எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் நாள் தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க - பாஜக அடங்கியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, த.வெ.க, நாம் தமிழர் ஆகிய நான்கு அணிகள், மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க, சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க என பலமுனைப் போட்டி நிலவுகிறது.
ஒரு தனி மனிதனுக்கு மட்டுமின்றி, இனத்திற்கும், மொழிக்கும், மாநிலத்திற்கும் சுயமரியாதை என்பது இருக்கிறது. அந்த வகையில் இனம், மொழி, மண் மானம் காக்கும் அணியாக தி.மு.க தலைமையிலான கூட்டணி பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு தலைகுனியாது என்கிற சுயமரியாதை உணர்வோடு "ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கத்தை தி.மு.க கூட்டணி முன் வைக்கிறது.
தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற கட்சிகளும் சுயநல நோக்கம் எதுவும் இன்றி தமிழ்நாட்டின் நலன் என்கிற பொது நோக்கத்தோடு ஓரணியில் திரண்டு இருக்கிறது. அதற்கேற்ப அக்கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது. கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை சற்று முன்பின் இருந்தாலும் எண்ணத்தால் ஒன்றுபட்டு நிற்கிறது இந்த கூட்டணி.
ஆட்சி, அதிகாரம் என்கிற குறுகிய நோக்கம் மட்டுமே இல்லாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தி.மு.க தனது கூட்டணியை கட்டமைத்திருப்பதால் தான் இந்த கூட்டணி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி தற்போது வரை உடையாமல் உறுதியாக நிற்கிறது. அத்துடன் புதிய கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளதால் இக் கூட்டணி தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படி ஆயினும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து விட வேண்டும் என்று காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து சிலர் தீட்டிய சதித்திட்டம் தோல்வியில் முடிந்தது அனைவரும் அறிந்ததே.
கூட்டணிக் கட்சிகளிடையே பல கட்டங்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, போட்டியிட விண்ணப்பித்துள்ள கட்சியினருக்கு நேர்காணல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மேற்கொள்ளும் தீவிர ஆலோசனை என முழு வீச்சில் தி.மு.க தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்புறத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இப்போது வரை தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை எதுவும் வெளிப்படையாக நடைபெறவில்லை. இப்படியே நாட்களை கடத்தி விட்டு கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வை மிரட்டி அதிகமான தொகுதிகளை பெற்றுவிட பா.ஜ.க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
அதேபோல் த.வெ.கவின் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா 90 தொகுதிகள் மற்றும் இரண்டரை ஆண்டுகளுக்கு விஜய் முதலமைச்சர் என்று உறுதியளித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு த.வெ.கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதை தாங்கள் நிராகரித்து விட்டதாகவும் அண்மையில் கூறினார். அவ்வாறான பேச்சுவார்த்தை எங்கே, எப்போது நடைபெற்றது என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை. இதன் மூலம் இவர்களது கூட்டணி பேரங்கள் அனைத்தும் திரைமறைவிலேயே நிகழ்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நெஞ்சில் நேர்மையுடன் மக்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தி.மு.க மட்டுமே நடத்துகிறது. தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளும், தமிழரின் நலன்களும் மட்டுமே விவாதிக்கப்படுகிறதே தவிர தனிப்பட்ட ஆதாயங்கள் அல்ல. ஆகவே தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து திரும்பவும் திராவிட மாடல் ஆட்சியை மலரச் செய்வது தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் கடமையாகும்.
களம் அழைக்கிறது!
கடமை ஆற்றுவோம் !!
- வழக்கறிஞர் இராம. வைரமுத்து