தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறார். ஊடகவியலாளர்களிடம் ஒரு நாளும் பேசுவதில்லை! இந்த அமைதிக்குப் பின்னால், ஒரு கடுமையான அடக்குமுறை ஒளிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள், விவசாயிகளுக்கான ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓரிரு வரிகளுக்காக, அடுத்த நாள் காலை அவர் சென்னையில் கைது செய்யப்படுகிறார்!
அவர் பேசியது தவறு என்று அரசு கருதுமானால், அவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கலாம்! அதை விட்டுவிட்டு, அவரைக் கைது செய்து கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்வது எந்த விதத்திலும் ஜனநாயகம் ஆகாது!
அந்தச் செயல் அரசாங்கத்திற்கு ஓர் எதிர் விளைவையே கொடுத்தது என்பதை நாம் கண்டோம்! சென்னையிலிருந்து தஞ்சை வரையில் அவரை அழைத்துச் சென்று, அவருக்குக் கூடுதல் புகழையும், திமுக தொண்டர்களிடையே ஓர் எழுச்சியையும் அந்த நிகழ்வு கொடுத்தது என்பதுதான் மிச்சம்!
அதனைத் தாண்டி, நீட் தேர்வை எதிர்த்துத் திராவிடர் கழகம் கடந்த 30ஆம் தேதி நடத்தவிருந்த இரு சக்கர வாகனப் பேரணிப் பரப்புரைக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்தது, விமர்சனத்திற்குரிய அடக்கு முறையாகவே உள்ளது!
ஒரு பக்கம் பெரியார் திடலுக்குச் சென்று ஆசிரியரைச் சந்திப்பதும், மறுபக்கம் அவர்கள் நடத்தவிருந்த அமைதிப் பேரணிக்குத் தடை விதிப்பதும் மோசமான நாடகமாகவே இருக்கிறது!
திராவிடர் கழகம் பயங்கரவாத இயக்கம் இல்லை! அந்தப் பேரணியின் நோக்கமும், தமிழ்நாடு அரசுக்கு எதிரானது இல்லை! பிறகு ஏன் அந்தப் பேரணிக்குத் தடை?
ஒன்றிய அரசைக் கண்டு முதலமைச்சர் அஞ்சுகிறாரா அல்லது அவருடைய அடிப்படை அரசியலே ஆர் எஸ் எஸ் சார்புடையதா?
வேடம் போட்டவர்கள் வென்றதில்லை என்பதைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விரைவில் உணர்வார்!
- சுப.வீரபாண்டியன்