காந்தி, பாரதியார், தாகூர் ஆகியோரைப் பற்றி அறிவோம். எல்லாரினும் மேலாக இராமேசுவரத்து தமிழரும் மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் பற்றி அண்மைக் காலத்திலேனும் நன்றாக அறியலாம். இதுபோல் சந்திரயான் புகழ் மயில்சாமி அண்ணாதுரையையும் நாம் அறிவோம். இவர்கள் எல்லாரும் தாய்மொழி வழிக்கல்வியை வற்புறுத்தியவர்கள். அப்துல் கலாமும், மயில்சாமி அண்ணாதுரையும் தமிழ்வழிப் படித்து உயர்ந்தவர்கள். அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது என்பதே இவர்கள் அனைவரும் எடுத்துரைக்கும் கருத்தாகும். சொல்லால் மட்டுமின்றிச் செயலாலும் காட்டியவர்கள். இவர்கள் கருத்துக்கு நாம் இன்றும் சரியாகக் காது கொடுக்கவில்லை. காது கொடுக்க நினைத்தபொழுதும் பல சறுக்குகள். இதனால் நமது கல்வியும், மனப்பாடக் கல்வியாகி ஒரு வட்டத்துக்குள் நின்றுவிட்டது. இந்திய அரசு அமைத்த பல்வேறு குழுக்கள் தாய்மொழி வழிக்கல்வியின் நன்மை குறித்து கருத்துரைத்துள்ளன. இது இன்றும் எதிர்பார்த்தபடி செயல் வடிவு பெறவில்லை. இதற்குக் காரணம் எல்லாம் அறிந்தவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் மேட்டுக்குடி மக்களின் மனப்பாங்குதான். தங்களின் வளமான வாழ்வுக்குப் போட்டியாக மற்றவர்கள் வந்துவிடக்கூடாது என்பதில் உள்ள அவர்களின் தன்னலம்தான் இந்தியக் கல்விச் சூழலையே கெடுத்துக் கொண்டிருக்கிறது.
தாய்மொழி வழிக்கல்விக்கு முதன்மை கொடுத்து தேவையான நடவடிக்கைகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டும். இது நம்முடைய குரல் மட்டுமில்லை. வளர்ந்த நாடுகளின் குரல்.
உலக நாடுகளில் பயிற்று மொழி
1971-ஆம் ஆண்டு பிரெஞ்சின் தலைமை அமைச்சர் சேச்சு சாபால்டெல்யி விடுத்த கட்டளை பிரெஞ்சு மொழிக்குக் கிடைத்த பெரிய அரவணைப்பாகும். பிரெஞ்சில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களில் பட்டியல் உருவாக்கி, அவற்றுக்கேற்ற தனி பிரெஞ்சுச் சொற்களை உருவாக்குங்கள் என்பதுதான் அவர் இட்ட கட்டளை. இதன் அடிப்படையில் பிரெஞ்சுக்கழகம் தோன்றியது, இது ஒரு பேரகராதியை வெளியிட்டது, இது மொழி ஆதிக்கத்திற்குப் பேருதவி புரிந்தது. இக்காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் பிரெஞ்சுக்கழகத்தின் பார்வைக்கு வந்த பின்னரே வெளியிடப்பட்டன, பிரெஞ்சு மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதைத் தடுப்பதற்காக 1975இல் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.
பாரிசில் ‘அதலப்’ என்ற தனியார் அமைப்பு மூலம் பிரெஞ்சு மொழியில் கலப்பு நடப்பது தடுக்கப்படுகிறது. இவ்வமைப்பு பிரெஞ்சு மொழியில் எவரேனும் பிறமொழிச் சொல்லைக் கலந்தால் அவர் மீது வழக்குத் தொடுக்கும். அவரைத் தண்டம் கட்டச் செய்யும். இதன் விளைவாகக் கலந்து வழங்கும் ‘பிரெஞ்சு பிரான்லெய்சு’ ஒழிக்கப்படும்
என்றாயிற்று. இது போலவே பிரெஞ்சு செய்தித் துறையின் சட்டத்தால் (19-12-1976) பிற மொழிச் சொற்களைக் கலப்படம் செய்தால் அவருக்கு 100 பிராங்குகள் தண்டம் விதிக்கப்படும், இது பிரெஞ்சு மொழி வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் உதவியிருக்கக் கூடும் என்பது நமக்குச் சொல்லாமலே புரியும்.
இந்தோனிசியா
இந்தோனிசியாவில் இரண்டாம் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு நூற்றுக்கு மேற்பட்ட மொழி வழக்குகள், வட்டார மொழி வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்திப் பொது நிலை வழக்கு ஒன்றை உருவாக்கி அதற்குப் ‘பாஷா இந்தோனிசியா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இம்மொழியே பாடமொழியாக இருக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டது. இதில் ஒரு முக்கியமான செய்தி என்னவெனில் மொழி சார்பான இம்முடிவில் கட்சி வேறுபாடு காரணமாக எந்தக் குழப்பமும் வர இடம் தரக்கூடாது என்று அவர்களுக்குள் ஒரு மரபு தழுவிய ஒப்பந்தம் நிலவுகிறது. இவ்வாணைக்குப் பிறகு அரசே நூல் எழுதும் சிலரை நியமித்தது. அவர்களுக்கு உதவியாக மொழி வல்லுநர்களையும் உதவிக்கு அழைத்து அறிவியல் மொழியை வளர்த்தனர். அதன் பிறகு, ‘பாஷா இந்தோனிசியாவிலேதான்’ பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை நூல்கள் எல்லாம் வெளிவருகின்றன.
இந்தோனிசியாவைப் போல் மலேசியாவும் நமக்குப் பின்னர் உரிமை பெற்ற நாடு. இங்கும் பல்கலைக் கழகக் கல்வி வரை அவர்கள் தாய்மொழியிலேயே நடைபெறச் செய்துள்ளனர்.
இஸ்ரேல்
இஸ்ரேல் 1948இல் உருவாக்கப்பட்டது. உலகின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இஸ்ரேலில் குடியேறியதால் பல மொழி பேசப்பட்டது. யூதர்களின் சமய மொழி, ‘ஈப்ரு’. இதை மக்கள் அனைருவரும் ஏற்றுக்கொண்டனர். 1953இல், ‘ஈப்ரு’, மொழிக் கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் ஈப்ரு மொழி, மக்கள் மொழியாக்கப்பட்டது. இதற்கு உறுதுணை அவர்களின் மொழி மேம்பாட்டுத் திட்டம். இன்று அகர வரிசைப் பாடத்திலிருந்து முதுமுனைவர் பட்ட மேற்படிப்பிற்குரிய ஆராய்ச்சிக் கல்வி வரை அதனைப் பயின்றும், பயிற்றுவித்தும் பயன்படுத்திக் கொண்டு, மீட்சியெய்தி இன்று மேனிலையில் நின்று மிளிருகின்றார்கள்.
இதுபோன்றே மாலி, கினியா ஆகியன புதிதாக விடுதலை பெற்ற ஆப்பிரிக்க நாடுகள். இவ்விரு நாடுகளின் தாய்மொழி பேச்சு மொழியாக மட்டும் இருந்தது. இவர்கள் மொழிக்கு இதுநாள் வரை எழுத்தே கிடையாது. தற்பொழுது எழுத்து வடிவத்தை உருவாக்கிக் கல்வி கற்பிக்கத் தொடங்கி விட்டனர். தங்களை ஆண்ட ஆங்கில மொழியை உதறிவிட்டு அனைத்து நிலைகளிலும் தாய்மொழியையே பயன்படுத்துவதில் மிக உறுதியாக உள்ளார்கள். (சு.நரேந்திரன், 2004:158).
“மொழி என்பது மனித குல மெய்யறிவின் பொக்கிஷங்களைப் பாதுகாத்து மரபு வழியாக அளித்துச் செழுமைப் படுத்தவல்ல மதிப்பு மிக்க சாதனம்” (லெனின்). “மொழி என்பது தொடர்பு சாதனம் மட்டுமன்று, அது ஒரு தேசிய இனத்தின் அடையாளம் என்றே கூறலாம்.”
இலங்கை
இலங்கையில் இனவாத கிளர்ச்சி இருந்த வரை தமிழ்வழிக் கல்வி பல்கலைப் படிப்புவரை உச்ச நிலையில் இருந்தது. இச்செய்தியைக் கோ.சந்திரசேகரன் நூலான ‘இலங்கையில் தமிழ்க்கல்வி’ எனும் நூல் வழிப் பார்ப்போம்.
உலகிலேயே பாடசாலை மட்டத்தில் அனைத்துத் தமிழ் மாணவருக்கும், தமிழ்மொழி வழியில் கல்வி வழங்கப்படுவது இலங்கையில் மட்டுமே. அத்துடன் பல்கலைக்கழக நிலையில் கடந்த நான்கு தசாப்தங்களாகக் கலைத்துறைப் பாடங்கள் (பொருளியல், புவியியல், அரசியல், சமூகவியல், கல்வியியல், தத்துவம்)
தமிழ்வழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. காலப்போக்கில் பல்கலைக்கழக நிலையில் சட்டம், வர்த்தகவியல், முகாமைத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளிலும் தமிழ்வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. (இலங்கையில் தமிழ்க் கல்வி - கோ.சந்திரசேகரன், ப.40)
பாடசாலைக் கல்வி
இன்று (1995) நாட்டில் காணப்படும் 10,191 பாடசாலைகளில், 2,130 பாடசாலைகள் தமிழ்மொழிவழியில் கற்பிக்கும் தமிழ்ப்பாடசாலைகள். இவற்றைவிட பெரும்பாலும் தமிழ் வழியில் கற்பிக்கும் 739 முஸ்லீம் பாடசாலைகளும் உண்டு.(கல்வி உயர்கல்வி அமைச்சு, 1995).
இலங்கைப் பாடசாலை முறையில் சேர்ந்து பயிலும் 42 லட்சம் மாணவர்களில் ஏறத்தாழ 25 சதவீதம் பேர் (9,86,000 பேர்) தமிழ்மொழி வழிக்கல்வி பெறுபவர்களாவர். இவர்களில் முஸ்லீம் மாணவர்களும் அடங்குவர்,
தமிழ்மொழிக்கல்வி பெறும் மாணவர்களில் ஏறத்தாழ 53 சதவீதம் பேர் (5,22,482 பேர்) ஆரம்பக்கல்வி நிலையில் (தரம் 1/5) பயின்று வருகின்றனர். இடைநிலை வகுப்புகளில் (தரம் 12-13) 38,760 பேரும் பயிலுகின்றனர். உயர் இடைநிலையில் பயிலும் தமிழ்மொழிவழி மாணவர்களில் மூன்றில் இரு பங்கினர் வடகிழக்கு மாகாணங்களில் பயிலுகின்றனர். ஏனைய மூன்றில் ஒரு பங்கினர் ஏனைய 7 மாகாணங்களில் பரந்து காணப்படுகின்றனர்.
பல்கலைக்கழகக் கல்வியைப் பொறுத்தவரையில் கலை, வர்த்தகவியல், சட்டம் முகாமைத்துவம், கல்வியியல் போன்ற துறைகளில் தமிழ் வழிக் கல்வியே பெரும்பாலும் நடைபெறுகின்றது, சில பல்கலைக்கழகங்களில் / விஞ்ஞானப் பட்ட நெறிகளும் தமிழ் வழியில் கற்பிக்கப்படுகின்றன, மேற்கூறிய துறைகளில் தமிழ்மொழியிலேயே பட்டப்படிப்பின் படிப்புப் பயிற்சி நடத்தப்படுகின்றன.
ஆசிரியர் கல்வி
ஆசிரியர் கல்வியையும், பயிற்சியையும் பொறுத்தவரையில் ஆரம்பநிலை, இடைநிலைக் கல்வி நிலைகளுக்கான பயிற்சி நெறிகள் தமிழ் மொழியிலேயே நடத்தப்படுகின்றன, பல்கலைக்கழகங்களும் தேசியக் கல்வி நிறுவனமும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும், தேசியக் கல்வியியல் கல்லூரிகளும், தமிழ் வழியில் பயிற்சி நெறிகளை நடத்துகின்றன. கல்வித் தத்துவம், உளவியல் மதிப்பீட்டு முறைகள், கல்வி முறைகளின் வளர்ச்சி, கல்வி நிர்வாகம், கல்வித் திட்டமிடல், கற்வித்தல் முறைகள், பாட ஏற்பாட்டுத் தத்துவங்கள், கல்விச் சமூகவியல், கல்விப் பொருளியல் போன்ற பாடத் துறைகள் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழில் கற்பிக்கப்படுகின்றன.
ஆசிரியர் கல்விப் பயிற்சியைத் தமிழில் வழங்கும் நிறுவனங்கள்
- பல்கலைக்கழகங்கள்:
கொழும்புப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம்(தற்போது கல்வியியல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.)
திறந்தவெளிப் பல்கலைக்கழகம்
- தேசியக் கல்வி நிறுவனம்:
- ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்:
எத்தென்ஸ்சைட்
கோப்பாய்
மட்டக்களப்பு
அட்டாளைச்சேனை
அலுத்கம
- தேசியக் கல்வியியல் கல்லூரிகள்:
பத்தன
மட்டக்களப்பு
வவுனியா
அட்டாளைச்சேனை
யாழ்ப்பாணம்
யாழ் பல்கலைக்கழகம் தவிர்த்த ஏனைய தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்கள் கல்வியியல் உயர்பட்டப் பயிற்சி நெறிகளைத் (M.Ed.,/M.Phil.,) தமிழ் வழியில் நடத்த முன்வருவதில்லை என்ற முக்கிய முறைப்பாடொன்று உண்டு. தென்னிலங்கையில் இப்பயிற்சி நெறிகளைப் பயிலக்கூடிய தகுதியுடையவர்கள் ஏராளமாக இருந்த போதிலும் அதற்கான வாய்ப்புகளைத் தென்னிந்தியப் பல்கலைக்கழகங்கள் வழங்கத் தவறிவிட்டன. ஆயினும் அண்மையில் திறந்தவெளிப் பல்கலைக்கழகமும், தேசியக் கல்வி நிறுவனமும், தமிழ்வழியில் முதுமாணி ((M.Ed.,M.A.,) கற்கை நெறிகளைத் தொடங்கியுள்ளன. (இலங்கையில் தமிழ்க்கல்வி, சோ. சந்திரசேகரன், ப.15).
ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் பயிற்று மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவதும், மொழிப் பயிற்சிக்கான மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவதும், காலங்காலமாக நடந்து கொண்டு வருகிறது. பல மாறுதல்களும் கல்வியாளர்களின் துணையுடன் நடந்து வருவதும் வரலாறு.
தமிழ்நாடே விழித்தெழு! தமிழர்களே உணர்வு கொள்வீர்!
மக்கள் ஆட்சியில் மக்கள் மொழியில் மக்களுக்குக் கல்வி அவசியம்
மருத்துவத் தமிழ்க் கல்வி வளர்ச்சியுறாததற்குப் பல்வேறு அரசியல் சமூகக் காரணங்கள் உண்டு. ஒரு சமூகத்தில் முழுமையான ஆட்சி மொழியாக, மலராத மொழியை அச்சமூகத்தினர் கல்வி மொழியாக ஏற்றுக்கொள்வதில் பல்வேறு சமூகத்தடைகள் உண்டென்பது வரலாற்று உண்மை.
அரசு எங்கும் தமிழ் என்பதை அறிவியல் கல்வி நிலையிலும் நடைமுறைப்படுத்த விழைந்தால், அதற்குக் கல்வி மொழி நிலைசார் தடைகள் இல்லை, இருக்கின்ற மிகச் சில தடைகளை அகற்றுவது மிக எளிதே.
இருக்கின்றதை இல்லாததுபோல் அங்கும், இங்கும் நடக்கும் சில மொழிபெயர்ப்பு தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி எப்படியும் தமிழ்வழிக்கல்வி வரக்கூடாது என்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்ப்பதில் ஏதோ சூட்சுமம் மட்டும் உள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது.
சூட்சுமம் என்ன?
தமிழ்வழிக்கல்வி தமிழ்நாட்டில் விடுதலைக்கு முன்பே கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆங்கிலம் இரண்டாம் மொழியாக ஆறாம் வகுப்புக்கு மேல் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தது. 1941 இல் மாணவர்கள் முதலாவதாகத் தமிழ்வழிக்கல்வி பெற்று பள்ளியிறுதித் தேர்வினை எழுதினார்கள்.
பொதுக் கல்வியில் தாய்மொழி வழிக்கல்வி கட்டாயம் என்று ஒரு நிலை இருந்தது. ஆறாம் வகுப்பு முதல் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டது. விடுதலைக்கு முன்பே இங்கே நிலவிய, இந்த நிலை கைநழுவிப் போனது தமிழகத்துக்குப் பெருமையளிப்பதாக இல்லை. தமிழக வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் ஓர் அயல்மொழி ஒரு கட்டாயப்பாடமாக்கி இருபதாம் நூற்றாண்டுக்கு முன் எந்த ஆட்சியும் மக்கள் மீது திணித்ததில்லை. இருபதாம் நூற்றாண்டில் அதிலும் நாம் விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டில் ஓர் அயல்மொழியை ஒரு கட்டாயப்பாடமாக்கிப் பொதுக்கல்வியிலேயே மக்கள் மீது திணித்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சொந்தமான மொழியைப் புறக்கணித்துவிட்டுக்கூட ஒருவன் பட்டமும், பதவியும் பெற முடியும் என்னும் ஓர் அவல நிலை உருவாகத் தமிழகம் எப்படியோ இடம் கொடுத்துவிட்டது.
வடமொழி ஆதிக்க எதிர்ப்புச் சூழலையும், இந்தி ஆதிக்க எதிர்ப்புச் சூழலையும் நன்கு பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர்களே இந்நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ஆங்கிலப் பற்றாளர்கள் ஆங்கில ஆதிக்கத்திற்கு என்றுமில்லாத அளவுக்கு இங்கே வழிவகுத்து விட்டனர்.
பன்மொழிச் சூழலைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் ஒரு மொழியை மட்டும் மேலே தூக்கி நிறுத்தி ஆதிக்க மொழியாக ஆக்குவது மக்களாட்சிப் பண்புக்கும் பொருந்தாது. ஒரு மொழி, ஆதிக்க மொழி ஆகிவிட்டால் அது மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிப்பதாக ஆகிவிடும். தமிழ்வழிக் கல்விக்கும், ஒரு வகையில் தடையாகத்தான் இருக்கும். (டாக்டர் பொற்கோ, 1986:90).
தமிழ் வழிக்கல்வி என்பது கல்வியாளர்களும், தலைவர்களும், துறை வல்லுநர்களும், ஆட்சியாளர்களும் ஒருங்கிணைந்து முழு மூச்சோடு பாடுபட்டு நிறைவேற்ற வேண்டிய பணி. இந்தப் பணி பல ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். மக்களாட்சியில் மக்கள் மொழியின் வாயிலாக மக்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும். இதுபற்றிய பொறுப்புணர்ச்சி தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும், தமிழ்வழிக்கல்வி என்பது தமிழுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையில் ஓர் இன்றியமையாத பகுதி. இதை விடுத்து ஆங்கில வழியில் பயின்றால் உலகம் முழுவதும் வேலை கிடைக்கும் என்று கூறி கானல் நீர் கனவுகளை வளர்க்கிறார்கள். இது உண்மையில்லை. ஆங்கில வழியில் படித்தவர்கள் 2 விழுக்காடே வெளிநாடுகளுக்கு, வேலைக்குப் போகிறார்கள். அதிலும் வளர்ந்துள்ள நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகள் சிலவே. அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போக ஆங்கிலம் தேவையில்லை. போகிறவர்களும் அரபி மொழியைக் கற்றுக்கொள்ளப் போவதில்லை. இதுவே உண்மை.
ஒரு நாடு வெளிநாடுகளில் வேலை தேடுவதை அடிப்படைத் திட்டமாக வைத்து தனது கல்விக் கொள்கையையோ, பொருளாதாரக் கொள்கையையோ வகுத்தால் அந்நாடு முன்னேற்றத்தின் முதல்படியில் கூட ஏற முடியாது.
இது தவிர விஞ்ஞானிகள் அனைவரும் ஆங்கிலேயர் என்பது போன்ற தவறான பார்வையும் உள்ளது. விஞ்ஞானிகள் அவரவர் தாய் மொழியில் கண்டுபிடிப்புகளை எழுதுகிறார்கள். சில சமயங்களில் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகளில் வெளிவரும் ஆய்வுக் கட்டுரைகளில் கட்டுரைச் சுருக்கம் உள்ளது.
இது போலவே பல்கலைப்படிப்புகள் தொழிற்கல்வியில் நூற்கள் இல்லாது படிப்புகளைத் தொடங்க முடியாது என்று சொல்வதும் ஒரு முரட்டுவாதம். தமிழ்நாட்டை நோக்கினால் கூட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் பொறியியல், மருத்துவம் தொடர்பான பல பாட நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து 1997, 1998-ஆம் கல்வி ஆண்டில் பொறியியலைத் தமிழ் வழியில் கற்பிப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. 700 மாணவர்கள் தமிழ்வழிப் பொறியியல் கற்க விண்ணப்பித்தனர். ஆனால் அரசு பல காரணங்களைக் கூறி இதை நடைமுறைப்படுத்தவில்லை. எனினும் மாணவர்கள் தமிழ்வழிப் பொறியியலைக் கற்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது மெய்ப்பிக்கப்பட்டிருப்பதே இத்திட்டத்திற்கு வெற்றி, இல்லையா? வெற்றிதான். இதற்குத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியத்தையும் அவருடன் கை கோத்து நின்ற முனைவர் இராமசுந்தரத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகத்தின் 8 கல்லூரிகளில் இரண்டு பாடங்கள் தமிழ் வழியாக நடத்தப்படுகின்றன.
நடப்புகளைக் கூட்டிக் கழித்து பார்க்கையில் நாம் அறிவது புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு புலப்பட்டதுதான். அதுதான்,
தமிழ்க் கல்வி தமிழ் நாட்டில்
கட்டாயம் என்பதோடு
சட்டம் செய்க
என்ற ஆணையேயாகும்.
மன மாற்றமும் உள்ள உறுதியும் தேவை
தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும் எனக் கூறும்போது பாடநூற்கள் இல்லை, கலைச் சொற்கள் இல்லை, வேலை கிடைக்காது, வெளிநாடு செல்ல இயலாது என்பன போன்ற தடைகள் எழுப்பப்படுகின்றன. வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வாய்ப்பு இரண்டும் அரசியல், பொருளாதாரச் சக்திகளோடு தொடர்புடையன. திட்டமிட்ட பொருளாதாரமும் சமுதாய அமைப்பு குறித்த அரசியல் சித்தாந்தமும் நடைமுறைப்படுத்தப்பட்டால் வேலைவாய்ப்பை உருவாக்குதல் எளிது. பல சோசலிச நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு சிக்கலாக இருந்ததே இல்லை. அதே நேரத்தில், பல முதலாளித்துவ நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாகக் குற்றங்கள் பெருகியதையும் பார்த்திருக்கிறோம். அரசியல் பொருளாதாரச் சித்தாந்தம் சமுதாய நலன் கருதியதாக அமையும்போது இந்தப் பிரச்சினை எழ வாய்ப்பில்லை.
ஆங்கிலம் கற்றால் அயல்நாடு செல்லலாம் என்பதும் ஒருவகை மயக்கம்தான். ஆங்கிலம் முதன்மை மொழியாக உள்ள நாடுகளில் வேண்டுமானால் ஆங்கில வழிக்கல்வி உதவக்கூடும். ஜெர்மன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஸ்பெயின் முதலிய நாடுகளில் ஆங்கிலம் உதவப் போவதில்லை. அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்றால்தான் நிலைத்து நிற்க முடியும். ஆங்கிலம் கல்வி மொழியாக இல்லாத நாடுகளுக்குப் பயிலச் செல்லும் நமது மாணவர்கள் அங்குள்ள பயிற்று மொழியைக் கற்ற பின்னரே படிப்பைத் தொடர முடிகிறது. ஒரு போலிஷ் மாணவன் 4 ஆண்டுகளில் முடிக்கும் படிப்பை ஆங்கிலம் வழிக்கற்ற இந்திய மாணவன் 5 ஆண்டுகளில் முடிக்கிறான். இவற்றில் ஓராண்டு போலிஷ் மொழிக்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. ஆங்கிலம் கோலோச்சாத சில நாடுகளில் இதுதான் நிலை. கடந்த 200 ஆண்டுகளாக ஆங்கிலம் வழிக் கற்ற நம்மவரில் எத்தனை பேர் வெளியிடங்களில் பணி புரிகிறார்கள்? அப்படி பணியாற்றுபவரின் சமூக நிலை என்ன? சமுதாயத்தின் உயர் மட்டத்தில் உள்ள சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளச் சமுதாயம் முழுவதுமே பலி ஆக வேண்டுமா? இத்தனை ஆண்டுகள் ஆங்கிலம் வழிப் படித்தவர்களில் எத்தனை பேர் தேசிய, சர்வதேசியப் புகழ் வாய்ந்த நூல்களை, கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்? வெளிநாடுகளில் / மாநிலங்களில் பணியாற்றும் தமிழர்களின் எண்ணிக்கையும் ஆங்கிலம் வழிக் கற்ற அவர்கள் எழுதியுள்ள ஆங்கில நூல்களின் எண்ணிக்கையும் மிகக்குறைவே. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் எழுதப்பட்ட நூல்களே நமது கல்விக் கூடங்களைக் கட்டுக்குள் வைத்துள்ளன. ஆக, நமது ஆங்கில வழிக் கல்வி சிலரது முன்னேற்றத்திற்குப் பயன்பட்டதே தவிர, ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் பயன்படவில்லை என்பதே உண்மை. இந்த உண்மை புரியாததால் சமுதாயத்தின் அடிநிலையில் உள்ளவர்களும் ஆங்கில மோகம் கொண்டு அவதிப்படுகின்றனர்.
தமிழ் மொழிகாக்க உறுதி ஏற்போம். ஒவ்வொரு மொழியும் பயிற்று மொழியாகும் போது புதிய துறை சார்ந்த கல்வியே அம்மொழிக்கு புதிய அனுபவமாகவே அமையும்,
பல புதிய துறைகளைத் தமிழில்கொண்டு வரும்போது கலைச் சொற்கள் இன்மை, உலக அளவில் வேலை வாய்ப்பு, உயர்கல்வி தமிழில் தொடர வாய்ப்பின்மை போன்ற பல சிந்தனைகள் மனதில் எழக்கூடும். ஆனால் அத்தனையும் சாத்தியமானதே,
பாடநூல்கள் இல்லை என்ற குறை தாய்மொழி வழிக்கல்விக்குத் தடையாக இருக்க முடியாது. ஏனெனில் அவசியம் இருந்தால் நூற்கள் தானே பெருகும். பாடநூல்கள் அனைத்தும் இருக்கிற மொழிதான் பயிற்று மொழியாக வேண்டுமெனில் உலகிலுள்ள எம்மொழியும் ஆக முடியாது.
உலகில் உள்ள 187 நாடுகளில் ஆட்டிப் படைக்கிற வல்லமை கொண்ட நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் முதலியவை. இங்கிலாந்து, அமெரிக்காவைத் தவிர்த்து ஜெர்மனியில் ஜெர்மனிய மொழியே, பிரான்சில் பிரெஞ்சு மட்டுமே. ஜப்பானில் ஜப்பானிய மொழி மட்டுமே. தத்தம் தாய்மொழி வழியில் கற்றுத் தாய்மொழியில் மட்டும் ஆட்சிமொழி பெற்ற இவர்களே இன்று உலகத்தை ஆட்டிப்படைக்கின்றனர்.
அரசியல், அறிவியல், பொருளியல், தொழில் நுட்ப இயல், கணினி இயல் என்கிற எல்லாத் துறைக் கல்வியையும் அவரவர் தாய்மொழியில் கற்றதனால் தான் அவர்கள் அறிவாளிகளாகக் கண்டுபிடிப்பாளர்களாக உலகத்தை ஆட்டிப்படைப்பவர்களாக உருவாக முடிந்தது. இதுவே நடக்கக் கூடியது. இதுவே சரியானது.
மேற்கண்ட நாடுகளில் தொழில் நுட்ப அறிவுக்கான மேற்படிப்புக்குப் போகிற மற்ற நாட்டினரும் எந்த எந்த நாட்டிற்குப் போகிறார்களோ? அந்த அந்த நாட்டுத் தாய் மொழியை ஓராண்டு காலம் கற்றுக் கொண்டு அதன் வழியாகப் பெற்று, செயலாற்றுகின்ற அறிவை (working knowledge) மட்டுமே வைத்துக் கொண்டு அந்தந்த மொழி மூலம் மட்டுமே மேல் படிப்பு, ஆய்வுப்படிப்பு என்பதை ஆங்காங்கே பெறுகிறார்கள்.
ஐரோப்பாவிலுள்ள 20 தனித்தனி நாட்டினரும் அவரவர் தாய்மொழி வழியேதான் எல்லாத் துறைக் கல்வியையும் பெறுகின்றனர். ஆங்காங்கு உள்ள அரசும் மக்களும், கல்வியாளர்களும், ஏடுகளும் மாணவர்களும் இதை அப்படியே ஏற்கின்றனர். தமிழ்வழிக்கல்வி கேட்கிற யாரும் ஆங்கிலத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மொழிப் பயிற்சி வேறு, பயிற்று மொழி வேறு என்பதை நாம் சரியாக உணர்ந்தாக வேண்டும். தமிழ்வழிக்கல்வி எல்லா நிலைகளிலும் பயிற்று மொழியாக இருக்க ஆங்கிலம் 1950-ஆம் ஆண்டு பயிற்று மொழித் திட்டத்தைப் போல ஒரு மொழிப்பாடமாக இருக்கலாம்.
அறிவியல் நூல்கள் இல்லாதபோது தமிழில் பயிற்சி எப்படி முடியும்? என்று ஒரு தடை பேசப்பட்டது. உயர்நிலைப்பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழி ஆக்கிய நிலையில் தரமான நூல்கள் வெளியிடப்பட்டன. ஆகவே தேவை மிகும்போது பயிற்று மொழியாகத் தமிழை ஆக்கிய பின்னரே இது கைக் கூடியது. தேவை என்பது ஏற்பட்டால் நூல்கள் தானாகவே எழுதப்பட்டு வெளிவரும் தேவையான பயன்பாட்டிற்கான நூல்கள் இருக்கும் நிலையிலேயே ஒரு மொழி பயிற்று மொழி ஆகவேண்டும் என்று கூறினால் அது அந்த மொழிக்குப் பொருந்தா நிலைப்பாடேயாகும். நம் நாட்டினருக்கும் ஆங்கிலேயர் வருகைக்கு முன் அறிவியல் அறிவு கிடையாது என்றும் எல்லாமே மேலை நாட்டிலிருந்தே பெற்று வருகிறோம் என்ற கருத்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது. இது சரியானதல்ல. ஏனெனில் கல்லணை, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் போன்ற அறிவியல் திறன் இன்று வரை போற்றப்படுகிறது. இது தவிர தொல்காப்பியர் கூறும் உயிரியல் கோட்பாடுகளும் தமிழரின் அறிவியல் திறத்தை வெளிக்காட்டும் கண்ணாடியாகும்.
தமிழ்ப் பயிற்று மொழியாக்க வேண்டுமெனில் தமிழர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மை. அரசின் சரியான மொழிக்கொள்கை, நூற்றில் ஒருவர் வெளிநாடு செல்வதைப் பார்த்து அனைவருக்கும் ஆங்கிலேமே பயிற்று மொழியாக இருப்பது நல்லது என்ற தவறான எண்ணம் போன்றவைகள் கவனத்தில் கொள்ள வேண்டும். கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி மிக வேகமாக வளர்ந்து வரும் உலகம் அறிவியலோடு தமிழும் போட்டியிட்டு வளர வேண்டுமெனவும், முத்தமிழோடு நான்காம் அறிவியல் தமிழும் ஒருங்கிணைந்து போவதே சிறந்த ஒன்றாகும் என்கிறார். இல்லையெனில் நம் மொழி வளர்ச்சி பின்தங்கிப் போய்விடுமோ என அஞ்சி,
“நாளும் நம்மொழி பிந்துதடா
புவி நம்மைப் பிரிந்து முந்துதடா
ஆளுமை தருவது கல்வியடா”
என ஏக்கம் கொண்டு எழுச்சியூட்டுகிறார்.
- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.