(ஆ)சாமி
ஓவ்வொரு தடவையும்
ஒரே காரணம் சொல்லி
கையை வெறுமனே
ஏந்திக்கொண்டிருக்கிறாள்
தினமும் ஒரே தெய்வத்திற்காக
ஒரே முறையில்
ஒவ்வொருவரிடமும் சிலவற்றை
அதட்டிப் பெறுகிறாள்
தயங்கினாலோ மறுத்தாலோ
சாமி கண்ணைக் குத்திவிடுமென்று
அச்சமூட்டுகிறாள்
பலதடவை நான்
அவளைப் புறக்கணித்து விட்டு
சிரித்தபடி இருக்கிறேன்
ஆனால் எனக்குள்
ஏதோ ஓர் மூலையில்
தெய்வ உருவங்கள் வரிசையாய் வந்து
மிரட்டுவதாய் அவஸ்தைப்படுகிறேன்
அவள் எவ்வித பயமுமின்றி
சாமி பெயரை உச்சரித்தபடி
கையேந்திக்கொண்டிருக்கிறாள் தினமும்!
சிதைவு
முகமிழந்து நகரத்தின்
சௌகரியங்களை வினோதமாக
ரசித்துப் பொழுது கழிக்கிறேன்
புலம்பெயர்வில் இருந்து
எல்லாவற்றையும் மிக
மெதுவாகக் கற்றுக்கொள்கிறேன்
பலதடவைகள்
என்னுடைய அடையாளம்
சிதைக்கப்பட்டாயிற்று
உங்களுக்குத் தெரியவில்லையா?
நான் முன்னேயும் செல்ல இயலாத
பின்னேயும் திரும்ப முடியாத
பெரு இடைவெளியில் இருப்பதை
விநோதம்
கொக்கிப் புழு ஏதோவொன்று
மனதைக் குடைந்தெடுக்கிறது
சற்று தூரத்திலிருந்த குகையில்
வேட்டை நாய்களின்
கனத்த குரல்
நாலாபுறமும் நிரம்பி வழிய
நேற்று எல்லோரும் அங்கு
தற்கொலை செய்துகொண்டார்கள்
இன்று நான் அதற்கான
ஒத்திகையில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்
அவ்வேளையில்
அந்த வினோதக் காட்சியைத் தங்கள்
முகத்தை மறைத்துக்கொண்டு
மணிக்கணக்காய் வேடிக்கை
பார்த்தபடியிருக்கிறார்கள்
விந்தை மனிதர்கள்.
எனது காடு
ஒவ்வொரு தரமும் மூச்சிரைக்க
நெடுந்தொலைவைக் கடக்கிறேன்
தினசரி சௌந்தரிய நிகழ்வுகளை மீறி
ஏதோ ஒன்றினைத் தினம் தினம்
தொலைக்கின்றேன்
பகிர்ந்து கொள்ளப்படாத சேதிகள்
தன்னிச்சையாய்ப் பொழிந்து வெறுப்பேற்றும்
குற்றங்களின் மிடறுகள் சிறுகச் சிறுக
என்னை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன
வெற்று முகங்களின் கோரப்பார்வையில்
எரிகின்றது எனது காடு.
வனதேவதை
அநாதி காலத்தில் சந்தித்திருக்கிறோம்
உனக்காக நான் கொண்டு வந்த வார்த்தைகள்
தொண்டைக் குழியை முட்டுகின்றன.
மௌனத்தை உடைக்கும் முனைப்பில்
அசட்டுத்தனத்தோடு வெகு இலகுவாகப்
பொய்யுரைக்கின்றன
வெற்றுப் புன்னகைகள் மனதைத்
துளைக்கும் பொழுதுகளில்
நாணிச் சிரிக்கின்றேன்
அப்பொழுதெல்லாம்
உதிர்ந்து கிடக்கும் வருத்தங்கள்
பேரழுகையாய் விண் முட்டுகின்றன
எனது கால இடைவெளிகளில் எல்லாம்
தொலைந்துபோன தேவதைகள் குறித்து
வனமெங்கும் பிதற்றித் திரிகிறேன்.
பெருமழைக் காலம்
தலைக்கு மேலே கூட்டமாகக்
கடற்காக்கைகள் ஓசை எழுப்பிக்
கொண்டு பறந்துப் போகின்றன
நகரப் பெரும் வீதிகளின்
நாற்புறமும் தீராத தனிமை
வனாந்திர மணத்தை
முகர்கிறாள் தாதி
திமிரோடு வாழ்ந்த கணங்களை
எண்ணி மண்டையை உடைத்துக்
கொள்கிறார்கள் ஒவ்வொருவரும்
பெருமழைக் காலங்கள்
துருவேறிய டிரங்குப் பெட்டியில்
மிகவும் அவசரமாகப்
பத்திரப்படுத்தப்படுகின்றன.
- நிஷாந்தினி