உத்தரத்து உச்சியிலே
ஊசலாடும் ஒரு கயிறாய்
புத்தியற்ற செய்கையாலே
போனதின்று மனிதவாழ்வு

eelam_sceneகத்தியின்றி ரத்தமின்றி
காரியங்கள் செய்தகாலம்
சித்திரமாய் சிந்தையிலே
சிதிலமாகிப் போனதையோ!

சத்தியத்தைக் காப்பதிலே
சமாதானம் பிறப்பதிலே
சித்தமென்றும் இருக்குதென்று
சீராகப் பேசுவார்கள்!

நித்தமின்று மனு உரிமை
நீர்க்குமிழியாதல் கண்டும்
சத்தமின்றித் தம் கருமம்
செய்வதிலே முனைந்திடுவார்!

பத்திரிகை புரட்டுகையில்
பத்திபத்தியாய்த் தணிக்கை
புத்தியிலே படுகுதில்லை
பொதிந்திருப்ப தென்னவென்று!

சுற்றியுள்ள உலகினிலே
சேதியொன்று மறியாமல்
கிணற்றுக்குள் நுணலெனவே
கிடப்பதுதான் சுதந்திரமோ?

சாத்வீக வழிமுறைகள்
செல்லரித்துப் போதல் கண்டீர்!
சுவாசித்தலும் இனியெமக்கு
சாத்தியமோ, தணிக்கைதானோ?

யுத்தமென்ற பெயரினிலே
யுகமெல்லாம் விளைக்குந் தீமை
எத்தினத்தில் ஓயுமென்று
இதயமெங்கும் ஏக்கந்தேங்கும்!

மனிதருக்கு மானம்போல
மனித உரிமையும் வேண்டும்!
பத்திரிக்கைத் தணிக்கையெல்லாம்
பொய்யாகிப் போகவேண்டும்!

நித்தமெங்கள் நெஞ்சங்களில்
நெருப்பெரியும் அவலம்நீங்கி
நத்தைபோல ஒடுங்கிவாழும்
நாட்கள் இனிமாற வேண்டும்!

சரித்திரத்தில் கற்றபாடம்
சமாதானம் மலரச் செய்து
சரிந்திட்ட மனிதவிழுமம்
செம்மையுற்று மிளிரவேண்டும்!
 
சத்திரத்து வாழ்க்கை போல
சீரழிந்து போனவாழ்வு
பவித்திரமாய் நாளையேனும்
பார்போற்ற உயரவேண்டும்!

- லறீனா அப்துல் ஹக் (இலங்கை)

More articles by லறீனா அப்துல் ஹக்

Comments

2 comments

2
jo.tamilselvan
கடவுள் உலகத்தை படைக்கும் முன்பே விதியை படைத்து விட்டதாக இஸ்லாமும் இந்து மதமும் நம்புகிறது. உலகம் இப்படியே போகட்டுமே. நல்லாதானே இருக்கு. ஆம்! விதிப்படி எல்லாம்
லறீனா அப்து ஹக்
சகோதரர் தமிழ்ச்செல்வன்,

விதி என்ற ஒன்று இருப்பது உண்மை என்றாலும், வாழ்வில் மனித முயற்சிக்கும் இன்றியமையாத இடம் உண்டு. "எண்ணங்களுக்கு ஏற்பவே செயல்கள் அமையும்" என்பதை இஸ்லாம் நம்புகிறது. "நீ உன் கடமையை ஆற்று, பலனைப்பற்றி எண்ணாதே" என்று கீதை சொல்லியிருப்பதாய் அறிகிறேன்.

எனவே, விதிப்படி நடக்கும்னு கண்ணை மூடிக்கொண்டு முயற்சி இன்றி சும்மா இருக்குமாறு எந்த மதமும் சொல்லவில்லை. மனிதர்களுக்கு அறிவைக்கொடுத்த இறைவன் அதை ஆக்கத்துக்குப் பயன்படுத்தாமல், அழிவுக்குப் பயன்படுத்தினால், இறைவன் குற்றவாளியல்ல. மொழி என்பது ஓர் ஊடகம். சிங்கள அரசு ஒருமுறை, சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்து, தமிழையும் தமிழரையும் நசுக்க முனைந்ததன் விளைவு? 30 வருடகாலக் கொடிய யுத்தம்! மக்களின் அவலம் சூழ்ந்த வாழ்வு! மூன்று இனத்தவருமே அதனால் பாதிக்கப்பட்டார்கள். யாராலும் நிம்மதியாய் வாழ முடியவில்லை. யுத்தம் முடிந்தது என்று இன்று சொல்லப்பட்டாலும், அங்குள்ள மக்களின் வாழ்வியல் சீர்பெறவில்லை. பானையில் இருந்து நெருப்புக்குள் விழுந்த நிலைதான்! இதை "நல்லா இருக்குன்னா" சொல்லுகிறீர்கள்?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.