அறிஞர் அண்ணா கடவுள் மத மறுப்பாளர். கடவுள்,மதம், புராண எதிர்ப்பு கட்டுரைகளை ஏராளமாக எழுதியுள்ளார். திமுக என்ற அரசியல் கட்சியான பிறகு ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கருத்தை சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தின் வழியாக முன்வைத்தார். இது திமுகவின் அதிகாரபூர்வமான கொள்கை அல்ல! 1945 -ல் அண்ணா எழுதிய கடவுள், மத எதிர்ப்பு கட்டுரை..

கரிமுகத்தோடு ஒரு கடவுள், நாக்கிலே நாயகியுடன் ஒரு கடவுள், நடனமாடும் மயில் மீது மற்றோர் கடவுள், அலைகடல் மீது ஆலிலைமேல் துயிலும் வேறோர் கடவுள், தலைமீது தையலுடன் பிறிதோர் தேவன், என்ற இன்னோரன்ன கடவுள்கள் இருந்து கொண்டு இன்னின்னவருக்கு இன்னின்ன விதமான நிலைமை இருக்க வேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வாழ்கிறார்கள் என்பதை இன்றும் நம்பி, அந்த நம்பிக்கைக்கேற்ற நாள் நட்சத்திரம் நடவடிக்கைகளிலே பாசம் வைத்துக் கொண்டுள்ள மக்களிடத்திலே, கான்ஸ்ட்டிடியூவண்ட் அசெம்பிளி பற்றியும், காரல் மார்க்சின் கருத்துப் பற்றியும், புரட்சி பற்றியும் பேசுகிறார்களே!

anna 306திருந்தாத வயலிலே தீங்கனிமரம் கோரி, விதை தூவி, தேன் பெய்தாலும் பயன் கிட்டுமா? ஆடை அணி புனைந்து, ஆடிப் பாடி வரச்செய்தாலும், அலியை (திருநங்கையை) அணைத்துக் கொண்டால் சுகம் கிட்டுமா? ஆரியம் எனும் படுகுழி மீது புராணமென்னும் பச்சிலைபோட்டு மூடிக் கிடக்கிறது. பச்சையைக் கண்டு இச்சை பட்டுச் செல்லும் பாமரர் நிச்சயமாகப் படுகுழி வீழ்வர் என்பது ஆரியருக்குத் தெரியும்! கொக்கெனக் காத்திருந்து, குள்ளநரி போல் குறியை வஞ்சகத்திலேய நிறுத்தி, கள்ளமும் கபடமும் இல்லாதவரைக் கைதிகளாக்கி விட்டனர்; அவர்களின் கண்ணீர் வெள்ளத்தைக் கொண்டு, தமது சுயநலத்தோப்புக்கு நீர் பாய்ச்சு கின்றனர்; அவர்களின் வியர்வை, இரத்தம் ஆரியப்பண்ணைக்குப் பாய்கிறது. இதனை அறிந்தோறும், அஞ்சுகின்றனர் எடுத் துரைக்க எனில், அறியாதார் நிலைபற்றிக் கூறிடவும் வேண்டுமா?

அறிவிலே அக்கரை, நாணயத்திலே நாட்டம், நீதியிலே நோக்கம், மனிதத் தன்மையிலே நம்பிக்கை இம்மி அளவேனும் இருப்பின், ஆண்டவன் பெயரால் அளக்கப்பட்டுள்ள ஆபாசங்களை மக்களிடை எடுத்து விளக்கி அன்னியத் துணிகளை நெருப்பிலிடுவதற்கு நெடுநாட்களுக்கு முன்பே, இந்தக் குப்பை களைக் கொளுத்திவிட்டிருக்க மாட்டார்களா? கள்ளுக் கடை பகிஷ்காரத்திற்கு முன்னரேயே கடவுள் பெயரைக் கூறிக் காசைப் பறிக்கும் ஸ்தாபனங்களின் முன் மறியல்கள் நடத்தியிருக்க மாட்டார்களா?

- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

கடவுளைப் பற்றிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பலர் கூறுவர் இதுபோல. ஆம்! நெறி ஒளி, நீதி, வாய்மை, தூய்மை, அன்பு -இவையே கடவுள். அறிவான தெய்வமே! எங்கும் நிறைகின்ற பொருளே! அன்பே சிவம்! உண்மையே ஆண்டவன் பலர் போதித்தனர். - என்று

இவை இருக்கும் இதே இடத்திலே, கடவுட் கதைகள் வேறு உண்டு! தத்துவம் ஒருபுறம், தத்தித்தோம் எனத் தாண்டவமாடும் தர்ப்பா சூரரின் தந்திரக் கதைகள் பக்கத்திலே! இவையும் சரி, அவையும் சரியே என்று கொண்டு, "இடது காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே" என்பதற்குத் தத்துவம் இதுவென்பதையும் கேட்டுக் கொண்டு, இடதுகாலை இன்னவர் இந்தநாள் இந்த மடத்திலே இவ்வளவு சொகுசாகத் தூக்கி நின்றாடும் காலை, இன்ன மடாதிபதி இத்தனை பெரிய தொந்தி, இப்படிக் குலுங்க நகைத்து, இமைகொட்டாது பார்த்து, இன்னின்ன பரிசுகள் தந்தார் என்ற இந்த நடவடிக்கையும் கண்டு தத்துவத்திற்கும் நடத்தைக்கும் உள்ள தகாத தன்மையைக் கண்டு தணலிடு 'புழுவெனத் துடிக்காது கிணற்றுத் தவளை போல் இருந்து விடுகின்றனர் - மக்கள் - மக்களின் தலைவர்களிலே பலர்!

உங்கள் கடவுள் இப்படி இருப்பார் என்று விநாயக உருவத்தைக் காட்டும்போது, அந்த வைதிகன் கன்னத்திலே பகுத்தறிவாளனின் கரம் விளையாடும் காலம் விரைவிலே வரும் என்பது என் துணிபு. உன் கடவுளின் வரலாறு இது. அவருடைய குணாதிசயம் இன்னவை என்று, இன்றுள்ள புராணாதிகளைக் கூறினால் வேறுவிதியற்றவர்கள் கேட்டுக் கொள்வர். சொந்த மதியற்றவர்கள் பொறுத்துக் கொள்வர். சிந்தனா சக்தி உள்ள வர்கள் கேட்டுக் கொள்வார்களா? எனக்குத் தூய்மையான ஆண்டவன் வேண்டும். தீயன் வேண்டாம் என்று தீர்ப்புக் கூறும் காலம் வெகுதூரத்தில் இல்லை. கொஞ்சம் தெளிவு, சற்று சொரணை, நாடியிலே இன்னமும் கொஞ்சம் முறுக்கு, மனத்திலே சற்று அதிகரித்த கவலை, அறிவிலே அக்கறை பிறக்க வேண்டும்.

பயபக்தியுடன் நீங்கள் கும்பிட்டு வணங்கும் விநாயகர் யார்? மூவருள் முதல்வர் என்று சைவர்கள் மார் தட்டிக் கூறிக் கொள்ளும் முக்கண்ணனாரின் மைந்தன்! கடவுள் என்றாலே எல்லாவற்றையும் கடந்தவர் என்று பொருள். ஆனால் இங்கோ கடவுளுக்குக் குடும்பம். பிள்ளைக் குட்டி, பரத்தை முதலிய எந்தப் பாசமும் இல்லாமலில்லை.

அத்தகைய சிவனாரும், உமையம்மையும் ஒருநாள் காட்டு மார்க்கமாக உலாவிக் கொண்டிருந்தனராம் - கடலோரத்திலேஇப்போது காதலர்கள் எதிரே திரை கடலும், இதயத்திலே களிப்புக் கடலும், கடலிலே அலையும், மனதிலே கருத்தும் கொந்தளிக்க நடந்து செல்வது போல! எல்லாவற்றையும் கடந்தவர், அங்கு இரு யானைகள் கலவி செய்திடக் கண்டாராம்! கண்டதும் அவர் மனதிலே அலைமோதத் தொடங்கியது. மன்மதனைக் கண்ணால் எரித்தார் எங்கள் மகாதேவர் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் சைவர்கள், இந்தப் புராணத் தையும் பூரிப்போடும் பேசுவர். இதைக் கூறியும் நீறு பூசுவர்! காட்டானைகளின் கலவியைக் கண்டதும் காமனைக் கருக்கிய வருக்கு உள்ளத்திலே காம உணர்ச்சி ஓங்காரமாகி விட்டது! ஆம்! கடவுளுக்குத் தான் தோழரே இந்த உணர்ச்சி வந்தது! தாங்களும் காட்டானைகளாகிக் கலவி இன்பத்தைக் கண்டு காமரசத்தை உண்டுகளிக்க எண்ணினார். உமையும் சரி என்றார். இருவரும் யானை உருக் கொண்டனர். காட்டிலே திருவிளை யாடல் நடந்தது? அந்தப் போகப் பிரசாதமே யானைமுகக் கணவதி! பிள்ளையார் பிறப்புக்கு இஃதோர் வரலாறு.

இதன் ஆபாசத்தைப் பாரீர்; இத்தகைய ஆபாசத்தை ஆண்டவன் செயலென்று கூறிடும் அன்பர்களைவிட, கடவுளை நிந்திக்கும் கயவர் உண்டோ கூறீர். கருணா மூர்த்தி, கட்டுகளைக் கடந்தவர், மும்மலமற்றவர். பஞ்சேந்திரியங்களின் சேட்டைகள் பரமனை அணுகா என்று பேசுவதும், பின்னர் கண்ணுதற் கடவுள் காட்டானைகள் கலவி செய்யக் கண்டு காமங் கொண்டு, கணபதியைப் பெற்றார் என்பதை உரைப்பதும் பேதைமை யன்றோ, பித்தமன்றோ, என்று கேட்க உனக்கு உரிமை கிடையாதா?

மற்றுமோர் வரலாறு கேளீர்! பார்வதி குளிக்கச் செல்கையில், தன் உடம்பிலிருந்த அழுக்கை உருட்டித் திரட்டி ஒரு பிள்ளையை உற்பத்தி செய்து, தன் வீட்டு வாயிலைக் காவல் புரியவைத்தாராம். பத்துமாதம் சுமந்து பாமரர் பெற்றால், பார்வதியார் உடல் அழுக்கை உருட்டிப் பிள்ளையாக்குகிறார்! கடவுள் அல்லவா! இதுகூடச் செய்யாவிட்டால், இமையவனை மணந்தவளுக்கு இழுக்கு நேரிடும் என்று புராணப் புளுகர்கள் கருதினர் போலும்!

அழுக்கன், பார்வதியின் வீட்டு வாசலிலே நிற்கையில், பரமசிவனார் உள்ளே நுழைய வந்தாராம். அவருக்கு என்ன அவசரமோ பாவம். தனயன் தந்தையைத் தடுக்க, தந்தை கோபித்து வாள் கொண்டு பிள்ளையின் தலையை வீசிவிட்டுஉள்ளே நுழைந்தார். மகனின் கழுத்து பனங்காய் போலும்! ஒரே வெட்டு மகன் தலை உருண்டது!

கருணாமூர்த்தியின் காரியத்தைப் பாரீர்! மகன், மாதா நீராடுகிறாள் சற்றுப் பொறும் என்று கூறியதைக் கேட்டுக் கோபம் பொங்கிக் கொடுவாள் கொண்டு சிரச்சேதம் செய்கிறார் சிவனார். எவ்வளவு நீதி, எத்தகைய நாகரிகம். விஷயமறிந்த பார்வதி, "ஐயோ மகனே! அழுக்கனே, பாலகா?" என்று அலறி அழ, அரன் கண்டு, செத்தால் என்ன, இதோ பிழைக்க வைக்கிறேன் என்று தேற்றி வெளியே வந்து பார்க்க உடல் மட்டும் இருந்ததாம். தலையைக் காணோமாம்! செத்தவனை மீட்கும் சக்தி பெற்ற சிவனாருக்கு மறைந்த தலையைக் கண்டு பிடிக்க முடியாதுபோன காரணம் என்னவோ, வழியே ஒரு யானை சென்றதாம். அதன் தலையை வெட்டி உருண்டு கிடந்த உடலிலே ஒட்ட வைத்து பிள்ளையாரைப் பிழைக்கச் செய்ய, யானை முகத்தோடு கணபதி எழுந்தாராம்.

இந்த வரலாற்று மூலமாகவாவது ஏதேனும் கடவுள் தன்மை, கடவுட் கொள்கை, மனிதத் தன்மை, தூய்மை முதலிய நற்குணம் விளங்குகின்றனவா என்று நாத்திகமென்றால் நடுங்கும் நமது ஆத்தீக அன்பர்களைக் கேட்கிறேன்.

மற்றுமோர் வரலாறு! நமது புராண இலட்சணம் எப்படி யெனில், ஒரு நிகழ்ச்சிக்குக் குறைந்தது ஒன்பது விதமான கதை யாவது இருக்கும். புளுகர்கள் கூட்டம், போட்டியிட்டுக் கொண்டு வேலை செய்துள்ளது. விநாயகர், பார்வதியின் கர்ப்பத்திலே இருக்கையிலே ஒரு அசுரன், காற்றுவடிவில் கருவிருக்கும் இடஞ்சென்று, குழந்தையின் தலையைக் கொய்து விட உடனே பரமன், அந்தத் தலை போனாலென்ன இதோ ஆனைத்தலை இருக்க அருள்கிறேன் என்று பலித்திட, ஆனை முகத்தோடு குழந்தை பிறந்தது என்று விநாயக புராணம் கூறுகிறது. தக்கன் யாகத்தை அழிக்க சிவனாரால் ஏவப்பட்ட விநாயகர், சிரம் அறுபட்டு விழ, சிவனார் சிரமற்ற பிள்ளையைக் கண்டு, யானைச் சிரமொன்றை வைத்துப் பிள்ளையை உயிர்ப்பித் தாராம்; உயிர் வரச்செய்யும் உத்தமர், பழைய மனிதத் தலையை மட்டும் வரவழைக்க அறியார் போலும் என்ன மடமை!

யாக்ஞவல்கியர் காலத்துக்கு முன்பு, விநாயகர், ஆரியருக்குக் கிடையாதென்றும் பின்பு நான்கு விநாயகர்கள் தோன்றினரென்றும், அவர்கள் நாசஞ்செய்யும் கெட்ட குணங் கொண்டோரென்றும், இரத்தச் சோறும் இறைச்சிப் பலியும் வேண்டினரென்றும், பிறகு நான்கு விநாயகர் போய் ஒரு மஹாகணபதியாக்கப்பட்டதாகவும், இந்து மார்க்க தத்துவ விளக்கமுரைக்கும் பாபு பகவான் தாஸ் கூறுகிறார்.

எந்தப்புராணத்தை நீங்கள் நம்பினாலும் சரியே, அதிலே ஏதாவது ஆபாசமற்றதாக, அறிவுக்குப் பொருத்தமானதாக, அன்புக்கு இருப்பிடமாக, அநாகரிக மற்றதாக இருக்கிறதா என்று அன்பர்களே எண்ணிப் பாருங்கள். இத்தகைய கதாநாயகரைக் களிமண்ணால் செய்து வைத்துக் கைதொழும் போக்கு சரியா என்பதை ஆற அமற யோசிக்கலாகாதா?

இவையும் இவை போன்றவையும் வெறும் ஆரிய மதச்சேறு! தமிழர்கள் இந்த உளைச் சேற்றிலே உழலுமட்டும், முன்னேற்றமேது, வாழ்வு ஏது? களிமண்ணுங் கையுமாக இருக்கும் தோழர்களே! கசடர் புனைந்துரைகளைக் கடவுட் கதையென்று நம்பி ஏமாளிகளாக இருக்குமட்டும், அறிவு உலகில், நம் நாட்டுக்குக் கோமாளிப் பட்டமே சூட்டப்படும். இவைகளை விட்டுவிடும் நாளே, சுயமரியாதை பிறக்கும் வேளையே, மக்களின் விடுதலை நாள்!

 அடுத்த இதழில் முடியும்....

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.