பிரியமானவர்களே...

வணக்கம். கொத்துக் கொத்தாய் வீழ்ந்த மனிதம் பார்த்து எவ்வித சுரணையுமற்று நாட்களைத் தின்று ஜீரணிக்கும் தலைமுறையில் இருக்கிறோம் எல்லோரும்! குறிப்பிட்ட ஓர் இனம் என்கிற அடையாள முத்திரைக்காகக்கூட அல்ல! மனிதர்கள் என்கிற அடிப்படை உரிமைக்காகக்கூட யாரும் குரல் கொடுப்பாரில்லை என்கிற இழிநிலையை காணும் பெரும்பேறு பெற்றவர்கள் இந்தத் தலைமுறையினர்!

புன்னகை அறுபதாவது இதழ், ஆக மிகச்சிறந்த கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் தயாராகி வருகிறது. ஒரு சிற்றிதழின் ஆயுட்காலம் நிரந்தரமற்றது. எளிமையாகவும், அழுத்தமாகவும் அதே சமயம் இளம் படைப்பாளிகளிடையே கவனத்துடன் கூடிய ஊக்குவிப்புமாக புன்னகையின் பயணம் அமைந்திருக்கிறது. பல புதிய படைப்பாளிகள் தங்களை மெருகேற்றிக் கொள்ள புன்னகை ஒரு தளமா க இருந்தது. இப்பயணம் இனியும் தொடரும்.

தொடரும் இதழ்களில் கவிதை சார்ந்த விவாதங்களும், விமர்சனங்களும் முக்கியத்துவம் பெறும்வகையில் படைப்புகளை எதிர்நோக்குகிறது.

தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை புன்னகை கவனம் எடுத்துக் கொண்டு இனி தடையற்று வர முயற்சிக்கும்.

மூத்த படைப்பாளிகள் ராஜமார்த்தாண்டன், பாலா ஆகியோரின் மறைவு படைப்பிலக்கியத்தில் ஈடு செய்ய முடியாத இழப்புகள்! ஒவ்வொரு மரணமும் ஏதோ ஒரு இடத்தில் இட்டு நிரப்ப முடியாத பெரும் பள்ளத்தையே இந்தப் பூமிக்கு பரிசாக்கிவிட்டுப் போகிறது...

இதழைப் பலதரப்பட்ட வாசகர்களும் அறிந்து கொளளும் வண்ணம் அறிமுகப்படுத்திய கல்கி வார இதழுக்கு மனப்பூர்வமான நன்றியை புன்னகை உரித்தாக்குகிறது.

என்றென்றும்

புன்னகை

Pin It