கரூரில் நடைபெற்ற பேரவலம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கி உள்ள தீர்ப்புகள், வரலாற்றுச் சிறப்புடையன! மிக உறுதியாகவும், கண்டிப்பாகவும் பல ஆணைகளை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது !

இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்னும் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. த.வெ.க வின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கு முன்பிணை (ஜாமின்) வழங்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது! எனவே இருவரையும் தேடி, 5 தனிப்படைகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்!

அது மட்டுமல்லாமல், தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில், கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்டிருந்த ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது!

அந்த ஆதவ் அர்ஜுனா இப்போது தனி விமானத்தில் தில்லிக்குச் சென்று இருக்கிறார். அவருடன், பாஜகவைச் சேர்ந்த ஒருவரும், பிரதமரின் பாதுகாப்புப் படையிலிருந்து இருவரும் உடன் சென்றிருக்கிறார்கள் என்று "மெட்ராஸ் ரிவ்யூ " என்னும் வலையொளி கூறுகின்றது!

த.வெ.க. தலைவர் விஜயும் எப்போதும் தனி விமானத்தில் தான் பயணிக்கிறார்! அதற்குப் பல சட்ட திட்ட முன் நிபந்தனைகள் உண்டு. ஆனால் கரூரில் இருந்து அவர் சட்டென்று சென்னை திரும்பி விட முடிகிறது!

மணிப்பூர் கலவரம் நடந்த போதோ, கும்பமேளாவில் மக்கள் இறந்த போதோ உண்மை அறியும் குழு எதனையும் அனுப்பாத பாஜக, கரூர் நிகழ்விற்கு மட்டும் உடனே நடிகை ஹேமமாலினி தலைமையில் ஒரு குழுவை அனுப்பி வைக்கிறது!

இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பல அரசியல் உண்மைகள் நமக்குப் புரியும்!

எதிரிகள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியும் இங்கே இருக்கிறது. அவர்கள் என்னதான் செய்தாலும், திராவிட மாடல் ஆட்சியை மக்களிடமிருந்து அகற்றி விட முடியாது என்பதே அது!

- சுப.வீரபாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.