Droupadi Murmuதமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட வடிவங்களை எந்தக் காரணமும், நியாயமும் இன்றி முடக்கி வைக்க முயற்சி செய்தார், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி! அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றபோது, ஆளுநரின் பிழைகளை அம்பலப்படுத்தி, அந்த முன் வடிவங்களுக்கு உச்ச நீதிமன்றமே அனுமதி அளித்தது ! அதுமட்டுமல்லாமல், ஆளுநர் ஒரு கோப்பில் கையெழுத்து இடுவதற்குக் குறிப்பிட்ட கால வரையறை வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுரைத்தது !

அந்த அறிவுரையை எதிர்த்தும், கேள்வி கேட்டும் இந்தியாவின் குடியரசு தலைவர் ஒரு கடிதம் கொடுத்துள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டமே, எந்தக் கால வரையறையையும் சொல்லாத போது, உச்ச நீதிமன்றம் ஏன் அதனை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

ஆளுநர்கள் தங்கள் கடமைகளைச் செய்யாமல், இவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்று அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர்கள் கருதி இருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை! ஆனால் இன்று நடைமுறையில் ஆளுநர்கள் இப்படி நடந்து கொள்ளத் தொடங்கிய பிறகு, அதனைச் சரி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருதுவது எந்த விதத்தில் தவறு?

இந்தத் தவறுகள் திட்டமிட்டே செய்யப்படுகின்றன. எனவே இவற்றைச் சரி செய்து விடக் கூடாது என்று இந்திய ஒன்றிய அரசு கருதுகிறதா? அந்தக் கருத்தைத்தான் குடியரசு தலைவர் மூலம் திணிக்க முற்படுகிறதா?

இன்று வரையில் அரசமைப்புச் சட்டத்தில் அப்படி ஒன்று இடம் பெறவில்லை என்றால், சட்டத்தைத் திருத்தி, உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று, கால வரையறையை முடிவு செய்வதுதானே நேர்மையான அரசின் நடவடிக்கையாக இருக்க முடியும்! அப்படிச் செய்யாமல், குடியரசு தலைவரின் மூலம் குறுக்கீடு செய்வது, மாநிலங்களின் உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்கும் முயற்சிதானே!

இந்தக் குறுக்கீட்டின் மூலம் வெளிப்படையாக ஓர் உண்மை புரிகிறது! ஒன்றிய அரசில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜக, தான் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மாநிலங்களிலும், மறைமுகமாக, தானே ஆள வேண்டும் என்று கருதுகிறது! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப் புறந்தள்ளிவிட்டுத் தங்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மூலம் தங்கள் விருப்பப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்றும் திட்டமிடுகிறது!

இது ஜனநாயகத்திற்கும், மக்களின் உரிமைகளுக்கும் எதிரானது ! மாநில அரசுகளை வெறும் மாநகராட்சிகளைப் போல நடத்த நினைக்கும் திட்டம் இது! இதனை முறியடித்தே தீர வேண்டும்!

இதோ... எழுந்து நிற்கிறார், எங்கள் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் ! இந்தக் குறுக்கீட்டை எதிர்ப்போம், முறியடிப்போம் என்று அவர் முழங்கி இருக்கிறார்! அந்தக் குரல் தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்கும் !

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!!

- சுப.வீரபாண்டியன்