தொடர்புடைய படைப்புகள்

"தேர்தலோடு திவால் ஆகிவிட்டது திமுக...

 இப்போது எங்கே இருக்கிறது அந்தக் கட்சி?" என்று கேட்பவர்களுக்குத் தெரியாது -

குருதி நாளத்தில் கொள்கையை ஏற்றி - இரு வண்ணக் கொடியை இறுகப்பற்றி -

"திராவிட மாடல் நாயகன் வாழ்க" என்று, அடிவயிற்றின் ஆழத்திலிருந்து அண்டம் அதிரக் குரல் கொடுக்கும் அந்தத் தொண்டனின் உணர்வில் ஆழ வேர் விட்டிருக்கிறது திமுக என்பது!

எனினும், திமுகழகத் தோழனே.... அது மட்டுமே நம் அடையாளம் அன்று!karunanidhi and dmk cadreபேசிப் பேசியும், எழுதி எழுதியும் வளர்ந்த இயக்கம், நம் திராவிட இயக்கம்! தலைவர்கள் மணிக்கணக்கில் பேசினாலும் அதனைக் கேட்பதற்கும், ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதினாலும், அதனைப் படிப்பதற்கும் திமுகவில் தொண்டர்கள் நிறைந்திருந்தார்கள்! அதுவே நம் கழகத்தின் அடையாளமும், பெருமையும் ஆகும்!

நம் தலைவர்கள் திரைப்படங்களில் வசனம் எழுதினார்கள். அது வளமான பாடப்புத்தகம் போல இருந்தது! நம் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசினார்கள்! அவை மாலை நேரப் பல்கலைக் கழகங்களைப் போல இருந்தன!

அந்த மரபு விடுபட்டுப் போனால், நம் கழகத்தின் பெருமையும் தடைபட்டுப் போகும்!

எனவே படிக்கும் பழக்கத்தை, நம் கட்சித் தோழர்கள் ஒரு நாளும் கைவிட்டு விடக்கூடாது! படிப்பு என்பது வெறும் பழக்கம் இல்லை, அது ஒரு பண்பாடு!

திமுகவினரிடம் படிக்கும் பழக்கம் உண்டு என்பதைவிட, படிக்கும் பழக்கம் உள்ளவர்கள்தான் திமுகவினர் என்பதை நாம் கவனப்படுத்திக் கொள்ள வேண்டும்!

இன்று புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் சில கட்சியினர், ஓரிரு நிமிடங்கள் தங்கள் கைபேசிகளில், காட்சிகளைப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது! அவர்களின் வரலாறு அவ்வளவுதான்! ஆனால் ஒரு நூற்றாண்டைக் கடந்து ஒளி வீசும் நம் இயக்கத்தின் வரலாறு நீண்டது, நெடியது! எனவே சின்னச் சின்னக் காட்சிகளைப் பார்ப்பதில் தவறில்லை என்றாலும், அது மட்டுமே நமக்குப் போதாது! படிப்பதே நமக்குப் பயன்தரும்!

அதனால்தான் நம் அன்பிற்குரிய தலைவர், தன்னைப் பார்க்க வரும்போது, பொன்னாடைகளோடு வர வேண்டாம், புத்தகங்களோடு வாருங்கள் என்கிறார்! அதன் பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

தனக்கு வரும் நூல்களை அவர் நாடெங்கும் அனுப்பி வருகிறார், கடல் கடந்து வாழும் திமுகவினரின் படிப்பகங்களுக்கும் கொடுத்து வருகிறார்! நம் கட்சியினர் எல்லோரும் தொடர்ந்து படியுங்கள் என்பதே அதன் பொருள்!

அனல் பறக்கும் அரசியல் சூழல்களுக்கு இடையிலும், நம் அன்புத் தலைவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்திருக்கிறார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்!

உடன்பிறப்பே என்று அழைத்து, எத்தனை கடிதங்கள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் தொடங்கி எத்தனை இலக்கியங்கள், எத்தனை அரசியல் கட்டுரைகள், எத்தனை எத்தனை சிறுகதைகள், நாவல்கள்! எண்ணிப் பார்க்கவே பெரும் வியப்பாக இருக்கிறது! ஒரு முழு நேர எழுத்தாளரால் கூட எழுதி முடிக்க முடியாத அளவிற்கு, எண்ணிறந்த நூல்களை, பன்னூறு பக்கங்களில் நமக்காக எழுதித் தந்துள்ளவர் நம் தலைவர் கலைஞர்!

தன் வாழ்க்கை வரலாற்றை, "நெஞ்சுக்கு நீதி " என்னும் பெயரில், ஆறு தொகுதிகளாக, 4162 பக்கங்களில் அவர் எழுதி முடித்திருக்கிறார்!

அது அவருடைய வரலாறு மட்டும் இல்லை, நம் தமிழினத்தின் வரலாறு, திராவிட இயக்கத்தின் வரலாறு, இடையிடையே இந்தியா மற்றும் உலகத்தின் வரலாறு!

இதுவரையில் அந்த நெஞ்சுக்கு நீதியைப் படிக்காத திமுக தொண்டர்கள் இருப்பின், இன்றே படிக்கத் தொடங்குங்கள்!

அவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படிப் படிப்பது என்று எண்ணி மலைக்க வேண்டியதில்லை! கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கலாம். ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்களையாவது படிப்பதற்கு நாம் ஒதுக்கிக் கொள்வோம்!

15 நிமிடங்கள் போதுமா என்று கேட்டால், கண்டிப்பாகப் போதாது! எனினும் இது ஒரு தொடக்கமாய் இருக்கட்டும்! படிக்கப் பழகி விட்டால், பிறகு நம்மை அறியாமலேயே நாம் அதற்குக் கூடுதல் நேரத்தை ஒதுக்கி விடுவோம்!

நல்ல நூல்களைப் படிக்கும் தொண்டர்களால்தான், நல்ல கட்சி இங்கே வலுப்பெறும்! நல்ல கட்சி வலுப்பெறும் போதுதான், நல்ல நாடு உருவாகும்!

கைபேசிகளில் ரீல்ஸ் எனப்படும் சிறிய சிறிய காட்சிகளைப் பார்க்கும் நேரம் குறைவாகவும், படிக்கும் நேரம் கூடுதலாகவும் ஆகட்டும்! படிக்கப் படிக்க, பிறகு நூல்களைப் படைக்கும் பழக்கமும் தானாகவே வந்து விடும்!

 வாருங்கள் தோழர்களே, பார்ப்போம், படிப்போம், படைப்போம்!

(நன்றி - முரசொலி - 24.08.26)

- சுப.வீரபாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.