“ஆட்டுக்குத் தாடி...” என்று பேரறிஞர் அண்ணா சொன்னது போல், ஒன்றிய அரசால் தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி அமர்த்தப்பட்டு இருக்கிறார்.

 இவர் வகிக்கும் பொறுப்புக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல், தான் உறுதியேற்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் காப்புறுதிக்கு மாறாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் ஊறு விளைவிக்கின்ற வகையில், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிக் கொண்டு இருக்கிறார்.

இந்தியாவின் பழைமையான தர்மம் சனாதன தர்மம், அது நிலைபெற வேண்டும் என்பன போன்ற அவரின் பேச்சு ‘சாதி’யை நோக்கியதாக இருக்கிறது.

இந்துசனாதனம் இந்திய ஒன்றியத்தின் கலாச்சாரம் என்றும், இடையில் தோன்றிய திராவிடம் என்பது வெறும் மாயை என்றும் அவர் ஓர் அரசியல்வாதியைப் போலப் பேசுவது பிதற்றலாக இருக்கிறது.

தெளிந்த மனிதத்தைப் பேசும் பகுத்தறிவு நூலான திருக்குறளைப் பிடித்துக் கொண்டு அதை ஆன்மீக நூலென்று பேசுவதும், அதற்குக் காவிச் சாயம் பூசுவதும் ஆளுநர் ரவிக்குத் தேவையில்லாத வேலை.

மேலும், உலகில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நாடும் மதம் சார்ந்த நாடாகத்தான் இருக்க முடியும் என்ற ஆளுநரின் பேச்சு, இந்திய ஒன்றியத்தை இந்துமத நாடாகக் காட்ட அவர் முயல்கிறார் என்பதை உறுதி செய்கிறது. இது அரசியல் சட்டத்திற்கு முரணானது. எந்த ஒரு மதத்தையும் சாராத நாடு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் பேசுகிறார் அவர். இந்திய ஒன்றியம் மதச்சார்பற்ற நாடு என்பதை மறந்து பேசிக் கொண்டு இருக்கிறார்.

190க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கும் இந்தப் பூமிப் பந்தில், வெறும் முப்பது நாடுகள் மட்டுமே மதச்சார்பு உடையவையாக இருக்கின்றன. மற்றவை எல்லாம் மதச்சார்பற்ற நாடுகளாக இருக்கின்றன. உண்மை இவ்வாறு இருக்க, இந்திய ஒன்றியத்தை இந்துமத நாடாக அடையாளம் காட்ட ஆளுநர் ரவி முயல்வது அத்துமீறலாக இருக்கிறது.

ஓர் ஆளுநர், தான் வகிக்கின்ற பொறுப்புக்கு அப்பாற்பட்டு ஒரு சராசரி அரசியல்வாதியைப் போலப் பேசினால் அவர் ஆளுநராக நீடிக்கத் தகுதி அற்றவர் ஆகிறார்.

அண்மையில் கோவை மாநகரில் கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த போது மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எடுத்த உடனடி நடவடிக்கை, துப்புத் துலக்கிய காவல்துறையின் வேகமான செயல்பாடு என்ன என்பதை நாடே பார்த்துக் கொண்டு இருக்கிறது.

 வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்ட அரசு, தேசியப் புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அடுத்த நான்கு நாள்களுக்குள் ஒப்படைத்தது. உடனே ஆளுநர் ரவி ஏன் இந்தத் தாமதம் என்று ‘குரல்’ எழுப்புகிறார். ஆளுநர், தமிழக அரசின் எத்தனை மசோதாக்களைக் கையொப்பமிடாமல் “தாமதப்படுத்தி” வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மாறாகவும், மக்களிடையே சனாதன மதக் கருத்துகளை விதைப்பதும், மக்களிடையே வேற்றுமைகளை உருவாக்கப் பேசுவதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சரியாகச் செயல்பட விடாமல் மசோதாக்களை முடக்கி வைப்பதுமான வேலைகளைச் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி இனியும் பதவியில் நீடிப்பது ஏற்புடையதல்ல.

தி.மு.கழகம் உள்படத் தமிழக (அ.தி.மு.க / பா.ஜ.க நீங்கலாக) கட்சிகள், ஆளுநர் ரவியை நீக்க எடுக்கும் முயற்சி மிகச் சரியானது.

ஒன்றிய அரசே! ஆளுநர் ரவியைத் திரும்பப் பெறு!!

- சிற்பி செல்வராசு

Pin It