பார்ப்பனத் தோழர்களே ! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லேன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.
சமுதாய துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல. இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.
இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கை குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது.
மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் உடல்நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.
(பெரியார் - ‘விடுதலை’ 19.05.1948)
***
பொழிலன், ஜான் மண்டேலா பிணையில் விடுதலை!
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த தமிழ்நாடு விழா கொண்டா டியதற்காகக் கைது செய்யப்பட்டு மதுராந்தகம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் மற்றும் ஜான் மண்டேலா 10.11.2020 மாலை 6.00 மணியளவில் பிணையில் விடுதலையானார்கள்.
சிறையில் இருந்து விடுதலையானதும் மதுராந்தகம் நகரில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
***
வினா - விடை
• உள்துறை அமைச்சர் அமீத்ஷா தமிழகம் வருகிறார் என்றவுடனேயே எதிர் கட்சிகள் பயந்து நடுங்குகின்றன.
- பா.ஜ.க. தலைவர் முருகன்
அப்படியே சீன எல்லைக்கும் அவர் விமானத்தைத் திருப்புங்க... சீன இராணுவமே ஓட்டமெடுத்து விடும்.
• திருச்செந்தூர் - திருவண்ணாமலை திருவிழாக்களுக்கு பக்தர்கள் வர வேண்டாம். - தமிழக அரசு அறிவிப்பு
பக்தர்கள் அரசு பேச்சைக் கேட்பார்கள்; அவர்கள் ஒன்றும் பா.ஜ.க. அல்ல.
• நான் ஊழல் செய்யவில்லை; பதவி விலக மாட்டேன். - துணைவேந்தர் சூரப்பா
ம்... ம்... பஞ்சாயத்தை கலையுங்க... முடிஞ்சு போச்சு; கிளம்பு... கிளம்பு...
• நித்திஷ் குமார் கூட்டணி மகாபந்தன் கூட்டணியைவிட கூடுதலாகப் பெற்றது 12,270 வாக்குகள்தான். - தேஜஸ் யாதவ் பேட்டி
எங்கேயோ, தேர்தல் ஆணையம் கோட்டை விட்டுவிட்டது; அடுத்து வரும் தேர்தலில் சரி செய்து விடலாம்.
- விடுதலை இராசேந்திரன்