vainavasகாதரின் யங்: (2021) கிளர்ந்தெழுந்த மாற்றங்கள்

(தமிழ்நாட்டின் சமயம், சாதி, அரசியலில் பிராமணர் அல்லாத தென்கலை வைணவர்களின் பங்களிப்பு).

Katherine Young (2021)Turbulent Transformations. Non Brahmin srivaisnavas on Religion, Caste And Politics in Tamil Nadu. Orient Black Swan, Hyderabad. 500 029

இந்தியத் தெய்வங்கள் வரலாற்றில் அறுவகைத் தெய்வங்கள் தொன்மையான தெய்வங்களாக இடம் பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் இத்தெய்வங்களை மையமாகக் கொண்டு ஆறு சமய நெறிகள் உருவாயின. இச் சமய நெறிகளை சண்மதம் (அறுவகைச் சமயம்) என்றழைப்பது மரபாகும். இவற்றுள் ஒன்றே வைணவம். விஷ்ணு, நாராயணன், கிருஷ்ணன், இராமன், என்ற பெயர்களில் அழைக்கப்படும் தெய்வமே இச் சமயத்தின் தெய்வமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் விஷ்ணு வழிபாடு என்பது தொன்மையான ஒன்று. ஆனால் திருமால் என்ற பெயராலேயே சங்க இலக்கியங்களில் விஷ்ணு அழைக்கப்பட்டுள்ளார். ஐந்திணைகளாகத் தமிழகத்தின் நிலப்பரப்பைப் பகுத்திருந்த பண்டைத் தமிழர்கள் ஒவ்வொரு திணைக்கும் தனித்தனியான கடவுளர்களையும் கொண்டிருந்தார்கள். இவ்வகையில் முல்லைத் திணைக்குரிய கடவுளாகத் திருமால் சுட்டப்படுள்ளார். ‘சங்கப் பாக்களில் மிகுதியாகக் குறிக்கப் பெறும் தெய்வமாகத் திருமால் திகழ்கிறார்’ (கந்தசாமி.சோ.ந.2016:181).வேதசமயப் பரவலால் திருமால் வழிபாடு விஷ்ணு வழிபாட்டுடன் இணைக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு.

சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் திருமாலைக் குறித்த பதிவுகளில் வடமொழிப் புராணச் செய்திகளின் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது.இது பண்பாடு ஏற்றலின் வெளிப்பாடு என்று கூறவும் இடமுள்ளது. பல்லவர் ஆட்சியிலும் பிற்காலச் சோழர்களின் ஆட்சியிலும் வைணவம்

பரவியிருந்ததைக் கல்வெட்டுக்கள் செப்பேடுகள் துணையால் அறியமுடிகிறது. இவ்விரு சமயங்களும் தம்முள் முரண்பட்டு நின்றமை குறித்த இலக்கிய வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. மற்றொரு பக்கம் இவ்விரு சமயங்களும் வேத மறுப்புச் சமயங்களை சமணம் பௌத்தம் இரண்டுடனும் பகைமை பாராட்டியது குறித்து இவ்விரு சமயங்களின் இலக்கியங்களில் பதிவுகள் உள்ளன. இச் செய்திகளின் துணையால் சைவம் வைணவம் என்ற இரண்டும் இன்று இருப்பது போல் இந்து என்ற பொது அடையாளத்துக்குள் அடங்காது தனித்தனி சமயங்களாகவே வழக்கில் இருந்துள்ளன என்பதை உணர முடிகிறது.

வைணவ சமயப்பிரிவுகள்:

கி.பி.13,14 ஆவது நூற்றாண்டளவில் வைணவ நெறியில் தென்கலை, வடகலை என்ற பெயர்களில் இரண்டு பிரிவுகள் உருவாயின. இவற்றுள் தென்கலை என்பது தமிழில் தோன்றிய நாலாயிர திவ்வியபிரபந்தத்தை பிரமாணமாகக் கொண்டது.வடகலை என்பது வடமொழியில் எழுதப்பட்ட நூல்களைப் பிரமாணமாகக் கொண்டது. திருமாலை முழுமுதற் கடவுளாக இரு பிரிவினரும் ஏற்றுக் கொண்டாலும் உயிர்களுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவு குறித்தும் சமயச் சடங்குகளிலும் இரு பிரிவினருக்கும் இடையே வேறுபாடு உண்டு. வைணவர்களின் சமயச் சின்னமான ஊர்த்துவ புண்டரா (திருநாமம்) நெற்றியில் இடுவதில் கூட இரு பிரிவினரும் தனித்துவத்தைக் கடைப் பிடிக்கின்றனர். வடகலையார் ஆங்கில எழுத்தான ஹி வடிவில் திருமண் இட, தென்கலையார் ஆங்கில எழுத்தான U வடிவில் வெண்ணிறத் திருமண் இட்டு நடுவில் சிவப்பு வண்ணக்கோடு ஒன்றையும் இடுகின்றனர். வெண்மை நிறக்கோடுகள் இரண்டும் திருமாலின் இரு திருப்பாதங்களின் குறியீடாகவும் வெண்ணிறமானது தூய்மையின் குறியீடாகவும் அமைகின்றன. இரு கோடுகளுக்கும் நடுவில் உள்ள செந்நிறக் கோடானது இலக்குமியையும் அவரது அருளையும் நினைவூட்டுவது. வைணவப் புண்ணியத் தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தை வடகலையார் சிறப்புக்குரியதாகக் கருத தென்கலையார் திருஅரங்கத்தைக் கருதுகின்றனர்.

வைணவத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்ற இரு சாதிப் பிரிவினர்களும் உள்ளனர். இவர்களுள் பிராமணர் அல்லாதார் மிகுதியாக இடம் பெற்ற பிரிவாகத் தென்கலை வைணவம் உள்ளது.

நூலாசிரியரும் நூலும்:

இந்நூலாசிரியரான காதரின் யங் தகைசால் பேராசிரியராக பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியாவில் வாழ்கிறார்.

தமிழ்நாட்டில் சைவசமயத்தைப் பின்பற்றி வாழும் பிராமணர் அல்லாத சைவர்களைக் குறித்து அதிக அளவில் எழுதப்பட்டுள்ளது என்றும் அந்த அளவுக்கு வைணவர்களாக வாழும் பிராமணர் அல்லாதார் குறித்து எழுதப்படவில்லை என்றும் இந்நூலாசிரியர் கருதுகிறார். இதன் அடிப்படையில் வைணவத்தின் உட்பிரிவாக விளங்கும் தென்கலைப் பிரிவு சார்ந்த பிராமணர் அல்லாதாரை மையமாக் கொண்டு இந்நூலைத் தாம் எழுதியுள்ளதாகவும் தென்கலை வைணவமானது தனக்கு மிகவும் அறிமுகமான ஆய்வுக்களம் என்றும் நூலின் அறிமுக உரையில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்நூலுக்காக 2006க்கும் 2016க்கும் இடைப்பட்ட கால அளவில் இருபதுக்கும் மேற்பட்டோரிடம் நிகழ்த்திய நேர்காணல்களைப் பயன்படுத்தியுள்ளதகவும் குறிப்பிட்டுள்ளார்.

turbulent transformationsஇந் நேர்காணல்கள் சென்னை அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி என்ற இடங்களில் பெரும்பாலும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவ்வகையில் வாய்மொழி வரலாற்றுச் சான்றுகள் இந்நூலுக்கான முக்கிய தரவுகளாக அமைந்துள்ளன. எனினும் இவை போதுமானவையல்ல என்பது ஆசிரியரின் கருத்தாகும்.இது தொடர்பாக அவர் கூறும் செய்திகள் கள ஆய்வு செய்வோர் அவசியம் அறிந்து கொள்ளவேண்டியவை.

இவர் குறிப்பிடும் மற்றொரு முக்கிய செய்தி தகவலாளர்களில் பெரும்பான்மையோர் ஆண்கள் என்பதாகும். இதற்குக் காரணம் ஸ்ரீவைஷ்ணவத்தின் சமயத் தலைமை என்பது ஆண்களை மையமாகக் கொண்டிருப்பதுதான். ஆச்சார்யார்கள், ஜீயர்கள், அர்ச்சகர்கள், சபைகளின் தலைவர்கள், நூல்/இதழ் வெளியிட்டாளர்கள்,கட்டளை அதிகாரிகள் என்போர் எல்லாம் ஆண்களாகவே உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமது அடுத்து வரும் இனக்குழு வரைவியல் நூலானது வைஷ்ணவ சமயப் பெண்களின் சமயம், சமயத் தலைமைத்துவம் குறித்த பார்வை, சாதி, அரசியல் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நூலில் மதம், சாதி, அரசியல் என்ற மூன்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் இவை மூன்றும் ஆண்களை மையமாகக் கொண்டிருப்பதால் அவர்களைக் குறித்தே அதிகளவில் பதிவிட நேரிட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

சுருங்கக் கூறின் தமது ஆய்வானது சமயம், சாதி, அரசியல், என்பனவற்றிற்கு இடையிலான உறவைக் குறித்தது என்றாலும் ஆண்களின் சமயத்தலைமையை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். வைணவர் அல்லாதோர் இந்நூலை இடர்ப்பாடின்றிப் புரிந்து கொள்ள ஏதுவாக வைணவத்தின் தலைமைக் கடவுள், புனித நூல்கள், புண்ணியத் தலங்கள், சமயத் தலைமை, தொடக்க நிலைச்சடங்கு (Initiation) வழிபாடு, கோயில்கள், வைணவத்தில் பெண்கள் என்பன குறித்த சுருக்கமான அறிமுகம் இடம் பெற்றுள்ளது. வைணவம் அறியாதோர் வைணவம் குறித்து அறிந்து கொள்ளவும் இந்நூல் வாசிப்பில் இடர்ப்பாடு அடையாதிருக்கவும் இது உதவுகிறது.

வைணவராதல்:

வைணவம் குறித்த தம் நூலின் அடிப்படைச் செய்திகளின் அறிமுகத்தை அடுத்து வட இந்திய வைணவர்களின் இடப் பெயர்ச்சி குறித்து நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். வட இந்தியாவில் நாராயணர், விஷ்ணு, கிருஷ்ணர் என்ற பெயர்களில் உள்ள கடவுளர்களை வழிபாடு செய்து வந்தவர்கள் மகாபாரத காலத்தில் சாதியப் படிநிலையில் பெற்றிருந்த கீழான இடத்தின் அடிப்படையில் அவமரியாதைக்கும் கண்ணியக் குறைவுக்கும் சமூக வாழ்வில் ஆளாகிவந்தனர். இதை எதிர்க்கும் வழிமுறையாகத் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர்.இதற்கான தடயங்கள் வைணவத்தின் புனித நூலான திவ்விய பிரபந்தம் நூலில் காணப்படுகின்றன.

திவ்விய பிரபந்தம் ஒரு தொகுப்பு நூல். இதில் இடம் பெற்றுள்ள பாசுரங்களைப் பாடிய ஆழ்வார்கள் பல்வேறு சாதிகளைச் சேரந்தவர்கள். முதல் நான்கு ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களின் சாதி, தொழில் தொடர்பான அடையாளங்களை அவர்களின் பாசுரங்கள் லழிக் கண்டறிய முடியவில்லை. திருமங்கை ஆழ்வார் குறுநிலமன்னர். குலசேகர ஆழ்வாரையும் இவருடன் சேர்த்துக் கொள்ளலாம். நம்மாழ்வார், நில உடைமையாளராகவோ நிர்வாகியாக இருக்கலாம்.தொண்டரடிப் பொடியாழ்வாரும் பெரியாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரும் பிராமணர்கள். ஆண்டாள் பெரியாழ்வாரின் மகள். வைணவ மரபு நூல்களில் திருப்பாணாழ்வார் நான்கு வருணத்திற்கு வெளியில் இருக்கும் ஐந்தாம் வருணத்தைச் சேர்ந்தவராகக் குறிப்பிடப்படுகிறர். ஆனால் அவரது செய்யுள்களில் இதை உறுதிப்படுத்தும் வகையில் சான்றுகள் எவையும் இல்லை என்பது இந்நூலாசிரியரின் கருத்தாக உள்ளது.

இவ்வாறு அனைத்துச் சாதியினரையும் உள்ளிழுத்துக்கொண்டு அவர்களுக்கு வீடுபேறு பெறும் வாய்ப்பை வைணவம் வழங்கியது என்பது நூலாசிரியரின் கருத்தாக உள்ளது. மேலும் வைணவத்தால் உள்வாங்கப்படுபவர்கள் பொருளியல் பயன் பெற்றார்கள் என்றும் சமூக நல்லிணக்கத்தையும் மதிப்பையும் வழங்கியதுடன் வேளாண் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து செல்வதையும் தடுத்து நிறுத்தியது என்றும் குறிப்பிடுகிறார்.

அவ்வப்போது மன்னர்கள் வைணவக் கோயில்களின் புரவலர்களாகவும் விளங்கியுள்ளார்கள்.இதனால் வைணவக் கோயில்கள் கட்டிடக்கலை நுட்பத்துடனும் தொலைவில் இருந்து காணும்போதே தெரியும் கோபுரங்களுடனும் உருப்பெற்றன.சாகுபடிக்கான நிலங்களையும் கொடையாகப் பெற்றன.

பன்னிரு ஆழ்வார்களும் அவர்களுக்குப் பின் வந்தோரும் வட இந்தியாவில் நிலவிய வருண அமைப்புடன் கூடிய சமூகத்தை அறிந்திருந்தனர். தர்ம சாஸ்திரங்களிலும் வருணப்பாகுபாடு இடம் பெற்றுள்ளது. வருணப் பாகுபாடு குறித்த பிராமணர்களின் ஆதரவு நிலைப்பாடை ஆழ்வார்கள் கடிந்துரைத்துள்ளனர். பிராமணர்கள் உயர்குடியினர் ஆதரவுப்போக்கு அருகிய நிலையில் தொடக்க காலக் கோயில்களில் வணிகர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் போன்றோரே புரவலர்களாக இருந்துள்ளனர்.

வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் அதிகாரத்தன்மை கொண்ட பிராமணர்கள் தாமாகவும் உள்ளூர் ஆட்சியாளர்களின் அழைப்பினாலும் சலுகை பெற்ற பிரிவினராகக் கோயில் நிர்வாகத்தில் இடம் பெறலானார்கள். இது வட இந்திய முறையிலான மேலாதிக்கத்தை அறிமுகம் செய்தது. இது வைணவர் என்ற பொதுஅடையாளத்திற்குள் இயங்கிவந்தோரின் சமய வாழ்வில் பிணக்கை ஏற்படுத்தியது

சாதியைக் கைவிடாமல் அதே நேரத்தில் வைணவர் என்ற ஒரு பொதுவான அடையாளம் கொண்ட சமூகக்குழுவை உருவாக்கிய ஆழ்வார்களைப் பின்பற்றிய வைணவர்கள் ஒரு தரப்பிலும் வருண அமைப்பை ஆதரித்த வைணவர்கள் ஒரு தரப்பிலும் என எதிர் எதிராக நின்றனர். இவ்விரு தரப்பினரும் வைணவ சமயம் சார்ந்த நூல்களை முன்வைத்து வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பான எடுத்துக் காட்டுகள் சிலவற்றை நூலாசிரியர் தந்துள்ளார். சான்றாக,

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து

நலந்தானில்லாத சண்டாளர் களாகினும்

வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு

ஆள்என்றுள் கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே

என்ற நம்மாழ்வாரின் பாசுரக் கருத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இது போல் வடகலை வைணவப் பெரியோர்களது கருத்துக்களையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

சமய அரசியல்

காலனிய ஆட்சிக் காலத்தில் சைவ வைணவ சமயங்கள் (இந்து) பெருமளவில் அரசியலாக்கப்பட்டது என்று கூறும் நூலாசிரியர் அதற்கான காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கருதுகிறார்:

  • கிறித்தவ மிஷனரிகளின் எதிர்மறை விமர்சனங்கள்
  • திராவிட மொழிகள், பண்பாடு குறித்த புதிய கருத்துக்களின் உருவாக்கம்
  • தலித்துகள் ஒன்று திரளுதல்
  • சைவ வைணவர்களுக்கிடையிலான போட்டி
  • பிராமணர், பிராமணர் அல்லாதாரிடையிலான உறவில் உருவான பிணக்கு
  • காலனிய அரசின் செயல்பாடுகள் (சமயச்சார்பின்மை, பிராமணர் அல்லாத நிலக்கிழார்களுடனான கூட்டு)

சாதிய முரண்பாடென்பது பிராமணர், பிராமணர் அல்லாதாரின் மேட்டிமைப் பிரிவினருக்கு இடையே மட்டுமின்றி பிராமணர் அல்லாதாரின் மேட்டிமையோருக்கும் அடித்தளமக்கள் பிரிவினருக்கும் இடையேயும் உருவாகி வளர்ந்தது.

பிராமணர் அல்லதாத தென்கலை வைணவர்களில் குறிப்பிடத்தக்க சில ஆளுமைகளை அறிமுகம் செய்யும் நூலாசிரியர் பெரியாரை முதலாவதாக அறிமுகம் செய்துள்ளார். இது ஒரு வகையில் வேடிக்கையான ஒன்றுதான். தென்கலை வைணவக் குடும்பத்தில் பிறந்தவராய் இருந்தாலும் அவர் ஓர் இறைமறுப்பாளராகவே வாழ்ந்து மறைந்தார்.

பெரியார்:

அவரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பை எழுதியுள்ளதுடன் சமய எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, புராண எதிர்ப்பு, பட்டியல் சாதியினரின் கோவில் நுழைவுக்கான கோயில் நுழைவுச் சட்டங்கள் உருவானதில் அவரது பங்களிப்பு, நீதிக்கட்சியுடனான அவரது உறவு என்பன குறித்தும் மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெரியாரின் இச் செயல்படுகள் நிகழ்வதற்கான சமூக வரலாற்றுச் சூழல் அன்று நிலவியதை அழுத்தமாகக் குறிப்பிடத் தவறிவிட்டார்.

பாகவத (பக்தர்கள், அடியார்கள்) ஆளுமைகள்:

பிராமணர் அல்லாத ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களை அடியார்களாக அறிவித்துக் கொள்வது வழக்கம். காலனிய ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த பிராமணர் அல்லாத தென்கலை வைணவ அடியார்களில் சிலர் வைணவ சமய இறையியலைக் கற்றுத் தேர்ந்திருந்தனர். இவர்கள் வைணவ இறையியலை விளக்கியும் திவ்விய பிரபந்தத்தின் செய்யுள்களுக்குப் பொருள்கூறியும் சொற்பொழிவுகள் ஆற்றிவந்தனர். அத்துடன் ஒருவரை வைணவராக்கும் சமாஸ்ஸிராயணம் என்ற தொடக்க நிலைச் சடங்கினையும் (Initiation Ritual) நடத்தி வைத்தனர். இச் சடங்கை நடத்திவைப்பவர்களாக பிராமண ஆசாரியர்களும் ஜீயர்களுமே இருந்துள்ள நிலையில் பிராமணர் அல்லாத பாகவதர்கள் இதை மேற்கொண்டமை குறிப்பிடத் தக்கது.

நூலின் இரண்டாவது இயலில் காலனிய ஆட்சியில் வாழ்ந்த பிராமணர் அல்லாத இப்பாகவதர்கள் எழுவரைக் குறித்த சில செய்திகளைச் சேகரித்து ஆவணப்படுத்தி உள்ளார். இவர்களின் பெயர்கள் வருமாறு:

(1) இராமானுஜ நாவலர். (2) புவனகிரி ஏகாங்கி சுவாமிகள் (3) நாராயண தாசர். (4) கோயில் ஏகாங்கி சுவாமிகள் (5) கிருஷ்ண பிள்ளை (6) அப்பாவு முதலியார் (7) பி.ஆர்.புருஷோத்தம நாயுடு. இவர்களது பணிகள் குறித்து அவர் எழுதியுள்ள செய்திகளின் சுருக்கம் வருமாறு.

இராமானுஜ நாவலர் (1829-1921)

இவரைப் புதுவை நாவலர் என்றும் குறிப்பிடுவர். பலுஜாநயுடு குடும்பத்தில் பதுச்சேரிக்கு வடக்கிலுள்ள எப்பாக்கம் என்ற ஊரில் பிறந்த இவர்

திருக்கோயிலூரில் உள்ள எம்பெருமானார் மடத்தின் ஜீயர் வைணவர்களுக்குரிய தொடக்கநிலைச் சடங்கை இவருக்கு நடத்திவைத்தார். பின்னர் திருநெல்வேலி நாங்குநேரி வானமாமலை மடத்தின் பட்டர்பிரான் ஜீயரிடம் தமிழ், வடமொழி தெலுங்கு ஆகிய மொழிகளையும் ஸ்ரீவைஷ்ணவத்தின் தத்துவங்களையும் கற்றறிந்தார். அவரது அறிவாற்றலையும் கவிஞர், சொற்பொழிவாளர், தத்துவவாதி என்று திகழ்ந்தமையையும் பாராட்டி வைணவ அறிஞர்கள் நாவலர் என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினர்.

பத்மோத்ரா புராணம் என்ற வடமொழிப் புராணத்தை 4,123 செய்யுட்களாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது பக்தரான யாதவர் சமூகத்தைச் சேர்ந்த பொன்னுரங்கம் பிள்ளை என்பவரின் வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி சென்று ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தெருவில் தம் இறுதிக்காலம் வரை வாழ்ந்துள்ளார். செல்வகேசவராய முதலியார் தொகுத்து வெளியிட்ட தமிழ் இலக்கிய அகராதியில் இவர் எழுதிய நூல்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. ஓவிய வடிவிலான இவரது உருவம் வணக்கத்திற்குரியதாக இருந்துள்ளது. அவரது உருவச் சிலைகளும் நிறுவப்பட்டு வழிபடப் படுவதாகக் கூறும் நூலாசிரியர் அவரது உருவச்சிலை ஒன்றின் ஒளிப்படத்தையும் நூலில் இடம் பெறச் செய்துள்ளார். எப்பாக்கத்தில் உள்ள அவரது படிமத்திற்கு கார்த்திகை ஓரை அன்று வன்னியர், யாதவர் சமூகத்தினர் நூற்றுக் கணக்கில் திரண்டு வருகிறார்கள். வழிபாட்டை நடத்திவைக்கும் பணியைச் செய்பவர் பிராமணர் அல்லாதவர் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இராமானுஜ நாவலரை மையமாக் கொண்டு மீவியற்கைத் தன்மை கொண்ட கதைகள் உருப்பெற்றுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளார். சைவர்களுடன் அவர் முரண்பட்டு நின்று வழக்குத் தொடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்று ஏனைய அறுவர் குறித்த செய்திகள் நூலில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் ஆய்வு நோக்கில் சில அவதானிப்புகளையும் இச் செய்திகளை அடுத்துத் தந்துள்ளார். இவை குறித்து அடுத்த இதழில் காண்போம்.

(தொடரும்)

ஆ.சிவசுப்பிரமணியன், தமிழர் சமூக வரலாற்று ஆய்வாளர், மார்க்சிய சிந்தனையாளர்

Pin It