இந்தியத் துணைக்கண்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 12% கிறித்தவ மக்கள் உள்ளனர் எனவும், அம்மக்களின் மொத்த எண்ணிக்கை 90 இலட்சத்திற்கும் அதிகம் எனவும் 2020 மக்கள் தொகை மதிப்பீடு தெரிவிக்கிறது. இம்மக்கள் அந்நிய நாட்டைச் சார்ந்தவர்கள் அல்லர். ஆனால் இவர்களை வந்தேறிகள் எனவும், இவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை எனவும் அண்மையில் பாஜக பொறுப்பாளர் ஒருவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருந்தார். முஸ்லீம்கள், கிறித்துவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய முப்பிரிவினரும் இந்நாட்டின் எதிரிகள் என்பதும், அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கியக் கொள்கைகள் என்பதைப் பலரும் அறிவர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்குப் பாதம் தாங்கியவர்கள் யார், அவர்களிடம் உதவித்தொகை பெற்றுக்கொண்டு அவர்களுக்குத் தொடர்ந்து உதவியாக இருந்தவர்கள் யார் என்பதை நாடு அறியும், நல்லோர் அறிவர்.
கிறித்தவர்கள் இந்திய மக்களுக்கு ஆற்றிய பணிகளை மனச்சான்றுள்ள எவரும் மறுக்க இயலாது. கல்வி, மருத்துவம், இலக்கியம், சமூகத் தொண்டு ஆகிய துறைகளில் அவர்கள் ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தியாரை இந்தியாவிற்கு வர வேண்டும் என வலியுறுத்தியவர் காந்தியாரின் நெருங்கிய நண்பரான சார்லஸ் பிரிர் ஆன்டுரூஸ் என்பவர்தான் எனவும், இலண்டனில் தங்கியிருந்த பொழுது காந்தியார் கிறித்தவர்களின் புதிய ஏற்பாடு நூலைப் படித்து அதனால் ஈர்க்கப்பட்டார் எனவும், இயேசுவின் மலைச் சொற்பொழிவு அவரது வாழ்நாள் முழுவதும் அவர் மீது செல்வாக்குச் செலுத்தியது எனவும், 1887 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட மொத்தம் 607 உறுப்பினர்களில் 35 பேர் கிறித்தவர்கள் எனவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சமயப்பணி ஆற்றுவதற்காக 1542-ஆம் ஆண்டிலேயே அருட்திரு பிரான்சிஸ் சேவியர் என்பார் போர்சுக்கல் நாட்டிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தார் எனத் தரவுகள் மூலம் அறிய வருகிறோம். அன்றிலிருந்து கிறித்தவ மதத்திற்கும் இந்தியாவுக்கும் -- குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கும் -- உள்ள தொடர்பு மிக நீண்டதாகும். தமிழில் முதன்முதல் நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்கள் கிறித்துவப் பாதிரியார்கள் என்பதும், தமிழ்ப் படைப்புகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்கள் கிறித்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. எல்லிஸ், ஜி.யூ.போப், கால்டுவெல் போன்றவர்கள் தமிழ் மொழிக்குத் தந்த கொடைகளை யாராலும் மறக்க முடியாது.
இருப்பினும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கிறித்தவர்கள் பங்களிப்புக் குறித்துப் பலரும் அறிந்திராத நிலைதான் பொது வெளியில் உள்ளது.
அக்குறைபாட்டை நீக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது முனைவர் எம்.ஏ. சேவியர் அவர்கள் எழுதி, திண்டுக்கல் வைகறை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள "இந்திய விடுதலைப் போராட்டமும் கிறித்தவர்களும்" எனும் நூல். இந்நூலில் இந்திய விடுதலைப் போரில் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் கிறித்தவர்கள் பங்கேற்றுப் போராடிய செய்திகளை அரிதின் முயன்று சேகரித்துப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் முனைவர் எம்.ஏ. சேவியர் அவர்கள். விடுதலைப் போரில் கிறித்தவர்களின் பங்கு பற்றி ஆங்கிலத்தில் பல்வேறு கட்டுரைகள் வந்துள்ளன. ஆனால், தமிழில் அந்தளவு விரிவான நூல்கள் எவையும் வந்ததாகத் தெரியவில்லை. எனவே, அதை நிறைவு செய்யத்தக்க வகையில் தரவுகளுடன் கூடிய பெட்டகமாக விளங்குகிறது இப்புத்தகம்.
1931 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து வெளிவந்த 'ஆனந்தபஜார்' பத்திரிகை தனது தலையங்கத்தில், 'இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறித்தவர்களின் பங்கு, அவர்களது மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது மிகவும் அதிகம்' எனப் பாராட்டியுள்ளது என்ற வியப்பான செய்தியுடன் நூலில் நுழைகிறோம்..
கிறித்துவர்களின் பணிகளை ஓரிரு துறைகளில் அடக்கிவிட முடியாது. ஏறத்தாழ 25 விழுக்காடு சேவை நிறுவனங்கள் கிறித்தவர்களால்தான் நடத்தப்படுகின்றன. "நாட்டின் ஒட்டுமொத்தத் தொடக்கக் கல்வியில் 5% பிற கல்விப் பணி மருத்துவப் பணியில் 10% சமூகத்தால் கைவிடப்பட்ட அநாதைகள் மற்றும் விதவைகளைப் பாதுகாக்கும் பணியில் 25 % மன வளர்ச்சி குன்றியோர், ஊனமுற்றோர், தொழுநோயாளர் மற்றும் பால்வினை நோயாளிகளுக்கான பணியில் 30% கிறித்துவர்களால் செய்யப்பட்டு வருகிறது" எனும் புள்ளி விவரம் வியப்பூட்டுகிறது.
1578 ஆம் ஆண்டு 'தம்பிரான் வணக்கம்' என்ற நூலை முதன் முதலில் தமிழில் கொண்டு வந்தவர் ஹென்றி ஹென்ரிக்கஸ் எனும் கிறித்தவ அருட்தந்தை ஆவார். மேலும் தமிழ் போர்ச்சுகீசிய அகராதியை வெளியிட்டவரும் இவர்தான். தமிழக மக்களால் வீரமாமுனிவர் என அன்போடு அழைக்கப்படும் ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி (1680 -1747) இத்தாலிய இயேசு சபைத் துறவி ஆவார். அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழின் பெருமையை உலகறியச் செய்த கிறித்தவப் பெருமகனாரில் முதன்மையானவர் இவர் எனக் கூறினால் அது மிகையாகாது. 'தேம்பாவணி' எனும் கிறித்தவக் காப்பியத்தையே படைத்த அரிய தமிழ்க் கவிஞராகவும் அவர் திகழ்ந்தார். 'சதுரகராதி' எனும் நூலையும், 'தொன்னூல் விளக்கம்' எனும் இலக்கண நூலையும் அவர் இயற்றினார். தமிழ் இலக்கியத்தில் அவரை மிகவும் கவர்ந்த திருக்குறளை இலத்தீன் மொழியிலே முதன்முதல் மொழிபெயர்ப்புச் செய்த வெளிநாட்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இராபர்ட் கால்டுவெல் (1814-1891) படைத்த 'திராவிட மொழிகளின் இலக்கணம்' எனும் அரிய நூல் வரலாற்றுத் திருப்புமுனையான அரிய நூலாகும்.
கிறித்தவப் பேரறிஞராகிய ஜி.யூ. போப் (1820-1908) அவர்கள் திருக்குறள், திருவாசகம் மற்றும் பல சிறந்த தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். முனைவர் கிரவுல், முனைவர் ஆல்பர்ட் ஸ்வைட்சர், எல்லீஸ், வின்ஸ்லோ போன்ற எண்ணற்ற கிறித்தவப் பெருமக்கள் தமிழுக்கு அளப்பரிய தொண்டினைச் செய்துள்ளனர். ஹென்றி ஹீராஸ் என்ற ஸ்பெயின் நாட்டின் ஏசுசபைப் பாதிரியார் ஒரு சிறந்த வரலாற்று அறிஞர் இந்தியாவின் தொன்மையை வெளிக்கொணர்ந்த சிந்து வெளி நாகரிகத்தில் கிடைத்த எழுத்துக்களைப் புரிந்துகொள்ள மிகவும் பாடுபட்டு உழைத்தவர். அந்த எழுத்துக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த எழுத்துக்கள் எனத் தனது பல ஆண்டுக்கால ஆய்வுக்குப்பின் பறைசாற்றித் தமிழ்நாட்டின் பெருமையை உலகம் அறியச் செய்த மாபெரும் அறிஞரும் இவர்தான்.
சாதித் தீண்டாமையால் ஒதுக்கப்பட்ட நாடார் சமூக மக்களுக்குச் சமூக நீதி கிடைக்கப் போராடியவர்கள் கிறித்தவ மதப் பாதிரியார்கள். தோள் சீலைப் போராட்டத்தின் மூலம் அவர்களுக்குச் சுயமரியாதையை மீட்டுக் கொடுத்தவர்கள் ஐரோப்பிய அருட் தந்தையரே! அதே போல், அயர்லாந்தைச் சார்ந்த அன்னி பெசன்ட் அம்மையார் இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்குபணி ஆற்றியதைப் பலரும் அறிவர்.
1757 ஆம் ஆண்டு பிளாசிப் போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றதிலிருந்து தனது வாதங்களைத் தொடங்குகிறார் நூலாசிரியர். பிளாசிப் போருக்குப் பின் ஆங்கிலேயர் அடித்த கொள்ளை மட்டும் 4.9 மில்லியன் பவுண்டு ஸ்டெர்லிங் என்று வரலாற்று அறிஞர்களின் ஆய்வுகள் கணக்கிட்டு உள்ளன. கி.பி. 1834 - 38 ஆண்டுகளில் ஏறக்குறைய 600 மில்லியன் பவுண்டு ஸ்டெர்லிங் அளவுக்கு ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். ஆங்கிலேயருக்கு முன் இந்தியாவை ஆண்ட பாரசீகர்களும், ஹுணர்களும், குப்தர்களும், அரேபியர்களும் முகலாயர்களும் வரி என்ற பெயரில் கொள்ளைதான் அடித்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் இங்கு சுரண்டிய செல்வங்களை இந்த நாட்டிலேயே செலவிட்டார்கள். ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் சுரண்டிய செல்வத்தை ஒன்றுதிரட்டி அவர்களது நாட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர் என்பது கொடுமையான, மறுக்க முடியாத உண்மையாகும்.
இத்தருணத்தில்தான் இந்திய வரலாற்றில் கோவாவில் போர்ச்சுகீசியருக்கு எதிராக 1787 இல் 'பின்டோ புரட்சி' நடைபெற்றது. கிறித்தவ சமயத்தைச் சார்ந்த இரண்டு பாதிரியார்கள் அப்புரட்சியைத் தலைமையேற்று நடத்தினர். பின்டோ என்ற குடும்பத்தைச் சேர்ந்த அருட்தந்தை கெய்தானோ பிரான்சிஸ்கோ கூட்டோ மற்றும் அருட்தந்தை ஜோஸ் அந்தோணியோ கொன்சால்வஸ் ஆகியோர்தான் அந்த நாட்டுப்பற்று மிக்க போரினைத் தொடங்கியவர்கள். ஆங்கிலேயர்கள் மக்களிடம் வசூலித்த வரிகளுக்கு எதிராக மக்கள் இயக்கத்தை இவர்கள் ஒருங்கிணைத்தனர். கோவா பகுதியிலிருந்த அருட்தந்தை பின்டோ வீட்டிலிருந்து அப்புரட்சியைத் திட்டமிட்டனர். ஆகவேதான் இது 'பின்டோ புரட்சி' என்று அழைக்கப்படுகிறது. கோவாவை அப்பொழுது ஆண்டு கொண்டிருந்த போர்ச்சுக்கீசியப் பேரரசு அனைத்துப் போராளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்களில் 17 அருட்தந்தையர்களும் அடங்குவர் என வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அருட்தந்தையர்கள் உட்பட 47 தலைவர்களை அந்த இராணுவ வீரர்கள் தேச துரோகச் சதிகாரர்கள் என்று குற்றம் சாட்டி, குதிரைகளின் கால்களில் அவர்களைக் கட்டி வைத்துத் தெருக்களில் இழுத்துச் சென்றனர். அவர்களின் கைகள் இரண்டையும் வெட்டியபின், பொது இடங்களில் அவர்களைத் தூக்கிலிட்டுக் கொன்று, அவர்களது தலைகளைத் துண்டு துண்டாகக் கொய்து, பொது இடங்களில் மக்களை அச்சுறுத்துவதற்காகத் தொங்க விட்டனர்.
ஆங்கிலேயர்களும், போராடியவர்களும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்த பொழுதும், பாதிரியார்கள் சமரசமின்றி ஆதிக்கவாதிகளை எதிர்த்துப் போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்றதொரு மக்கள் எழுச்சிதான் 'முண்டா புரட்சி' எனப்படுவது. இன்றைய பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வாழ்ந்து வரும் சமூகம் முண்டா சமூகமாகும். கி.பி.1875 - இல் கிறித்தவ சமயத்தைத் தழுவிய முண்டா என்ற ஆதிவாசி இனத்தைச் சார்ந்த 7000 பேர் அவர்களின் தலைவரான பிர்சா முண்டா என்பவரின் ஒருங்கிணைப்பில் கொடுமையான அந்நிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் எதிராக 1899 -1900 ஆண்டுகளில் பெரும் போர்க் குரல் எழுப்பினர். அவர்களது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி சுமார் இரண்டு ஆண்டுகள் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியுள்ளனர். அதில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ஆதிவாசி மக்களான இம்மண்ணின் தலைவர்கள், எவ்வித வசதியுமே இல்லாத அக்காலகட்டத்தில் ஊர் ஊராக நடந்து சென்று, இரவு பகலாக மிகுந்த சிரமத்தோடு மக்களுக்கு அன்னிய ஆதிக்கத்தின் தீமைகளைப் பற்றி எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஊட்டி இருக்கின்றனர். பெரும் சிரமத்திற்கிடையில் மக்களை ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஒருங்கிணைத்தனர். ஆனால் ஆங்கிலேயருடைய வல்லமை மிக்க போர்க் கருவிகளுக்கு முன்னால், இவர்களது பலவீனமான போர்க் கருவிகள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இருப்பினும் இரத்தம் சிந்தித் தங்களுடைய கிறித்தவ வீரத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.
19ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்பட்ட இந்திய தேசிய உணர்வுக்குப் பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அமெரிக்க விடுதலைப் போர் ஆகியவற்றின் தாக்கம் பெருமளவு உதவின. இருப்பினும், தேசபக்தி மிக்க பல புரட்சியாளர்களின் எழுச்சி மக்களிடம் பெருமளவு விழிப்புணர்வினை ஊட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களைப் பங்கேற்கத் தூண்டியது என்பதை மறுக்க இயலாது.
தவிரவும், நாட்டு விடுதலைப் போராட்டத்தில் அப்பொழுது முன்னணியில் இருந்த காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு கிறித்தவத் தலைவர்கள் பங்கேற்றுப் போராடி உள்ளனர். இங்கிலாந்து திருச்சபையைச் சார்ந்த சி.எப். ஆன்ட்ரூஸ் அவர்களது அர்ப்பணிப்பைக் காந்தியாரே பாராட்டிப் புகழ்ந்துள்ளார். இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் செயற்குழுவிற்கு உதவி புரிய முக்கியமான சிலரைக் காங்கிரஸ் நியமித்தது. அதில் முதலிடம் பெற்றவர் சி.எப். ஆன்ட்ரூஸ் ஆவார். இக்குழுவில் சிங்காரவேலர் போன்றோரும் உறுப்பினர்களாகச் செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அனைத்து வகை அடிமைத் தளைகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்க 1868 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது வங்காள கிறித்தவ அமைப்பு (Bengal Christian Association) இதுவே இந்திய விடுதலைக்காக முதன் முதலாகத் தொடங்கப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பு பல போராட்டங்களை முன்னெடுத்தது.
அதே போல் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கப்பல் ஓட்ட முயற்சித்த பொழுது அதற்கான நிதி திரட்ட உதவியவர்கள் மூன்று கிறித்தவர்கள். ஒருவர் தியாகி மாசிலாமணி மற்ற இருவர் ஜே.பி.ரோட்ரிகுவஸ் மற்றும் பால் பீட்டர் ஆகியோர் ஆவர்.
காந்தியாரின் தென்னாப்பிரிக்கப் போராட்டங்களில் ஜோசப் இராயப்பன் உள்ளிட்ட கத்தோலிக்கத் தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். காந்தியார் முன்னெடுத்த ஒத்துழையாமை இயக்கத்திலும், சட்டமறுப்பு இயக்கத்திலும் கிறித்தவர்கள் பலர் பங்கேற்றுச் சிறை சென்றுள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு எழுந்த வேளையில் கிறித்தவ சமயத் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெளிவாகப் பதிவு செய்தனர்.
சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவரான வெங்கல் சக்கரை என்ற கிறித்தவ இளைஞர் தேசிய இயக்கத்தால் மிகவும் கவரப்பட்டார். சென்னையில் தேசிய மிஷனரி சபை என்ற அமைப்பிலிருந்த கிறித்தவ இளைஞர்களை வெங்கல் சக்கரை, தனது தலைமையின் கீழ் ஒன்றிணைத்துத் தேசியப் போராட்டத்தில் இணைத்தார். அவர்களைத் தேர்ந்தெடுத்து இளைய விடுதலை இயக்கம் (Young Liberals League). என்ற அமைப்பையும் உருவாக்கினார் இவர் ஒரு சமதர்மப் போராளியாகவும் விளங்கினார்.
நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சீர்கேடுகள், ஏகாதிபத்தியம், முற்றுடைமைப் போர்கள் போன்ற முடிவற்ற தீமைகளுக்குச் சமதர்மம் ஒன்றே தீர்வாகும் என்று முழக்கமிட்டு ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தார்.
இந்திய விடுதலைப் போரில் தமிழகத் தலைவர்கள் பலர் பங்கேற்றுத் தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தினர். அவர்களில் ஒருவர் தூத்துக்குடியைச் சார்ந்த தியாகி மாசிலாமணி அவர்கள். இவரது இளம் வயதில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் சீடராக இருந்து விடுதலைப் போராட்டத்திற்காகத் தன்னையே முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.எனவே, தமிழகத்திற்கு வரும் நேருவின் ஆங்கில உரையை இவர்தான் மொழிபெயர்த்து வந்தார். இவர் இயற்றிய தேச பக்திப் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்று சுமார் 40 ஆண்டுக் காலம் போராடிய முன்னணித் தலைவராக மாசிலாமணி அவர்கள் விளங்கினார். ஆங்கில அரசால் பல முறை இவர் சிறையில் அடைக்கப்பட்டார். மாசிலாமணியின் துணைவியார் ஜெபமணி அம்மையார் தென்தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளில் முக்கியமானவர். இரண்டாம் உலகப்போர் எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்ற முதல் கிறித்துவத் தம்பதிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரைப் பகுதியில் தன்னையும் தனது குடும்பம் முழுவதையும் விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டு பாடுபட்டவர் 'ரோசாப்பூ ராசா' எனும் மதுரை ஜார்ஜ் ஜோசப் அவர்கள். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று மதுரையில் புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கினார். ஆயினும் விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு முதல் கட்டமாகத் தனது வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார். ரெளலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்தை மதுரையில் தலைமை ஏற்றுச் சிறப்பாக நடத்தினார். இவர் புகழ்பெற்ற வைக்கம் போராட்டத்திலும் பங்கேற்றார். Young India மற்றும் Independent ஆகிய இதழ்களின் ஆசிரியராக இவர் திறம்படச் செயல்பட்டார். அதில் வெளியான கட்டுரைகளுக்காக லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார். தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட ஜார்ஜ் ஜோசப் மதுரையில் முதன் முதலாகத் தொழிற்சங்கம் அமைத்தார். காந்தியார் மதுரைக்கு வரும் பொழுது இவரது வீட்டில்தான் தங்குவார். 1925 - ஆம் ஆண்டு காந்தியார் மதுரையில் ஜார்ஜ் ஜோசப் வீட்டில் தங்கியிருந்த பொழுதுதான் வேட்டி துண்டுக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரைப் பகுதியில் பிரமலைக்கள்ளர் என்னும் வகுப்பினரைக் கொடுமைப்படுத்தியது ஆங்கில அரசு. இரவில் அச்சமூக மக்கள் காவல் நிலையங்களில்தான் தங்க வேண்டும் காவல் நிலையங்களில் அதிகாரிகள் அழைத்தபோதெல்லாம் அவர்கள் ஆஜராக வேண்டும். கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என்று ஆணைகள் விதிக்கப்பட்டன. இதனை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் ஜார்ஜ் ஜோசப்தான். கைரேகைச் சட்டத்தை இவர் எதிர்த்த பொழுது பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் அனைவரும் அதில் கலந்து கொண்டனர். ஆனால், வழக்கம் போல் ஆங்கில அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் ஒரு கர்ப்பிணிப் பெண் பலியானார்; பிரமலைக் கள்ளர் சட்டம் பின்னர் திருத்தப்பட்டது. ஆகவே அம்மக்கள் ஜார்ஜ் ஜோசப்பிற்கு 'ரோசாப்பூ ராசா' என்ற பட்டம் கொடுத்து அவரை அழைத்தனர். மேலும் விடுதலை அடையும் முன் ஆதிக்க வர்க்கம் திணித்த இந்தியை எதிர்த்துப் போராடிய குழுவிலும் போராளி ஜார்ஜ் ஜோசப் இருந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத மற்றுமோர் கிறித்துவ ஆளுமை தஞ்சை மண்ணைச் சார்ந்த ஜே.சி. குமரப்பா (எ) ஜோசப் செல்லத்துரை கொர்னேலியஸ் சென்னை கிறித்தவக் கல்லூரியில் முதுகலைப் படிப்பும், இங்கிலாந்தில் வணிக மேலாண்மையியல் மேற்படிப்பும் படித்தவர். அமெரிக்காவில் சைரக்யூஸ் பல்கலைக்கழகத்திலும், கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரம் பயின்றார். காந்தியக் கோட்பாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறைக்குச் சென்றார்.
சுரண்டலற்ற பொருளாதாரம் சாத்தியமானது மட்டுமல்ல, இந்தியாவின் பிரச்சனைகளுக்கும் அதுவே விடையும் கூட எனக் குமரப்பா ஆழமாக நம்பினார். வாழ்வின் அடிப்படை ஆதாரமான இயற்கையை சீரழிக்காமலே பொருளாதாரத்தில் நமது இலக்கை அடைய முடியும் என்றும் நம்பினார். மேலும், சுற்றுச்சூழல் பேணலில் அவருக்கு இருந்த அக்கறையின் ஒரு வெளிப்பாடே கிராமியத் தொழிலில் அவர் காட்டிய ஆர்வம். காந்தியப் பொருளாதாரம் குறித்துப் பல கட்டுரைகளை எழுதி விழிப்புணர்வு ஊட்டியவர். திருமணம் செய்து கொள்ளாமலே இறுதிவரை தனது வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காக அர்ப்பணித்த குமரப்பாவின் தம்பி பரதன் குமரப்பாவும் விடுதலைக்காகப் பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த ராவ் பகதூர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞராகச் சில காலம் பணியாற்றியவர். நீதிக்கட்சியின் தாக்கத்திற்கு உள்ளாகி அதில் தன்னை இணைத்துக் கொண்டார். சமூக நீதிக்காகவும், சம வாய்ப்புக்காகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகவும் இணைந்து குரல் கொடுத்தார். வடமொழி மட்டுமே கற்பிக்கப்பட்ட திருவையாறு சமஸ்கிருதக் கல்லூரியின் பெயரை 'அரசர் கல்லூரி' என்று மாற்றி அங்கு தமிழ் வகுப்புகளைத் தொடங்க ஏற்பாடு செய்ததோடு, தஞ்சை மாவட்டக் கழகத் தலைவராக இருந்த போது அக்கல்லூரியில் அனைவரும் பயிலத்தக்க வகையில் உத்தரவு பிறப்பித்தார். அறக்கட்டளை சத்திரங்களில் சாதி வேறுபாடு கருதாது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ண ஏற்பாடு செய்து சமத்துவம் நிலவ உழைத்தார் சுயமரியாதை இயக்கத்தில் தீவிர உறுப்பினராக இருந்த இவர் 1918-இல் தஞ்சையில் பிராமணர் அல்லாதார் மாநாடு ஒன்றையும் கூட்டினார். 1937 - இல் நீதிக்கட்சி அமைத்த இடைக்கால அமைச்சரவையில் நிதி, உள்துறை போன்ற முக்கியமான துறைகளுக்குப் பொறுப்பேற்றார். பின் நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றார். குறிப்பாக இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டங்களிலும், தமிழர் மாநாடுகளிலும் கலந்து கொண்டு தனது சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்திலும் பிறந்த திருச்செந்தூர் பெஞ்சமின் அவர்கள் பள்ளிப்பருவத்திலேயே தேசியப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர். காந்தியாரின் தனி நபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். தொடர்ச்சியாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் அமைதி வழியாகப் போராடிய அவர், பிறகு ஒரு வன்முறைப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தார் அதுதான் சென்னை மாகாண அளவில், ஏன் இந்திய அளவில், விறுவிறுப்பாகப் பேசப்பட்ட 'குலசேகரப்பட்டணம் சதி வழக்கு' என்பதாகும். 1942 ஆம் ஆண்டு வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஆங்கிலக் காவல் அதிகாரி லோன் என்பவரது படுகொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஆண்களைப் போலவே கிறித்துவ மதத்தைச் சார்ந்த பெண்களும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளனர். வைலட் ஆல்வா, ஜெபமணி, அன்னி பெசன்ட் அம்மையார், சகோதரி நிவேதிதா போன்ற பல வீராங்கனைகளின் ஒப்பற்ற தியாகம் போற்றத்தக்கது. மகளிர் மட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டத்தில்.மாணாக்கர்கள் மற்றும் பத்திரிகைகளின் பங்கும் சிறப்புமிக்கதாகும். அதே போல் கிறித்துவர்களான தொழிலாளிகள், சிறு வணிகர்கள், விவசாயிகள் எனப் பலரும் விடுதலைப் போரில் ஆற்றிய பங்களிப்பு குறித்தும், ஆட்சியிலும், அரசியல் சாசன உருவாக்கத்திலும், நேதாஜியின் இந்திய தேசியப் படையிலும் பங்கேற்றவர்கள் குறித்தும் முனைவர் எம்.ஏ. சேவியர் தமது நூலில் மிக விரிவாகப் பதிவிட்டுள்ளார். அவரே குறிப்பிடுவது போல், "தியாகிகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றாலும் அவை வெறும் பெயர்ப்பட்டியல் அல்ல! நமது இந்தியத் தாய்நாடு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்று தங்கள் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல், அதைப் பணயம் வைத்து விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த கிறித்தவத் தியாகிகள் வாழ்க்கையின் சிலுவை சித்திரங்கள்!" என்பது துல்லியமான மதிப்பீடு ஆகும்.
அடுத்து இந்தியக் கிறித்தவச் சமூகத்தின் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நூல் ஆசிரியர் மிகச் சிறப்பான முறையில் பதில் அளிக்கிறார். தங்களது முன்னோரின் சமயத்தை விடுத்து அந்நிய மதத்திற்குச் சென்று விட்டனர் என்றும், கிறித்தவச் சமுதாயத்திற்கு மாறியதே நாட்டுப்பற்றுக்கு எதிரான செயல் என்றும் கிறித்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பரப்புரை செய்யப்பட்டது. எனவே இந்தியாவிலுள்ள கிறித்தவர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற சிந்தனை மேலோங்கி இருந்தது. இந்து மத உணர்வு கலந்து உருவாக்கப்பட்ட சுதேசிப் போராட்டம் வலுவடைந்த 1905 - 1907 மற்றும் 1916 - 1917 ஆகிய ஆண்டுகளில் கிறித்தவர்களுக்கு எதிரான உணர்வு வலுவாகச் சமூகத்தில் திணிக்கப்பட்டது. சுதேசிப் போராட்டம் உச்சத்திலிருந்த காலத்தில் இந்திய தேசியக் காங்கிரசில் கிறித்தவப் பிரதிநிதிகளைச் சேர்த்துக் கொள்ள அவ்வமைப்பு மிகவும் தயங்கியது. இந்திய தேசியத்தின் முற்பகுதி, இந்து மீட்டுருவாதிகளின் கைகளில் இருந்ததால், அவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளையும், சாதாரண இந்தியக் கிறித்தவர்களையும் ஒன்றிணைத்துப் பார்த்து வந்தனர். இது போன்ற மதவாதப் போக்குகளைப் பிபின் சந்திரா போன்ற மிகப் பெரிய வரலாற்று ஆய்வாளர்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளனர்.. "அரசியல் தீவிரத்தன்மை என்பது பொதுவாக வலுவான இந்து மீட்டுருவாக்க உணர்வோடுதான் பார்க்கப்பட்டது. இந்து மதவாதச் சக்திகள் வலுவடைந்ததால், இந்தியாவை ஒன்றுபடுத்தவும், கசப்பான வகுப்புவாதம் பின்னாளில் ஏற்படவும் வழி வகுத்தது " எனப் பிபின் சந்திரா குறிப்பிடுவது இங்கு கருதத்தக்கது.
"தொடக்க கால இந்திய தேசியக் காங்கிரசின் கூட்டங்களிலும், அதன் அமர்வுகளிலும் கிறித்தவர்களின் பங்கு மிகச் சிறப்பானதாக இருந்தது. ஏக மனதாக இந்திய தேசியக் காங்கிரசை அவர்கள் ஆதரித்தனர். அவ்வாறு தொடர்ந்து ஈடுபடவும் அவர்கள் விரும்பினார்கள். ஆனால், புகுத்தப்பட்ட வெறுப்புணர்வின் காரணமாக அவர்கள் ஒதுங்க ஆரம்பித்தனர். இருப்பினும், கற்றறிந்த கிறித்தவ பெருமக்கள் இந்துமதவாதிகளின் மதவாதக் கண்ணோட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். அதற்கோர் எடுத்துக்காட்டு வெங்கல் சக்கரை எனும் கிறித்தவப் போராளி ஆவார். 'கிறித்தவம்' மற்றும் 'தேசியம்' என்பதற்குச் செயல்பாடுதான் மையப்புள்ளி. இவை இரண்டுமே வரலாற்றில் செயல்படுவதால், அவற்றைத் தனித்தனி அலகாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கம் கிறித்தவத்திற்கு மாறானது அல்ல. மாறாகக் கிறித்தவத்தில் மலர்ந்த ஒரு மலராகும்" எனும் அவரது கூற்று அன்றைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது.
தொடக்கத்தில் பெரும்பான்மைச் சமூகத்தின் பயமுறுத்தல் கண்டு சற்று அச்ச உணர்வு ஏற்பட்டாலும், அன்றைய தலைவர்களின் தொடர் முயற்சியாலும், அரசியல் ஈடுபாட்டாலும் கிறித்தவ மக்கள் பிற சமூகத்தினரைப் போலவே விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்கத் தொடங்கினர். இதை எண்ணற்ற தரவுகளுடனும், ஆய்வுகளுடனும் முனைவர் எம்.ஏ. சேவியர் அவர்கள் 288 பக்கங்கள் கொண்ட தனது நூலில் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். நூலின் இறுதியில் பொருத்தப்பாடு மிக்க படங்களையும், உரிய வரலாற்று ஆதாரங்களையும் இணைத்து இந்தப் புத்தகத்திற்கு ஓர் ஆவண மதிப்பீட்டை உருவாக்கி உள்ளார். பேசாப் பொருளை உரத்துப் பேசிச் சுவடு பதித்த இந்த வரலாற்று ஆவணம், கிறித்தவ மக்களின் விடுதலை வேட்கையையும், தியாகத்தையும் பதிவு செய்வதோடு கிறித்தவ சமுதாயத்தின் மீது மதக்காழ்ப்புணர்வோடு சுமத்தப்படும் பழியையும் நீக்கியுள்ளது என்பதில் ஐயம் ஏதுமில்லை.
இந்திய விடுதலைப் போராட்டமும் கிறித்தவர்களும்
முனைவர் எம். ஏ. சேவியர் | விலை. ரூ.170/-
வெளியீடு: வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்
- கண.குறிஞ்சி