைகள் பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் பயன்படுகின்றன. மத்திய அரசின் நிறுவனமே நடத்துவதால் அதற்குண்டான ஆள்பலம், பொருளாதார பலம் ஆகியவை உள்ளன.

பிறகு ஈரோடு போன்ற இடங்களில் கடந்த கால் நூற்றாண்டுக்குள் தான் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கின. அவை தனியார் ஏற்படுத்தியுள்ள சமூகநல அமைப்புகளால் நடத்தப்படுபவை.

இப்போது தமிழ்நாடு அரசே வருடத்திற்கு ஒருமுறை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ‘புத்தகத் திருவிழா’ வை நடத்த அரசு ஆணை பிறப்பித்ததோடு நிதி உதவியும் செய்து வருகிறது.

‘புத்தகக் காட்சி’, ‘புத்தகக் கண்காட்சி’ என்று வழங்கப்பட்டு வந்த புத்தகச் சந்தைகளின் பெயர்களிலிருந்து ஒரு மாற்றத்தைச் செய்து ‘புத்தகத் திருவிழா’ என்ற பெயர் 2005ஆம் ஆண்டு முதன் முதலில் ஈரோடு புத்தகச் சந்தைக்குச் சூட்டப்பட்டது.

அது பெயர் மாற்றம் வேண்டும் என்ற முறையில் மட்டுமல்லாமல் எத்தனையோ வகையான திருவிழாக்கள் ஆண்டுதோறும் மக்களால் விதவிதமாகக் கொண்டாடப்படுகின்றன. மதம் சார்ந்தவை சில, சாதி சார்ந்தவை சில, பகுதி சார்ந்தவை சில, இசைக்குழுக்கள் சார்ந்தவை சில, மொழிசார்ந்தவை சில. அறிவுக்கென்று ஒரு திருவிழா கொண்டாடப்பட வேண்டும், புத்தகங்களைக் கொண்டாடுகிற திருவிழா தான் அறிவுத்திருவிழா. இவ்வாறான பல காரணங்களையும், உள்ளீடுகளையும் ஆய்ந்து தான் ‘புத்தகத்திருவிழா’ என்று ஈரோட்டில் பெயர் சூட்டப்பட்டதாக அத்திருவிழாக் குழுவினர் அறிவித்தனர்.

இப்போது அரசு ஆணையிலேயே ‘திருவிழா’ என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கும் எத்தனையோ பதிப்பகங்கள் சமூக மாற்றத்திற்கே வித்திட்டுள்ளன. உலகையே புரட்டிப் போட்ட புத்தகங்களை எங்கோ ஒரு மூலையில் இயங்கிக் கொண்டு வந்த எளிய பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இதுவே அறிவுலக வரலாறு.

நூல்கள் தனிமனிதன் உயர்வுக்கு அடித்தளமிடுகின்றன. மனிதர்களைப் பக்குவப்படுத்துகிற, பண்படுத்துகிற வலிமை நூல்களுக்கு உண்டு. எத்தனையோ தனிமனிதர்கள் தங்களது தொழில் வளர்ச்சிக்கு நூல்கள் அடித்தளமிட்ட வரலாற்றை அவர்கள் எழுதிய நூல்கள் வழியாகப் பதிவு செய்துள்ளனர். ஆளுமையை மேம்படுத்துகிற ஆற்றலும் நூல்களுக்கு உண்டு.

அதே போன்று ஒட்டுமொத்த சமூகத்தையே சிந்திக்க வைக்கிற, செயல்படத் தூண்டுகிற, விழிப்புணர்வை ஏற்படுத்துகிற, எழுச்சிபெற அடித்தளமிடுகிற நூல்களும் உண்டு. பல நாடுகளின் விடுதலைக்கும், புரட்சிக்கும் சில நூல்கள் விதைகளாக விளங்கியுள்ளன.

கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளே உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் வரிசையில் நிற்கின்றன. காலகாலமாக கல்விக்கு அடிப்படையே நூல்கள் தான்.

இத்தகைய தனிச்சிறப்பும், சிறப்புத் தகுதியும் மிக்க நூல்களை கடைக்கோடி மனிதர்கள் வரை எடுத்துச் செல்லும் பணியை புத்தகத் திருவிழாக்கள் செய்கின்றன.

புத்தகத்திருவிழாக்களில் மாலையில் நடைபெறுகிற சொற்பொழிவு நிகழ்வுகள் புத்தக வாசிப்பைத் தூண்டிவிடுகிற வித்தையை நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்கின்றன.

புத்தகம் வாங்க மட்டுமே வருபவர்கள், உரைகளைக் கேட்பதும் சொற்பொழிவைக் கேட்பதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு வருபவர்கள் அவ்வுரைகளின் தாக்கத்தால் நூல்கள் வாங்குவதும், அத்திருவிழாக்களின் நடைமுறைகளாகின்றன. பொதுவாக அவை அறிவு வேள்விக்கு அடித்தளமிடுகின்றன.

சமூக நோக்கத்துடன், கல்விக் கண்ணோட்டத்துடன், அறிவு வேட்கையுடன், அறிவியல் பார்வையுடன், பண்பாட்டுச் சிந்தனையுடன், புத்தகத் திருவிழாக்கள் உயிரோட்டத்துடன் நடத்தப்படுகிற போது நாட்டில் புத்தெழுச்சி ஏற்படும் என்பதில் இரண்டு கருத்திற்கு இடமிருக்க முடியாது.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.