dvk posterபெரியாரின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் வலுவாக ஒலிக்கத் துவங்கி இருக்கின்றன.

அப்படி கேட்பவர்கள் யாரும் பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகள் அல்ல என்பதையும், பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

ஆனால் வழக்கம் போல கி.வீரமணி அவர்களின் துதிபாடிகள் பெரியாரின் எழுத்துகளை மற்றவர்கள் வெளியிட்டால் அதைத் திரித்து விடுவார்கள் என்ற அதரப்பழசான பம்மாத்து கதையை சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஓர் எழுத்தாளர் மறைந்து 60 ஆண்டுகளில் காப்புரிமை தானாகவே பொதுவெளிக்கு வந்துவிடும். அப்படிப் பார்த்தால் இன்னும் ஏறக்குறைய 12 ஆண்டுகளில் பெரியாரின் எழுத்துகளும் பொதுவெளிக்கு வந்துவிடும்.

இப்போது பிரச்சனை அதுவல்ல. ஒரு படைப்பாளியின் உரிமை இறப்புக்குப் பின் அவரது உயிரியல் வாரிசுகளுக்குத் தானாக வந்துவிடுகிறது. ஆனால் பெரியாருக்கு நேரடியான உயிரியல் வாரிசுகள் இல்லாதபோது கி.வீரமணி அவர்கள் பெரியாரின் எழுத்துகளுக்கு எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?

நமக்குத் தெரியும் மு. வ., சு.ரா., கண்ணதாசன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது அவர்களது வாரிசுகள் அரசின் செயலுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

"எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அவரது குடும்பத்தினரின் அனுமதி பெறாமல் அறிவிப்பு வெளியிடுவது சட்டவிரோதமானது" என காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் தெரிவித்தார். கண்ணதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு அவரது மகன் காந்தி கண்ணதாசன் எதிர்ப்பு தெரிவித்தார். “பெயர் சேர்ப்பது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை எங்கள் குடும்பத்தினரைக் கலந்து ஆலோசிக்காமல், குறைந்தபட்சம் எங்களது குடும்பத்தினருக்குக் கூட தெரிவிக்காமல் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது” என்று கூறினார்.

கல்கி அவர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்க, அவர் மகன் ராஜேந்திரன் சம்மதிக்கவில்லை. அதே போல ராஜாஜி, உ.வே.சா., அகிலன், கவியோகி சுத்தானந்த பாரதியார் ஆகியோரது நூல்களை நாட்டுடைமையாக்க கடந்த காலத்தில் அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் நாட்டுடைமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.

மேற்குறிப்பிட்டவர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்போது எழுந்த எதிர்ப்பின் பின்னே அவர்களின் உயிரியல் வாரிசுகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களது தந்தையரின் எழுத்தை விற்று வாழும் நிலையில் இருந்தார்கள்.

ஆனால் வீரமணி யார்? பெரியாரின் நேரடி உயிரியல் வாரிசாய் இல்லாத ஒருவர், அவர் எப்படி ஒட்டுமொத்த உலகத்திற்கும் சொந்தமான பெரியாரின் எழுத்துகளை, சிந்தனைகளை சொந்தம் கொண்டாட முடியும்?

தமிழ்நாடு அரசு 1967 இல் இருந்து 2020 வரை நூற்றுக்கணக்கான நபர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியிருக்கின்றது. ஆனால் பெரியாரின் எழுத்துகளை மட்டும் இதுவரை நாட்டுடைமை ஆக்காமல் வீரமணி அவர்களின் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்து வருகின்றது.

பெரியார் தான் வாழ்நாள் எல்லாம் தான் கொண்ட கொள்கைக்காகவே வாழ்ந்தார். தனக்குப் பின் தன் சொத்துக்களை பராமரித்து சமூக சேவை செய்ய மணியம்மை அம்மையாரை நியமித்தார்.

இது சம்மந்தமாக பெரியாருடன் நெருக்கமாகப் பழகியவரும் அவருக்கு வழக்கறிஞராக இருந்தவருமான வழக்கறிஞர் துரைசாமி கூறுகையில் "கடந்த 1970ஆம் ஆண்டு முதல் பெரியாரின் மறைவு வரை அவரது வழக்கறிஞராகப் பணியாற்றினேன். பெரியாரின் சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். பெரியார் தனது சொத்துக்களை தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது எந்த நிறுவனத்துக்கோ வழங்குமாறு அவர் உயில் எழுதவில்லை. இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் தனது சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்காமல் போய்விட்டால், அவர்களுக்கு யாரும் வாரிசு இல்லையென்று சொன்னால், அந்தச் சொத்துக்கள் அனைத்தும் அரசுக்கு சேர்ந்து விடும் என்று சட்டம் மிகத் தெளிவாக சொல்கிறது. ஆகவே அந்தப் பிரிவை பயன்படுத்தி, பெரியாரின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

வழக்கறிஞர் துரைசாமி இப்படி குறிப்பிடுவதற்கான காரணம் பெரியார் தான் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தை சங்கங்களின் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்தார் என்பதும், அறக்கட்டளையாக அதைப் பதிவு செய்யவில்லை என்பதும்தான்.

பெரியார் தனது பெயரில் உள்ள சொத்துகளை பத்திரம் மூலம் அந்த அமைப்புக்கு மாற்றவில்லை. அவரது பெயரில் சென்னை பெரியார் திடல், ஈரோடு பெரியார் மன்றம், திருச்சி பெரியார் மாளிகை உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அவருக்கு சட்ட வாரிசுகள் இல்லாததால் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, அவை தமிழக அரசுக்குப் போய்ச் சேர வேண்டும்.

ஆனால் கி.வீரமணி பெரியாரின் எழுத்துக்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுதான் இந்த சொத்துக்கள் அனைத்தையும் அனுபவித்து வருகின்றார். அவரைப் பொறுத்தவரை பெரியாரின் எழுத்துக்களை சிந்தனைகளை நாட்டுடைமை ஆக்குவது என்பது பெரியாரின் பெயரில் தான் அனுபவித்து வரும் சொத்துக்களை அரசுடைமை ஆக்குவது போன்றது. அந்த பயம்தான் வீரமணியை பல ஆண்டுகளாக இதற்கு எதிராக செயல்பட வைக்கிறது.

ஏற்கெனவே பெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கி.வீரமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நமக்குத் தெரியும்.

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது. இதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

“அதில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக நான் இருந்து வருவதால் தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை. இவற்றை வெளியிட எங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது. இதனால் பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார் வீரமணி.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பெரியார் திராவிடர் கழகம் நூல்களை வெளியிடுவதற்கு முதலில் இடைக்காலத் தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்கக் கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அப்போதைய பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, வீரமணி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, “கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார். முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடையிலான மிகச் சிக்கலான காலக்கட்டத்தில் அவர் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டார். சமூக நீதிக்காக பலம் மிகுந்த காங்கிரசுக்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்குப் பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளைத் தெரிந்து கொள்வது நல்லது. எனவே, பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு இடையே அவரது கொள்கைகளை முடக்கி, அடைத்து விடக்கூடாது. அவரது கருத்துக்கள் அனைவருக்கும் சொந்தமானவை." எனக் கூறி இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி சந்துரு அவர்கள் உத்திரவிட்டார்.

ஆனாலும் திருந்தாத வீரமணி அந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்தார்.

பெரியாரின் சிந்தனைகளை வெளியிட முற்படும் யாருக்கும் பெரியார் திடலுக்குள் அனுமதி இல்லை என்ற எழுதப்படாத விதி இன்றும் நடைமுறையில் உள்ளது.

பெரியாரியரில் வீரமணி அவர்களின் தனிப்பட்ட திறன் பற்றி இதுவரை யாருமே கேள்வி எழுப்பியதில்லை. ஆனால் தன்னைத் தவிர பெரியாரின் எழுத்துக்களை யாருமே பதிப்பித்து விடக்கூடாது என தனது அதிகார பணபலத்தை பயன்படுத்தி தடுக்கும் அவரின் தீய நோக்கத்தைத்தான் அனைவரும் கேள்வி எழுப்புகின்றார்கள்.

உண்மையில் வீரமணி அவர்களுக்கு பெரியாரைப் பரப்ப வேண்டும் என்பதை விட பெரியாரின் சொத்துக்களை தனது வாரிசுகளுக்கு கைமாற்றிவிட வேண்டும் என்பதும் அதற்கு ஒத்திசைவாக ஒரு ஜால்ரா கூட்டத்தை கட்டியமைத்துக் கொள்ள வேண்டும் என்பதும்தான் முதன்மையான சிந்தனையாக உள்ளது.

இன்று பார்ப்பன பாசிசம் இந்தியா முழுவதையும் ஆட்கொண்டு அழிக்கத் துடிக்கின்றது. அதை எதிர்த்து சமர் புரிவதற்கான மிக வலுவான கருத்தியல் ஆயுதமாக பெரியார் உள்ளார்.

ஆனால் வீரமணி அந்த ஆயுதத்தை மறைத்து வைத்துக் கொண்டு பாசிச எதிர்ப்பு நாடகம் நடத்திக் கொண்டு உள்ளார். திமுக, அதிமுக என இரண்டு கார்ப்ரேட் கட்சிகளையும் திராவிடக் கட்சிகள் என பொய் பரப்புரையை செய்துகொண்டு பெரியாரின் சொத்துக்களை தான் அனுபவிப்பதற்கும் தனக்குப் பின்னால் தன் குடும்பம் அனுபவிப்பதற்கும் பிரச்சினை வராது போல பார்த்துக் கொள்கின்றார்.

அதற்கு தகுந்தார்போல அல்லக்கைகளை விட்டு தன்னைத் தவிர பெரியாரின் எழுத்துகளை யாருமே நேர்மையாக வெளியிட முடியாது என்ற பத்து பைசாவுக்குத் தேறாத பொய்யை திரும்பத் திரும்ப பரப்பிக்கொண்டு இருக்கின்றார்.

இன்று நியூ செஞ்சூரி புத்தக நிலையம், பாரதி புத்தக நிலையம் போன்றவை தோழர். பசு.கவுதமன் அவர்கள் தொகுத்த பெரியாரின் எழுத்துக்களை வெளியிட்டு இருக்கின்றன. ஆனால் வீரமணி துதிபாடிகள் அதில் என்ன மோசடி நடந்திருக்கின்றது, என்ன திரிபு வேலைகள் நடந்திருக்கின்றது என்பதை இதுவரை சொல்லவில்லை.

நண்டு சிண்டுகள் எல்லாம் தொலைக்கட்சி ஆரம்பித்து தமது கொள்கைகளைப் பரப்பும்போது ஆயிரக்கணக்கான கோடி சொத்து மதிப்பு கொண்ட திராவிடர் கழகத்தால் ஏன் ஒரு தொலைக்காட்சி தொடங்கி பெரியாரின் கொள்கைகளை பரப்ப முடியவில்லை என்ற கேள்வி சாதாரண அனைத்து பெரியாரின் தொண்டனுக்கும் உள்ளது.

தனக்குப் பிறகு இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டுமென்ற பார்வை பெரியாருக்கு இருந்ததா? என பிபிசின் கேள்விக்கு விடையளித்த வீரமணி,

“உங்களுக்குப் பிறகு என்ன என்று பெரியாரிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. எனக்குப் பிறகு என்ன இருக்கிறது? நான் எழுதிய புத்தகங்கள் இருக்கின்றன. எல்லாக் கொள்கையும் அதிலேயே இருக்கின்றன. கொள்கையைச் செயல்படுத்துபவர்கள் தானாக வருவார்கள். நான் முழு மன நிறைவோடு இருக்கிறேன். எந்தக் குறையும் இல்லை” என்று பெரியார் சொன்னதாகச் சொன்னார்.

ஆனால் பெரியார் இறந்து 48 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவரின் முழுமையான எழுத்துக்கள் வெளிவரவில்லை. இதற்கு யார் காரணம்?

ஒரே காரணம் பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் கி.வீரமணி மட்டுமே.

பெரியாரின் சிந்தனைகள் இன்றைக்கு உலகம் முழுவதும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. மானுடத்தின் சமத்துவத்தைப் பேசிய மகத்தான மனிதனின் சிந்தனைகளை முடக்கி வைத்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் கும்பலிடம் இருந்து அதை மீட்க வேண்டியது மானுட சமத்துவத்தை விரும்பும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

பி.ஆர். அம்பேத்கரின் நூல்களை அரசின் தன்னாட்சி நிறுவனமான அம்பேத்கர் பவுண்டேஷன் வெளியிடுகிறது. அதே போல பெரியாரின் அனைத்து எழுத்துகளையும் குறைந்த விலையில் வெளியிடுவதோடு, ஆங்கிலத்திலும் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

- செ.கார்கி

Pin It