தனது படிப்புக் கட்டணத்திற்காக உதவி செய்திடுமாறு யாசித்து கடிதமொன்று எழுதினான். துயரமும் வறுமையும் எப்போதும் அவனை சூழ்ந்திருந்தது. சிறு விளக்கினடியில் இருந்து அவன் பிரகாசமான இந்த உலகத்தை தரிசித்தான். எங்கும் நிலைத்து நிற்காதபடி அவனது பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இவ்வுலகம் இனியது என்றான். இதிலுள்ள வான் இனிது என்றான். காற்று நன்று, நீர் இனிது, தீ இனிது, நிலமும் இனிது என்றெழுதினான். ஆண் நன்று, பெண் இனிது, குழந்தை இன்பம் என்றான். உயிர் நன்று, காதல் இனிது என்றும் எழுதி வாழ்க்கையை கவிதையாக்கினான்.

பாலகனாக இருந்த போதே பாரதி என பெயரெடுத்த அவன் படித்த ம.தி.தா. இந்துப் பள்ளிக்கு ஆயிரமாயிரம் புத்தகங்களோடு புத்தக விற்பனை இயக்கம் நடந்தது. திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில் யானையும் அதனோடு மரணமும் சம்பவித்து 88 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனாலும் அவனது கவிதைகள் இன்றும் நமக்கு உயிர்ப்பை தருகிறது. அள்ள அள்ள குறையாத வற்றாத ஜீவனைத் தருகிறது. அந்த உற்சாகமும், உணர்வும் கலந்த புத்தகத் தீ அன்று பற்றிப் படர்ந்து எரிந்தது.

நெல்லை மாவட்டத்திலுள்ள 15 அமைப்புகள் இணைந்து இந்தப் புத்தகச் சந்தையை செப்டம்பர் 11_ இல் 88 மையங்களில் நடத்தியது.

ஆகஸ்ட் 15 இல் ஆலோசனைக் கூட்டத்தில் பத்து அமைப்புகள் கலந்து கொண்டு புத்தக விற்பனை இயக்கத்தை நடத்த முடிவெடுத்தன. முடிவு விசையரு பந்தினைப் போல தடையின்றி நகர்ந்தது. பிறகு 5 அமைப்புகள் இணைந்து கொண்டன. 88 மையங்கள் 16 அமைப்புகள். மையத்திற்கு 3 அமைப்பாளர்கள், 264 அமைப்பாளர்கள் பங்கேற்க தயாரிப்புக் கூட்டம் செப்டம்பர் 3 அன்று மிகுந்த உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும் நடந்தது. பாரதி புத்தகாலய பொறுப்பாளர் தோழர் நி. ராமகிருஷ்ணன், விருதுநகர் சாமுவேல்ராஜ் பங்கேற்று பேசினர். அரங்கம் நிறைந்த கூட்டம்.

“செங்கல், கம்பி, சாந்து என இருக்கும் எங்களை புத்தகம் விற்க அழைத்ததை பெருமையாக நினைக்கிறோம். திட்டமிட்ட இடங்களில் எங்களது தோழர்கள் சிறப்பாக நடத்துவார்கள்’’ என கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் நம்பிக்கையை விதைத்தார். “பல்கலைக்கழக வளாகத்திலும் ரயில் நிலையங்களிலும் புத்தகக் கடையை விரிப்போம்’’ என மாணவர் சங்க செயலாளர் சொன்னார்.

நிறைய புத்தகங்கள் இருக்கிறது. ஆனால் படிப்பவர்கள் குறைவாக இருக்கும் இடம் கல்லூரிதான். இதனை தகர்க்க இந்த இயக்கம் உதவும் என்றார். ம.தி.தா. இந்துக் கல்லூரி முதல்வர் பொன்ராஜ். செப்டம்பர் 11 அன்று அக்கல்லூரியில் புத்தக விற்பனை நடந்தது, தனியாக செப்டம்பர் 23, 24,25 மூன்று நாட்கள் வேறு பல பதிப்பகங்களையும் இணைத்து புத்தக கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.

ஆறு இடங்களில் புத்தகங்களை விற்று புதிய பல ஊழியர்களோடு களத்திலிருந்து திரும்பி வந்தனர் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தோழர்கள்.

கலெக்டர் வளாகத்தில் பந்தல் போட்டு விமரிசையாக துவங்கிய புத்தக சந்தையை கலெக்டர் துவக்கி வைத்து, “இதை தொடர்ச்சியாக நடத்த ஏதாவது ஏற்பாடு செய்யுங்க’’, என சொன்னது ஆர்வத்தை அதிகப்படுத்தியது. எப்போதும் 50 பேர் என காலையிலிருந்து மாலை வரை கலகலப்பாக நடந்த சந்தையை அரசு ஊழியர் சங்க தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.

மூன்று இடம் போதும், இது பின்தங்கிய பகுதி என தயங்கித் தயங்கி சென்ற மாதர்சங்கத் தோழர்கள் கொண்டு சென்ற அனைத்து புத்தகங்களையும் ஒரே நாளில் விற்றுவிட்டு, எல்லா புத்தகங்களையும் நாங்களே வச்சிருந்து விக்கட்டுமா என கேட்டனர். கணக்க முடிச்சி பெறகு வாங்கிட்டு போங்க என சொன்னது வேறு கதை.

11ந் தேதிக்கு முன்னதாகவே தமக்குக் கொடுக்கப்பட்ட புத்தகங்களை முழுசாக விற்றுத் தீர்த்து அச்சாரம் போட்டனர் வங்கித் தோழர்கள். நான்குனேரியில் என்னத்த விக்கும் என சொன்ன பிஎஸ்என்எல் தோழர்கள் 12 மணிக்கே போன் செய்து தோழர் புத்தகம் கம்மியா இருக்குன்னு சொல்லுறாங்க என்றனர்.

பாரதியார் கவிதையும், திருக்குறளும் சேகுவேராவும் வெகு சீக்கிரத்திலேயே அனைவரின் கைகளுக்கு விரைந்து சென்றது. வளையமிடும் சேகுவேராவின் புகையின் நெடி வேறொன்றையும் சொன்னபடி படர்ந்தது. பாரதி நினைவு நாளை மிக முக்கிய காரியத்தை செய்து சிறப்பாக்கி விட்டீர்கள் என நோட்டு போட்டு கருத்துகளை எழுதி வாங்கியதை உற்சாகமாக காட்டினர் போக்குவரத்து தோழர்கள்.

“ரோட்டு மேல போட்ருக்க உள்ள தள்ளிப் போடு என சொல்லிய போலீசோடு ஏன் சார் புத்தகத்தை விக்க கூடாதா என கேட்டு நெஞ்சுயுர்த்திய வாலிபர் சங்கத் தோழர்கள் போலீசின் அடக்குமுறையால் கைதாகி சிறை சென்று புத்தக விற்பனை இயக்கத்தை ஆவேசமூட்டினர்.

ஆயிரம் திருக்குறள் கேக்குறாங்க ஏற்பாடு செய்யுங்க என உற்சாகத்தோடு எழுத்தாளர் சங்க தோழர்கள் தெரிவித்து விற்பனையை மூன்று நாள் நீடித்தனர். முன் அறிவிப்பு இல்லாம புஸ்தகத்த வச்சே இரண்டாயிரத்துக்கு பிள்ளைங்க புக் வாங்கியது ஆச்சரியமாக இருக்கு என ஆசிரியர் சங்க தோழர்கள் தெரிவித்தனர்.

“அடுத்து புத்தகக்காட்சி எப்போ’’ என்று எல்லோரும் கேட்டனர். “எங்க சங்க தோழர்கள் ரொம்ப உற்சாகமாக கலந்துகிட்டாங்க. புதிய தோழர்கள் நிறைய வந்தாங்க’’ எனவும் கூறினர். புத்தக விற்பனை பெரும் இயக்கமாக மாறியது.

சின்ன வயசு கொத்தனாரு, இந்திய தத்துவம் ஓர் அறிமுகம் வாங்குனாரு. ஆச்சரியமாப் போச்சு. பெறகு கேட்டா, அவரு பட்டதாரி என்றும், படிச்சிட்டு வேற வேல கெடைக் காம கொத்தனாரா ஆயிருக்காரு. படிக்கிற ஆர்வம் குறையல என செங்கோட்டை தோழர்கள் சொன்னார்கள்.

அடுத்த தடவை இன்னும் சிறப்பா எப்படி செய்யலாம் என ஆலோசனை நிறைய வந்து சேர்ந்துள்ளது.

“இவர்கள் சிந்திய ரத்தத்தை வாளியில் நிறைத்து வரிசையாக அடுக்கினால் அது பல மைல் தூரம் செல்லும்’’ என அடிமை தேசத்து காங்கோவை பற்றி துயரம் நிறைந்த வரலாற்றை மார்க் தனிமைப் புலம்பலில் பதிவு செய்திருப்பார். அந்த வரலாறு உயிர் பெற்று எங்கோ ஒரு கிராமத்தில் ஒருவரால் வாசிக்கப்படுகிற மெல்லிய ஒலி நம்மை வந்து சேர்கிறது. மீதமிருக்கும் புத்தகங்களும் நெளிந்து வளைந்து அலுப்பை உதறி எங்களையும் கொண்டு போங்க என சொல்கிறது.

புத்தகங்களின் குரலுக்கு செவி சாய்ப்போம், அது மிக முக்கியப் பணி என அதே புத்தகம் நம்மிடம் சொல்கிறது.

Pin It