ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி!

2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ’நீட்’ நடத்தப்பட்டது. பல மாதங்களாகவும், பல ஆண்டுகளாகவும் கடுமையாக உழைத்த மாணவர்கள் தேர்வு முடிந்த மகிழ்ச்சியை சமூக ஊடகங்களில் கொண்டாடினர்.

neet scamஆனால் இரண்டு வாரங்களுக்குள் அந்த மகிழ்ச்சி துயரமாக மாறியது. மே 12 அன்று, "கெஸ் பேப்பர்" பரவியதாகவும், தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து தேசியத் தேர்வு முகமை (என்.டீ.ஏ) நீட்-2026 தேர்வை ரத்து செய்தது. அதன்பின்னர் மனஉளைச்சலால் குறைந்தது 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான பிரதீப் மேக்வால், கடந்த 3- ஆண்டுகளாக ’நீட்’ தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த ஆண்டு சிறந்த மருத்துவக் கல்லூரியில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப் பிரதேசத்தின் லகிம்பூர் கேரியைச் சேர்ந்த 21 வயது ரித்திக் மிஸ்ரா, இது அவரது மூன்றாவது முயற்சி. பல ஆண்டுகால உழைப்பு வீணானதாக உணர்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். டெல்லியின் ஆசாத்பூரைச் சேர்ந்த 20 வயது அன்ஷிகா பாண்டே, 2025-இல் வெறும் நான்கு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் மருத்துவ இடத்தை இழந்திருந்தார். இந்த ஆண்டும் மூன்றாவது முறையாக தேர்வு எழுதிய அவர், தேர்வு ரத்து செய்யப்பட்டதனன் மனஅழுத்தத்தால் உயிரிழந்தார்.

கோவாவில் 17 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் அழுத்தத்தையும், ஹாக்கி மீதான தனது ஆர்வத்தையும் சமநிலைப்படுத்த முடியாத மனவேதனையை அவர் எழுதிய கடிதம் வெளிப்படுத்தியது.

இந்த மரணங்கள், பல ஆண்டுகளாக வினாத்தாள் கசிவுகள் மற்றும் தேர்வு முறைகேடுகள் மூலம் தொடர்ந்து வெளிப்பட்டு வரும் கல்வி அமைப்பின் ஆழமான சீரழிவை எடுத்துக்காட்டுகின்றன. தேர்வு ரத்து செய்யப்பட்டதால் சுமார் 22.8 லட்சம் மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 13.32 லட்சம் பேர் (58%) பெண்கள். இவர்கள் அனைவரும் வெறும் 59,416 மருத்துவ இடங்களுக்காக போட்டியிட்டனர்.

இது தேசிய தேர்வு முகமைய சுற்றிய முதல் சர்ச்சை அல்ல. 2024 ஆம் ஆண்டிலும் ’நீட்’ தேர்வுக்குப் பிறகு பீகார் மற்றும் ஜார்கண்டில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பலர் கைது செய்யப்பட்டனர். மேலும், 720/720 என்ற முழு மதிப்பெண்ணை 67 மாணவர்கள் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்களில் பலர் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. சில மையங்களில் நேர இழப்புக்கான இழப்பீடாக 1,563 மாணவர்களுக்கு "சலுகை (கிரேஸ்) மதிப்பெண்களை தேர்வு நடத்தும் என்.டி.ஏ வழங்கியது. சலுகை மதிப்பெண்கள் முறைகேடாக வாரி வழங்கப்பட்டன என்று பொதுமக்கள் எதிர்ப்பும், சட்டப் போராட்டங்களும் அதிகரித்ததால் அரசு பின்னர் அந்த சலுகை மதிப்பெண் முறை ரத்து செய்தது.

2024 ஜூலையில், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, நாடு முழுவதும் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை விசாரித்தது. வினாத்தாள் கசிவு நடந்தது உண்மை என்றாலும், முழுமையாக தேர்வு அமைப்பு முற்றிலும் சீர்குலைந்ததற்கான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. எனவே, கோடிக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் வகையில் தேர்வை முழுமையாக ரத்து செய்ய மறுத்தது.

தேர்வு முகமை தலைவர் ஒன்றிய அரசு சி.பி.அய் விசாரணையைத் தொடங்கியது. என்.டி.ஏ தேர்வு நடைமுறைகளை சீர்திருத்த உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. 2024 ஜூன் 22 அன்று என்.டி.ஏ தலைவர் சுபோத் குமார்சிங் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். திறமையற்ற நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த அதிகாரிகளுக்கு அதே மாதங்களிலேயே உயர்பதவியில் அமர்த்தியது ஒன்றிய ஆட்சி. அதே ஆண்டு அக்டோபரில் அவர் மத்திய எஃகு அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக நிதித்துறை ஆலோசகர் என்ற பதவியில் நியமிக்கப்பட்டார். பின்னர் தனது சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய் அவர்களின் முதன்மைச் செயலாளராகவும், மாநில எரிசக்தித் துறையின் கூடுதல் பொறுப்பாளராகவும் பணியாற்றுகிறார். பலரின் பார்வையில் இது அதிகாரப்பூர்வ மறுவாழ்வு (bureaucratic rehabilitation) எனக் கருதப்படுகிறது. நீட் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. மாணவர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பட்டதாகக் கூறப்படும் "தேர்வு மோசடிக் கும்பலின் வலையமைப்பை சி.பி.அய் விசாரித்து வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி மய்ய உரிமையாளர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ரூ.448 கோடி லாபம்

உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளை திறம்பட நடத்துவதற்காக தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்ட தேர்வுமுகமையான என்.டி.ஏ, பொதுச் சேவை நிறுவனமாக அல்லாமல், வருவாயை அதிகப்படுத்தும் வணிகக் கொள்ளை அமைப்பாகவே செயல்பட்டு வருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். 2023-ஆம் ஆண்டுக்கான மாநிலங்களவை குழு அறிக்கையின்படி, தேர்வுக் கட்டணங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வசூலித்த இந்த அமைப்பு, தேர்வுகளை நடத்துவதற்கு மிகக் குறைந்த அளவிலேயே செலவிட்டுள்ளது. 2024 ஜூலை 31 அன்று மாநிலங்களவையில் கல்வி இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் அளித்த பதிலின்படி, 2018 முதல் 2024 வரை இந்த அமைப்பு ரூ.448 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ஜே.என்.யூ கல்வி ஆய்வு மைய பேராசிரியர் சுரேஷ் பாபு கூறுகையில்: "ஊழல் போன்ற விஷயங்களில் அரசு பொறுப்பேற்க வேண்டும். தேர்வு அமைப்பின் மீதான நம்பிக்கை சிதைந்தால், அது இந்தியாவின் கல்வி மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலத்தையே பாதிக்கும்." மாணவர்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கை இடைவெளி அதிகரித்து வருவதாகவும், இது வங்கதேசம் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் இளைஞர்கள் வழிநடத்திய போராட்டங்களை நினைவூட்டுவதாகவும் அவர் எச்சரித்தார்.

கணினி வழித்தேர்விலும் முறைகேடு

2026 மே 15 அன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 2027 முதல் நீட்தேர்வு முழுமையாக கணினி வழியில் நடத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். 2024-25 கல்வியாண்டுக்கான கல்வி அமைச்சக அறிக்கையின்படி: இந்திய அரசுப் பள்ளிகளில் 60% பள்ளிகளுக்கு மட்டுமே கணினி வசதி உள்ளது. 58% பள்ளிகளுக்கு மட்டுமே இணைய இணைப்பு உள்ளது. எனவே, இந்த மாற்றம் கல்வி அணுகலை ஜனநாயகப்படுத்துவதற்குப் பதிலாக நகர்ப்புற-கிராமப்புற மற்றும் பணக்காரர்-ஏழை இடைவெளியை மேலும் அதிகரிக்கக்கூடும்.

`நீட்’-ன் அடிப்படை குறையை முன்னாள் நேஷனல் அகாடமி ஆஃப் லீகல் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச் (NALSAR). துணைவேந்தர் பேராசிரியர். (டாக்டர்) ஃபைசான் முஸ்தபா கூறுகையில்:

’நீட்’ போன்ற பொதுநுழைவுத் தேர்வுகள் உயர்குடி (elitist) தன்மை கொண்டவை. பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்த முடிந்தால் வெற்றி பெறலாம். கிராமப்புற மாணவர்களும் தாய்மொழியில் படிக்கும் மாணவர்களும் தானாகவே பின்தள்ளப்படுகின்றனர்." மேலும் அவர் கூறியதாவது: ’நீட்’ ஒரு மாணவரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் அறிவை மட்டும் சோதிக்கிறது. ஆனால் அவர் ஒரு நல்ல மருத்துவராக உருவாக தேவையான இரக்கம், மனிதநேயம், நடைமுறைத் திறன் ஆகியவற்றை அளவிடுவதில்லை."

தேசிய தேர்வு முகமை (என்.டீ.ஏ) என்ற அமைப்பு நீட்,கியூட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. அத்தனை தேர்வுகளிலும் முறகேடுகள் அம்பலமாகி வருகின்றன.

(பிரண்ட் லைன் ஜீன் - 2026, ஆங்கில இதழில் வெளிவந்த கட்டுரை)

- வேதாந்த் லகேரா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.