தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் தி.மு.கவையும், அதன் தலைவர்களையும் விமர்சிப்பதைத் திராவிட இயக்க ஒவ்வாமை கொண்டவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மொழி வழி மாநிலங்கள் உருவான போது நடைபெற்ற எல்லைப் போராட்டத்தில் தி.மு.க எதுவும் பங்காற்றவில்லை என்ற அவதூறு தொடர்ந்து சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சென்னை மாகாணத்தில் ஹைதராபாத் நீங்கலான ஆந்திரம், மைசூர் நீங்கலான கன்னடம், கேரளத்தின் மலபார் பகுதிகள் போன்றவை இடம் பெற்றிருந்தன. இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிய நேரத்தில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கிவிட்டன. 1938ஆம் ஆண்டு வார்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விடுதலைக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதே ஆண்டில் தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தைத் தொடங்கி வைத்தார்.திராவிட நாடு கேட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த போதும், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தீவிரமாகக் குரல் கொடுத்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதுடன், சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என்று தி.மு.க தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது.
தமிழ்நாட்டின் பகுதிகளை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டத்தை ஆந்திரத்துடன் இணைத்ததை எதிர்த்து தி.மு.க, தமிழரசு கழகத்துடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக 1960ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி மீட்கப்பட்டது. இதற்காக சித்தூர் மாவட்ட தி.மு.கவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய இந்தியப் பிரதமர் நேரு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் முட்டாள்கள் (Non Sense) என்று கண்டித்தார். போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இழிவுபடுத்திய பிரதமர் நேருவைக் கண்டித்துத் தி.மு.க தமிழகம் தழுவிய அளவில் மும்முனைப் போராட்டம் நடத்தியது.
தெற்கெல்லைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்திற்குக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நிதியுதவி அளித்து ஆதரித்தார்.
நேரடியாக எல்லைப் போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, எல்லைப் போராட்டத் தியாகிகளைப் போற்றி மதித்து மரியாதை அளித்தது பின்னாளில் அமைந்த தி.மு.க அரசு. அத்துடன் நம் தமிழ் நிலத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது. இவ்வாறு எல்லை போராட்டத்தில் தீரமுடன் ஈடுபட்ட தி.மு.கவின் தியாகத்தை மறைத்து வன்மம் பரப்பும் சூது மதியாளர்கள் இன்றும் உள்ளனர். ஆரிய சூழ்ச்சிக்குப் பலியான அவர்கள் ஈழம், கச்சத்தீவு, காவிரி நீர் பங்கீடு என்று தொடர்ந்து தி.மு.கவைக் குறி வைத்து குறை கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் அவதூறுகளைத் தாண்டி, அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல் “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி”யை முன் வைத்து திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
திராவிடத்தின் நிழல் படாமல், தமிழக வரலாறு எழுத முடியாது!
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து