இந்திய ஒன்றியத்தின் 13 மாநிலங்களில் பணி விலகல், இறப்பு, கட்சித் தாவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெற்றிடமாக்கப்பட்ட 29 சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளுக்கும், 3 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் நாள் இடைத் தேர்தல் நடைபெற்றது.

அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுவதால் இந்த இடைத் தேர்தல் மிகுந்த கவனத்தைப் பெறுகிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம், தொடர்ந்து ஏறி வரும் பெட்ரோல், டீசல், வீட்டு மற்றும் வணிக எரிவாயு விலைகள், தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதானத் தாக்குதல்கள் ஆகியவற்றுக்காக ஆளும் மிருகத்தனமான இந்துத்துவ அரசிற்குப் பாடம் கற்பிக்கும் வகையில் முடிவுகள் இருக்குமா, 2024 ஆட்சி மாற்றத்திற்கான சிறு ஒளிக் கீற்றாகவாவது தென்படுமா, அல்லது இன்னும் சிரமமானப் போராட்டக் களத்திற்கு மக்களைத் தயார்ப் படுத்த வேண்டி உள்ளதா எனும் கவலையாலும், இந்தத் தேர்தல் அனைத்துச் சனநாயக ஆற்றல்களாலும் கூர்மையாகக் கவனிக்கப்படுகிறது.

இம்மாதம் 2ஆம் நாள் அறிவிக்கப்பட்டத் தேர்தல் முடிவுகள் சற்று நம்பிக்கையைத் தருவதாகவே உள்ளன. 3 நாடாளுமன்ற இடங்களில் 2-ஐ பா.ஜ.க விடமிருந்து காங்கிரசும், சிவசேனாக் கட்சியும் கைப்பற்றி உள்ளன. சட்டப் பேரவைக்கான இடங்களில் 19 இடங்களை பா.ஜ.க அல்லாத இந்திரா காங்கிரசு, திரிணாமூல் காங்கிரசு, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரசு மற்றும் மாநிலக் கட்சிகள் (கூட்டணியாக இருந்தாலும்) கைப்பற்றியும் தக்கவைத்தும் உள்ளன.

கர்நாடகத்தில் 2 இடங்களில் ஒன்றைக் (ஹங்கல்) காங்கிரசுக் கட்சி கைப்பற்றியதைப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பசவராஜ் பொம்மை ஆட்சியின் தோல்வியாகப் பார்த்தாலும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியிலிருந்து ஊழல் குற்றச்சாட்டுகளால் விலகி பா.ஜ.கவில் சேர்ந்த எட்டலா ராஜேந்தரின் வெற்றியைக் கவலையோடு பார்க்க வேண்டி உள்ளது. பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 1 இடத்தைக் கைப்பற்றி உள்ளது.

மேற்கு வங்கம், ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கர்நாடகா, ஹரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 12 இடங்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றியும், 7 இடங்களைத் தக்கவைத்தும் உள்ளன. பா.ஜ.க. பல இடங்களில் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறது.

அசாம், மிசோரம், மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.கவும் கூட்டணிக் கட்சிகளும் முழுவதுமாக வென்றுள்ளன. திரிபுராவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றுமொரு குஜராத் முன்னோட்டமோ என எண்ணும் வகையில் இருக்க, வடகிழக்கில் இந்த வெற்றிகள் நமக்குப் பேரச்சத்தைத் தருகின்றன. வெறுப்பு அரசியல் அங்கு வேர் பிடிக்கத் தொடங்கிவிட்டதன் அறிகுறிகளாகவே பா.ஜ.கவின் வெற்றியைப் பார்க்க வேண்டி உள்ளது. கல்வி, பொருளாதாரம், மற்றும் சமூக ரீதியாகப் பின் தங்கிய எல்லைப் பகுதி மக்களிடையே இந்துத்துவத்தின், வெறுப்பு அரசியலின், தாக்கம் வெகு இயல்பாகவும் விரைவாகவும் பற்றிக் கொள்ளுதல் மிகவும் ஆபத்தான முன்னெச்சரிக்கையை நமக்குக் கடத்துகின்றன.

வணிக எரிவாயு விலையை 240 ரூபாய்கள் ஏற்றிவிட்டு, தீபாவளிக்காக பெட்ரோல், டீசல் விலையைச் சற்று குறைத்ததாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளதை, வடகிழக்கு தவிர்த்து இதர மாநிலங்களில் பா.ஜ.க. வின் தோல்வி முகத்தைச் சீர் செய்யவும் அதே நேரம் வணிக எரிவாயு விலை ஏற்றத்தைத் தற்காலிகமாக மக்களை மறக்கடிக்கச் செய்யும் உத்தியாகவும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் முதல்வர் முக. ஸ்டாலினும், மக்களவை உறுப்பினர் கனிமொழியும் ஏனையத் தலைவர்களும் மக்களிடம் சென்றதைப் போல ஒன்றிய அளவில் ராகுலும், பிரியங்காவும், இதர மாநிலத் தலைவர்களும் மக்களிடையே இன்னும் கடினமாக உழைக்க வேண்டி உள்ளது. மேலும் அவர்களுடையக் கட்சியினுள்ளேயே இருக்கும்

ஆர்.எஸ்.எஸ் சார்புத் தலைவர்களை அடையாளம் கண்டு முடக்க / விலக்க வேண்டியத் தேவை உள்ளது. தி.மு.க. திரிணாமூல் காங்கிரசு, சிவசேனை, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இந்த நாடு பாசிசச் சக்திகளிடமிருந்து மீள ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டி உள்ளதையே இந்த இடைத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன. தேர்தல் வியூக வணிகர் பிரசாந்த் கிஷோர் சொல்லும் அசைக்க முடியாத மோடி எனும் ஆரூடத்தை உடைத்து, 2024 இல் இந்துத்துவத்தைக் கட்டுப்படுத்தும் வேலைகளைச் சிரமேற்போம்!

- சாரதாதேவி

Pin It