எம்.ஜி.ஆரால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அ.தி.மு.க என்ற கட்சி, அம்மையார் ஜெயலலிதா காலத்தில் அம்மா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. தற்போது அக்கட்சி அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகமாக உருமாறி உள்ளது. அந்த அளவுக்கு பாஜகவின் கிளைக் கழகம் போல் அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது.periyar photo missing in admk meetingஅண்மையில் பிரதமர் மோடி பங்கேற்ற என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத் திடலின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படம் பா.ஜ.கவின் வலியுறுத்தலால் சில மணி நேரங்களில் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக தாமரைச் சின்னம் வைக்கப்பட்டது. தனது ஆட்சியையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை ஆக்கிய பேரறிஞர் அண்ணாவை தங்கள் கட்சியின் பெயரிலும், கொடியிலும் வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரின் படத்தை மாற்ற அனுமதித்த எடப்பாடி பழனிச்சாமி தான் பா.ஜ.கவின் அடிமைச் சேவகன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி வந்தாலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும் என்றே கூறுகின்றனர். இதற்கெல்லாம் மேலாக சென்னையில் பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் "சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின், பா.ஜ.கவில் இருந்து 20 - 30 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக வருவார்கள். சிலர் அமைச்சர்களாகவும் ஆவார்கள்" என்று பேசியதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குவதாக பெயரளவில் கூறப்பட்டாலும் மதுரை பொதுக்கூட்டத்திற்குப் பின்னர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பத்தோடு பதினோன்றாக அமர வைக்கப்பட்டிருந்தது, அக்கூட்டத்தை பா.ஜ.கவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையேற்று நடத்தியது, அதே நேரத்தில் அந்த ஹோட்டலுக்கு வெளியே அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அ.ம.மு.கவைச் சேர்ந்த ஒருவருக்கு மண்டை உடைந்தது, அக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு எட்டப்படாததால் புதுடெல்லிக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றது போன்ற நிகழ்வுகள் உண்மையில் இக்கூட்டணியை தலைமையேற்று நடத்துவது பா.ஜ.க தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு, ஊழல் வழக்குகள் ஆகியவற்றை காரணம் காட்டி எடப்பாடி பழனிச்சாமியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பா.ஜ.க அவர் மூலம் தமிழ்நாட்டில் தங்களின் பினாமி ஆட்சியைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே "இந்த தேர்தல் சென்னை அணிக்கும் டெல்லி அணிக்குமான மோதல்" என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.

தி.மு.க கூட்டணியை உடைக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் அவற்றை முறியடித்து 2019 முதல் அதே கூட்டணியை கட்டி காப்பாற்றி வருவதுடன், புதிய கட்சிகளையும் இணைத்து அக்கூட்டணியை வலிமைப்படுத்தியுள்ள பேராளுமையான மு.க.ஸ்டாலின் அவர்களை எதிர்த்து நிற்கும் தகுதி அடிமை எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர்.

அந்த வகையில் இருநூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுத் தெடர்வார் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.