anna 602"கம்பராமாயணத்திலே, எந்தச் சருக்கத்திலே, எத்தனையாவது பாடலிலே, தமிழர் இழிவுபடுத்தப்பட்டு, ஆரியர் உயர்த்தப்பட்டு, எழுதப்பட்டு இருக்கிறது? படித்துக் காட்டுங்கள் கேட்போம்" என்று பண்டிதர்கள் கேட்கின்றனர். கம்பராமாயணத்திலே, இன்ன பாட்டினால் தமிழன் இழிவுபடுத்தப் படுகிறான், ஆரியன் உயர்த்தப்படுகிறான் என்று நாங்கள் சொன்னதுமில்லை; அது அவசியமும் இல்லை. அந்த ஆராய்சியிலல்ல நாங்கள் ஈடுபட்டிருப்பது. கம்பராமாயணக் கருத்தினால், அதைக் கற்று மக்கள் வாழ்க்கையில் அமைத்துக் கொள்ளும் கொள்கைகளால், ஆரியர் உயரவும் தமிழர் தாழவும், ஆரியர் ஆதிக்கம் செலுத்தவும், தமிழர் அடிமைகள் ஆகவுமான விளைவு நேரிட்டது என்பதே நாங்கள் கூறுவது. அத்தன்மையான விளைவைத் தரும் கேடுகள் இனி வேண்டாம் தமிழருக்கு என்று கூறுகிறோம். கலப்பற்றத் தமிழ்க் கலையுடைய தமிழருக்கு கற்பனையும், ஆரியநெறியும், கலையும் எதற்காக இருக்க வேண்டுமென்று கேட்கிறோம்.

ஆகவே பாடலைப் படி, பதம்பிரி, பொருள் உரையென்று கேட்பது முறையாகாது. மேற்படி நூல்களை மக்கள் அறிந்திருந்ததால் அவர்கள் கொண்ட கருத்து என்ன? அதன் விளைவு என்ன? அதன் பயனாக இன்று தமிழன் அடைந்துள்ள நிலையென்ன? என்பதே எமது கேள்வி. நூற்றுக்குத் தொன்னூறுபேர் தற்குறிகளாக உள்ள நாட்டிலே இனத்தின் உயர்வுக்கும், ஆதிக்கத்திற்கும் பயன்படும் ஏடுகள் மனதில் பதியும்படி செய்வது முறையாகுமா? அங்ஙனம் பிற இனத்தின் கலையிலே ஊறும் மனம் இன எழுச்சி பெறமுடியுமா? இனமானம் கோரவோ, தனியரசு பெறவோ முடியுமா என்பதை யோசிக்க வேண்டுகிறேன். ஆகவே தமிழன் தன்மானத்திற்காகவும், தன்னரசுக்காகவும் போராடும் சுயமரியாதைக்காரர்கள், அந்த முயற்சிக்குக் குறுக்கே நிற்கும் ஏடுகளைக் கொளுத்துவோம் என்று உரைக்கின்றனர்.

இராமாயணம் வைணவர்க்கு மேலான நூல். பெரிய புராணம் சிவனடியார்களின் பக்தியை விளக்கிடும் நூல். சைவம், வைணவம் எனும் இரு மார்க்கங்களையும் பின்பற்றும் தமிழ் மக்கள் முறையே பெரியபுராணம், கம்பராமாயணமாகிய இரு நூல்களையும் தமது மார்க்க நூல்களாகக் கொள்கின்றனர். வைணவம், சைவம் எனும் இரண்டும் இந்து மார்க்கத்தின் கிளைகள். தமிழர் இந்துக்கள் அல்லர். தமிழருக்குத் தனிமொழியுண்டு என்றாலும் இவ்விரு மார்க்கங்களையும் தழுவிக் கொள்வதால் தமிழர் தம்மை இந்துக்கள் என்று கருதிக் கொள்வதால் தமிழர், தாங்கள் தனி இனம் என்பதை மறுத்து, இந்துக்களில் ஒரு பகுதி என்று எண்ணி தன்மானத்தையும், தன்னரசையும் இழந்தனர்.

இதற்குக் கம்பராமாயணமும், பெரியபுராணமும் பயன்படுகின்றன. எனவே அவைகளைக் கொளுத்திக் காட்டி 'தமிழரே, இவை இந்துக்களுக்கு மார்க்க நூல்கள், தமிழருக்கு அல்ல. தமிழருக்குத் தனி நெறியும், கலையும் உண்டு' என்று இன எழுச்சியை உண்டாக்கித் தமிழருக்கு தனியாக நாடு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது எமது திட்டம்.

தமிழர்களுக்கு, ஆரிய மார்க்கமாகிய இந்து மதத்தின் இருகிளை நூல்களான கம்பராமாயணமும், பெரியபுராணமும் கூடாது என்று கூறுகிறோம். அவைகளிலே ஆபாசங்களும், ஆரியக்கற்பனைகளும் உள்ளன. ஆரிய மார்க்கம் தீங்கே தரும். ஆகவே தமிழர் எழுச்சி பெற, ஆரியத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே, ஆரியத்தை வளர்க்கும் மேற்படி நூல்களைக் கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம்.

- பேரறிஞர் அண்ணா

(14-3-1948ஆம் நாளன்று சேலம், செவ்வாய்ப் பேட்டைத் தேவாங்க பாடசாலை மண்டபத்தில், நாவலர் சோமசுந்தர பாரதியாருடன் நடந்த சொற்போரில் சிறு பகுதி)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.