மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 2016 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு அவசியம்‌ என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை(National Testing Agency - NTA) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் 03.05.2026 அன்று நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு 21.06.2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay in assemblyநீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டதால் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதில் மஹாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார், ராஜஸ்தான் ஜம்வா ராம்கரைச் சேர்ந்த தினேஷ் பிவால், மங்கிலால் பிவால், மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த முன்னாள் வேதியியல் பேராசிரியர் குல்கர்னி, பேராசிரியை மனிஷா மாந்தாரே, மனிஷா வாண்டாரே, மஹாராஷ்டிராவின் லத்துாரில் செயல்பட்டு வரும் ரேணுகாய் பயிற்சி மையத்தின் உரிமையாளர் சிவராஜ் ரகுநாத் மோடேகோன்கர் மற்றும் சில மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தினேஷ் பிவால் பா.ஜ.கவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்று கூறப்படுகிறது. கைதான ராஜஸ்தானைச் சேர்ந்த மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று பிரபலமான மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். 06.11.2025 அன்று தினேஷ் பிவால் தனது முகநூலில் "எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பயிலத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, எங்கள் குடும்பத்துக்குப் பெருமைக் குரிய ஒரு விஷயம் ஆகும். அந்த பிள்ளைகள் அனைவருக்கும் ஒரு பொன்னான எதிர்காலம் அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்" என்று பதிவு செய்துள்ளதன் மூலம் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2025 நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மங்கிலால் மகன் விகாஸ், மங்கிலால் மகள் பிரகதி, தினேஷ் பிவாலின் மகள் கன்ஜன், பிவால் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு சகோதரரான கன்ஷியாமின் மகள் சானியா, கன்ஷியாமின் மற்றொரு மகள் பாலக் ஆகியோர் முந்தைய நீட் தேர்வில் குறைந்த அளவு மதிப் பெண்கள் மட்டுமே எடுத்தவர்கள் என்பதாலும், ஓராண்டுக்குப் பிறகு தற்போது வினாத்தாள் கசிவு வழக்கில் தினேஷ் பிவால், அவரது சகோதரர் மங்கிலால், மங்கிலாலின் மகன் விகாஸ் ஆகியோர் காவல்துறையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்பதாலும் கடந்த ஆண்டும் நீட் வினாத்தாள் கசிந்திருக்குமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக எவ்வித புகாரும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியை மனிஷா மாந்தாரே நீட் தேர்வு வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இடம் பெற்று இருந்தார். வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள எவரும் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தக்கூடாது என்ற விதிமுறைகளை மீறி இவர் தனது வீட்டில் ரகசியமாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக முற்றிலும் வேறுபட்ட கேள்விகளுடன் இரண்டு நீட் வினாத்தாள் தயாரிக்கப்படும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வினாத்தாள் தேர்வு நாளன்று மாணவர்களுக்கு வழங்கப்படும். மாதிரி வினாத்தாள் என்ற பெயரில் கசிந்த வினாத்தாளில் 300 வினாக்கள் இடம் பெற்றிருந்தது. அதிலுள்ள தலா 150 வினாக்கள் இரண்டு வினாத்தாளிலும் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு நீட் தேர்வில் மொத்தமுள்ள 180 வினாக்களில் 150 வினாக்கள் கசிந்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என்று கூறி, ஆட்சிப் பொறுப்பேற்ற த.வெ.க, வினாத்தாள் கசிவு காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகும் இது குறித்து எந்தவொரு கருத்தையும் வெளியிடாமல் வாய் மூடி மௌனியாக இருக்கிறது. அத்துடன் நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் முன்பு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. ஆளும் கட்சிக்கு ஏற்புடைய கருத்துக்காக போராடுபவர்கள் மீது இவ்வாறு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன.

மாணவர்களின் மூலம் வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டு அவர்களைப் பாதிக்கும் பிரச்சினையில் இவ்வாறு அக்கறையின்றி நடந்து கொள்ளும் முதல்வர் விஜய் தான் நடத்துவது பா.ஜ.கவின் பினாமி ஆட்சி என்பதை தனது நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இனியாவது விஜய்யின் உண்மை முகத்தை தமிழ்நாட்டு இளைஞர்களும், மாணவர்களும் அறிந்து தெளிவினை பெறட்டும்.

- வழக்கறிஞர் இராம. வைரமுத்து

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.