சாதாரணமான சில நிகழ்வுகளைக் கூடச் சிலர் வரலாற்றில் பெரியதொரு செய்தியாக ஆக்கி விடுவார்கள். நேற்று நடைபெற்ற மாண்புமிகு அமைச்சர் பொன்முடி அவர்களின் பதவிப் பிரமாணம் அப்படிப்பட்டது தான். 

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை அமைச்சராக்குவது என்பது முழுக்க முழுக்க முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று நம் அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. அதை உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி எடுத்துக்காட்டியது. அந்த நியமனம் சரியா, தவறா என்பதையெல்லாம் மக்களும் நீதிமன்றங்களும் முடிவு செய்வார்கள். இதில் ஆளுநருக்கு எந்தப் பங்கும் இல்லை! stalin ponmudi and rn raviஆனால் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி கொஞ்சம் வித்தியாசமானவர். தான்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்று அவரே நினைத்துக் கொள்வார். அந்த நினைப்பில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்வார். அமைச்சர் பொன்முடி பதவிப் பிரமாணத்திலும் அதுதான் நடந்தது! 

ஆளுநர் என்பவர் வெறும் அடையாளப் பதவியில் இருப்பவர். மற்றபடி அதிகாரம் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்குத்தான் உண்டு என்று நீதிமன்றங்கள் சுட்டிக் காட்டிய பிறகும், ஆளுநர் அடிக்கடி அடம்பிடிக்கிறார்! 

எனக்குச் சட்டம் தெரியும், நான் நினைத்ததைத் தான் செய்வேன் என்கிறார். இப்போது அவருக்குச் சட்டத்தின் அடிப்படை விதிகள் கூடத் தெரியவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தி விட்டது. அதற்குப் பின்பு உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டு, பொன்முடி அவர்களுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்திருக்கிறார்.

ஒரு விதத்தில் ஆளுநர் நமக்கு நன்மைதான் செய்திருக்கிறார். மிக இயல்பாக முடிந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியை, இவ்வளவு பெரியதாக்கி அந்த நிகழ்வுக்கு மிகப் பெரிய ஊடக வெளிச்சத்தையும் தந்துள்ளார். 

இப்போது பொன்முடியவர்கள் மாண்புமிகு அமைச்சர் ஆகி விட்டார். இனியும் ஆளுநர், அப்பதவியில் நீடிப்பது சரியாக இருக்குமா?

- சுப.வீரபாண்டியன்

Pin It