தொடக்கமாக

சமகால நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகளில், மொழிபெயர்ப்புப் பிரதிகளானது, தொடர்ந்து சில பதிப்பகங்களால் வெளிவந்து கொண்டிருப்பதால்தான் தேசியம் மற்றும் உலகளாவிய நாடுகளில் நிகழ்ந்த/நிகழ்கின்ற சமூகப் பொருளாதார அரசியல் நிலைகளை அறிந்து கொள்ளவும் முடிகின்றன. இதன்வழி, வாசிப்புத் தளத்தின் பரப்பானது விரிவடைவதுடன், பல்வேறு விதமான மாற்றங்களுக்கும் சிந்தனைகளுக்கும் நம்மை இட்டுச்செல்கின்றன. இதனால் பல புதிய எழுத்தாளர்கள் வாசகர்களுக்கு அறிமுகமாவதோடு, அவர்களின் நிலம் சார்ந்த பிற படைப்பாளர்களின் படைப்புகளையும் வாசிக்க வேண்டிய தேவையையும் தூண்டுதலையும் ஏற்படுத்தி விடுகின்றன. தமிழில் எழுதப்படுகிற ஆழ்ந்த, மிகநுட்பமான கருத்தாக்கங்களை உள்ளடக்கங்களாகக் கொண்ட தரமிகு படைப்புகளை வாசிக்க நேரிடும்போது, அதன் உருவம், சூழல், இடம், காலம் போன்ற இலக்கண வரையறைகளை (புனைகதை) மீறியும் பாதிப்பினை உண்டாக்கியும் தனக்கான தனித்த இடத்தினை அப்பிரதி பெற்று விடுகிறது. இதேபோல மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பிற மொழிகளிலுள்ள இலக்கியத் தரமான படைப்புகளைத் தேடி வாசிக்கவும் வழிவகுக்கிறது. மேலும், அந்தியமொழி சார்ந்த படைப்புகளும் தமிழில் வெளிவருவதன் பொருட்டு, அப்பிரதிகளையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே தோன்றி விடுகின்றன.

தமிழ்ப் புனைகதைப் படைப்புத் தளத்தில் பெரும்பங்காற்றிய படைப்பாளர்கள் பலர் இருப்பினும் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களே தங்களின் படைப்புகளினூடாக மாற்று கருத்தாக்கத்தினை புதியதொரு நடையில் எழுத்துருவாக்கியுள்ளனர். இத்தன்மையானது பிராந்திய மற்றும் அந்திய மொழிகளிலுமே தங்களின் படைப்புகளின் ஊடாகக் காணமுடிகின்றன. இப்படிப்பட்ட பிரதிகள் காலந்தோறும் ஒரு சில படைப்பாளர்களால் படைக்கப்பட்டு, அது உலகம் தழுவிய அளவில் கவனமும் அதற்கான அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கப்பெறுகின்றன. இந்தியாவில் ஞானபீடம், சாகித்திய அகாதெமியும் உலகயளவில் நோபல், புக்கர் போன்ற பரிசுகளும் படைப்புத் தடத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் ஒரு கௌரவமாகவும் பொருளாதார ரீதியில் அவர்களின் எழுத்துலக வாழ்க்கைக்கு சிறந்ததொரு பயனையும் தரவல்லதாக இருக்கின்றது. இத்துடன், இலக்கியம் குறித்த கவனத்தை, பொதுமக்களிடையேயும் கல்விசார் மக்களிடையேயும் ஏற்படச் செய்து, மற்ற படைப்பாளர்களை ஊக்குவிக்கவும் செய்கின்றது. இதனால், இப்படைப்புகள் மட்டுமே சிறந்தது என்று எண்ணுதலால் பயன்தராது. இப்பிரதிகளைப்போலவே அல்லது இதற்கும் மேம்பட்ட படைப்புகளைத் தேடியடைந்து வாசிக்கும் போதுதான் இலக்கியத் தரம் பற்றிய புரிதலை அறியமுடியும்.

காலமாற்றித்திற்கேற்ற வகையில் இப்புனைகதை வடிவங்களும் மாற்றம்பெற்றே வந்துள்ளன என்பதை வாசிப்பினூடே உணர்ந்துகொள்ள முடியும். எனினும் கடந்தகாலத்தில் நிகழ்ந்த வரலாறுகளை, தற்காலச் சூழலோடு பொருத்திப் பார்க்கும் விதமாகவும் நிகழ்கால அரசியலின் தன்மைகளையும் அதன் தீவிரத்தினையும் எடுத்துரைக்கும் நடையிலும் படைப்புகள் படைக்கப்படுகின்றன. அந்தவகையில், கன்னட மொழிப் படைப்பான நேமிச்சந்த்ராவின் ‘யாத்வஷேம்’ (yaad vashem) என்ற பிரதியும் ஆப்கான் எழுத்தாளரான காலித் ஹூசைனியின் ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ (A Thousand Splendid Sons) ஆகிய இரு மொழிபெயர்ப்புப் படைப்புகளின் தனித்தன்மையை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது. தங்களின் அரசியல் ஆளுகைக்கு கீழ் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளையும் அதனால் அந்நிலப்பகுதிசார் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை உள்ளடக்கங்களாகக் கொண்ட இவ்விரு படைப்புகளின் வழி காணலாகிறது. மேலும், இது சமகால பன்னாட்டு அரசியல் சார்ந்த செயல்பாடுகளின் நோக்கங்களையும் இதனால் இந்திய அரசியல் சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்களை அறிவதற்கும் இப்புனைவுகளை ஆராய்வது அவசியமாகின்றன.

யாத்வஷேம் : நேமிச்சந்த்ரா

yaad vashemகர்நாடக சாகித்ய அகாதமி விருதுபெற்ற ‘யாத்வஷேம்’ நேமிச்சந்த்ரா என்ற பெண் எழுத்தாளரால் படைக்கப்பட்டுள்ளது. இவருடைய ‘ஒளிக்கொரு கிரணம் மேரிக்யூரி’, ‘பெருவின் புனித பள்ளத்தாக்கில்’ ஆகிய நூல்களும் இந்த விருதினைப் பெற்றுள்ளது. பொறியியலாளரான இவர், இந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிடெட், பெங்களூரில் டிசைன் எஞ்சினீயராகவும், ஜெனரல் மேனேஜராகவும் பணியாற்றியவர். இலக்கியம், அறிவியல், பெண்களைப் பற்றிய ஆய்வு, பயணம் ஆகியவற்றில் முக்கிய விருப்பங்கள் கொண்ட இவர், முப்பது நூல்களை கன்னடத்தில் எழுதியுள்ளார். ‘தான சிந்தாமணி அத்திமப்பே’ விருது, ‘சிவராமகாரந்த’ விருது, ‘மாஸ்தி வெங்கடேச ஐய்யங்கார்’ விருது, ‘கிருஷ்ணானந்த காமத்’ விருது என இலக்கியத்திற்காக பல விருதுகளைப் பெற்றவர். இத்துடன், ‘சொசைட்டி ஆஃப் இண்டியன் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி அண்ட் இண்டஸ்ட்ரீஸ்’ அளித்த ‘விமன் அச்சிவர் இன் ஏரோஸ்பேஸ்’ விருதும் கிடைத்துள்ளது.

கே. நல்லதம்பி என்பவரால் இந்நாவலானது, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அக்டோபர் 2020இல் எதிர் வெளியீடாக வந்துள்ளதோடு, 2022ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது. உலகம் முழுமைக்கும் தன் ஆளுகைக்குள் கொண்டு வர நினைத்த ஜெர்மனியின் அதிபரான ஹிட்லர் பற்றிய வரலாற்றினை இப்பிரதி எடுத்துரைக்கிறது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் வசித்துவரும் ஒரு யூதக் குடும்பம் ஹிட்லரின் ஆட்சியினால் அம்மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து காந்தியின் மண்ணிற்கு(பம்பாய்) வந்த குட்டி யூதச் சிறுமியின்(ஹ்யானா-அனிதா) கதைதான் யாத்வஷேம். யூதர்களின் உலகைத் திறந்துகாட்டும் விதமாக பன்னிரண்டு ஆண்டுகால உழைப்பில் உருவானது. ஜெர்மனி, நியூயார்க், இஸ்ரேல் ஆகிய நாடுகளில், ஹிட்லரால் வதைமுகாம்களில் கொல்லப்பட்ட யூதர்களின் பெயர்ப்பட்டியலோடு கூடிய அருங்காட்சியங்கள் பற்றிய தகவல்களையும் இன்னபிறவற்றையும் அகற்றமுடியாத வலியோடு இப்பிரதி புலப்படுத்தியுள்ளன.   

ஹிட்லர் தனது ஆட்சி அதிகாரத்தினூடாக அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள், மருத்துவர்கள் ஆகியவர்களின் துணைகொண்டு, ஆஷ்விட்ச் மற்றும் ஆர்ம்ஸ்டர்டாம் என்ற இரு வதைமுகாம்களை உருவாக்கினார். இதன் வழி யூதர்களை (ஆறு மில்லியன்) பேரழிவிற்குள்ளாக்கி, உலகிலுள்ள ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் அச்சத்தை விளைவித்ததோடு, உலகையே தன்வசப்படுத்த நினைத்தார். அதனால் அன்று பற்றி எரிந்தது ஜெர்மனி; நின்று பார்த்தது உலகம். ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்ட (மக்களின்) தேசிய அடையாள அட்டையின் தரவுகளால்தான் யூதர் என்ற இனமே தம் சொந்த மண்ணில் வாழமுடியாமல், பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழநேர்ந்தது. இப்பிரதியும் ஒரு குடும்பத்தின் சீர்குலைவையும் அதில் உயிரோடிருக்கும் பெண்ணின் நினைவுத்தடமும் தேடலுமே இதன் உருவம்.

பல சாதி, சமய, இனங்களையும் பன்முகப்பட்ட கலாச்சாரங்களையும் கொண்ட இந்தியாவில் பம்பாய்க்கு வரும் ஹ்யானா என்ற அனிதாவும் அவளுடைய தந்தையாரும் இங்கு காணநேரும் ஓர்மையுள்ள வாழ்வியலையும் தன்னுடைய நாட்டிற்குமான நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இத்துடன், அவர்கள் நம்பவேமுடியாத அளவிற்கு, ஆயிரம் சாதிகளுக்கு நடுவிலும் வாழக்கூடிய இந்தியாவின் ரகசியத்தை இம்மண்ணிலுள்ள குடும்பங்களின் வழி கண்டுணர்கின்றனர். தன்னுடைய தந்தை, தாய், அக்கா(ரெபேக்கா), குட்டித்தம்பி(ஐசாக்) ஆகியோருடன் ஹ்யானா இன்பமான வாழ்வியலை மேற்கொண்டார். 1933இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிற்பாடு, தன் குடும்பமே சிதைவுறுகிறது. தந்தையும் ஹ்யானாவும் தப்பித்து, நாட்டை விட்டு வெளியேற, மற்ற மூவரும் நாஜி காவலர்களால் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களின் நிலையை அறியவேண்டும் என்ற எண்ணம் ஹ்யானாவிற்குள் சதாகாலமும் எழுகிறது. அவள் விவேக்கை திருமணம் செய்து கொள்கிறாள். விசு என்ற ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள்.

தன் சொந்த மண்ணை விட்டு வந்து, ஏறத்தாழ 55வருடங்களை கடந்த பின்னும் தன் குடும்ப நபர்களைத் தேடி ஆர்ம்ஸ்டர்டாம், டகாவ், நியூயார்க், வாஷிங்டன் டி.சி., டெல் அவிவ், ஜெரூசலம் ஆகிய நகரங்களுக்குச் செல்கிறாள். இதன்வழி அவள் அடைந்த உணர்வுகளையும் அத்தேடலினூடாக ரெபேக்காவை கண்டடைந்ததையும் இப்பிரதி விவரிக்கிறது. இத்துடன், நாஜி ஹிட்லர் வதைமுகாம்களிலும் ஜெர்மனியில் உள்ள மக்களின் மீதும் செய்த கொடூரத்தினை, அவலங்களை ரெபேக்காவின் வழி உலகிற்கு எடுத்துரைத்துள்ளார் நேமிச்சந்த்ரா.

“மனது எங்கோ ஓடியது. யார் மீதமிருக்கலாம், என் வம்சத்தில், அப்பாவின் இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை, அம்மாவின் மூன்று தம்பிகள், அம்மா, அக்கா, சின்னத் தம்பி - என் இரத்தத்தைப் பகிர்ந்துகொண்ட யார் மீதமிருக்கலாம்? உயிருடன் இருப்பார்களா? தேடலாமா? என் வாழ்க்கையில் என்றாவது ஐரோப்பாவிற்குப் போவேனா. ஒவ்வொரு கதவாகத் தட்டி இமா இருக்கியா? ரெபேக்கா எங்கே இருக்கே? ஐசாக், என் குட்டிக் கண்ணா எங்கே இருக்க? தேடமுடியுமா. என்றாவது தெரியவருமா, என்னவர்கள் என்ன ஆனார்கள் என்று, என் வம்சத்தின் கதை? என் பிள்ளைகளுக்கு, பேரக்குழந்தைகளுக்கு என் அத்தையைப் போலவே நானும் என் வம்சத்தின் கதைகளைச் சொல்லமுடியுமா?

என்னவென்று சொல்வேன், பெர்லின் பால்யத்தின் இனிமையான நினைவுகளை இரத்தம் பொதிந்த இரவுகள் துரத்திக்கொண்டு வருகின்றன.”1 என்ற பதற்றமான, மனதிலிருந்து ஆறாத வலியுடன்கூடிய வாழ்வையே யூதர்கள் பெற்றுள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது. சர்வதிகாரியின் ஆட்சியில் ஆயிரம் ஆயிரம் யூதர்கள், தங்களின் பூர்விகத்தை விட்டு, அவசர, அவசியமாக வெளியேறி, உயிரைத் தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கெதிராக யாரும் செயல்பட முடியாத சூழலையும் நாஜிகள் ஏற்படுத்தியிருந்தனர்.

“அறுபது லட்சம் யூதர்களையும், கணக்கில்லாத கம்யூனிஸ்ட்களையும், உடல் ஊனமுற்றோரையும் கொடூரமாகக் கொன்று குவித்த போதிலும், நாஜி ஜெர்மனியில் ஹிட்லருக்கு எதிரான குரல் கேட்கவில்லை விவேக். மக்கள் வீதியில் இறங்கி மற்றொரு கூட்டத்து மக்களின் மீது நடக்கும் மனிதத்தன்மையற்ற சுரண்டலை எதிர்க்கவில்லை. வரலாற்றின் இரத்தம் தோய்ந்த பக்கங்கள் அன்றே முடிந்துவிட்டன என்று எனக்குத் தோன்றவில்லை விவேக். இது ஒரு ஹிட்லரின் மதி இழந்த நீதியால் நடந்த வரலாற்றுச் சோகச் சம்பவம் அல்ல. நன்கு யோசித்துத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் அவை...”2 என்கின்ற தன்மையில் ஹிட்லர், தான் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் செய்த கொடூரங்களானவை, முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு, அதை நடைமுறைப்படுத்தியதே. 1935இல் ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டமானது, முக்கியமாக யூதர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. யூதர்களின் நாகரிகம், சமுதாய, உத்தியோக உரிமைகளை முடக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. ஆரியர்கள் அல்லாத இனத்தவருக்கு அது அச்சுறுத்தலாக இருந்தது. அச்சட்டம் பலருக்கு வரும் துன்பவெள்ளத்திற்கான முன் அறிவிப்பை தந்தது. இதனால், யூதர்கள் ஜெர்மனியை விட்டு வெளியேறும் வழிகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். பல தலைமுறைகளாக வேர்விட்டு வளர்ந்த யூதர்களின் நிலத்தைத் திருடி, அவர்களை வேரோடு பெயர்த்துவிடும் பயங்கரத் திட்டமாக இருந்தது. இதன் விளைவே பின்னாட்களில் வதைமுகாம்களை உருவாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் என்பதை வேதனையுடன் அறியமுடிகிறது.

தான் விரும்பியது எதையும் சாதிக்கமுடியாத சிறுவன் ஆடோல்ஃப். பள்ளியில் தேறாத, திருமணம் ஆகாதவர்களுக்குப் பிறந்தவன். தோல்வியின் யதார்த்தத்தில் துவண்ட அவன் மனது, சகிப்பின்மை, கோபம், வெறுப்புக்களை மட்டுமே கொண்டு வளர்ந்துள்ளான். இதனால்தான் மரணமுகாம்களை எழுப்பி, தமக்குள் இருக்கும் இருள் நிறைந்த இரகசிய பாகத்தின் வழி, மற்றொருவரின் சாவை இத்தனை அமைதியாகச் செய்தான் போலும். எனினும் ஹிட்லர் மனித வரலாற்றில் தன்னந்தனியாக தோன்றியவன் இல்லை. மனித வாழ்க்கையில், பன்முகப்பட்ட எதிர்பாராக் கொடூரங்களைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதற்கு ஒரு உதாரணம்தான் ஆடோல்ஃப் ஹிட்லர். இக்குணம் சமகாலத்தில் வாழும் மக்களின் உள்ளுணர்வுகளிலும் அதிகாரம் செய்வோரிடத்தும் மறைமுகமான தன்மையில் இருந்துகொண்டேதான் உள்ளன என்பதனையும் நேமிச்சந்த்ரா இப்படைப்பினூடாக எடுத்தியம்புகிறார்.

ஆயிரம் சூரியப் பேரொளி : காலித் ஹூசைனி

aayiram sooriya peroliஆப்கானிஸ்தான் எழுத்தாளரான காலித் ஹூசைனி எழுதிய நாவல்தான் ஆயிரம் சூரியப் பேரொளி (A Thousand Splendid Sons). தமிழில் ஷஜிதா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு, ஜனவரி 2020இல் (எதிர் வெளியீடு) இந்நாவல் வெளிவந்தது. 1965இல் காபூலில் பிறந்த காலித் ஹூசைனி, 1978இல் அங்கு உருவான மக்கட் புரட்சியைத் தொடர்ந்து நிகழ்ந்த ரஷ்யர்களின் ஊடுருவலுக்குப் பிறகு 1980இல் அவருடைய குடும்பத்தினர் அங்கிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். 32 வருடங்களாக உலக அளவில் அதிகமான அகதிகளை உண்டாக்கும் நாடாக, ஆப்கானிஸ்தான் அறியப்பட்டிருக்கிறது. 2006இல், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகமைக்கு அமெரிக்காவின் நல்லிணக்கத் தூதுவராக அவர் நியமிக்கப்பட்டார். தன்னுடைய தாய்நாட்டிற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பவும் எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபடவும் தாயகம் திரும்பும் மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் தன் மருத்துவப்பணியையே கைவிட்டிருக்கிறார்.

ஆப்கானில் தொடர்ச்சியான அந்தியப் படையெடுப்புகள், ஆட்சிக் கவிழ்ப்புகள் ஆகியவற்றால் அலைவுகளுக்குட்பட்ட நாட்டில் பல நூற்றாண்டுகளாக இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருந்த அந்நாட்டின் பெண்களுக்கு, முஜாஹிதீன்கள் மற்றும் தாலிபன்கள் மதத்தின் பெயரால் நிகழ்த்திய வன்முறைகளைப் பதிவு செய்யும் விதமாகவே இந்நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வெளிவந்த ‘பட்ட விரட்டி’ (The Kite Runner) என்ற நாவலும் ஆப்கானில் நிகழ்ந்த கொடூரங்களையும், இனவெறி, மதவெறி மற்றும் ஆதிக்கவுணர்வினால் ஏற்படும் சிக்கல்களையும் அமீர், ஹசன் என்ற இரு கதாபாத்திரங்களின் ஊடாக எழுத்துருவாக்கியுள்ளார். இத்துடன், ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம் மற்றும் தாலிபன் ஆட்சியின் காலகட்டங்களை புலப்படுத்தும் விதமாக இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இவருடைய நாவல்கள் உலகெங்கிலும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கோடிகளுக்கு மேல் விற்பனையாகியும் சிறந்த கதைசொல்லியாகவும் திகழ்கிறார். உலகில் உள்ள சிறந்த பத்திரிக்கைகள் இவருடைய கதை சொல்லும் திறனையும் நடை மற்றும் பாணியையும் நாவலுக்கான எல்லா நுணுக்கங்களையும் தன் எழுத்தில் கொண்டிருப்பதாக கருத்துரைக்கின்றனர்.

மரியம் மற்றும் லைலா என்ற இரு பெண் கதாபாத்திரங்களின் வழி தாலிபன்களின் கொடுங்கோலாட்சியில் பெண்கள் அனுபவித்த அல்லல்களை, நீக்கவொண்ணா துயரங்களை உலகிற்கு தன் ஆற்றல்மிக்க எழுத்தினால் வெளிப்படுத்தியுள்ளார். ஹெராத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குல்-தமானில் மரியம் ஹராமில் (முறைகேடாகப் பிறந்தவர்) பிறந்தவள். ஹெராத்தில் செல்வசெழிப்புடன் வசிக்கும் ஜலீல் தான் அவளுடைய தந்தை. மரியத்தை நாணா பிரசவித்த 1959இல் வசந்தத்தின் ஈரப்பதமான மழைநாளில், ராஜா ஜாஹிர் ஷாவின் மகாமோசமான 40 ஆண்டுகால ஆட்சியின் 26 ஆவது வருடத்தில் நிகழ்ந்தது. வலிப்புநோயின் காரணமாக நாணா இறந்துவிட மரியத்தை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் ஜலீல். இதனைப் பொறுத்துகொள்ள முடியாத கதீஜா (ஜலீலின் முதல் மனைவி) மற்றும் அவருடைய குடும்பத்தினர் 15 வயதான மரியாவுக்கு, 45 வயதிலிருக்கும் ரஷீதை திருமணம் செய்வித்து, காபூலுக்கு அனுப்பப்படுகிறாள்.

லைலா தன் பெற்றோர்களான ஹக்கீம், ஃபர்பீனுடனும் சகோதரர்களான அஹமத், நூருடன் காபூலில் வாழ்ந்து வருகிறாள். இராணுவத்தில் சேர்ந்த அவளுடைய சகோதரர்கள் போரில் இறந்துவிட, அதன் காரணமாக பெஷாவருக்கு செல்ல நினைக்கின்றனர். பயணத்திற்கு தயாராகும் நிலையில்,

“லைலா புத்தகங்களைத் தன் பாதங்களின் கீழே போட்டாள். கண்களின் மீது ஒரு கையால் அரண் அமைத்தாள். மேலே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள்.

பிறகு, ஒரு ராட்சத உறுமல் கேட்டது.

அவளுக்குப் பின்னால், வெண்ணொளிச் சிதறல் ஒன்று எழுந்தது.

அவளுடைய பாதங்களுக்குக் கீழே பூமி நழுவியது.

சூடான, சக்திமிக்க எதுவோ ஒன்று, பின்னாலிருந்து பாய்ந்து அவளுக்குள் மோதியது. அவளுடைய செருப்புக்களை, அவளுடைய பாதங்களில் இருந்து அது உதறச்செய்தது. அவளை உயரே தூக்கியது. இதோ அவள் பறக்கிறாள், விண்ணில் சுற்றிச் சுழல்கிறாள், வானத்தைப் பார்க்கிறாள், பிறகு பூமியை, வானத்தை, பிறகு பூமியை. எரிந்துகொண்டிருந்த மரத்துண்டு ஒன்று அவளை உராய்ந்துகொண்டு பறந்தது. ஆயிரக்கணக்கான கண்ணாடிச்சில்லுகளும் அப்படியே பறந்ததில் அவளைச் சுற்றிப்பறந்த ஒவ்வொரு தனிச் சில்லையும் லைலா பார்த்தாள். மெல்லச் சுழன்று பறந்த அவற்றின் மீது சூரிய ஒளி பாய்ந்தது. சிறிய அழகான வானவில்கள் ஒளிர்ந்தன.

பிறகு, லைலா சுவரில் மோதினாள், நொறுங்கித் தரையில் வீழ்ந்தாள், அவளுடைய முகத்திலும், கைகளிலும், மண்ணும், கண்ணாடிச்சில்லும், கற்களும் குவித்தன. கடைசியாக அவள் உணர்ந்தது அவளுக்கு அருகில், மண்ணில், சப்தத்துடன் ஏதோ விழுந்ததை. ரத்தக்களரியான ஏதோ ஒன்று. அதன் மீது, சிவப்பு பாலத்தின் முனை, கனத்த பனிக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தது தெரிந்தது.

அவளைச்சுற்றி உருவங்கள் நகர்ந்தன3. மேற்கூரையிலிருந்து மஞ்சள் விளக்கொன்று எரிகிறது. ஒரு பெண்ணின் முகம் தோன்றுகிறது. அவளிடம் குனிகிறது.

லைலா மீண்டும் இருளுக்குள் கரைந்தாள்.”3 திடீரென நிகழ்ந்த ஏவுகணை தாக்குதலினால், தன் பெற்றோர்கள் இறக்க, மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பித்து, மரியத்திடம் உதவியைப் பெறுகிறாள். ரஷீத் அவளிடம் உறவுகொண்டு, அஸீஸைப் பெற்றெடுக்கிறாள். பிறகு, அவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல், இருவரும் பெஷாவருக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு நிகழும் பிரச்சினைகளையும் தாலிபன்களால் ஆப்கானில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் சொல்வதாக கதை நகர்கிறது.

ஆப்கானிஸ்தான் நிலத்தில் துப்பாக்கி குண்டுகள், ஏவுகணைத் தாக்குதல்கள், ரஷ்ய இராணுவம், தாலிபன்கள், அமெரிக்கத் துருப்புகள் மற்றும் சிமிகி, அரசு நடவடிக்கைகள், அரசியல் பூசல்கள், அல்கொய்தா போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கையே(நொடிக்கு நொடி) பெரும் இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆளாவதை இப்பிரதி முழுமைக்கும் காலித் பதிவுசெய்துள்ளார். 1959ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை ஏறத்தாழ 52 வருடங்களில் ஆப்கானிய மண்ணில் நிகழ்ந்த அரசியல் வரலாற்றினை உலகிற்கு எடுத்துரைத்துள்ளார். இத்துடன், இந்நிலத்தை தங்களுக்கு ஏதுவான முறையில் பயன்படுத்திக்கொண்ட வல்லரசு நாடுகளின் சூழ்ச்சியினையும் இதனால் தங்கள் நாட்டிற்குள் நிகழ்ந்த வன்முறைகளை, இழப்புகளை (World Trade Center, New York, The Pentagon - Sep 11, 2011) இந்நாவலினூடாக அறியநேர்கிறது.

“ஏப்ரல் 27 அன்று மரியத்தின் கேள்விக்கு, பலத்த வெடிச்சப்தமும், திடீரென்றெழுந்த கடுமையான முழங்கோசைகளும் பதிலாக வந்தன. வெறுங்கால்களோடு வரவேற்பறைக்கு ஓடியவள், ஏற்கனவே அங்கே கலைந்த தலையும், பனியனுமாக, சன்னல் கண்ணாடியில் உள்ளங்கைகளைப் பதித்துக்கொண்டு ரஷீத் நின்றிருப்பதைக் கண்டாள். அவனுக்கு அடுத்திருந்த சன்னலுக்கு அவள் ஓடினாள். வானத்தில் ராணுவ விமானங்கள் வடக்கு நோக்கியும் கிழக்குப்புறமாகவும் சீறிக்கொண்டு பறப்பதைப் பார்த்தாள். செவிடாக்கக்கூடிய அவற்றின் அலறல் அவளுடைய காதுகளை நோகச் செய்தது. தொலைதூரத்தில் பலத்த வெடியோசைகள் எதிரொலிக்க, திடீர் புகை மண்டலங்கள் கிளம்பி விண்ணுக்கு உயர்ந்தன.

“என்ன நடக்கிறது ரஷீத்? என்ன இது?” அவள் கேட்டாள்.

“இறைவனுக்குத்தான் தெரியும்.” அவன் முணுமுணுத்தான்.”4 யாரும் எதிர்பாராத சமயத்தில் நிகழும் ஏவுகணை தாக்குதல்களாலும் குண்டுவெடிப்புகளாலும் உயிர்கள் பலியாவதும் உடல் பாகங்கள் சேதமடைந்து ஊனமாவதும் தொடர்ந்து ஏற்படுகின்றன. தங்களுடைய வாழ்வே எவ்வித பிடிமானம் அற்று, எந்நேரமும் பதைபதைப்புடன்கூடிய சூழ்நிலை இருப்பதால்தான், அம்மக்கள் பெஷாவர், ஈரான், கனடா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். பாகிஸ்தானில் மட்டும் ஏறத்தாழ 2 மில்லியன் ஆப்கானிய மக்கள் அகதிகளான வந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்கப்பெறாமல், ஒரு பகுதி மக்கள் நாடோடிகளாக இருக்கும் நிலையில், உலகத்திலுள்ள பிறர் சகலவிதமான வசதி வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இதனை உலகம் தழுவிய பிரச்சினையாக அல்லாமல் தங்கள் தங்கள் நாடுகளுக்குரிய அரசியல் சார்ந்த பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. இதன் விளைவே தீவிரவாதம் உருவாவதற்கு ஒரு முக்கியக் காரணியாக அமைந்துவிடுகிறது.

“சோவியத் யூனியன், திகைப்பூட்டும் விதத்தில் படுவேகமாக நொறுங்கியது. சில வாரங்களுக்கொருமுறை, முறையே, லித்துவேனியா, எஸ்டோனியா, உக்ரைன் போன்ற குடியரசுகளுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட, பாபி வீடு திரும்பும் போதெல்லாம் இப்படியான செய்திகளோட வருவதாக லைலா நினைத்தாள். க்ரெம்ளினின் மீது சோவியத்தின் கொடி தாழப்பறந்தது. ரஷ்யக் குடியரசு பிறந்தது. ... 1978 இலிருந்து 1992 வரை பெண்கள் அனுபவித்துவந்த சுதந்திரமும் வாய்ப்புகளும் இப்போது மறந்துபோன விஷயங்களாகிவிட்டன. ஆஃப்கானிஸ்தானின் பெண்களுக்கு இது ஒரு நல்ல காலம் லைலா என்று பாபி சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. 1992 ஏப்ரலில், முஜாஹிதீன்களின் கைகளுக்கு ஆட்சி மாறியது முதல், ஆஃப்கானிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு என்று வழங்கப்பட்டது... அவர்கள் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தின் விதிமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, பெண்களை, முழுவதுமாக மூடிக்கொள்ளச் சொல்லும், உறவினரான ஒரு ஆணின் துணையில்லாமல் அவர்கள் பயணம் செய்வதைத் தடுக்கும், முறையற்ற தொடர்புகளுக்கு கல்லால் அடித்துக்கொலை செய்யும் தண்டனையை அளிக்கும், ஷரியத் மற்றும் கண்டிப்பான இஸ்லாமியச் சட்டங்களை இயற்றத்துவங்கினார்கள்.”5 உலக வல்லரசுகள் செய்த சூழ்ச்சியால், சோவியத் யூனியன் 1992இல் நொறுங்கியது. அதனைச் சார்ந்த பிற நாடுகள் சோவியத்துடனான தொடர்பை இழந்தன. இவ்வல்லரசுகளை எதிர்க்கும் விதமாகவும் தன்னுடனான நாட்டை இணைக்க முயற்சிக்கும் போக்கிலேயே இன்றைய உக்ரைனூடான போரை ரஷ்யா தொடுத்துள்ளது எனலாம்.

ஆஃப்கானில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கப் பெற்றுள்ளது. உயர்கல்வி வரையிலும் அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் பணிபுரிந்தார்கள். இதனைத்தான் காலித் ஹூசைனி தன் எழுத்துகளில் பதிவுசெய்கிறார். ஆனால், தற்போது(30.12.2022-பிபிசி) பெண்கள் கல்விகற்கும் உயர்கல்வி நிறுவனங்களில், தாலிபன்கள் உட்புகுந்து, கல்வி கற்பதற்குத் தடையை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு, உலகெங்கிலும் படைக்கப்படும் புனைகதை எழுத்துகளூடாக கடந்தகால மற்றும் சமகால பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிகின்றன.

“இப்போது தொலைக்காட்சி பிபிசி அலைவரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. திரையில் ஒரு கட்டிடம், ஒரு கோபுரம் தெரிகிறது, அதன் உச்சி மாடிகளிலிருந்து புகை அலைபோல் எழுகிறது. தாரிக் சயீதிடம் ஏதோ சொல்ல, சயீத் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே திரையின் மூலையிலிருந்து ஒரு விமானம் தோன்றுகிறது. அடுத்திருக்கும் கோபுரத்தில் அது மோதி, லைலா அதுவரை பார்த்திருந்த அத்தனை நெருப்புப்பந்துகளையும் ஒன்றுமில்லாமல் செய்யும் நெருப்புக்குழம்பாக அது வெடிக்கிறது...

இரண்டு மணி நேரங்களுக்குள்ளாக இரண்டு கோபுரங்களுமே சிதிலமாயின.

சிறிது நேரத்திலேயே எல்லாத் தொலைக்காட்சி நிலையங்களும் ஆஃப்கானிஸ்தானைப் பற்றியும், தாலிபானைப் பற்றியும், ஓசாமா பின்லேடனைப் பற்றியும் பேசலாயின.

“பின்லேடனைப் பற்றி தாலிபன் சொன்னதைக் கேட்டாயா?” தாரிக் கேட்கிறான்...

“கேட்டேன்” என்கிறாள்.

பின்லேடன் ஆஃப்கானிஸ்தானில் அடைக்கலமாகியிருக்கும் ஒரு மெஹ்மான், விருந்தினன் என்றும் பாஷ்டூன்களின் சம்பிரதாயப்படி விருந்தினர்களைக் கைவிடக் கூடாதென்றும் தாலிபான் அநிவித்திருக்கிறார்கள்.”6 கடந்த 2011ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்த பதிவும் அதற்கு சார்பாகச் செயல்பட்ட தாலிபன்களின் நிலையையும் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. உலகநாடுகளில் நிகழ்த்தப்படுகிற கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் அரசியல் காரண, காரியங்களால் ஏற்படுகின்றது. இதன்வழி, அந்நாடு சில சாதக, பாதகங்களைச் சந்திக்க நேர்வதோடு, உலக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வழிவகைகளையும் ஆராய்கிறது.

21ஆம் நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியினூடாக, இதுபோன்ற எழுத்துருவாக்கப் படைப்புகளை வாசிப்பதன் மூலமாக உலகளாவிய நாடுகளின் இயங்கியல் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகின்றது. கடந்தகாலத்தில் ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் சர்வதிகார ஆட்சிக்கும் தற்போது தத்தம் நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் அரசியல் ஆட்சிக்கும் இடையேயான இரட்டை எதிர்மறையை நேமிச்சந்த்ரா மற்றும் காலித் ஹூசைனியின் சாரமான எழுத்துகள் சிந்திக்கச் வைக்கின்றன. “அரசியலற்ற இலக்கியத்தைப் படைப்பவர்கள் கடமை தவறியவர்களாக, துரோகிகளாகக் கருதப்படுவதோடு, அவர்கள் ஆக்கிய கவிதையும் நாவலும் நாடகமும் புறக்கணிப்பு அபாயத்துக்கு ஆளாகின்றன. ஒரு கலைஞனாக, வெறும் கலைஞனாக மட்டுமே இருப்பது எங்கள் நாடுகளில் ஒரு அநியாயமான குற்றமாக, அரசியல் பாவமாகக் கருதப்படுவதுண்டு”7 என லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான ‘மரியோ வர்காஸ் யோசா’ கூறியிருப்பது, இக்காலகட்டத்தில் படைக்கப்படும் சில படைப்புகளுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியது. இதனை அடியொற்றியே ‘யாத்வஷேம்’, ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ என்ற இரு படைப்புகளும் தன்னளவிலும் உலகம்சார் அளவிலும் தனக்கான இடத்தைப் பெறுகின்றன.

மேற்கோள் விளக்கக் குறிப்புகள்

1. நேமிச்சந்த்ரா, ‘யாத்வஷேம்’, ப.109.

2. மேலது., ப.127.

3. காலித் ஹூசைனி, ஆயிரம் சூரியப் பேரொளி, பக். 232-233.

4. மேலது., பக். 123-124.

5. மேலது., பக். 191, 311.

6. மேலது., பக். 459-460.

7. மேலது., ப. 7.

- முனைவர் செ.ர.கார்த்திக் குமரன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை தியாகராசர் கல்லூரி மதுரை - 625 009