1980-81ஆம் காலகட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் – பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத் தொடங்கிய போராட்டம் மிகப்பெரும் கிளர்ச்சியாக மாறியது. போராட்டம் சில மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது. அப்பல்கலைக்கழகத்தை அரசுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. ஆசிரியர்களும் - பணியாளர்களும் மறியல் செய்தும், 144 தடை உத்தரவை மீறியும் சிறைக்குச் சென்றார்கள். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாகக் கிளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட ஆசிரியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் நிர்வாகம் இறங்கியது. அந்தப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த பேராசிரியர் டாக்டர் இராம.சுந்தரம், அந்தக் காரணத்திற்காக, தம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

rama sundaramஅறிவியல் தமிழுக்கு மடைமாற்றம்

அதன்பிறகு என்ன நடந்தது என்பதை ‘புதிய புத்தகம் பேசுது’ திங்கள் இதழின் நேர்காணலில் அவரே கூறுவது “நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்தவுடன், சங்க இலக்கிய பொருளடைவு ஒன்றைக் கொண்டுவர நினைத்தேன். அத்திட்டத்தை ஏற்றுக் கொண்ட வ.அய்.சுப்பிரமணியம் சங்க இலக்கியக் களஞ்சியம் செய்யலாம். நான் திருவனந்தபுரத்திற்கு உன்னைக் கூட்டிப் போகிறேன்” என்றார். இது நடந்த பிறகு தான் அவர் துணைவேந்தராகப் பதவியேற்றார். என்னை வரச்சொல்லிக் கடிதம் அனுப்பினார். நான் சென்று சங்க இலக்கியக் களஞ்சியம் பற்றி அவரிடம் வினவினேன்.

அதற்கு அவர் “நான் இங்கு மூன்று ஆண்டுகள் இருப்பேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் சென்றுவிடுவேன். நீ அங்கு வந்து சங்க இலக்கியக் களஞ்சியத்தைத் தொடங்கலாம். இங்கு முக்கியமான வேறு பொறுப்பை உன்னிடம் தரப் போகிறேன். தமிழக முதல்வர் என்னிடம் இதை ஒப்படைத்திருக்கிறார். ம.பொ.சியிடம் நான் கூறிவிட்டேன் அதை நீ தான் செய்தாக வேண்டும். ஏன் இதை உன்னிடம் கொடுக்கிறேன் என்றால் நீ அனைவரிடமும் நன்றாகப் பழகுவாய். உனது பலம் என்ன? என்பது எனக்குத் தெரியும். நீ அதைச் செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டு, நீ பொறியியல், மருத்துவம் முதலானவற்றைப் படிக்க வேண்டும் என்று நினைக்காதே. உனது வேலை நீ அடுத்தவரிடம் வேலை வாங்குவதுதான். அந்த வேலையைச் செய்யக் கூடியவர் யார்? யார்? என்று தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பாடத்திட்டம் என்ன? என்பதைப் பார்க்க வேண்டும்.

அதே போன்று தஞ்சாவூரில் மருத்துவக்கல்லூரி இருக்கின்றது. உனக்குத் தெரிந்த மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்களைச் சென்று பார்! திருச்சியில் பொறியியல் கல்லூரி ஒன்று உண்டு. அங்கு உள்ளவர்களிடம் பேசிவிட்டு வா” என்றார்.

இக்காலகட்டத்தில் தான் தமிழ் மாணவர்கள், அறிவியலைக் குறிப்பாகப் பொறியியல், தொழில் நுட்பவியல், மருத்துவவியல் பாடங்களைத் தமிழ்வழி கற்றுப் புதிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்றும் தமிழ் மக்கள் அறிவியல் வளர்ச்சிப் போக்குகளைத் தமிழ்மொழி மூலம் அறிந்து அறிவியல் விழிப்புணர்வு பெற்று அவரவர் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆகிய இரு குறிக்கோளையும் செயல்படுத்த, திட்டம் - தமிழ் வளர்ச்சி இயக்ககம் ஒன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டு, அதன் இயக்குனராக இராம சுந்தரம் அவர்கள் 5.11.1981இல் நியமிக்கப்பட்டார். இப்பின்னணியில் தான் ஒரு மொழியியலாளர் அறிவியல் தமிழை வளர்த்தெடுக்க இல்லை வார்த்தெடுக்க தன்னை மடை மாற்றம் செய்து கொண்டார். அல்லது தமிழ் இவரை அறிவியல் தமிழ் தாத்தா என போற்றும்படித் தடுத்தாட்கொண்டது என்றும் சொல்லலாம்.

அறிவுசார் துறையை வளர்த்தெடுத்தவர்

இதன்பின் அறிவியலைத் தமிழில் சொல்லுவது, அறிவியல் துறையில் தமிழை வளர்ப்பது என இரு குறிக்கோளுடன் ஓர் அறிவுசார் துறையாக, அத்துறையை வளர்த்தெடுத்தார்.

மருத்துவவியல், பொறியியல், தொழில் நுட்பவியல் வளர்ச்சி ஒரு நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் பெருந்துணை புரிகிறது. இத்துறைகளின் வளர்ச்சியை தமிழ்மொழி வாயிலாகப் புரிந்து செயல்படுவதே எதிர்பார்த்த பலனைத் தரும். இதனைக் கருத்திற்கொண்டு பொறியியல், மருத்துவவியல் மாணவர்கட்குப் பயன்படும் விதத்தில் பாடநூல்களைத் தமிழில் உருவாக்குதலை முதன்மைப் பணியாகத் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மேற்கொண்டது. இதன் பயனாக 13 பொறியியல் நூல்களும் 14 மருத்துவ நூல்களும் உருவாக டாக்டர் இராம சுந்தரம் துணை புரிந்தார். இது 166 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கத் தமிழரான டாக்டர் கிறீனுக்குப் பிறகு நிகழ்ந்த அற்புதச் செயலாகும்.

மேலும், தொழில்நுட்ப நூலாக்கத்துடன் கலைச் சொல் தொகுப்பும் துணைப்பணியாக இவர் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வெளியாகியுள்ள பொறியியல் மருத்துவவியல் நூல்களிலுள்ள கலைச்சொல் பட்டியல்களிலிருந்து, கலைச்சொல் தொகுக்கும் பணி 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்டது.

கலைச்சொல் உருவாக்கம் – கட்டுரைகள்

புதிய முயற்சிகள்

முதுநிலை ஆய்வாளர்களான இராதா செல்லப்பன் பொறியியல் கலைச் சொற்களையும், நே.ஜோசப் அவர்கள் மருத்துவக் கலைச் சொற்களையும், டாக்டர் இராம சுந்தரம் மேற்பார்வையில் தொகுத்தளித்தனர். இவற்றில் 140 மூலங்கள் பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்பட்ட மூலங்கள் கலைச்சொல் பட்டியலில் எண்ணிட்டுக் காட்டப்பட்டன. பொதுவியல், எந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைச் சொற்கள் 13,000 தொகுக்கப்பட்டன. மருத்துவச் சொற்கள் 12,000 தொகுக்கப்பட்டன. இக்காலகட்டத்திலேயே டாக்டர் இராம சுந்தரத்தின் கலைச் சொல்லாக்கம் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன.

1983           -                  தமிழில் கலைச்சொல்லாக்க முயற்சிகள் (தமிழ்க்கலை), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்            

1984           -                  தமிழ் வளர்ச்சி கலைச்சொல்லாக்கப்பணிகள் (தமிழ்க்கலை), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்            

1986           -                  அறிவியல் கலைச்சொல்லாக்கம் ஒரு கண்ணோட்டம் (களஞ்சியம்), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை               

1988           -                  கலைச்சொற்களைத் தரப்படுத்துதல் (களஞ்சியம்), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை  

1993           -                  தமிழ்க் கலைச் சொல்லாக்கம் தொடர்பால் – மொழி நவீனத்துவம், பதி:நுஃமான், கொழும்பு, இலங்கை.     

                    -                  கலைச்சொல்லாக்கத்தில் சமுதாய உணர்வு, அறிவியல் கல்வி கலைச் சொல்லாக்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 

                    -                  தமிழில் மருத்துவக் கலைச்சொற்களைத் தரப்படுத்துதல், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்            

                    -                  எழுத்துப் பெயர்ப்புச் சீர்மை (ஆசிரியர் பேரவை), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்            

1995           -                  தமிழில் கலைச்சொல்வளம் (தாமரை), எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டு மலர், சென்னை.        

2000           -                  அறிவியல் கலைச்சொற்கள் தமிழ்வளர்ச்சி, தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டம், விருதுநகர்          

2002           -                  உள்ள உவப்பே பிரதானம் கலைச்சொல்லாக்கம் குறித்த ஒரு கருத்தாடல், தமிழர் கண்ணோட்டம், தஞ்சாவூர்               

2003           -                  கலைச்சொற்கள், பன்னாட்டு நோக்கில் தரப்படுத்தம், இணையாசிரியர் செ.வை.சண்முகம், இராதா செல்லப்பன், நிலைக்கதிர், கோவை.

மேலும் ‘தமிழில் கலைச்சொற்கள்' என்ற மிகச் சிறந்த முனைவர் பட்ட ஆய்வும் இவரது நெறிகாட்டுதலின்படி பாவேந்தன் (2001) என்ற மாணவரால் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் இயக்குனர் பதவியிலிருந்து அறிவியல் தமிழ் துறைக்குத் தலைவரான பிறகு பொறியியல், மருத்துவப் பாடநூல்களைத் தயாரித்ததோடு 1,50,000 கலைச்சொற்களைத் திரட்டித் தொகுத்து வகைப்படுத்தித் தக்க அறிஞர்களைக் கொண்டு தரப்படுத்தி 80,000 சொற்களை 6 தொகுதிகளாகப் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்டார்.

கலைச்சொற்களைத் திரட்டும் காலகட்டத்தில் தன்னுடைய ஆய்வுகளின் முடிவுகளை தமிழ்மொழி வளர்ச்சியை மையமாகக் கொண்டு அதிலும் குறிப்பாக உயர்கல்வியில் தமிழைப் பாடமொழியாகப் பயன்படுத்தும்போது எதிர் கொள்ளும் சிக்கல்களையும் சிந்தித்து அதற்கான தீர்வையும் இதற்கான காரணத்தைக் கூறும்போது பல இதழ்களில் வெளிக் கொணர்ந்தார்.

‘பொருள் புதிது வளம் புதிது' எனும் நூலின் முன்னுரையில் “இந்நூல் சொல்புதிது சுவை புதிது என்ற நூலை அடுத்து வருகிறது. இரண்டுக்குமிடையே 21 ஆண்டுகள் இக்காலகட்டத்தில் நான் கவனம் செலுத்திய துறைகளில் ஒன்று அறிவியல் தமிழ்த்துறை அதிலும் குறிப்பாகக் கலைச்சொல்லியல் பற்றியது” என்று ஆர்.எம்.எஸ் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கதாகும்.

தொடக்கக் கால சொல்லாக்க செயல்பாடுகளை ஆராய்தல்

கலைச் சொல்லாக்க முயற்சிகளைப் பற்றிக் கூறும்போது “கலைச் சொற்களை உருவாக்கும் போக்கு 160 ஆண்டுகளுக்கு முன் மேலைநாட்டுக் கல்வியைத் தமிழர்களுக்குக் கற்றுத் தரவேண்டும் என்பதைப் பெரு நோக்காகக் கொண்டு கலைச் சொற்கள் படைக்கப்பட்டன. அறிவியல் பரப்பில் பரப்புதல் முதல்நிலையிலும், மொழி உணர்வு இரண்டாம் நிலையிலும் இருந்தன. எனவே, அறிவுப் பரப்புதலில் ஈடுபட்டோரின் மொழிப் பயன்பாட்டுக்கேற்ப ஆங்கிலமும், சமஸ்கிருதமும் கூடுதலாகப் பயன்பட்டன.

1932இல் வெளிவந்த அரசு கலைச் சொல் பட்டியலுக்கு எதிராக சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் மேற்கொண்ட முயற்சி மொழி உணர்விற்கு முதன்மை தருவதாயிற்று. 1946இல் அமைக்கப்பட்ட சாஸ்திரியார் குழுவுக்கு எதிரான கண்டனமும் இதன் அடிப்படையில் எழுந்ததேயாகும். இந்த காலகட்டத்தில் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் தலை எடுக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆங்கிலம், பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குவதில் ஏற்கனவே உள்ள சமஸ்கிருதச் சொல்லுக்கிணையான தமிழ்ச் சொல்லே எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழில் அறிவு பரப்பும் பணி தொடங்கியது எனலாம்.

1960ஆம் ஆண்டிற்குப் பின் பல அறிவியல் துறைகளின் வளர்ச்சி பொறியியல், தொழில்நுட்பவியல் முன்னேற்றம் உலகத் தொடர்பு முதலியவை கருத்திற் கொள்ளப்பட்டு அதற்கேற்ப கலைச் சொல்லாக்கம் ஆங்கிலம், சமஸ்கிருதம் நீக்கப்படுதல் மேற்கொள்ளப்பட்டது. இங்குக் கருத்துத் தெளிவுதான் முதன்மை பெறுகிறது. இயன்றளவு தமிழ் மொழி வழக்கு பேணப்படுகிறது. காலப்போக்கில் ஆங்கிலத்தின் தாக்கம் குறையக்கூடும் என்று இவ்வாய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

கலைச்சொல்லாக்க கோட்பாடு உருவாக்கம்

இதற்கடுத்தபடியாக கலைச்சொல்லாக்கக் கோட்பாடுகளைப் பற்றிக் கூறும்போது “தமிழ் மக்களோடு தொடர்புடைய வாழ்வியல், அறிவியல் தொழில் நுட்பவியல் துறைகளில் தேவையான கலைச்சொல் உருவாக்கம் 1500, 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துள்ளது. அப்பொழுது தாமே சொற்களை ஆக்கிக் கொள்ள இயலாவிடத்து, பிராகிருதம், பாலி, சமஸ்கிருதச் சொற்களைக் கடன் பெற்றோ மொழி பெயர்த்தோ வழங்கினர். இதற்கென விதிகள் வகுக்கப்பட்டன. தற்சமம், தற்பவம் என்ற இரண்டின் அடிப்படையில் இந்தப் பிறமொழிச் சொற்கள் தமிழ்ப் படுத்தப்பட்டன. இன்று ஐரோப்பிய மொழிச் சொற்கள் ஏராளமாகத் தமிழில் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தமிழாக்குவதற்குச் சரியான எழுத்துப் பெயர்ப்பு விதிகள் உருவாக்கப்படவில்லை.

எ.கா     

Hydrogen - ஹைட்ரஜன், ஐட்ரசன்

Oxygen                        - ஆக்ஸிஜன், ஆக்சிசன், ஆக்ஸிசன்

Stalin                             - ஸ்டாலின், இசுடாலின்

என பலவாறு எழுதப்படுவதால் குழப்பம் ஏற்படும். இலக்கியத் தமிழில் பங்கஜம், கஜம் ஆகியன பங்கயம், கயம் என்றே 1000 ஆண்டுகளாக எழுதப் படுகின்றன. மாற்று எழுத்து வடிவம் இல்லை. அறிவியல் சொற்களைத் தமிழ் படுத்தும் போதும் தரப்படுத்தப்பட்ட எழுத்துப் பெயர்ப்பு விதிகள் தேவை. (A Standard system of Transiliteration) இந்த எழுத்துப் பெயர்ப்பு குறித்து முதலில் குறிப்பிடக் காரணம், இன்றும் பல துறைசார்ந்த அயல்மொழிச் சொற்களைத் தமிழ்ப் படுத்தாது அப்படியே எழுத வேண்டியிருப்பது தான்.

லேசர், ரேடார் ஆகியன இலேசர், இரேடார் என்றும் எழுதப்படுகின்றன. ஆனால் ஒலிக்கும் போது இகரம் ஒலிக்கப்படுவதில்லை. இங்கு ஒலிப்புமுறையும் எழுத்துமுறையும் (இணையாமல்) உள்ளன. எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு எழுத்துப் பெயர்ப்பு விதிகள் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறு உருவாகும்போது பல ஐரோப்பியச் சொற்களைத் தமிழ் படுத்துதல் சீர்மைப்படும்.

அறிவியல்மொழி எனக் கூறும்போது மொழி சாராக் கூறுகளான வாய்பாடு (Formula), சமன்பாடு (Equation), குறியீடு (Symbol) என்பன. அவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டியதில்லை; அப்படியே எழுதலாம். அதே போல தலைப்பெழுத்துச் சொற்களை (Acronym) நாம் தமிழ்ப் படுத்தி பின்னர் சுருக்கி எழுத வேண்டியதில்லை. University Grants Commission  என்பதைப் பல்கலைக்கழக மானியக்குழு எனத் தமிழில் எழுதினாலும் U.G.C  என்று தான் சுருக்கி எழுதுகிறார்கள். இதை ப.மா.கு என எழுதவில்லை.

ஆனால் UNO என்பதை ஐ.நா.சபை என எழுதுகின்றனர். இருந்தாலும் UNESCO  யுனெஸ்கோ என்றுதான் எழுதப்படுகிறது. இங்கும் ஒருமைப்பாடு இல்லை. இந்த வகைச் சொற்களை, தொடர்களை மொழி பெயர்த்தாலும் அனைத்துலகக் குறியீட்டையே பயன்படுத்தலாம். ஆகவே மேற்கூறியவைகளின்படி எழுத்துப்பெயர்ப்பு செய்து வழங்குவதையும் ஏற்றுக் கொண்டால் எஞ்சிய கலைச்சொற்களை எப்படி ஆக்கிக் கொள்வது? என்பது பற்றி மட்டுமே சிந்திக்கத் தோன்றும்.

இன்று நாம் படித்துக் கொண்டிருக்கின்ற அறிவியல், வாழ்வியல் படிப்பு பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1830ஆம் ஆண்டில் இதற்கான தொடக்கம் தமிழகத்திலும் இலங்கையிலும் ஏற்பட்டது. இரேனியுசு பாதிரியார் பூமிசாஸ்திரம் என்கிற நூலை தமிழர்கள் அறிவு பெறுவதற்காக எழுதி 1832இல் வெளியிட்டார். இதன்பிறகு அறிவியல் தமிழ் தந்தையான டாக்டர் ஃபிஷ்கிறீன் ஐரோப்பிய மருத்துவநூல்களைத் தமிழ்ப்படுத்தி, தமிழ்வழி அதனைக் கற்பித்து, கலைச்சொல்லாக்கம் பற்றிய சில விதிமுறைகளையும் வகுத்தார். இது தமிழில் வெளியான ஐரோப்பிய மருத்துவம் குறித்த முதல் நூல். இதில் சமஸ்கிருத செல்வாக்கு மிகுதி என்றாலும் அது 19ஆம் நூற்றாண்டின் மொழிநிலையைக் காட்ட உதவுகிறது.

கருத்தமைவுக்கு முதன்மை

கலைச்சொல்லை ஆக்கும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அச்சொல் குறித்து நிற்கும் கருத்தமைவுதான். மூலச்சொல்/வேர்ச்சொல் பொருள் முக்கியமன்று.

History, Historica(La) Histria, history (Gr) “tnowing”.  இது An account of events; The knowledge of the past events  எனப் பலவாறு விளக்கப்படும். இதைத் தொடக்கத்தில் சரித்திரம் எனத் தமிழாக்கினர். தற்போது இது வரலாறு என அழைக்கப்படுகிறது. வரலாறு என்பது பழைய தமிழ்ச் சொல்.

இவற்றால் தெரிவது மூலச் சொல்லின் வேர்ப்பொருள் அறிந்து கலைச் சொல்லைத் தமிழில் உருவாக்குவதைவிட அதன் கருத்தமைவை அறிந்து உருவாக்குவதே சிறந்தது என்பதாகும்.

1983 ஆம் ஆண்டில் மருத்துவ கலைச்சொல் தரப்படுத்துதல் செயலரங்கில் 5000 சொற்களும், 1984, 85ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற செயலரங்கில் 38,000 கலைச்சொற்களும் தரப்படுத்தப்பட்டு 3 தொகுதிகளாக வெளிவந்தன.

கலைச்சொல்லாக்கத்தில் கவனிக்க வேண்டியவை

இதில் இராம சுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலில் கடைபிடித்த கோட்பாடுகள் பல.

  1. பொருத்தமுடைமை / திறனுடைமை (Apprpriateness / Efficiency)

ஒரு கருத்தமைவுக்குப் பல கலைச்சொற்கள் இருக்கும்போது அவற்றுள் பொருத்தமான சொல்லைத் தரப்படுத்துதல். Anotomy-சரீர இயல்,

  1. உடலமைப்பியல், உடலியல், உடற்கூறு இயல் இவற்றுள் பொருட்பொருத்தம் அல்லது பொருள் திறன் நேர்த்தி உடல்கூறு இயல் எனத் தரப்படுத்தப்பட்டது.
  2. ஏற்புடைமை (Adoptability)

ஒரு கலைச்சொல் பெருவழக்கினதாகவும் மற்றொன்று அருகிய வழக்கினதாகவும் இருக்கும்போது பெருவழக்கிலுள்ளதை எடுத்துக் கொள்ளுதல். பெருவழக்கு என்பது சமூகத்தில் பொது இசைவு பெற்றதற்கு அடையாளமாகும். எனவே, அதற்கு ஏற்பளித்தல் தேவை.

  1. சொற்செட்டு/எளிமை

மின்சாரவாரியம், மின்சாரத்தடை என வழங்கப்பட்டு வந்தமை தற்போது சொற்கட்டு கருதி மின்வாரியம், மின்தடை என வழங்கப்பட்டு வருவது எடுத்தாளப்பட்டன.

  1. ஒருமைப்பாடு

கூடுமான வரை ஒரு துறை சார்ந்த கலைச்சொற்களைத் தரப்படுத்தும் போது ஒருமைப்பாடு குலையாது தரப்படுத்துதல் நல்லது.

  1. பலதுறைநோக்கு

கலைச்சொற்களில் பலவும் ஒரு குறிப்பிட்ட துறைக்கென இல்லாது தொடர்புடைய பிற துறைகளிலும் பயின்று வரக் காணலாம். எனவே, கலைச்சொல்லாக்கும் போதும், தரப்படுத்தும் போதும், அவ்வத்துறை வழக்கையும் கவனத்தில் கொண்டு தரப்படுத்துதல் பயனுடையதாகும்.

  1. மொழித் தூய்மை

ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் மொழித் தூய்மை வாதம் இப்போது அரசோச்சுவதில்லை. காரணம் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன வாகும். ஆனால் தமிழ் சமஸ்கிருத வேறுபாடு நமது வரலாற்றோடு சம்பந்தப்பட்டது. எனவே, தமிழில் கலைச் சொற்களைத் தரப்படுத்தும் போது சமஸ்கிருதச் சொல்லை நீக்குதலை ஒரு கோட்பாடாக சொல்லுவர். சீன, ஜப்பானிய, கொரிய, மங்கோலிய மொழிகளில் பிறமொழிச் சொற்கள் நீக்கும் போக்குப் பெருகிவருகிறது.

மேற்கண்ட கோட்பாடுகள் அடிப்படையில் தரப்படுத்துதல் நிகழும் போது நமது எதிர்பார்ப்பு நிறைவேறும். சிறுசிறு தொகுதிகளாக 2 லட்சம் கலைச்சொற்கள் தொகுக்கப்பட்டு, இலங்கையிலும் தமிழகத்திலும் வெளிவந்துள்ளன. இவற்றையெல்லாம் சேகரித்து ஆவணப்படுத்த வேண்டும். தமிழகத்திலுள்ள மரபு வழித் தொழிலாளர்களிடமிருந்தும் கலைச்சொற்களைத் திரட்ட வேண்டும். புதுச் சொற்களை ஆக்க வேண்டும்.

  1. கலைச்சொல்லாக்கத் தீர்வகம்

இப்பணிகளை மேற்கொள்ள தமிழ்க் கலைச்சொல் தரப்படுத்தக் குழு ஒன்று உடனே அமைக்கவேண்டும். இதில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் சார்பாளர்கள் இடம்பெறவேண்டும். இது ஓர் தீர்வகமாக (Clearing House) இருந்து செயல்பட வேண்டும். இக்குழு துறைவாரியாகவும், பொதுவாகவும், கலைச்சொல் அகராதிகளை வெளியிட வேண்டும்.

இத்துடன் அறிவியல் மொழி பெயர்ப்பு மையம் (Centre for Translating Science literature) ஒன்று நிறுவப்பட வேண்டும். இந்த மையம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும், பயன்படக்கூடிய விதத்தில் மூல அறிவியல் நூல்களைத் தமிழில் வெளியிடும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

கலைச்சொல்லாக்கத்தில் காணப்படும் மொழி உணர்வைத் தொடர்ந்து சமுதாய உணர்வும் இடம்பெறக் காண்கிறோம்.

எ.கா. அரசினர் குருடர், செவிடர் பள்ளி என்பது ‘அரசினர் பார்வை இழந்தோர்’, ‘காது கேளாதோர் பள்ளி’ என அழைக்கப்படுவது சமுதாய உணர்வு சார்ந்ததாகும். குருடு, செவிடு என்பன சொற்சுருக்கம், பொருள் திட்பம் உடையன என்றாலும் அவற்றை அன்றாட வழக்கில் இழித்தும் பழித்தும் பேசுவதற்குப் பயன்படுத்துவதால் அவற்றை மாற்றி, அவை சுட்டும் பொருளைக் கலைசொல்லாகக் கொண்டு வழங்கும் நிலை தோன்றியது எனத் தன் ஆய்வின் பல கூறுகளை விளக்குகிறார்.

  1. பழந்தமிழில் கலைச்சொல்வளம்

தமிழில் கலைச்சொல்வளம் பற்றி எழுதும்போது ‘தமிழில் கலைச்சொற்கள் இல்லை' என்பது தமிழ் கலைச்சொல் வரலாறு அறியாதோர் கூற்றாகும் எனக் கூறும் டாக்டர் இராம சுந்தரம் இலக்கண இலக்கியக் கல்வி தமிழ்வழி நடைபெற்ற காலத்து அதற்கான கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டன எனக்கூறி, தொல்காப்பியம் தரும் சில இளமைப் பெயர்களைச் சுட்டுகிறார்.

பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி ஆகியவைகள். இதே போல பிங்கல நிகண்டில் உறுப்புப் பெயர்கள் வரிசைப்படுத்தப்படுகிறது. தோல், இரத்தம், குருதி, ஈரல், விழுக்கு, குடல், குண்டி, நரம்பு, எலும்பு என 70க்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. இதே போல போகர் வைத்தியம் 700 என்ற நூல் 464 நோய்களையும் 778 வகை மூலிகைகளையும் கூறுகிறது.

எனவே, தமிழில் கலைச்சொற்கள் இல்லை என்பதோ கலைச் சொல்லாக்கம் இயலாததென்பதோ தமிழ் மொழியின் ஆற்றலையும் திறனையும் அறியாதோர் கூற்றாகும் என்பதே இராம சுந்தரம் அவர்களின் முடிவு. இதனைத் தொடர்ந்து இராம சுந்தரம் அவர்கள் தமிழ் சொல்வளத்தோடு சான்று என்று உணவு உட்கொள்ளும் வகை சார்ந்த சொற்கள் என “அசைத்தல், அதுக்குதல், அரித்தல், அருந்துதல், உண்ணுதல் என 33 சொற்கள் பாவாணர் சொல்லாராய்ச்சிக் கட்டுரையில் உள்ளன" என்று கூறுகிறார்.

இடைக்காலத்தில் கலைச்சொல்லாக்கத்தில் தொய்வு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கூறும்போது இலங்கையும், இந்தியாவும் விடுதலை பெற்றதும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கோட்பாடும் விடைபெற்றது என்று கூறி, 150 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப் பல்கலைக்கழகம் 14 பாடநூல்களைத் தயாரித்த பின்பு அவற்றில் 40ஆயிரம் கலைச்சொற்கள் சுட்டப்பட்டுள்ளன. ஆனால் வகுப்பறையில் தமிழ் நுழையாததால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனக் குமுறுகிறார்.

கிரந்த எழுத்துகளைப் பற்றிக் கூறும்போது கிரந்த எழுத்துக்களை, சமஸ்கிருத மொழி எழுத்துக்கள் என்பது தவறு. கி.பி.5,6 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் தேவை கருதி உருவாக்கிக் கொண்ட எழுத்துக்களே இவை. ஆகஸ்டு, ஆஸ்திரேலியா போன்ற சொற்களை ஆகசுடு/ஆகஃசுடு, ஆசுதிரேலியா என எழுதும்போது ஒலி பெயர்ப்பு சிதைந்து போகிறது. ஆகவே இன்றைய தமிழில் குறிப்பாக எழுத்துப் பெயர்ப்பு முறையில் ஸ, ஷ, ஜ, ஹ ஆகிய கிரந்த எழுத்துக்கள் தவிர்க்க இயலாதவை. ஆனால் இதற்கு ஒரு ஒழுங்கு தேவை எனக்கூறி தமிழில் எழுத்துப் பெயர்ப்புக்கு உள்ளாகும் சொற்கள் பெரும்பாலும் பெயர்ச் சொற்களே. வினைச் சொற்களும் இடைச்சொற்களும் மிகக் குறைவே என்கிறார்.

10.கலைச்சொல்லாக்கம் உருவாக்கம்: உலக அனுபவம்

கிராமப்புறம் என்ன செய்யவேண்டும் என்று இராம சுந்தரம் அவர்கள் கூறும்போது “பாரதி, மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ் சொல் கிடைக்காத நிலையைக் குறிப்பிட்ட பின் இன்று மெம்பர் என்பது உறுப்பினர் என ஆக்கம் பெற்று புழக்கத்தில் உள்ளது. காரணம் இக்கலைச் சொற்கள் புழக்கத்தில் வந்து பயிலப்பயில அதன் கருத்தமைவு (Concept) விளக்கம் பெறுகிறது. அதற்கேற்ப கலைச்சொற்கள் சீராக்கப்படுகின்றன. வெறும் அகராதியில் மட்டும் சொற்கள் இருப்பின் அவற்றுக்கு வாழ்வு இல்லை” என்று கூறியபின் தொடர்ந்து உலகநாடுகள் எப்படி சொற்களை உருவாக்க முனைந்து வருகின்றனர் என்பதை ஆஸ்திரியாவின் வியன்னாவிலுள்ள பன்னாட்டுக் கலைச்சொல் தரப்படுத்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் Into term, Termnet, Standard Term என்ற இதழ்கள் வெளிவருகின்றன. இத்துடன், பன்மொழி அகராதியும் வெளியிடப் படுகிறது” என்பதைச் சுட்டிக்காட்டி பிறமொழிக் கலைச்சொற்களைக் கடன் வாங்கும் போக்கை எல்லா மொழிகளும் இரண்டாம் நிலையில்தான் வைக்கின்றன. தன் மொழியில் கலைச்சொற்களை உருவாக்குவதை முதல் கோட்பாடாகவும் பிறமொழிச் சொற்களை இரண்டாவது கோட்பாடாகவும் ஏற்றுச் செயல்படுகின்றன என்று கூறுகிறார்.

மேலும் பிறமொழிச் செல்வாக்கு/ஆதிக்கத்துக்கு உட்பட்ட மொழிகள் கூட தம் மொழிக் கலைச்சொற்களையே வழங்குகின்றன. ஜெர்மன், ரஷ்யமொழிகளின் செல்வாக்கிலிருந்த போலிஷ் மொழி ஆயிரக்கணக்கில் கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டுள்ளது என்று கூறி தமிழில் கலைச்சொல் வளர்ச்சி பற்றி ஆராய்வதோடு, உலக மொழிகளிலுள்ள கலைச்சொல் ஒப்பாய்வும் தேவைப்படுகிறது என்கிறார்.

  1. தமிழுக்கு கலைச்சொல் மையம்

மேலும் நடைபெற்று வரும் கலைச்சொல் பணிகளை ஒருங்கிணைக்கும் வண்ணம் தமிழ்க் கலைச்சொல் மையம் ஒன்று அமைய வேண்டும். முதல் உலகத் தமிழ் மாநாட்டில் இவ்வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை இது செயல்வடிவம் பெறவில்லை என்று ஆதங்கப்பட்டு உலகளவில் பிரான்சில் பிரெஞ்சு அகதமியில் (academy) கலைச்சொல்லாக்கப் பணியில் 300க்கும் அதிகமான அறிஞர்கள் பணியாற்றுவதைக் குறிப்பிடுகிறார். இதே போல் ரஷ்யாவிலும், சீனாவிலும் பல்லாண்டுகளாக இவ்வகை அமைப்புகள் செயலாற்றி வருகின்றன. எனவே, தமிழ் வளர தமிழ் கலைச்சொல் அமைப்பு ஒன்று நிறுவித் தரமான கலைச்சொல் அகராதிகள் வெளிவர உதவவேண்டும் என்று கூறுகிறார். இத்துடன் “நமது கலைச்சொல்லாக்கப் பணி மேலும் சிறப்புற வேண்டுமெனில் தமிழைப் பயிற்று மொழியாக அனைத்து துறைகளிலும் செயல்படுத்த வேண்டும். அப்பொழுது தமிழில் கலைச்சொல் இல்லை, தமிழுக்குச் சொல்லுந் திறன் இல்லை என்று கூறுவது வெற்றுரை என்பது புலப்படும் என்று கூறி, பயிற்றுமொழியாகத் தமிழ் இடம்பெறாத வரை புதிய, புதிய அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நூல்கள் பெருமளவில் வெளிவரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு மொழி ஒரு துறையில் இடம்பெறவில்லை என்றால் அதில் நூல் வருதல் சாத்தியம் இல்லை. எனவே மொழியின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு நூல் இல்லை சொல் இல்லை என்பது பொருத்தமற்ற வாதமாகும் என்று கூறுகிறார். இதனால் நாம் தமிழ் பயிற்றுமொழி அவசியத்தை நன்றாகப் புரிந்து கொள்ளமுடிகிறது.

முடிவுரை

  • பேரா.இராம.சுந்தரம் மொழியியல் துறையிலே தொடர்ந்திருந்தால் அறிவியல் தமிழுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும். அவரை மடை மாற்றம் செய்து புதிய துறைக்கு அறிமுகம் செய்த பெருமை துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியத்தைச் சாரும்.
  • ஆர்.எம்.எஸ் பல அறிவியல் நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட முதற்காரணமாக, தூண்டுகோலாக இருந்தார். எண்ணற்ற கலைச் சொற்களைத் தொகுத்து வெளியிடவும் செய்தார்.
  • கலைச்சொல் உருவாக்கக் கோட்பாடுகளை உருவாக்கித் தந்துள்ளார். எளிமை, சுருக்கம், கருத்தமைவு ஆகியவற்றை மனதிற்கொண்டு கலைச் சொற்களைப் படைக்க வேண்டும் என்று வழிப்படுத்தியுள்ளார்.
  • நமது இலக்கண, இலக்கியங்கள், தத்துவங்கள் ஆகிய இவற்றில் கையாண்டுள்ள கலைச்சொல் வளம் குறித்து புலப்படுத்தியுள்ளார்.
  • பன்னாட்டு அனுபவங்களையும் கலைச்சொல் உருவாக்கத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
  • மொத்தத்தில் எதிர்கால அறிவியல் மொழி திட்டமிடலில் அவர் நமக்கு ஒரு முன்னோடி என்று கூறலாம்.

(டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் டாக்டர் இராம.சுந்தரம் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்க உரையின் சுருக்கம்)

- டாக்டர் சு.நரேந்திரன்

Pin It