சாமியாடிகள் குறித்தும் இரத்தப் பலி குறித்தும் ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள் பல்வேறு செய்திகளை 'பண்பாட்டு அசைவுகள்' நூலில் எழுதியிருக்கிறார்.

  1. தாழ்த்தப்பட்ட சாதியரான சக்கிலியர் போன்ற சாதியாரில் மட்டுமே பன்றியைப் பலி கொடுப்பர்.
  2. பெரும்பாலும் சிறுதெய்வக் கோயில்களில் பூசாரிகள் சாமியாடிகளாக இருப்பதில்லை.

tho paramasivan book panpaattu asaivukalமுதலாவதாகச் சொல்லப்பட்டதற்கு மாறாக, நான் சிறுவயதில் தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரின் ஒரு கோயிலில் பன்றி பலி கொடுத்ததை நேரில் பார்த்திருக்கிறேன்.

இதேபோல இரண்டாவதாக சொல்லப்பட்டுள்ள மேற்கோளைப் பார்க்கும்போது ஒன்று தெரிகிறது, கோயிலில் பூசை செய்யும் பூசாரிகள் குறித்தும் சாமியாடிகள் குறித்தும் அவ்வறிஞர் எழுதியுள்ளார். இந்தப் பூசாரிகள் கோயிலில் பூசை செய்பவர்கள். அக் கோயிலுக்கு உரிமையானவர்கள் அல்லது பணியாளர்கள். ஆனால் இதற்கு மாறுபட்ட வகையில் சாமி அழைக்கும் பூசாரிகள் என்று சிலர் தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியில் உள்ளனர்.

தொ.ப அவர்களின் முதன்மையான ஆய்வுக்களம் நெல்லை மாவட்டம். ஆனால் இங்குக் கூறப்படுபவை அம்மாவட்டத்திற்கு அப்பால் உள்ள ஒரு பகுதியின் செய்திகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

”பொதுவாக இவ்வகையான ஆட்டம் தவிர வெவ்வேறு வகையான ஆடல்களும் சில இடங்களில் நடைபெறும். இவற்றுள் வட்டார வேறுபாடும் உண்டு”. என்று மேற்கண்ட ஆய்வறிஞர் சொல்லும் புள்ளியிலிருந்து இந்த வேறுபட்ட புதிய செய்திகளைப் பதிவு செய்தால் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களுக்கு மிகுதியும் பயன்படுமே என்ற நோக்கத்திற்காக மட்டுமே நேரில் கண்ட அனுபவங்களிலிருந்து இப்பதிவை எழுத வேண்டி இருக்கிறது.

சாமியழைக்கும் பூசாரிகள்:

தஞ்சை மாவட்டத்தின் மேலக் கடைசி எல்லையான, செங்கிப்பட்டி அருகிலுள்ள பகுதிகளில் சாமி அழைப்புக்கென்று பூசாரிகளை அழைத்து வருவார்கள். கோயிலுக்குள் பூசை செய்பவர்கள் மட்டும் பூசாரி என்று அழைக்கப்படுவதில்லை. கோயிலுக்குள் பூசை செய்யாத சிலரும் பூசாரிகள் என்று அழைக்கப்படுவதுண்டு. இப் பூசாரிகள் உடுக்கடித்து சாமி பார்ப்பவர்கள்; வீட்டில் தாங்கள் வழிபடும் சிறுதெய்வங்களை வணங்கி வருபவர்கள். பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்.

மனையேறிப்பட்டி பூசாரி ராசாப்பட்டி பூசாரி தேனேரிப்பட்டி பூசாரி என்று பெயர் பெற்ற பலர் இப்போதும் கூட இருக்கிறார்கள்.

இவர்கள் ஏதேனும் ஒரு சிறுதெய்வத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருப்பார்கள். அவை பெரும்பாலும் சப்பாணி கருப்பு, சங்கிலி கருப்பு, பெரிய கருப்பு, எல்லைக்கருப்பு, அய்யனாரு, முனி, மாரியம்மன், இப்படிதான் இருக்கும்.

கூலி வேலைக்குப் போகும் இவர்கள் வெள்ளி செவ்வாய்களில் துண்ணூறு போடுதல் (திருநீறு போடுதல்), முத்து போட்டு குறி சொல்லுதல், பேய் விரட்டுதல், தட்சணை வைப்பவர்களின் குலதெய்வத்துடன் பேசி குறை நிறைகளைக் கூறி சாமி பார்ப்பது, கோயில்களில் சாமி அழைப்பது போன்றவற்றைச் செய்வார்கள். ஆனால் இவர்களாக யாரையும் வற்புறுத்தி சாமி பார்க்க மாட்டார்கள். இவர்களைத் தேடிச் செல்ல வேண்டும். இல்லையென்றால் நிறைய வீடுகள் ஒன்றுசேர்ந்து ஊருக்கு வரும்படி சொல்லி அனுப்ப வேண்டும்.

வெற்றுடம்போடுதான் சாமி பார்ப்பது சாமி அழைப்பது எல்லாம். இவர்கள் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பார்கள். சிலர் பலவண்ண மணிகள் கோத்த மாலை ஒன்றோ இரண்டோ போட்டிருப்பார்கள். நெற்றியில் திருநீறு,சந்தனம், குங்குமம் வைத்திருப்பார்கள். அல்லது பெரும்பாலும் மஞ்சள் வேட்டி, வெள்ளை வேட்டி (பச்சை வேட்டி அல்லது கருப்பு வேட்டியும் கூட) கட்டியிருப்பார்கள். வயதான பலரும் இடுப்பில் பச்சை பெல்ட் அணிந்திருப்பார்கள். இடுப்பில் துண்டு ஒன்று இறுக்கி கட்டப்பட்டிருக்கும். சிலர் கன்னத்தில் நெற்றியில் உடம்பில் சந்தனம் பூசியிருப்பார்கள். (இதெல்லாம் அந்த நேரங்களில் மட்டும்தான்.)

அவர்களிடம் கடினமான துணியில் தைக்கப்பட்ட உடுக்கை வைப்பதற்கான ஒரு பெரிய பையும் சோழிகளை வைப்பதற்கான ஒரு சிறிய சுருக்குப் பையும் இருக்கும். சிலர் துணிப்பை தைத்து அதில் திருநீறு வைத்திருப்பார்கள்.

இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும் உடுக்கு இரு புறங்களிலும் அகன்று நடுவில் குறுகலாக காணப்படும் இசைக்கருவி இது. மாட்டுத்தோல் அல்லது உடும்புத்தோலால் இறுக்கப்பட்டு அதில் வண்ணவண்ணத் துணிகள் கட்டப்பட்டிருக்கும். குறுகலான பகுதியிலிருந்து நீண்ட கயிற்றில் குஞ்சம் ஒன்றும் தொங்கும். பழங்காலத்தில் உடுக்குக்கு துடி என்பது பெயர். துடி இடை என்றுகூட உவமைகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன

. உடும்பைத் தோலுரித்த பிறகு அந்தத் தோலைக் காயவைத்து . கொட்டாங்குச்சியில் அதை இழுத்துக் கட்டி உடுக்கு செய்து அதைத் தட்டினால் அது அதிரும். இப்படி உடும்புத்தோலால் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் செய்து தருகிற வழக்கம் இருந்தது.

மந்தை வைத்தல்

உடுக்கடிக்கும் போது நீண்ட கயிற்றை குறுகிய பகுதியில் சுற்றிக்கொண்டு இடது கையால் பிடித்துக்கொண்டு சம்மணம் போட்டு உட்கார்ந்த நிலையில் சில நேரங்களில் முழங்கால் போட்டுக்கொண்டு வலது கை விரல்களால் தட்டி அதிரச்செய்வார்கள். தட்டுகிற பக்கத்தின் இன்னொரு பக்கம் கன்னத்தை ஒட்டி காதுக்கு அருகில் வைத்தவாறு கண்களை மூடியவாறே பாடிக் கொண்டு அடிப்பார்கள். உடல் குலுங்கும்.

சாமி பார்க்கும்போது விறுவிறுப்பாக அடித்துக் கொண்டே வந்து சட்டென்று நிறுத்தி உடுக்கை காதுக்கருகில் வைத்து யாரோ சொல்வதைக் கேட்பது போல் ம் சொல்லு ம் ம் என்று தானாகவே பேசிக் கொள்வார்கள். தொடர்ந்து குறி சொல்வார்கள், இதற்கு சாமி பார்த்தல் அல்லது மந்தை வைத்தல் என்று பெயர்.

வெள்ளி செவ்வாய் கிழமைகளில் பொழுது சாய இவர்களை நாடிச் செல்பவர்களுக்குத் திருநீறு கொடுப்பார்கள். தங்கள் குழந்தைகளுக்கு இதை வாங்கி வந்து பூசிவிட்டால் பயந்த கோளாறுகள் சரியாகி விடும் என்ற நம்பிக்கை கிராமப்புற மக்களிடம் உள்ளது.

வயதானவர்களைக் கேட்டால் துண்ணூறு போடுபவர் காய் போட்டு குறி சொல்பவர் முள்ளடி எண்ணெய் மந்திரித்துத் தருபவர் விசக்கடிக்கு மந்திரிப்பவர் என்று ஊருக்கு நாலு பேரைச் சொல்வார்கள்.. இப்போது இது மாதிரி மனிதர்களைப் பார்ப்பது அரிது

கருப்பு அல்லது சிவப்பு கயிறுகளை வாங்கிச் சென்று வெற்றிலை பாக்கு சூடம் சாம்பிராணியோடு பத்துரூபாய் வைத்தால் வாயில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு கயிற்றில் முடிச்சுகள் போட்டு சூடம் ஏற்றி திருநீற்றில் முடிந்த கயிற்றைப் புரட்டி ஒரு காகிதத்தில் வைத்து அழகுற மடித்துக் கொடுப்பார்கள். இதற்கு முடிகயிறு போடுதல் என்று பெயர்.

சாமியழைப்பு:

சாமி அழைக்கவென்று உடுக்கடிக்க பூசாரியை (சாமிபார்ப்பதில் பெயரெடுத்தவரை) அழைத்து வருவார்கள் கோயில்களில். அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் வரிசையாக நிற்பார்கள். பூசாரிகள் உடுக்கடித்து சாமியை அழைப்பார்கள். சாமி வரும்வரை அவர்கள் உடுக்கை அடித்துக்கொண்டு பாடுவார்கள். அந்தப் பாடல்களில் சாமியைக் கொஞ்சுவார்கள் கெஞ்சுவார்கள் திட்டுவார்கள். மனமிரங்கியோ ரோசப்பட்டோ சாமி வந்து விடவேண்டும் என்பது அவர்கள் குறி.

பூதலூர் தாலுகா இராயமுண்டான்பட்டிக்கருகில் உள்ள நவலூரின் தென்மேற்குத் திசையில் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் இருக்கும் வீரமலை அய்யா கோயில் சாமியழைப்பை சிறுவயதில் நான் நேரில் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன்.. யாராவது அந்த இடத்திற்கு சென்று அந்தக் கோயிலைத் தேடிப் பார்க்க முனைந்தால் எந்தத் தடயமும் காண முடியாது. ஒரு ஒற்றைப்பனை மரம் இருக்கும் அருகில் சில குட்டிப் பனைகள். அருகில் ஒரு உசிலமரம் இருக்கும். அதை ஒட்டிய திடல்தான் நான் சொன்ன கோயில். மாடுகள் இடறி செங்கல்கள் கிடக்கும். அந்த செங்கல்கள்தான் சாமி.

ஆடி பதினெட்டுக்கோ ஆடி இருபத்தெட்டுக்கோ பூசை போட ஒன்று சேர்ந்து போவார்கள். கோனார் இனத்தாரின் குலதெய்வக்கோயில் அது. அவர்கள் சேர்ந்து போடும் பூசைதான். ஆனால் எல்லா இனத்தவர்களும் அங்கே இருப்பார்கள். வெயில் தாழ, கோனார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டுக்கொருவர் நிற்பார்கள். சாமி அழைக்க வந்த பூசாரிகள் (மூன்று நான்கு பேர்) வருந்தி அழைக்கத் தொடங்குவார்கள்

பூசாரிகளின் உடலில் வேர்வை ஊற்றும்.. அவர்களின் குரல் ஆளாளுக்கு வேறுபட்டு கணீர் கணீர் என்று உடுக்கையோடு இழைந்து கொண்டிருக்கும். முக அசைவுகளுடன் அவர்களின் நெற்றியில் புடைத்து எழுந்துகொண்டிருக்கும் நரம்புகள் தெறித்துவிடுவதைப் போல் துடிப்பதைப் பார்க்கையில் பாவமாய் இருக்கும். அடித்துக் களைத்துப்போய் நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு மறுபடி தொண்டையைச் செருமிக் கொண்டு உடுக்கையைக் கையில் எடுத்து விடுவார்கள்.

வருந்தி வருந்தி சாமி அழைக்க யாருக்கெல்லாம் மருள் வருகிறதோ அவர்களுக்குத்தான் பூ மாலை போட்டு சலங்கைகள் கட்டுவார்கள். வருகிற சாமியிடம் யாருப்பா வந்து இறங்கியிருக்குறது என்று பூசாரி கேட்கும்போது சாமியாடுபவர் சொல்வார் நான் பொன்னரு நான் சங்கரு நான் மகாமுனி என்று. ஆடிக்கொண்டிருக்கும் பெண்கள் சொல்வார்கள் நான் அருக்காணி நான் பெரியகாண்டியம்மன் என்று. அருவா, வாள் போன்ற ஆயுதங்கள் அவர்கள் கையில் கொடுக்கப்படும். மகாமுனிக்கு பாதரச்சை என்னும் ஆணி செருப்பு வைப்பார்கள். மாலை போட்டு இடுப்புகளில் கைகளில் சலங்கைகள் கட்டப்படும் உடம்புகளில் சந்தனம் பூசுவார்கள். அந்த இடமெங்கும் சாமிகள் ஆடும் ஓடும் சிரிக்கும் உடல் முறுக்கும். ஓன் குஞ்சுகளுக்கு நீ இருக்குற பதுவு தெரியல அய்யா. நீதான் காட்டணும் என்று சாமி அழைக்கும் பூசாரி கேட்க, அவர்களே தாங்கள் இருக்கும் இடத்தில் சென்று உட்காருவார்கள். அந்த இடத்தில் அங்கு கிடக்கும் செங்கல்லை எடுத்து வைத்து தண்ணீர் ஊற்றி கழுவி பொட்டு வைத்து மாலை போடுவார்கள்.

பட்ட சாராயம் கிடைக்காவிட்டால் பிராந்தி வைக்கப்பட்டிருக்கும். பால் பொங்கல் வைத்து பழவகைகள் வைத்து இலை போட்டு சாம்பிராணி போடுவார்கள். ஆடு வெட்டுவார்கள்.

பன்றிக்கறி:

ஒரு ஓரத்தில் மகாமுனிக்கா கருப்புக்கா என்று தெரியவில்லை கட்டக்காலு வெட்டுவார்கள். பேச்சு வழக்கில் பன்றியைக் கட்டக்காலு ஊர்சுத்தி என்றுதான் சொல்வார்கள். வீரப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்ணன்மார் சாமி கோயில்களில் முக்கியமாக வெட்டப்படுவதும் பன்றிதான். மதுக்கூருக்கு அருகில் இருக்கும் புலவஞ்சி கிராமத்தில் கூட கோயில் ஒன்றில் பன்றி பலியிடுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் தாழ்த்தப்பட்டோர் அல்லாதாரின் கோயில்தான்.

கோவில்களில் ஆடு கோழி வெட்டுவதைப் போல் பன்றி பலி கொடுப்பதும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்து காலப்போக்கில் பன்றி வெட்டுவது நின்று போயிருக்கலாம் என்பது என் கருத்து. சிறுதெய்வக் கோயிலுக்கு குடமுழுக்கே நடக்க தொடங்கியிருக்கும்போது இது நடந்திருக்கலாம்தானே?

.பன்றிக்கறி தனி சமையல். அதைப் பக்குவமாக சமைக்கத் தெரிந்தவர் தனியாக சமைக்கத் தொடங்குவார். அதற்கென்று ஒரு கும்பல் காத்திருக்கும்.

உப்புநீர்:

ஆடு உரித்து அதை உப்புநீராகப் போடுவார்கள். தண்ணீர் மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள் தூள் பட்டக்கிராம்பு மசாலா போட்டு கொதிக்க வைத்தால் உப்புநீர். வீட்டில் வைக்கிற கறிக்குழம்பு மாதிரி அல்லாமல் இது ரசம் போல. இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில் பூசைகளில் உப்புநீர்தான்.

சாப்பாட்டுக்கு விடிந்துவிடும். காலையில் சூடம் காட்டி பூஜை போட்டுவிட்டு பொட்டலாக இருக்கும் இடத்தில் வரிசையாக ஊரே உட்காரும். குட்டி இலை கொடுக்கப்படும். உப்பு போட்டு பொங்கிய பொங்கல் உருண்டையாக வைத்துக் கொண்டு போவார்கள் இல்லாவிட்டால் சுட சுட பொங்கலை தள்ளிவிட்டுச் செல்வார்கள். சொம்பில் உப்புநீரை மொண்டு மொண்டு ஒருவர் ஊற்றிக் கொண்டு போவார். யாராவது ஒருத்தர் ரெண்டு ரெண்டு கறித்துண்டை இலைகளில் வைத்துக் கொண்டு போவார். பொங்கலுக்கு இழுத்துக் கொண்டிருக்கும் உப்புநீர், தீரத் தீர கொண்டுவந்து ஊற்றுவார்கள். குட்டி இலையில் ஓடிக் கொண்டிருக்கும் அதைக் குழப்பி உள்ளே தள்ளுவதில் அப்படி ஒரு சுவை.

- பொ.முத்துவேல்

Pin It