தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தொடுத்த வழக்கு, வரும் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை என்றாலும், ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் தன் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.

பஞ்சாபில் இப்போது ஆளுநராக இருக்கும், முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும், இரண்டு நாட்களுக்கு முன்னால் இப்படி ஒரு கண்டனத்தை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியது. “ஆளுநர்கள் என்பவர்கள் ஆள்பவர்கள் இல்லை” என்பதை நீதிமன்றம் நினைவுபடுத்தியது!supreme court 670தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் இருவர் முன்னிலையில், தமிழ்நாடு அரசு கொடுத்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆளுநர்களுக்குச் சில அதிகாரங்கள் உண்டென்றாலும், சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமுன் வடிவங்களை (மசோதாக்களை) கிடப்பில் போடும் உரிமை ஆளுநர்களுக்குக் கிடையாது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதியாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளது.

ஆளுநர்கள் கோப்புகளை அரசுக்குத் திருப்பி அனுப்பலாம். அதுவும் ஒருமுறைதான் அப்படிச் செய்ய முடியும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். இரண்டில் ஒன்றை செய்வதுதான் ஆளுநர்களின் கடமை. இரண்டும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அப்படியே போட்டு வைப்பது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆளுநர்கள் தீயோடு விளையாடுகின்றனர் என்று உச்ச நீதிமன்றம் கூடியிருக்கிறது.

இவ்வளவு தெளிவாக உச்ச நீதிமன்றம் தன் கருத்தைப் பதிவு செய்திருப்பதில் நமக்குப் பெரும் மகிழ்ச்சி என்றாலும், இப்படி நீதிமன்றம் அறிவுரை செய்தால்தான் ஆளுநர்கள் தங்கள் கடமையைச் செய்வார்கள் என்ற நிலை ஏற்பட்டிருப்பது தேசத்திற்கே அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை ஆளுநர்கள் அவமதிப்பார்கள் என்றால், அவர்கள் மக்களையே அவமதிக்கிறார்கள் என்றுதான் பொருள். மக்களையும், அரசையும், அரசியல் அமைப்புச் சட்டத்தையும் அவமதிக்கும் உரிமை எந்தக் கொம்பனுக்கும் இல்லை!!

- சுப.வீரபாண்டியன்

Pin It