முழுநாள் நிகழ்ச்சி என்பதால் வழக்கம்போல அல்லாமல் சில நாட்களுக்கு முன்னரே அலுவலக சம்பந்தமாக ஒரு 'பயிற்சி வகுப்பு' இருக்கிறது என்று ரமாவிடம் தெளிவாக பொய் சொல்லி வைத்திருந்தேன். இருப்பினும் அந்த நாள் வரும்முன் எங்கே நானே உண்மையை உளறிவிடுவேனோ என்றும் பயந்துகொண்டிருந்தேன். நல்லவேளையாக அப்படியேதும் நடக்காமல் திட்டம் நிறைவேறியது. அருகிலிருக்கும் நண்பர் நாஞ்சிலும் வீட்டில் இதே போன்ற பொய்யை சொல்லிவிட்டு நடுங்கிக் கொண்டிருந்திருக்கிறார் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். அதுசரி, வீட்டுக்கு வீடு இப்படித்தான் போல. காலை 7 மணிக்கெல்லாம் இருவரும் கிளம்பினோம்.

தாமதமாகிவிட்டதே என்ற அவசரத்தில் இருவரும் ரயிலில் பயணித்து 'ரீஜென்சி' ஓட்டல் அரங்கை அடைந்தபோது சுமார் 15 பேர்தான் கூடியிருந்தனர். பின்னர் திட்டமிட்டபடி நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்து நிகழ்ச்சி சரியாக 10 மணிக்கு துவங்கியது. அறிமுகமான பதிவர்கள் பலர் கூடியிருந்த அதே நேரம் புதியவர்கள் பலரையும் காணமுடிந்தது. நிதானமாக அனைவரையும் அறிமுகம் செய்து கொள்ளத்தான் முடியவில்லை. பதிவெழுதாவிட்டாலும் வலையுலகை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் சிலரும் கலந்துகொண்டதை அறியமுடிந்தது. மதுரை, கோவை, திருப்பூர் போன்ற தொலைதூரங்களிலிருந்தும் பதிவர்கள் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர். உமாசக்தி, ராமச்சந்திரன்உஷா, விதூஷ் ஆகிய பெண் பதிவர்களும் கலந்து கொண்டனர்.

முதலில் தனது சிறுகதை அனுபவம் குறித்து பாஸ்கர்சக்தி உரையாடினார். அவர் எழுதிய 'தக்ளி' கதையின் அனுபவம் குறித்து விளக்கமாக நினைவு கூர்ந்தார். எனது பள்ளிக் காலங்களில் அந்தக் கதையை படித்த நினைவு. யாரோ பழம்பெரும் எழுத்தாளர் எழுதியதாக இருக்கும் என்ற நினைப்பிலிருந்த நான், அது பாஸ்கர் சக்தி என்றறிந்து வியப்புற்றேன். தொடர்ந்து கேள்வி - பதில் பகுதியை அவர் எதிர்கொண்டார். நினைத்தது போலவே வெறுப்படைய வைக்கும் மொக்கைக் கேள்விகள், பதிலை புரிந்து கொள்ளாமல் வரும் கேள்விகள் என கொஞ்சம் சிரமப்பட்டார். நல்ல வேளையாக அவருக்குப்பின் வந்த மற்ற எழுத்தாளர்களுக்கு இந்த நிலை நேரவில்லை, அந்த 'சித்தூர் சிறுகதையம்மன்'தான் அவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும்.

தொடர்ந்து யுவன் சந்திரசேகர் இலக்கணங்களுக்குள், கட்டுகளுக்குள் அடங்காத தனது சிறுகதைகள் குறித்து உரையாடினார். நான் அவரது சிறுகதைகளை படித்திருக்கா விட்டாலும் (மற்றவர்களையெல்லாம் கரைத்துக் குடித்து விட்டாயாடா - கண்மணி) அந்தப் பெயர் கவர்ச்சியோ, அவரது கவிதைகளை பிரபல இதழ்களில் கண்டதாலோ அவர் பெயருக்கென்று ஒரு கற்பனை இருந்தது என்னிடம். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பிரபல எழுத்தாளரை அறிமுகம் செய்து கொண்ட போது முந்திரிக்கொட்டைத்தனமாக 'நீங்கள்தானே யுவன் சந்திரசேகர்?' என்று கேட்டு மூக்கிலேயே குத்துவாங்கிய நிகழ்ச்சி நினைவில் வந்துபோனது. தனது உறுதியான, ஆளுமையான பேச்சால் கூட்டத்தை பசிநேரம் தாண்டியும் கட்டிப்போட்டார். எழுத்துப் பிழை, இலக்கணப்பிழை பற்றிய பேச்சு வந்தபோது கொஞ்சம் ஆவேசமாகவே கோபத்தைக் காட்டினார். அதுதான் பிரதானம், அதை முதலில் சரிசெய்து கொண்டு பின்னர் வைத்துக் கொள்ளலாம் உங்கள் படைப்புப் புண்ணாக்குகளை என்றார். நியாயம்தான். விட்டால் தவறாக எழுதுபவர்களை தேடி வந்து உதைப்பார் போலிருந்தது. கேள்வி - பதிலின் போது கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் தூள் பறந்தது.

நல்லதொரு மதிய உணவுக்குப் பின்னர் உலக சிறுகதைகள் மீதான ஒரு அறிமுகத்தைத் தந்தார் சா.தேவதாஸ். நல்ல அழகான கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போன்ற தமிழ்ப் பேச்சு அவருடையது. அவருடைய உலகளாவிய சிறுகதை வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்புக்கு அவர் எவ்வளவு வாசித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பிரமிப்பைத் தந்தது. (இன்னும் உள்ளூர் சிறுகதைகளையே உருப்படியாக வாசித்திராத நானெல்லாம் என்றைக்கு உலக சிறுகதைகளை.. வாசித்துக் கொண்டாடி.. ஹூம்). பின்னர் 'பவர்பாயிண்ட்' பிரசண்டேஷனுடன் துவக்க நிலை எழுத்தாளர்கள் பத்திரிகைகளுக்கான சிறுகதைகளை எப்படி எழுத வேண்டும், தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்று தன் பகுதியை துவங்கினார் பா.ராகவன். கல்கி மற்றும் குமுதத்தில் பல ஆண்டுகள் கதைத் தேர்வுப்பணியை அவர் எவ்வாறு செய்தார் என்பதையும், உதவி ஆசிரியர்களின் மனநிலையும், கொடும்பணியும் எவ்வாறு இருக்கும் என்பதையும் நகைச்சுவை ததும்ப எடுத்துரைத்தார். முதலில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு, டிபிகல் கதைகளை எழுதுவதில் தேர்ந்த பின்னர் பிற கட்டுடைப்பு முயற்சிகளை செய்து பார்க்கலாம் என்பதை வலியுறுத்தினார். அதற்கும் பிரதானமாக ஏன் எழுதுகிறோம் புகழுக்காகவா? பணத்துக்காகவா? பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சிக்காகவா ? என்பதில் ஒரு தெளிவு வேண்டும் என்றார். இந்த வரிசையில் பணத்துக்காகவா? என்ற கேள்வி வந்ததும் தமிழ்ச் சூழலில் எழுதி பணம் சம்பாதிக்கமுடியம் என்பதில் நம்பிக்கையில்லாத பலரும் (அனைவரும்) நகைக்க எத்தனித்தனர். ஆனால் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் பின்னர் மெலிதாக குறிப்பிட்டார் பா.ராகவன்.

இறுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டன. பொதுவாக மறக்க இயலாத நல்லதொரு அனுபவமாகவும், தொடர்ந்து சிறுகதைகள் எழுத முயற்சிக்கலாம் என்ற நம்பிக்கையையும் இந்த பட்டறை எனக்குத் தந்தது. மேலும் ஒரு மெகா சைஸ் பதிவர் சந்திப்பாகவும் அமைந்தது. டோண்டு, உண்மைத் தமிழன், லக்கி, அதிஷா, பரிசல், பொன்.வாசுதேவன், வடகரை வேலன், கார்க்கி, முரளி, வால்பையன், கேபிள்சங்கர், வெயிலான் போன்ற பல பதிவர்களை ஒரே நேரத்தில் காண முடிந்த அதே நேரம் நிறைய புதியவர்களையும் பார்த்து மகிழ முடிந்தது. இந்நிகழ்வை நடத்திய பைத்தியக்காரன் (சிவராமன்), ஜ்யோவ்ராம் சுந்தர், அதற்கு துணையாக நின்ற 'கிழக்கு' பத்ரி, நர்சிம் ஆகியோரின் முயற்சி பாராட்டுக்குரியது.

- ஆதிமூலகிருஷ்ணன்

Pin It