போருக்குப் பின்னரான இலங்கையில் இன்னும் ஜனாநாயகம் சவாலுக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. இந்த நெருக்கடிக்கு தனியே அரசாங்கம் மட்டும் காரணமல்ல. இனவாதத்தை வளர்த்த அரசியற் கட்சிகள், தலைவர்கள், அமைப்புகள், புத்திஜீவிகள், ஊடகங்கள், ஆட்சியாளர்கள், மதகுருமார் எனப் பல தரப்பினரும் இதற்குப் பொறுப்பே.

சனங்களின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்போது ஜனநாயகம் நெருக்கடிக்குள்ளாகிறது. இந்த வன்முறையை நியாயப்படுத்தும்போதும் எதன் பேராலும் வன்முறையை நியாயப்படுத்தும்போதும் ஜனநாயகமே பலியாகிறது. ஏட்டிக்குப் போட்டியான முறையில் தமிழ் சிங்கள வாதப்பிரதிவாதங்கள், அரசியல் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் நிகழ்ந்ததால் ஜனநாயகம் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டது. இதற்கு இதுவரையான ஆட்சியாளர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்கவேண்டும். அத்துடன் ஊடகங்களும் இதை ஏற்றேயாக வேண்டும்.

ஒரு நாட்டில் ஊடகங்கள்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முதல் தர அமைப்புகள் என்பது மிகச் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், இலங்கையில் இது எதிர்மாறாகவே நடந்திருக்கிறது. இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் எல்லாமே இனவாதத்திற்குப் பலியானவைதான். மாற்று ஊடகங்கள் இதற்கு விதிவிலக்கு. வெகுசன மட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் செய்தி ஊடகங்கள் அனைத்தும் தாம் ஊடகம் என்ற நிலையைக் கடந்து கட்சிப் பிரச்சார அமைப்புகளாகவும் இயக்கங்கள், அமைப்புகளின் நேரடி ஆதரவு அணிகளாகவும்தான் செயற்பட்டிருக்கின்றன. இதனால், முறையாகச் செய்திகளை வழங்கவோ, சரியான திசையில் ஆட்சியாளரையும் மக்களையும் வழிநடத்தவோ இவற்றால் முடியவில்லை.

போர்க்காலத்தில் செய்தி வெளியீடு என்பதும் ஊடக நடைமுறை என்பதும் முற்றிலும் வியாபார மயமாகியது. அத்துடன், அதிகார அமைப்புகளின் கட்டுப்பாடுகளை அனுசரிப்பதாகவும் இக்கால ஊடகங்களின் நடவடிக்கைகள்  அமைந்தன. தகவல்களைப் பொறுப்போடு வழங்குவதற்குப் பதிலாக ஊகங்கள், அனுமானங்கள், விருப்பங்கள், கட்டளைகளின் அடிப்படையில்தான் அநேகமான ஊடகங்கள் செயற்பட்டன. இதை இந்தக் காலத்து ஊடகங்களை ஆய்வுக்குட்படுத்தும் எவரும் இலகுவாகப் புரிந்து கொள்வர். (மேற்கில் போர்க்கால ஊடகங்கள் குறித்த ஆய்வு முறைமை கல்வியில் ஒரு முக்கிய அம்சமாக ஒரு காலத்தில் இருந்தது. அவ்வாறு இளைய தலைமுறையை இந்த விவகாரத்தில் ஆராய வைப்பதன்மூலம் கடந்த காலத்தவறுகளை அவர்கள் இனங்காணவும் எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் இடம்பெறுவதைத் தவிர்க்கவும் அவர்கள் இதைச் செய்கிறார்கள்).

சார்பு நிலை ஊடகங்கள் இயல்பாகவே அச்சுறுத்தலுக்குள்ளாகும். ஏனெனில் அவை ஒரு பக்கம் சார்ந்து கொள்ளும்போது அதற்கெதிரான தரப்பு இந்த ஊடகங்களை எதிர்க்கத் தொடங்கும். இதில் எதிர்க்கும் தரப்பின் பலம், அதன் அணுகுமுறை பொறுத்து இந்த எதிர்ப்பின் தாக்கம் இருக்கும். ஆயுதந்தாங்கிய அமைப்பாக இருக்குமானால் அதற்கேற்பவும் அரசியல் பலமுள்ள அமைப்பாயின் அதற்கேற்றமாதிரியும் இந்த எதிர்ப்பு வடிவம் பெறும். இலங்கையில் பல சார்பு நிலைகள் இருந்து பின்னர் அரச சார்பு அரச எதிர்ப்பு என்றவாறாகவும் தமிழர் சார்பு, தமிழர் எதிர்ப்பு என்பதாகவும் இந்த ஊடகங்கள் பெரும் பிரிவுகளில் செயற்பட்டன.

இதிலும் தமிழர் சார்பு ஊடகங்களில் முன்னர் இருந்த வெவ்வேறு அபிப்பிராய பேதங்கள் அடங்கி, பின்னர் புலிகள் ஆதரவு நிலை தோன்றியது. இது அடுத்த கட்டத்தில் தமிழ்த் தேசியம் என்று மாற்றமடைந்தது. ஆனால், இந்தத் தமிழ்த் தேசியம் என்பது புலிகள் கையாண்ட அதே அணுகுமுறையிலும் தன்மையிலும்தான் இன்னும் இருக்கிறது. (இது தனியாக ஆராயப்பட வேண்டியது).

அரச சார்பு ஊடகங்கள், அரசாங்கத்துக்கு அப்பாலான வெளியில் இயங்கும் ஊடகங்கள் என்று தெற்கின் ஊடகங்கள் பின்பு இருபிரிவுகளாகின. இதேவேளை புலிகளுடன் தொடர்புள்ள ஊடகங்கள் என்று குற்றஞ்சாட்டி தனக்கு எதிரான ஊடகங்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் மரபை ஆரம்பித்தது அரசாங்கம். இப்படிப் பல வகையிலும் ஊடக அச்சுறுத்தல் நிகழத் தொடங்கியது. இதில் தமிழ், ஆங்கில, சிங்கள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தலைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

இங்கே நாம் ஒரு முக்கியமான விசயத்தைக் கவனிக்கலாம். சார்பு நிலை ஊடகங்கள் (இங்கே சார்பு நிலை என்பது உண்மை பொய் என்பவற்றுக்கு அப்பால் விமர்சனமற்ற தத்தம் தரப்புகளை நியாயப்படுத்தும் போக்கையே குறிப்பிடப்படுகிறது) உருவாக்கிய ஜனநாயக துஷ்பிரயோகம் என்பது பின்னர் மெய்யான ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாதித்தது. ஆக மொத்தத்தில் ஊடக சுதந்திரம் என்பது முற்றாகவே நெருக்கடிக்குள்ளானது. இதில் அரச ஊடகங்கள் கூட பின்னாளில் பாதிக்கப்பட்டன. ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் அமைச்சர் மேர்வின் சில்வா நடந்து கொண்ட முறைமை நினைவூட்டத்தக்கது.

நிபந்தனையில்லாத ஆதரவை ஒரு தரப்புக்கு வழங்குதவன் மூலம் பின்னாளில் அந்தத் தரப்பினால் பாதிக்கப்படும் நிலைமை என்பது உலக வரலாற்றில் புதியதல்ல. ஆனால், இலங்கை இதை இப்போர்துதான் புரிந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சுருக்கப் பின்னணியில் ஊடகங்களின் தவறுகள் இன்னும் எப்படி அமைந்துள்ளன என்பதை வாசகர்களுக்கு மேலும் விளக்கத் தேவையில்லை. ‘இந்த ஊடகங்கள் தங்கள் தலையில் தாமே மண்ணள்ளிப் போட்டு சனங்களின் தலையிலும் நெருப்பள்ளிப் போடுகின்ற காரியங்களையே செய்கின்றன’ என்று ஒரு ஆசிரியர் கூறியதை இங்கே குறிப்பிடலாம். அவர் தமிழ்  இணையத்தளங்களில் தளங்களில் அதிகம் உலவவில்லை. அப்படி உலாவியிருந்தால் இன்னும் மேலதிகமாக ஏதாவது சொல்லியிருக்கக் கூடும்.

தமிழ்ச் சூழலில் ஊடகச் செயற்பாடு என்பது சார்பு அரசியலுக்குரியதாகவே இருக்கிறது. பொது வெளி நோக்கிய ஊடக முறைமை தமிழில் துறைசார்ந்ததாக இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பது ஊடகத் தறைசார்ந்த பலருடைய அபிப்பிராயமாகும். செய்தி அளிக்கை முறைமை, ஆசிரியர் தலையங்கங்கள், செய்திக் கட்டுரைகள், பத்திகள், விவரணக்கட்டுரைகள், அரசியற் கட்டுரைகள் போன்றவற்றில் விதிவிலக்கான சில போதுகளைத் தவிர, பொதுப்போக்கென்பது சார்பு நிலைப்பட்டே இருக்கின்றன என்பது வெளிப்படையானது.

இந்தச் சார்பு நிலையை கேள்விகளற்று, விமர்சனமில்லாமல் ஏற்கக் கூடிய ஒரு உளவியல் தமிழ் மக்களிடமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த நிலைகுறித்து எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. யாருக்கும் இதுவொரு விவகாரமாகப் புலப்படுவதும் இல்லை. ஆனால் இதுதான் அடிப்படைப் பிரச்சினையே.

ஜனநாயகம் என்பது பலவிதமான நிலைப்பாடுகளுக்கும் கருத்துகளுக்கும் இடமளிப்பதாகும். கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்வதாகும். எதிர்க்கருத்துக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிப்பதன் மூலமே அறிவையும் ஜனநாயகத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும். மக்கள் தெரிவுகளை மேற்கொள்வதற்கு அதுவே வாய்ப்பளிக்கும். மக்களின் சுதந்திர வெளியை ஜனநாயகமே உருவாக்கும். அதுவே பாதுகாக்கும். இதற்காகவே ஊடகங்கள் தொழிற்படவேண்டும்.

ஆனால், தமிழில் இயங்கும் ஊடகங்கள் இங்கே சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கும் எளிய உண்மையைக் கூடக் காணத் தவறுகின்றன. ஊடகவியலாளர்கள் என்று சொல்வோர் கூட இதை மறுக்கிறார்கள். அப்படியென்றால் இதை என்னவென்று சொல்வது? தாம் விரும்பியதைச் சொல்வதற்கு உரிமை வேண்டும் என்பது சரியானது. ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால், தான் சொல்வது மட்டுமே சரி என்று சொல்வதும் அதையே எல்லோரும் எற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் எவ்வளவுக்குச் சரியானது, நியாயமானது?

அப்படிச் சொல்லும் ஊடகங்கள் தாம் வலியுறுத்திய கருத்துகளின் படியும் நிலைப்பாடுகளின் படியும் நிலைமைகள் சாதகமாக அமையாமல் மக்களுக்குப் பாதகமாக அமையும் போது எத்தகைய பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன? மட்டுமல்ல அது குறித்த பாடங்களையோ, தவறுகளைக் குறித்த நிதானங்களையோ இவை பெற்றுக் கொண்டதாகவும் இல்லை. கடந்த காலத்தில் ஏற்பட்ட விளைவுகளில் ஊடகங்களுக்கு சம்மந்தமோ பொறுப்போ இல்லை என்று யாராவது சொல்லிவிட முடியுமா? இதை இந்த ஊடகங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் தெரியவில்லை. இன்னும் இன்னும் தவறிழைக்கும் அரசியல்வாதிகளைப் போலவும் கட்சிகளைப் போலவும் தான் இந்த ஊடகங்கள் இருக்கின்றன. ‘இவை உண்மையில் ஊடகங்களே அல்ல. கட்சியின் பிரச்சாரப் பீரங்கிகள்’ என்று ஒரு நண்பர் சொன்னது இந்தவகையில் ஏற்கக் கூடியதே. இந்த ஊடகங்களில் வேலை பார்க்கும் பத்திரிகை ஆசிரியர்கள் கட்சிகளின் பரப்புரைப் பொறுப்பாளர்களைப் போலவே விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இயங்குகின்றதை இந்த ஊடகங்களில் பணியாற்றுகின்ற இளைய ஊடகவியலாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த இளைய ஊடகவியலாளர்கள் ஊடகத்துறைக் கற்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்ட தொழில் முறை ஊடகப் பண்பை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். இன்னும் இதைத் தெளிவாக்கினால், இடைத்தரகர்களாகவும் அதிகாரிகளாகவும் இருக்கின்ற ஊடகவியலாளர்கள் தமிழில் அதிகம் என்றும் ஒரு கருத்துண்டு. இந்த நிலை தமிழின் அனைத்துப் பத்திரிகைகளிலும் தாராளமாகவே உண்டு என்பது இவர்களுடைய கருத்து.

ஆனால், தமிழில் இயங்கும் தனியார் வானொலிகளில் சில இதற்கு மாறாக ஒப்பீட்டளவில் அதிக ஜனநாயகப் பண்பைப் கொண்டவையாக இருக்கின்றன. இது கொஞ்சம் மகிழ்வளிக்கும் சங்கதி. மற்றும்படி, பத்திரிகைகள் இன்னும் மாறாக் கொள்கையுடன்தான் - அதே தவறுகளுடன்தான் - இயங்குகின்றன. இதில் முக்கியமானது இந்தப் பத்திரிகைகளில் பலவும் இணையங்களிலிருந்து பெறப்பட்டதாகக் கூறி தமக்கு விருப்பமான கட்டுரைகளையும் செய்திகளையும் பிரசுரித்து வருவதாகும். அதிலும் தமிழ் இணையத்தளங்களில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்து இந்தக் கட்டுரைகளைப் பிரசுரிக்கின்றன. இந்தக் கட்டுரைகள் ஒற்றைப்படைத் தன்மையானவை. மறுபார்வைகளற்றவை. பல சமயங்களிலும் இந்தக் கட்டுரைகள் தர்க்கபூர்வமற்றவை. குற்றப்பத்திரங்களுக்கு நிகரானவை. சில கட்டுரைகள் வசை பாடும் குறிப்புகள். சில ஜனநாயகத்துக்கு விரோதமானவை. சிலவோ ஜனநாயகத்தைத் துஷ்பிரயோகம் செய்பவை.  ‘ஒற்றைப் படைத்தன்மையான பண்புடன் இயங்கும் ஊடகங்கள் அப்படித்தானே தங்களின் தேர்வுகளையும் செய்யும்?’ எனச் சிலர் கேட்கிறார்கள். அது உண்மைதான்.

இந்த இணையத்தளங்களை நாம் முழுதாகக் குறை சொல்லி விட முடியாது. காரணம், இவை தனி நபர்களால் தமது சொந்த விருப்பங்கள், மனப் போக்குகளுக்கு ஏற்ப நடத்தப்படுபவை. சில தளங்கள் குழுநிலையில் நடத்தப்படுபவை. ஆனாலும் இவற்றில் பிற மொழிகளில் இயங்கும் முக்கிய இணையத்தளங்கள் அளவுக்கு எல்லோராலும் (அதிகமானவர்கள்) ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு நீதியும் ஜனநாயகத் தன்மையுடையதுமான தளங்கள் தமிழில் மிகக்  குறைவே. ஆகவே சார்பு நிலைத் தளங்களிலிருந்து எடுத்தாளப்படும் கட்டுரைகளும் விசயங்களும் எதனைக் காட்டும்? அவை எங்கே கொண்டு போய் எல்லாவற்றையும் நிறுத்தும்?

குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் தமிழ் இன உணர்வை அடிப்படையாகக் கொண்ட இணையத்தளங்கள் செய்த பரப்புரை முள்ளிவாய்க்காலின் தோல்வியோடு மறுபரிசீலனைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவேயில்லை. இது இனத்தின் நலன் சார்ந்த விசயம், ஆகவே அதை எக்காரணம் கொண்டும் தவிர்க்க முடியாது என்று சிலர் சொல்லலாம். ஆனால், இந்தக் கட்டுரைகூட இதே இனத்தினதும் இலங்கைத்தீவின் ஜனநாயகத்தைக் குறித்துமே எழுதப்படுகிறது. அதேவேளை இது ஏனைய பார்வைகளையும் அங்கீகரிக்கிறது. ஆனால், அவை தர்க்கத்தின் அடிப்படையாகவும் ஜனநாயகப் பண்புடனும் இருப்பதை விரும்புகிறது.

இங்கே இலங்கையின் தமிழ்ப் பத்திரிகைகளைக் குறித்து எதற்காக இத்தகைய விமர்சனத்துக்குள்ளாக்கவேண்டியிருக்கிறது என்றால், மக்களுக்கு நடுநிலைமையுடன் செய்திகளை வழங்குவதாக இவை பிரகடனஞ் செய்து கொண்டிருப்பதாலேயாகும். இணையங்கள் யாரிடமும் பணத்தை வசூலிக்கவில்லை. ஆனால் பத்திரிகைகள் பொது வாசகத்தளத்தில் நூலகங்கள் வரையில் செல்கின்றன. எனவேதான் அவற்றை நாம் ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. ஜனநாயகத்தைத் துஷ்பிரயொகம் செய்யும் ஒரு நிலையை இவை வளர்ப்பதாலும் அத்தகைய பண்பை மக்களிடம் உருவாக்குவதாலும் இந்த விமர்சனத்தை இங்கே முன்வைக்க வேண்டியிருக்கிறது. தமிழ்ச் சூழலில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியது தனியே அரசியல் அமைப்புகளால் மட்டும்தான் என்று சொல்லி விடமுடியாது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு.

இந்தச் சுருக்கக் குறிப்பின் முடிவுரையாக ஒன்றைக் குறிப்பிடலாம். நமது விருப்பங்கள் அல்ல எதையும் தீர்மானிப்பது. நிலைமைகளும் அவற்றைக் கையாளும் திறனுமே எதையும் தீர்மானிப்பது. இதை எமது கடந்த கால அரசியல் வரலாறும் கடந்த ஜனாதிபதித் தேர்தலும் தெளிவாகச் சொல்லும். இதற்கு மேலும் விடாப்பிடியாக நின்று ஜனநாயக மறுப்பில் ஈடுபட்டால் இன்னொரு ஜனநாயக மறுப்புச் சூழலும் நெருக்கடி நிலையும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் வந்தே தீரும். இது இயங்கியல் விதி.

- உமா.தங்கேஸ்வரன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It