PANAI TREEபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருவெடிப்பால் உருவான பூமிப்பந்தில் பரிணாம வளர்ச்சிப் படிநிலையில் மனிதன் தோன்றினான். மனித குலத்தின் தொடக்க கால வாழ்க்கையானது மரப் பொந்துகளிலும், பாறை இடுக்குகளிலும், குகைகளிலும் கழிந்தது. நாடோடியாக வாழ்ந்த மனிதன் இயற்கை வேளாண் தந்த அறிவு வெளிச்சத்தால் நிலையமர்ந்த சமூகமாக வாழத் தளைப்பட்டான். நாடோடி மக்களின் வளர்ச்சிப் போக்கு "கொம்பை' எனப்படும் "குடிசைகள்' அமைத்து வாழ்விடத்தை வகுத்துக் கொள்ளும்படியான சிந்தனை மாற்றத்தை உண்டாக்கிற்று.

அத்தகைய சூழ்நிலையில் வெயில், மழை, குளிர், காற்று, இன்னபிற இயற்கைச் சீற்றங்களில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள பிந்தைய கால மனித சமூகத்திற்கு பரந்து விரிந்த பனை மர ஓலைகள் பேருதவி புரிந்திருக்கின்றன. கிராமப் புறங்களில் இன்றும் கண்களில் தென்படும் பனை ஓலைக் குடிசைகள் தமிழர்களின் மரபான வாழ்வியலுக்கும் பனை மரத்துக்குமான உறவு நீட்சியைத் தொட்டுக்காட்டும் சரித்திரச் சாட்சியங்கள்.

தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்தே பனை மரங்கள் முக்கிய அங்கத்தை வகித்திருக்கின்றன. இன்று நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் உயர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான சிந்தனை கருக்கொண்டதே உயர்ந்து நின்ற பனைமரங்கள் ஈன்ற ஓலைக் குடிசைகளில்தான்!

தமிழகத்தின் எந்தத் திசையிலிருந்து எந்த மூலைக்கும் குறுக்கு வெட்டாகப் பயணிக்க நேர்ந்தாலும் வெளிப்புறத்தே பனைமரங்களைக் கூட்டம் கூட்டமாகக் காணமுடியும். அந்த அளவுக்கு எங்கும் நிறைந்ததாக தமிழ்நாட்டில் பனைமரங்கள் விளங்குகின்றன. எனவேதான் தொகை, தொன்மம் மற்றும் பயன்பாட்டு அறுவடையை அளவீடாகக் கொண்டே தமிழக அரசு பனையைத் தேசிய மரமாக அங்கீகரித்துப் பெருமைப்படுத்தியது.

அரை நூற்றாண்டுக்கு முன்புவரை தமிழர்கள் பனைப் பொருட்களை அங்குலம் அங்குலமாக அனுபவித்து வாழ்ந்திருக்கிறார்கள். பனை நார், பனை ஓலை, பனை மட்டை, பனஞ் சட்டம், பதநீர், பனங்கருப்புக்கட்டி, கள், பனை நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு என பனை ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் உணவாகவும், மருந்தாகவும் மனிதகுலத்திற்குத் தன்னையே கொடையளித்ததால் இதனை, "கற்பக விருட்சம்' எனப் பெயரிட்டு பெருமைப்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

வரலாற்றில் பனை

தமிழர் வரலாற்றில் தமிழர்க்கும் பனைக்குமான மரபுரீதியான உறவைக் குறிக்கும் சான்றுகள் இலக்கியங்களில் ஆங்காங்கே இழைந்தோடுவதைப் பார்க்க முடிகிறது. அழகர் மலையில் கண்டெடுக்கப் பெற்ற கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று, "நெடுமலன்' என்பவன் சமண முனிவர்களுக்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்த நிகழ்வை ""பாணித வணிகன் நெடுமலன்'' என்று குறிப்பிடுகிறது.

பாணிதம் என்பது பனைகளிலிருந்து கிடைக்கப்பெறும் பதநீரைக் காய்ச்சி உருக்குவதால் கிடைக்கும் இனிப்பான பாகையைக் குறிக்கும் சொல்தானா என்பதாக ஆய்வு முடிவுகள் ஐயங்களைத் தோற்றுவித்தாலும் பெரும்பாலான ஆய்வுகள், பதநீரிலிருந்து கிடைக்கும் பொருளைக் குறிப்பிடுவனவாகவே முடிவுகளை முன்மொழிகின்றன.

கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகர நிகண்டு பனையின் பெயர்களைத் தொகுத்துக் கூறுகின்றது. வள்ளுவப் பெருந்தகையார் அளவில் பெரியதைக் குறிக்கும் முகமாக "பனை' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்'' (குறள்.104)

என்பது அவரின் குறள் மொழி. இதே போன்று மேலுமிரண்டு குறட்பாக்களிலும் பனையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். கிறித்துவ மதத்தின் புனித நூலான விவிலியத்தில் "நீதிமான் பனையைப் போல் செழித்து வளருவான்' (சங்கீதம் 92:1215) என்ற இறை வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

இன்றும் மக்கள் வழக்கில் ஒலிக்கும் பனையின் உறுப்புக்களான தோடு, மடல், ஓலை, ஏடு, பாளை, ஈர்க்கு, குலை போன்ற சொல்லாடல்கள் தமிழர்களின் ஆகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் காணப்படுவதிலிருந்து பனையின் தொன்மத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.

கிறித்து பிறப்பதற்கு முந்தையதாகக் காலங்கணிக்கப்பட்ட "தமிழி எழுத்துக்கள்' என்று நவீன காலத்தில் அழைக்கப்படுகின்ற தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் "பனை' என்கிற சொல் இடம்பெற்றுள்ளது. மேலும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் பனை பேசுப் பொருளாக இருக்கிறது.

தமிழ் இலக்கியங்கள் மீதான மீட்சிக்கு பனை ஓலைகள் ஆற்றிய பங்கு அளப்பரியது. இலக்கியங்களின் மீது தீராத காதல் கொண்ட மாந்தர்களின் மறைவுக்குப் பிறகு அவர்கள் பயன்படுத்திய நூல்கள், வரலாற்று ஆவணங்கள் யாவும் இலக்கிய வாசனையற்ற அவரின் வாரிசுகளால் தூக்கி எறியப்படுவதைப் போன்று, அக்காலத்தில் அறிவார்ந்த சான்றோர் பெருமக்கள் போற்றிப் பாதுகாத்த சங்க இலக்கிய ஓலைப் பிரதிகள், அவர்களின் பிந்தைய தலைமுறையினரால் பரணில் குவிக்கப்பட்டது.

சிலர் அவற்றைக் கொளுத்தி தமிழன்னையின் வரலாற்றுக்குத் தங்களையும் அறியாது கருந்திரை போத்தினர். மேலும் பூச்சிகளாலும், எலிகளாலும் சிதைந்தழிந்தது போக எஞ்சிய ஓலைப் பிரதிகளே கோயில்களிலும், புலவர்களது இல்லங்களிலும், குகைகளிலும் கண்டெடுக்கப்பட்டு அச்சு வாகனத்திலேற்றி, இன்று தாய்த்தமிழின் பெருமையை தமிழர்களின் அற வாழ்க்கையை உலகுக்குப் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் திருப்பனந்தாள் மற்றும் திருவோத்தூர், அரியலூர் மாவட்டம் திருமழபாடி, விழுப்புரம் மாவட்டம் புறவார் பனங்காட்டூர் போன்ற இடங்களில் தல மரமாக வைத்து பனை வழிபடப்படுகிறது. திருஞான சம்பந்தரின் பதினொன்று பதிகங்களிலும், சுந்தரர் பாடிய தேவாரப் பதிகங்களிலும், புராணக் கதைகளிலும் பனை பற்றிய வருணனைகள் காணப்படுகின்றன.

பனையும் தமிழர் எழுத்து மரபும்

தமிழர்களின் எழுத்து மரபுக்குத் தனித்துவமான குணமுண்டு. அது பனை தந்த விழுதுகளால் வேர்விடத் தொடங்கியது. பனை ஓலைகள் தமிழர் வரலாற்றைத் தாங்கி நின்ற அரண்கள். ஆதித் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஏடுகள் பனை மர ஓலைகளே. மன்னராட்சி கால நிகழ்வுகளை விளிக்குமிடத்து மன்னர்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையே நடைபெறும் உரையாடல்களின் போது ஓலை என்கிற சொல்லாட்சி இடம்பெறுவதை திரைப்படங்களில் அவ்வப்போது கேட்க முடியும். அதேபோல சங்க இலக்கியங்களான அகத்திணை, கலித்தொகை, அகநானூறு, நவநீதிப்பாட்டியல் போன்றவைகளில் "ஓலை'யைக் குறிக்கும் சிறப்புப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சங்க கால மக்களின் மரபார்ந்த அறிவுச் செழுமையை சமகாலத்திற்கு கைமாற்றிய ஊடகமாக பனைமரங்கள் விளங்குகின்றன. பனை ஓலைகள் இல்லாதி ருந்தால் தொடக்ககாலத்தில் புழக்கத்தில் இருந்த தமிழ் இலக்கண, இலக்கியங்கள் யாவும் புலவர்களின் நாவிலே தவழ்ந்து காற்றோடு கலந்திருக்கும்.

பனை மரத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட ஓலைக் கீற்றில் எடுத்த எடுப்பிலேயே எழுத்தாணி கொண்டு எழுத்தை எழுதிவிட முடியாது. எழுதுவதற்கு ஏற்ப ஓலைகளைப் பதப்படுத்தும் தொழில் நுட்பத்தினைத் தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள்.

அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகள் இன்றும் காட்சிப்படுத்தப்படுவதற்கு பதப்படுத்தல் சார்ந்த நுட்பமும் காரணமாகும். ஓலைகளை எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு ஏற்றாற்போன்று தயார்ப்படுத்துவதற்கு "ஏடு பதப்படுத்துதல்' என்கின்ற தொழில் நுட்பத்தினைக் கையாண்டிருக்கின்றார்கள்.

தமிழர்கள் ஓலை ஏடுகளில் எழுதிய முறையையும், எழுதப்பட்ட ஓலைகளைப் பராமரித்த முறையையும் ஜெர்மனியைச் சேர்ந்த கிறித்துவ மதகுரு சீகன்பால்க் பெருமைபடக் கூறியுள்ளார். அரேபிய நாட்டைச் சேர்ந்த பயணி அல்புருணி என்பவர் 1030இல் தென் இந்தியாவிற்கு வருகை தந்தபோது எழுதிய பயணக்குறிப்பில் பனைமரம் குறித்தும் பனை ஓலையில் எழுதும் முறை குறித்தும் சிலாகித்து எழுதியுள்ளார்.

ஓலைகள் காலங்கடந்த நிலையில் சிதிலமடைய நேர்கையில் அதனைப் படியெடுக்கவும் செய்துள்ளதை அறிய முடிகிறது. அப்படிப் "படி' எழுதுகையில், நம் நாட்டு ஓலைகள் ரொம்பக் காலம் பழகிப் போனபடியால் நாங்கள் அந்த ஓலைக்குப் புது ஓலை போட்டு எழுதியிருக்கிறோம். ஏட்டுக்குற்றம், எழுத்துக் குற்றம், வாசகப்பிழை, வரி மாறாட்டம் இருந்தால் நீங்கள் அனைவரும் பொறுத்துக் கொள்ளவும்'' என்பதை முதன்மைக் குறிப்பாகக் குறிப்பிடும் முறையைக் கடைப்பிடித்தார்கள்.

மேலும் ஓலை எழுதுவதையே தொழிலாகக் கொண்டோர் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு முறையாக ஊதியமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தைக் குறிக்க ஓலைக்காசு, ஓலை எழுத்துப் போறு போன்ற சொல்லாடலில் பயன்படுத்தியதாக பிற்கால சோழர் காலத்திய கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

தற்கால "கூரியர்' நிறுவனங்களைப் போன்று அன்றைய நாட்களில் ஓலையில் தூது அனுப்பும் நடைமுறையும் இருந்திருக்கின்றது. தூது சேதி அனுப்புவதில் ஓலையின் பயன்பாட்டை விளக்கும் நாட்டார் பாடல்களும் உண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு "ஓலைதூது' பற்றி புலப்படுத்துகிறது.

பனையைப் போற்றிய மன்னர்கள்

பனை மரங்கள் தமிழ் மண்ணையாட்சி செய்த மன்னர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பேருதவி புரிந்திருக்கின்றன. இதனாலேயே சோழ மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் ஊரின் எல்லையில் பனையும், தென்னையும் வளர்ப்பதற்கான உரிமையை வழங்கி ஊக்குவித்தார்கள். வருவாய் ஈட்டித்தரும் இனங்களாகப் பனைத்தொழில் விளங்கியிருக்கின்றது. பனைத்தொழில் புரிந்தோர் மீது பனை வரியை விதித்திருக்கின்றார்கள் என்பதை இடைக்கால தமிழ்க் கல்வெட்டுகளின் மூலம் அறியலாகிறது.

"மாவும் பலாவுங் கமுகும் பனையுங் கொடியும் உள்ளிட்ட பல்லுருவில் பயன்மரம் இடவும் நடவும் பெறுவதாகும்'' என்கிறது சோழர் காலச் செப்பேடு ஒன்று. இதிலிருந்து சோழர் காலத்தில் "பயன் மரம்' என்ற சட்டகத்தில் பனை மரம் இடம்பெற்றிருந்தனை அறிய இடமுண்டு.

" பயன்மரம் உள்ளுர் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்'' (குறள். 216)

என்று "பனைமரம்' என்ற இடத்தில் "பயன்மரம்' என்ற சொல்லைக் கையாண்டு பெருமைப்படுகிறார் வள்ளுவர்.

சேர மன்னர்கள் பனை மரத்தைத் தங்கள் அடையாளச் சின்னமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழர் வீரத்தைப் பறை சாற்றிய தகைசால் மன்னர்களான சேரன் செங்குட்டுவன், பெருஞ்சேரல் இளம்பொறை, அதியமான் முதலானோர் பனம் பூ என்ற போந்தை மாலையை அணிந்ததாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. போர் மேகம் சூழ்கின்ற பொழுதுகளில் பனம் பூ மாலையைச் சூடிக் கொள்வதைச் சேரர்கள் தங்கள் அரச மரபாகப் பின்பற்றியிருக்கின்றார்கள். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் எடக்கல் என்ற ஊரின் மலைக்குகை ஒன்றில் காணப்படும் தமிழ்ப்பிராமி கல்வெட்டு எழுத்துக்களே இதற்கான ஆவணமாகின்றன.

இக்கல்வெட்டு கி.பி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட கல்வெட்டைப் பதிப்பித்த மறைந்த கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவன் இதனை உறுதிப்படுத்துகிறார். மேலும் பனை மரத்தை மையப்படுத்தி ஊரின் பெயரை உருவாக்கும் மரபு கி.மு. முதல் நூற்றாண்டிலேயே தோன்றியமையைச் சான்று காட்டுகிறது கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்பிராமிக் கல்வெட்டு.

நம் முன்னோர்கள் வாழ்ந்த பகுதிகளை அடையாளப்படுத்துகையில் பனையை முன்னொட்டாகச் சேர்த்து பெயரிட்டு அழைக்கும் பழக்கமுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். பனையூர், பனங்குடி, பனங்காடி, பனைக்குடி, பனைக்குளம், பனையகுலம் போன்ற ஊர்ப்பெயர்கள் பனைக்கும் தமிழருக்குமான மரபுத் தொடர்ச்சியை வட்டமிட்டுக் காட்டும் வரலாற்று விழுமியங்கள்.

பனையும் தமிழர் பானமும்

பனையிலிருந்து பெறப்படும் கள், பழந்தமிழர்களின் பாரம்பரிய மதுவாக இருந்திருக்கின்றது. அது சங்கணீலம் தொட்டு பயன்படுத்தப்பட்டு வந்தமைக்கான ஆதாரத்தைச் சொல்கின்றன கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானை ஓட்டில் பொறிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்கள். சங்க இலக்கியங்கள் கள்ளை "தீம்பிழி' என்ற சொல்லால் குறிப்பிடுகின்றன.

சங்ககாலத் தமிழர்களின் நடுகல் வழிபாட்டில் படையல் பொருளாக கள் தவறாது இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கள் தடை செய்யப்படுவதற்கு முன்புவரை நாட்டார் தெய்வக் கோவில் திருவிழாக்களின்போது கள்ளை வைத்து வழிபடும் வழக்கம் இருந்ததை நாம் அறிவோம். வழிபாட்டில் மட்டுமின்றி இறப்புச் சடங்குகளிலும் கள் படைத்துள்ள செய்தியைக் குறிப்பிடுகிறது புறநானூறு.

"இல்லா கியரே காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி நார்அரி
சிறுகலத்து வகுப்பவும் கொள்வான்.....''

என்ற ஒளவையார் பாடிய புறநானுற்றுப் பாடல் அதியமான் இறந்தபோது அவருக்கு நடுகல் அமைத்து மயிற்பீலியும், கள்ளும் படைத்து வழிபட்டதாகப் பொருளுரைக்கிறது. பழந்தமிழர்கள் பாலின வேறுபாடின்றி இயற்கைப் பானமான கள்ளைப் பருகியிருக்கின்றார்கள். ஒளவை போன்ற பெண்பாற் புலவர்கள் கள்ளைப் பருகி மகிழ்ந்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

மதுரைக்காஞ்சி எனும் நூல் மதுரை நகரிலுள்ள தெருக்களைப் பற்றி வர்ணிக்கும்போது, கள் விற்கும் கடையைப் பற்றிய குறிப்பும் வருகிறது. சங்ககால மக்கள் பருகிய கள் இன்றைக்குள்ளதைப் போன்றதல்ல. களா, துபரி, கருநாவல், இஞ்சி, குங்குமப்பூ, இலுப்பைப் பூ, மதுவகாயம் போன்ற மூலிகைகளின் கலவை அது. இயற்கையான கள் உடலுக்கு வலுவும் நலமும் தரவல்லது.

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட பொருளாகக் கருதப்படுகின்ற இந்தக் கள்ளானது நமது அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தடையேதுமின்றி விற்பனையில் தழைத்தோங்குகிறது. கேரளாவில் மதுக்கொள்கை, மதுவிலக்கு ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட "உதயபானு ஆணையம்' தனது அறிக்கையில், கள் மதுவல்ல, உணவின் ஒரு பகுதி என்று பரிந்துள்ளமையை தமிழக ஆட்சியாளர்கள் கவனிக்கத் தவறுகின்றார்கள் அல்லது மறுதலிக்கின்றார்கள்.

மேலும் மதுவிலக்குக் காரணமாகச் சொல்லில் பனைக்குப் பாடை காட்டும் பாதகத்தைப் புரிந்து வருகின்றார்கள். அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்கள் அனைத்துக்கும் பொதுவானது என்றாலும் தமிழ்நாடு அரசு மட்டும் மக்களின் உணவு தேடும் உரிமைப் பட்டியலில் இடம்பெற்ற ஒன்றான கள்ளை தடை செய்திருப்பது அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானது.

தமிழ்நாடு அரசு சின்னங்களை வரையறுக்கும்போது தமிழ்நாட்டின் தேசிய மரமாகப் பனையைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பனையிலிருந்து பெறப்படும் பானத்திற்குத் தடைவிதித்தது வரலாற்று முரண்! கள்ளின் மெய்ம்மைத் தன்மையை மறுத்து அதனை வீரியமிக்க விசப்பொருளாகக் கருதி தமிழக அரசு தடைசெய்திருப்பது, தனியார் மதுபான நிறுவனங்களின் கல்லாவை நிறைப்பதற்கும் ஆட்சியாளர்களின் தகிடுதத்தங்களை மக்கள் உணராது முனைமழுங்கச் செய்வதற்கும்தான் என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிப்பதில் தவறேதுமில்லை!

பனையின் இன்றைய நிலை

பயன்மரம் என்று போற்றப்பட்ட பனைமரத்தின் புழங்குபொருள் பயன்பாட்டு மேன்மை தெரியாத இன்றைய தலைமுறை சொற்ப வருமானத்திற்காக வெட்டிச் சாய்த்து வருகிறது. தமிழர்களின் நகமும் சதையுமான பனைமரங்கள் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகின்றன.

செங்கல் சூளைகள் உள்ளிட்ட தொழிலகங்களின் எரிபொருளுக்காக பனைகள் வெட்டி வீழ்த்தப்படுவது நமது சுற்றுச்சூழலுக்கு விடுக்கப்பட்ட சவால்! கள்ளுக்குத் தடை விதித்து பனையின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்ததால் 50 ஆண்டுகளுக்கு முன்பு 50 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்த பனைமரங்கள் இன்று 5 கோடியாகக் குறைத்துவிட்டது. இந்தக் கணக்கீடு பனை அழிவின் விளிம்பில் இருப்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஒவ்வொரு பொருளையும் இலாபக் கண்ணோட்டத்தோடு அணுகும் நுகர்விய மனநிலையே நிகழ்காலத்தில் பனையின் மகத்துவத்தை உணரவிடாமல் செய்துவிட்டது. பனையின் அழிவிற்கும் காரணமாக அமைந்துவிட்டது.

பனையும் பனைபொருளும்

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஆண் பனையில் இருந்து கிளைத்துக் காய்ந்து விழுந்த பாளையைச் சுட்டு அதிலிருந்து கிடைக்கப்பெற்ற கரி மாவினைக் கொண்டு மாவலி சுற்றி மகிழ்ந்ததை இன்றெண்ணினாலும் மனம் துள்ளாட்டம் போடுகிறது. கார்த்திகைத் தீபத் திருநாளின் இரவில் சுற்றிய மாவலி மட்டைகளை காலையில் வயலில் நட்டு வைக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

இது உழவுக்கும் பனைக்குமான மரபு ரீதியான உறவைக் காட்டும் குறியீடுகள்! நன்செய் நிலங்களில் உவர்தன்மை படிந்து விடும்போது பனை ஓலைகளைக் கொண்டு அவ்வயலில் சேற்றுப் பகுதிக்குள் அழுத்தி அழுகச் செய்து நல்ல நிலங்களாக வடித்தெடுக்கும் வேளாண் தொழில்நுட்பம் இன்றும் நிலவி வருகிறது. நடப்பிலும்கூட நிலவி வருகிறது.

ஆய்வின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட நூற்றியொரு பனை வகைகளில் ஒன்றான தாளிப்பனை பொறித்த நாணயங்கள் இலங்கை தீவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்நாணயமானது கி.பி. 1901 முதல் 1926 வரை புழக்கத்தில் இருந்ததாக வரலாற்று ஆவணங்கள் புலப்படுத்துகின்றன. மேலும் விக்டோரியா மகாராணிக்கு விசிறி செய்வதற்காக இந்தத் தாளிப்பனை ஓலையையே பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

பனை ஓலைகளை நுட்பமாகப் பிரித்தெடுத்து கொட்டான்கள், சீர்வரிசைப் பெட்டிகள், நார்ப்பெட்டிகள், கடகம், கீற்றுப் பெட்டிகள், சுளகு என்கிற முறம், பனைப் பாய்கள், நார்க்கட்டில்கள், வீட்டு அழகு சாதனப் பொருட்கள், விசிறி, துடைப்பான்கள், மெத்தைகள் போன்ற பொருட்களைப் புழங்கி சுற்றுச்சூழலைப் பேணுவதில் முன்மாதிரியாய் இருந்தார்கள்.

பதநீரிலிருந்து காய்ச்சி எடுக்கப்படும் பனங்கருப்புக் கட்டி மருத்துவப் பண்பு நிறைந்ததாக இருக்கிறது. மஞ்சள் காமாலை, இருமல், தொண்டைப் புகைச்சல், சளித்தொல்லை, நெஞ்சுவலி போன்றவற்றிற்கு சில சேர்மானத்துடன் எடுத்துக்கொள்வதன் மூலம் நல்ல நிவாரணம் பெற முடியும்.

உலகமயத்தின் வரவிற்குப் பின்னர் பனைப் புழங்கு பொருட்களின் பயன்பாடு குறைந்து நெகிழி போன்ற சுற்றுச்சூழலுக்குச் சீர்கேட்டை உருவாக்கவல்ல பொருட்கள் வரிசைகட்டத் தொடங்கின. இயற்கையைச் சீரழிக்கும் கொடிய விசமாக இருந்துவரும் நெகிழிப் பயன்பாட்டினால் எதிர்கால சந்ததியினருக்கு ஆயிரமாண்டு துரோகத்தை இழைத்து வருகின்றோம்.

ஏனெனில் நாம் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் நெகிழிப் பை அழிவதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகள் காலம் பிடிக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுநர்கள்.

அதுவரை அது சுற்றுப்புறத்தைக் கெடுத்து  வேளாண் நிலங்களைப் பாழ்படுத்துவதோடு மனித உடலுக்குச் சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்தும். அதனாலேயே இந்திய உச்சநீதி மன்றமும், "நெகிழிப்பைகள் அணுகுண்டைவிட ஆபத்தானவை'' என எச்சரிக்கையூட்டியது.

இத்தகைய கேடுகள் அனைத்தும் பனையின் பயன்பாட்டு மரபைத் தொலைத்து, உலகமயம் புகுத்திய புதிய பொருளாதாரக் கொள்கையில் சிக்கிக் கொண்டதன் பெருவிளைவே! இன்று தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாய் சுற்றுச்சூழல் குறித்து கசிந்துருகி என்ன பயன்?

பூமித்தாயின் மடியில் கிளைத்த பனைமரங்களால் கடந்த தலைமுறையினர் துய்த்த இன்பங்கள் இன்றைய தலைமுறைக்குக் கிடைக்கப் பெறாதது கொடுப்பினையில்லாததே! பனை மரங்கள் முந்தைய தலைமுறையினருக்குத் தந்த மகிழ்வுக்கு ஈடு இணை கிடையாது. கோடை விடுமுறையைக் களிப்பானதாக்கவும், கொளுத்தும் வெயிலினை இதமானதாக்குவதுமான பொழுதுபோக்குத் தளங்களாகப் பனந்தோப்புகள் விளங்கியிருக்கின்றன. பல நேரங்களில் எங்களுக்குப் பரிவு காட்டி அணைத்துக் கொள்ளும் பனையானது, காய்க்கும் பருவங்களில் நுங்கு நீக்கிய எஞ்சிய "கோந்தை' என்ற பகுதியை வண்டியாகத் தந்து எங்களைத் தெருத்தெருவாய்ச் சுற்றச்செய்து அழகு பார்க்கும். இது ஒரு பழமையான விளையாட்டு. இதுபற்றி கலித்தொகைப் பாடலொன்று,

" பெருமடல் பெண்ணைப் பிணர்ந்தோட்டு குடவாய்க் 
கோடிப் பின்னல் வாங்கித் தளரும் பைங்குரும்பை''

என்று பேசுகிறது. இன்று பனை மரங்கள் இருக்கும் திசையை நோக்கி ஏறிட்டுப் பார்த்தாலே இளமைப் பருவ நினைவுகள் காட்சியாய் படிகிறது. மண் பானையில் பதுங்கிக் கிடக்கும் பதநீரைப் பட்டையில் குடிக்கும்போது கிடைக்கும் பேருவகைக்கு அளவேயில்லை.

தமிழர்கள் மரபில் தோய்ந்த பனை மரங்கள் இன்று அவர்களின் நினைவு அடுக்குகளில் நின்று புரளுகிறது. அத்தகைய அழித்தொழிப்புக்குப் பனைகள் ஆட்பட்டிருக்கின்றன. தனது ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியையும் மனித குலத்திற்கு வழங்கி மீட்பராக விளங்கும் பனைகள் தமிழர்களின் இன வரைவியலோடும் மரபுப் பொருண்மையோடும் இரண்டறக் கலந்த உறவுக் கண்ணியைக் கொண்டது.

அத்தகைய ஒப்பற்ற தன்மையுடைய பனைமரங்களைக் காத்து, உலகமய பொருளாதாரத்தை வீழ்த்தி பனைப் பொருட்களை உள்ளடக்கிய தமிழர் தற்சார்புப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் போராட வேண்டியது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் வரலாற்றுக் கடமை.

கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

  1. பனை மரமே! பனை மரமே! ஆ.சிவசுப்பிரமணியன் காலச்சுவடு வெளியீடு
  2. பனை மரம் இரா.பஞ்சவர்ணம் பஞ்சவர்ணம் அறக்கட்டளை
  3. இணையதளங்கள் : விகடன், கழுனிப்பூ

- தங்க. செங்கதிர்

Pin It