அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்பில் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடப்பதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் இருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதாக அறிகின்றேன். அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? ஓர் இனத்தினதும் மொழியினதும் மனச்சாட்சியாகவும், அவர்களுடைய விடுதலைக் குரலாகவும் ஒலிக்கும் தகைமையர் படைப்பாளிகள். அத்தகையவர்கள் ஏன் தரந்தாழ்ந்தார்கள்?

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் ஈழரின் படைப்பிலக்கியத்திற்கு நிறை பங்களித்துள்ளவன் என்கிற முறையிலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர் படைப்பு தமிழ் இலக்கியத்தில் புதிய பரிமாணமும் கூறும் என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஊழியம் செய்தவன் என்கிற உரிமையிலும் என் சந்தேகங்கள் சிலவற்றை தமிழ்ப் படைப்பாளர்கள் முன்னர் சமர்ப்பிக்கும் கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன்.

eelam_tamils_380அண்மையில் இலங்கை நாடாளுமன்ற தமிழ்ப் பிரதிநிதிகள் சிலர் தில்லியிலுள்ள அரசியல் தலைவர்களையும், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களையும் சந்தித்து ஈழத் தமிழனத்தின் சோகங்களுக்குப் பரிகாரம் தேடித் தருமாறு மன்றாட்டமாகக் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் தரும் தகவல்கள் தமிழ் ஈழரை மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழர்களையும் மிகுந்த கவலைக்குள்ளாக்கியிருக்கின்றன. தமிழ் ஈழரின் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்து ஓராண்டு காலத்துக்கு மேலாகிவிட்டது. தமிழ் ஈழரின் புனர்வாழ்வுக்கும் மீள்குடியேற்றத்துக்கும் இந்தியா கொடுத்துள்ள 500 கோடி ரூபாயும் தமிழ் இனத்தைத் தமிழ் மண்ணிலே நிரந்தர அடிமைகளாக்குவதற்கு ராஜபக்சே அரசு செலவு செய்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருக்கின்றார்கள். இதுவரை நான்கு லட்சம் சிங்கள இராணுவக் குடும்பத்தினர் தமிழ் மண்ணிலே குடியேற்றப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சம் சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

தமிழ்ப் பெண்கள் தாம் பிறந்த மண்ணிலே தமது மானத்தையும் கற்பையும் காப்பாற்றி வாழ முடியாத அவல நிலை நிலவுகிறது. இந்த அவலம் தொடர்கதை என்பதுதான் சோகத்தின் உச்சம்.

‘இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட தமிழ் ஈழருடைய மண் சிங்களருக்குச் சொந்தமானது' என்று ராஜபக்சே கொக்கரிப்பதாகவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமுறினார்கள். தமிழ் ஈழர் நிரந்தரமாக அடிமைகளாக்கபட்டுள்ள ஒரு சூழலிலே உலகத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் மாநாடு நடத்துவது அவசியமானதா? உண்மையான படைப்பாளி தன் இனத்தின் தூங்கா மனச்சாட்சியாகவும், இனத்தின் சுதந்திரத்திற்காக மூர்க்கங் கொண்ட விடுதலை வெறியனாகவும் வாழ்தல் அவசியம். அவற்றை எல்லாம் தொலைத்து விட்டு, இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று போக்குக் காட்டுவதற்காகவா இந்த உலக தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொழும்பில் நடத்தப்படுகிறது?

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு அண்மையில் சென்று திரும்பியுள்ள தமிழ்ப் படைப்பாளிகள், அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் ராஜபக்சே அடாவடிகளுக்கு எதிராகக் குரலும் குமுறலும் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். தமிழ் ஈழருடைய இழந்துபோன உரிமைகளை மீட்டெடுக்கும் பணியிலே புலம்பெயர்ந்த தமிழர்கள் வீறுமிக்க அக்கறை கொண்டவர்களாக வாழ்வதாகவும் சாட்சியம் கூறுகின்றார்கள். இத்தகைய சூழலிலே ஒரு மாநாடு கொழும்பில் ஏன் நடத்தப்படுகிறது என்ற கேள்வி தமிழ்ப் படைப்பாளிகள் அனைவர் மத்தியிலேயும் எழுதல் நியாயமானது.

1983-ஆம் ஆண்டிற்குப் பின்னர் மடை திறந்த வெள்ளம் போல் பல வெள்ளைத்தோலர் நாடுகளில், உலக அநுதாபத்தைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழ் ஈழர் பல்லாயிரக்கணக்கில் குடியேறினார்கள். அவர்களுள், வாழ்வாதாரங்களை இழந்த விடுதலை வெறியர்கள் மட்டுமல்லாமல், பொருளாதார நாடோடிகளும் இருந்தார்கள். இவர்களிலே பலர் ஈ.பி.ஆர். எல்.எவ்., புளட் போன்ற போராட்டக் குழுக்களில் இருந்தவர்களும் அடங்குவர். இருபத்தைந்து ஆண்டுகள் பணம் சம்பாதித்த பின்னர் மீளவும் ஈழத்தில் கால்பதிக்கும் அவசரத்தில் இந்த மாநாடு கூடுவதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்களோ என்று எழும் சந்தேகம் நியாயமானது. இவர்கள் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் என்பதும் கவனத்திற்குரியது.

சீன கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாட்டினையும், உள்ளூர இந்திய எதிர்ப்பு மனோபாவத்தையும் கொண்டுள்ள ஆட்சியாளருக்கு உதவும் அவசரமே இந்த மாநாட்டின் பின்னணியில் மேலோங்கி நிற்பதாகவுந் தோன்றுகிறது. இன்று இந்திய வெளியுறவுக் கொள்கை இலங்கையிலே தோற்றது போல, எல்லா இடங்களிலும் சீனக்கொடிகளும் சீனர்களின் கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன. இந்தச் சீன ஆக்கிரமிப்பின் மான்மியத்தைப் பறைசாற்றுவதற்காவா இந்த மாநாடு?

மனித உரிமை மீறல்களும், யுத்த தர்ம மீறல்களும் சிங்கள ராணுவத்தினரால் ஏராளமாக நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பலவும் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்சே சகோதரர்களை நீதியின் முன்னர் நிறுத்தி விசாரிக்க வேண்டுமென்று உலக மாந்த நேயர்கள் கூறிவருகிறார்கள். இந்நிலையிலே தான் ராஜபக்சே அரசு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினை முரட்டுத்தனமாகத் தாக்கி உள்ளார்கள். சர்வதேச சமூகத்துகே சவால்விடும் சிங்கள இனவாத அநாகரிகத்தினைக் கண்டு உலகின் மாந்த நேயர்களும் அறிவுஜீவிகளும் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள். இத்தகைய அவலச்சூழலிலே, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பிலே மாநாடு கூடுதல் நியாயமானதா? அதுவும் மிக அவசர கதியில்?

சர்வதேச சமூகம் இலங்கையில் நடைபெற்ற இன சங்காரத்துக்கும், நரபலி வெறி யாட்டத்திற்கும் எதிராக இலங்கைமீது பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசித்து வருகிறது. இலங்கையின் முக்கியமான வருவாய், சுற்றுலாப் பயணிகளின் மூலமே கிடைக்கின்றது. சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டினால் இந்தச் சுற்றுலா வருவாய் பெரிதும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. தடித்த சிங்கள அரசு இந்த இழப்புகளைச் சந்திக்கக் கூடாது என்கிற அவசரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பது போல தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொழும்பிலே நடத்தப்படுகிறது என்று எழும் சந்தேகமும் நியாயமானதே.

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டினால் தமிழ்ப் பகுதிகளில் நடைபெறும் சிங்கள ராணுவமயமாக்கலைத் தடுத்து நிறுத்த முடியுமா? தமிழ் ஈழருக்கு இலங்கையில் சாதாரணமான மனித உரிமைகளை வென்றெடுத்துத் தரமுடியுமா? அன்றேல், இன்றும் கொலை வெறித் தாக்குதனின் இரத்தத்தினால் கறை படிந்து கிடக்கும் இலங்கை ஆட்சியாளரின் மனநிலையில் அற்ப மாற்றத்தையாவது ஏற்படுத்த முடியுமா? இவை சாத்தியப்படாவிட்டால், கொழும்பில் நடத்தப்பட இருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டினால் யாது பயன்?

ராஜபக்சே சகோதரர்களுடைய அராஜகத்தைக் கொழும்பிலே தட்டிக் கேட்கக்கூடிய ‘தில்' உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் யார் கொழும்பிலே கூடுகிறார்கள்? ‘சிங்கள அரசு பற்றி எத்தகைய விமர்சனமும் செய்ய மாட்டோம்' என்கிற உறுதிமொழி வழங்கித்தான் மாநாடு நடத்துவதற்கான அனுமதியே பெறப்பட்டதாகவும் நான் அறிகிறேன்.

தமிழ் ஈழர் அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டார்கள். தமிழச்சிகள் தங்கள் கர்ப்பப் பைகளில் சிங்களக் குழந்தைகளைச் சுமக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். சொந்த மண்ணில் அநாதைகளாகவும், அடிமைகளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மீன்பிடி, விவசாயம் ஆகிய சகல ஜீவாதாரங்களும் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. கல்வி கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையிலே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கூட்டி தமிழர்களுக்கு இலவச கதைப் புத்தகங்கள் கொடுக்கப் போகிறோம் என்று வலைச் செய்திகள் பரப்புவது எவ்வளவு கேலிக்குரியது?

espo_350பிரான்சு நாட்டு ராணி ஒருத்தி அகங்காரத்துடன் கேட்டாளாம், "தின்பதற்கு ரொட்டியில்லாவிட்டால் கேக் சாப்பிட வேண்டியதுதானே' என்று! எல்லாம் இழந்து பரிதவிக்கும் தமிழ் ஈழச் சிறாருக்கு குச்சி ஐஸ் கொடுப்பதற்கா இந்த மாநாடு நடத்தப்படுகிறது?

காட்டுபிராண்டிகள் வாழும் ஆப்பரிக்காக் கண்டம் என்று சொல்வார்கள். நைஜீரியாவில் இபோ இன மக்கள் தனி நாடு கோரிப் போராடினார்கள். அந்த விடுதலைப் போராட்டம், இபோ மக்களுக்கு தோல்வியில் முடிந்தது. ஆனால் ஓராண்டுக்கிடையில் போரினால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளும் மறக்கப்பட்ட நைஜீரியாவில் இவர்கள் இப்பொழுது தனித்துவமான இனமாக வாழ்கிறார்கள். புத்தர் பெயரால், நீச ஆட்சி நடத்தும் ராஜபக்சே ஆட்சி நிலவும் வரையில் இலங்கை யுத்தக் குற்றவாளிகள் வாழும் ஒரு மயான பூமி என்று வெறுத்து ஒதுக்கப்படுவதுதான் தர்மம்.

இந்த ஆட்சியினரால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை என்ன? எழுத்துச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு எதிராகக் கருத்துச்சொன்னது என்பதற்காக சிங்களனுக்குச் சொந்தமான ஓர் ஒளிபரப்பு நிலையமே சாம்பலாக்கப்பட்டுள்ளது. காட்டாட்சி நடக்கும் மயான பூமியிலே, ஏன் அவசரமாகச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று கூடல்?

இலங்கையில் வெளிவரும் தினசரிகள் இராஜபக்சே புகழ்பாடுவதினால் மட்டுமே உயிர் வாழ்வதாகவும் நான் அறிகின்றேன். ஏன் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை? புகழ் ஆசையா, பதவி ஆசையா, அன்றேல் தனக்கு ஒரு மனித முகம் அருள வேண்டுமென்று ராஜபக்சே கொடுத்துள்ள லஞ்சத்தின் மீதுள்ள ஆசையா? மாநாடு கூட்டுவதற்கு முன்னர், இதனை உலகப் படைப்பாளிகள் சமூகத்திற்கு விளக்க வேண்டிய தார்மீகக் கடமை அந்த மாநாட்டினைக் கூட்டும் அமைப்பாளருக்கு உண்டு. தங்கள் பக்கத்து நியாயங்களை ஏனைய தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் முன்வைக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஈழருடைய மூத்த படைப்பாளி என்கிற உரிமை கோரலுடன் முன் வைக்கின்றேன்.

- எஸ்.பொ.
தொடர்புக்கு: +919176333357

Comments

15 comments

15
Guest
Is it yet another political move by ethnic race cleansing terrorist RAJAPAKSE to supress TAMILS by the victmised ,the so called SCHOLARLY TAMILS of Eelam?
சர்வசித்தன்
ஈழத்தின் மூத்த தமிழ்ப் படைப்பாளியும், உரிமை வேட்கைப் போராளியுமான திரு எஸ்.பொ வின் கருத்தும், ஆதங்கமும் கவனிக்கப் படவேண்டியவை என்பதில் எள்ளத்தனை ஐயமும் இல்லை. தமிழக முதல்வரின் வழியில் - அதாவது ஈழத்தில் தமிழினப் படுகொலைகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில், குடும்ப உறவுகளுக்காக ‘டெல்லி’யின் கதவுகளைத் தட்டும் அவசர வேலையில் தமது இன உணர்வுக்கும் மனித நேயத்துக்கும் ‘இடைவேளை’ அளித்துவிட்டு, பின்னர் அதனை மூடிமறைக்கவும், எதிர்வரும் தேர்தலை முன்னிட்டும் அவர் நடாத்திய ‘செம்மொழி மாநாடு’ போன்ற ஒன்றினை ஒத்த வகையில் உலகத் தமிழ் எழுத்தாளர்களை - இனக் கொலை பூமியின் தலை நகரில் ஒன்று கூட்டும் முயற்சியில்; தமிழினத்தை அடிமைகளாக எண்ணும் ராஜபக்சேயும்- செயல்பட முனைவதாகவே தோன்றுகிறது. குடும்ப அரசியல், முறையற்ற சொத்துச் சேர்க்கை உட்படப் பல வழிகளிலும் ‘கலைஞ’ரின் சாயலைப் பெற்றுள்ள ராஜபக்சே இப்போது கலைஞரின் ‘அரசியல் அணுகு முறைகளை’யும் பின்பற்ற முனைந்திருப்பது ‘தமிழருக்கு’ப் பெருமை அல்லவா? ஏனெனில் ‘கலைஞர்’ தமிழர் அன்றோ !!
sathyamoorth
correct sir . they are not writers *****.
durai ilamurugu
அப்பாடி இவ்வளவு நாள் வாய் மூடி அமைதி காத்த மாபெரும் எழுத்தாளர் எஸ் பொ இப்போதாவது வாய் திறந்தாரே1 ஈழப்போர் உச்சக் கட்டத்தில் இருந்தபோது எல்லாம் இல்லத கோபம் இப்போது கொப்பளித்து வருவது ஏன்? ஒரு வேளை எஸ். பொ. விற்கு அழைப்பு அனுப்ப இல்லையோ?
விக்னேஷ்வரன்
புர்ச்சி எழுத்தாளர், சிங்கள அரசின் அறிவிக்கப்படாத ஏஜெண்ட் ஆதவன் தீட்சண்யா இந்த எழுத்தாலர் மாநாட்டிற்கு தமிழகத்தில் ஆள்பிடிக்கும் வேலையை செய்வார் என எதிர்பார்க்கலாம்.
Rishi
I support S.Po's views fully. There is no doubt that SriLankan government is all out to destroy the Tamil community. Tamils whether they are writers or not and who support the government are doing it for their personal benefit. They have no shame. May be Prof Sivathamby will be glad to chair this event.
மறத்தமிழன்
ஆசிரியரின் ஒவ்வொரு கேள்வியும் நியமனதே.... இந்த மாநாட்டிற்கு செல்லும் ஏதாவதொரு மானக்கேட்ட எழுத்தாளன் இதற்கு பதிலளிப்பானா?
பணத்திற்கு பீ திண்கின்ற கூட்டம் இன்னும் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு... இப்பேற்பட்ட பொறுக்கித் திண்பவன் எல்லாம் தமிழ் எழுத்தாளர்களா? வெட்கமாக உள்ளது....
"மன்னனும் நீயோ வளநாடும் உனதோ?" என்று வினவியோரின் அறச் சீற்றம் எங்கே போனது....
elagnairu
உலக தமிழ் சிற்றிதழ்கள் கூட்டமைப்பின் மாநாடு எதிர்வரும் ஜனவரியில் கொழும்பில் நடைபெறுவதாக பதியம் பாரதிவாசன் மூலம் அறிந்துகொண்டேன்.. இது சம்பந்தமாக அதன் பொறுப்பில் இருக்கும் வதிலை பிரபா அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியபோது " இது தற்போது இலங்கையில் வசிக்கும் நம்மைப் போண்ற தமிழர்களால் நடத்தப்படுவது, அதில் தமிழர்களாகிய நாம் பங்கு கொள்வது தவறு இல்லையே" என்றார்.. ஈழப்பிரச்சினைக்குப் பிறகு நடைபெறும் இதில் நீங்கள் பங்கு கொள்வதில் உறுத்தல் இல்லையா என்றேன்.. "இதில் உறுத்தல் ஏற்பட ஏதும் இல்லை என்றார்".. நீங்கள் பங்கு கொள்வது இலங்கை அமைதியாக உள்ளது அங்கு ஏதும் அத்துமீறல் நடக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்காதா என்ற போது " அங்குள்ள தமிழர்கள் ஏற்பாடு செய்யும்போது நாம் கலந்து கொள்வதில் தவறில்லை" என்றார்... ம்ம்ம்.. எங்கோ இருந்துகொண்டு புதிய கருணாக்கள் செய்யும் சதியில் நம் வதிலைபிரபா போன்ற தமிழர்களும் சிக்கி ஈழ தமிழனுக்கு துரோகம் செய்கிறார்களே என்ற கவலை மனதில் கருக்கொண்டுள்ளது.. இதே வதிலைபிர‌பா கோவைக‌விஞ‌ர் காற்று அவ‌ர்க‌ளோடு இணைந்து இதே இய‌க்க‌ மாநாட்டை கோவை பெரியார் ப‌டிப்ப‌க‌த்தில் ந‌ட‌த்திய‌து ஞாப‌க‌த்தில் வ‌ந்து போகிற‌து..... யார் எட்ட‌ப்ப‌ன்?.. யார்..யார்.. க‌ருணாக்க‌ள் என்ற‌ கேள்வி ம‌ன‌தில்... யாராவ‌து ப‌தில் சொல்லுங்க‌ளேன்..
9443761307
mncool
ilangaiyil vaalum thamilargal raajapaksevin arasukku bayanthu immaanattil kalanthu kolvathai thadukka mudiyathu. Aanaal veru entha thamilarum ithil kalanthukolvathi naam anaivarum thadukka vendum. Maanamulla thamilan poga maattan!
tmalarmathi
this articla very much true.
our tamil writers will not attend to the sri langa conferenc
sinmayan
நானும் எஸ் பொவின் கருத்துக்களுடன் உடன் படுகிறேன். தமிழரைப் படுகொலை செய்த மஹிந்த கூட இம் மக நாட்டில் கந்து கொள்ளக்கூடும். தமிழர்கள் அனைவரும் உடைத் சோதனைக்கு உட்படுத்தப் பட்ட பின்னரே மண்டபத்தினுள் அனுமதிக்கப் படுவர். வெக்கங்கெட்ட எண்கள் எழுத்தார் திலகங்கள் ஜனாதிபதியை வாழ்த்தி உரையாற்றுவார்.
நேற்று மயூராபதி அம்மன் பர்குட பவனியில் குடம் சுமந்து வந்த பக்தைகள் திருமதி ராஜபக்ஷ வழிபாடு (?) செய்து முடிக்கும் வரை கோவிலுக்குள் நுழைய விடாமல் நெடுநேரம் காத்திருக்க விடப்பட்டனர் . இதுதான் கொழும்பின் இன்றைய நிலைமை. அந்தோணி ஜீவா, டொமினிக் ஜீவா, தெளிவத்தை போன்றவர்களுக்கு இவை சாதாரண விடயங்கள் தான். ஞானம், மல்லிகை போன்றன அமைச்சர் அஸ்வரின் புகழ் பாடுவதில் காலத்தைச் செலவிடுகின்றன. இவ் விழாவினை தன்மானமுள்ள தமிழ் பேசுபவர்கள் பகிஸ்கரிக்க வேண்டும்.
seelan jeya
எஸ்;.பொ. சொல்வது சரியே! சகல பழிகளையும் புலிகளின்மீது போட்டுவிட்டு, பாசிச அரசாங்கத்தை நியாயப்படுத்திவரும் தமிழ்க் கும்பல் உலகில் பரந்து இருக்கிறது. இக்கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் இந்த எழுத்தாளர் மாநாட்டின் பின்னால் இருக்கிறார்கள்: நொயேல் நடேசன், ராNஐஸ்வரிபாலசுப்பிரமணியம், லெ. முருகபூபதி முதலியோர் இத்தகையவர்கள். சில மாதங்களின் முன்னர் கொழும்பு வந்த இவர்கள், ஊடகங்களில் அரசின் புகழ் பாடினார்கள்!

எல்லாம் சுமுகமாக இருக்கிறது எனக்காட்டவே இந்த மாநாட்டை ஒழுங்குசெய்துள்ளனர்;. நிச்சயம் அரசின் அமைச்சர்கள் இதில் பங்கெடுப்பர்: பாசிச அரசாங்கம ;துதிபாடப்படும்! இந்தத் ‘தமிழ்த்; தேசிய எதிர்ப்பாளர’களுடன் ‘ஞானம்’இதழ் ஆசிரிpயர், தெளிவத்தை யோசப் போன்றவர்களும் பின்னணி பற்றிய விளக்கமின்றி கருணாநிதியின் ‘செம்மொழி மாநாட்’டைப் போலவே ஒரு திசைதிருப்பும் சூழ்ச்சிதான் இந்த மாநாடு : ;எனவே, உணர்வுள்ளவர்கள் இதனைப் புறக்கணிக்கவேண்டும்!
- சாமானியன், கோப்பாய்.
c.shanmugasundaram
i agree with writer's view.tamil writers whereever they reside should not participate in this meet. Instead they first insist rajapaksha brothers to appear before the UN panel for their human rights violations and face UN trial.
mayavan
சர்வதேச எழுத்தாளர்கள் ஒன்று கூடல்கள் சந்திப்பு சம்பந்தமாகக் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகப் பல்வேறு சஞ்சிகைகள், இணைய இதழ்களிலெல்லாம் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலெல்லாம் விரிவான செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இவ்விதமானதொரு சூழலில் மதிப்புக்குரிய எஸ்.பொ.அவர்கள் இந்த மாநாடு சம்பந்தமாகத் தனது ஆதங்கங்களை வெளியிடுவதில் தவறெதுவுமில்லை. ஆனால் அவற்றை அவர் வெளியிட்ட விதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாயில்லை. மேற்படி ஒன்றுகூடல் பற்றி செய்திகள் வந்திருக்கும்போதே அவர் தனது கண்டனத்தை வெளியிட்டிருக்க வேண்டும். ஏன் வெளியிடவில்லை. ஏற்கனவே ஒருவரையொருவர் துரோகிப்பட்டங்கள் கட்டி, உணர்ச்சிவெறியில் நடாத்திய அரசியலுக்கு ஏற்பட்ட முடிவு யாவரும் அறிந்ததே. மீண்டும் அத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி எஸ்.பொ. அவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவது சரியானதொரு செயலாகத் தெரியவில்லை. அதே மாதிரி எழுத்தாளர் முருகபூபதியும் ஆத்திரப்பட்டு வழக்கு, அது , இதுவென்று மிரட்டியிருப்பதும் சரியாகப் படவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் இதுபோன்ற விழாக்களை, ஒன்று கூடல்களை நடத்துவதைப் பின் போடுவதே நல்லது என்ற தனது கருத்தை, தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தாமல், எஸ்.பொ. வலியுறுத்தியிருக்க வேண்டும். அது போல் அவர் தனது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டிருக்க வேண்டும். அதற்கு முருகபூபதியும் ஆத்திரப்படாமல் தர்க்கபூர்வமாகத் தனது பதிலைக் கீற்று இணையத்தளத்திற்கு அனுப்பிருக்க வேண்டும்.

மேலும் எஸ்.பொ. அவர்கள் மேற்படி ஒன்று கூடலை மட்டும் எதிர்க்கக் கூடாது. அண்மைக் காலத்தில் இலங்கை அரசால் நடாத்தப்பட்ட இலக்கிய விழாக்கள் பற்றிய செய்திகள் பல அவ்வப்போது ஈழத்துப் பத்திரிகைகளில் , சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் கூட சாகித்திய இரத்தினா என்ற விருதினை ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவிடமிருந்து பெற்றுக் கொள்ளும் புகைப்படங்களையெல்லாம் பத்திரிகைகளில் பார்த்த ஞாபகமுண்டு. அது போல் கவிநாயகர் கந்தவனம் கூடக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் மகவம் கலைஞர் வட்டம் புனிதக் கூட்டுறவுச் சங்கத்தின் ஆதரவுடன் நடாத்திய இலக்கியச் சந்திப்பொன்றில் 29.11.2009 அன்று கலந்து கொண்டு 'கனடாவில் கலை இலக்கிய முயற்சிகள்' பற்றிக் கட்டுரை வாசித்துள்ளார். இன்னுமொரு கனடிய எழுத்தாளர் சந்திரபோஸ் மலையகத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருக்கின்றார். இலங்கை அரசால் வழங்கப்படும் சாகித்திய விருதுகளைப் பல புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் (எழுத்தாளர் உதயணன் உட்பட) பெற்றுள்ளதாகக் கருதுகிறோம். மேலும் இவை தவிர இன்றைய சூழலில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்துத் தமிழர்கள் இலங்கையில் இந்தக் கணத்தில் தங்களது பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். பல்வேறு முதலீடுகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் அண்மைக்காலமாக வடபகுதிக்கு அதிகரித்த எண்ணிகையில் விஜயம் செய்யும் தென்னிலங்கை மக்கள் தங்குவதற்கு இருப்பிட வசதிகளை அங்கிருக்கும் தமது இருப்பிடங்களை மாற்றி வருவதாகவும், இதனால் ஏற்கனவே அவ்விருப்பிடங்களில் வாடகைக்குக் குடியிருந்த மக்களை வெளியேற்றிவருவதாகவும் இணையத்தளமொன்றில் வாசித்த ஞாபகம். உண்மையில் எஸ்.பொ. இதயசுத்தியுடன் கண்டிப்பதாகவிருந்தால் இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டும்.

1. பலவேறு நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களோ, மக்களோ இன்றைய சூழலில் இலங்கைக்குச் செல்லக்கூடாது. அகதிகளாக ஈழத்தமிழர்கள் அன்னிய நாடுகளுக்குக் கப்பல்களில் படையெடுக்கும் சூழலில் அவ்விதம் செல்வது சரியானதல்ல. நீங்கள் இலங்கை சென்று இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வது அங்கு இயல்பான நிலை இருப்பதை வெளிப்படுத்தும். ஏற்கனவே அவ்விதம் அங்கு சென்ற எழுத்தாளர்களுக்கு இலங்கை அரசு ஏதாவது பண உதவி செய்துள்ளதா என்பது பற்றி ஆராய வேண்டும்.

2. இலங்கை அரசு கொடுக்கும் விருதுகளை, இலக்கிய விழாக்களை எழுத்தாளர்கள், கலைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். ஏற்கனவே அவ்விதம் தற்போதுள்ள அரசிடமிருந்து விருது பெற்றவர்கள் தங்களது விருதுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

3. மேலும் அங்கு இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களுக்கெல்லாம் கொழும்பில் இவ்விதமான சந்திப்புகளை நடத்துவதைக் கண்டித்து தனது எதிர்ப்பினை எஸ்.பொ. தெரிவிக்க வேண்டும்.

இவற்றிற்கெல்லாம் தனது கண்டனக் குரலினைக் கொடுத்துவிட்டு எழுத்தாளர் முருகபூபதியின் மேலும், ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் மீதும் (இவர்கள் இருவரும் தான் மேற்படி ஒன்று கூடலின் பிரதான ஏற்பாட்டாளர்கள்) மீதும் தனது குற்றச்சாட்டுகளை எஸ்.பொ. வைப்பாரென்றால் அது நேர்மையான செயலாகவிருக்கும்.

மேலும் எஸ்.பொ.வின் மேற்படி ' கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - சில சந்தேகங்களும் சில ஆதங்கங்களும் ' என்னும் கட்டுரையில் எஸ்.பொ. அவர்கள் கூறும் பின்வரும் கருத்துகளைப் பார்ப்போம்.

1. அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? [இணைய, பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் செய்திகளின்படி மேற்படி கலந்துரையாடல் பற்றிய முயற்சிகள் ஆரம்பமாகி ஒருவருடத்திற்கும் மேலாகி விட்டன். அவசர அவசரமாக என்று கூறமுடியாது.]

2. 1983-ஆம் ஆண்டிற்குப் பின்னர் மடை திறந்த வெள்ளம் போல் பல வெள்ளைத்தோலர் நாடுகளில், உலக அநுதாபத்தைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழ் ஈழர் பல்லாயிரக்கணக்கில் குடியேறினார்கள். அவர்களுள், வாழ்வாதாரங்களை இழந்த விடுதலை வெறியர்கள் மட்டுமல்லாமல், பொருளாதார நாடோடிகளும் இருந்தார்கள். இவர்களிலே பலர் ஈ.பி.ஆர். எல்.எவ்., புளட் போன்ற போராட்டக் குழுக்களில் இருந்தவர்களும் அடங்குவர். இருபத்தைந்து ஆண்டுகள் பணம் சம்பாதித்த பின்னர் மீளவும் ஈழத்தில் கால்பதிக்கும் அவசரத்தில் இந்த மாநாடு கூடுவதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்களோ என்று எழும் சந்தேகம் நியாயமானது. இவர்கள் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் என்பதும் கவனத்திற்குரியது [விடுதலைப்புலிகளுட்படச் சகல போராட்டக் குழுக்களிலிருந்தவர்கள் என்பதே சரியான கூற்றாகவிருக்க முடியும். எதற்காக மேற்படி தற்போது இலங்கை அரசுடன் இயங்கும் ஒரு சில அமைப்புகளின் பெயர்களை மட்டும் எஸ்.பொல் குறிப்பிட்டிருக்கின்றாரோ? இவ்விதமான தந்திரமான கூற்றுகள் மிகவும் ஆபத்தானவை. பிழையான உணர்வுகளை வாசிப்பவர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும் வலிமை மிக்கவை.]

3. சீன கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாட்டினையும், உள்ளூர இந்திய எதிர்ப்பு மனோபாவத்தையும் கொண்டுள்ள ஆட்சியாளருக்கு உதவும் அவசரமே இந்த மாநாட்டின் பின்னணியில் மேலோங்கி நிற்பதாகவுந் தோன்றுகிறது. இன்று இந்திய வெளியுறவுக் கொள்கை இலங்கையிலே தோற்றது போல, எல்லா இடங்களிலும் சீனக்கொடிகளும் சீனர்களின் கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன. இந்தச் சீன ஆக்கிரமிப்பின் மான்மியத்தைப் பறைசாற்றுவதற்காவா இந்த மாநாடு? [இதனை எதற்காக எஸ்.பொ. கூறினாரோ அவருக்கே வெளிச்சம். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட முனைந்திருக்கின்றார். ]

எம்மைப் பொறுத்தவரையில் மேற்படி சந்திப்பானது இலங்கை அரசின் எந்தவித ஆதரவுமற்ற , எழுத்தாளர்கள் முருகபூபதி, 'ஞானம்' ஞானசேகரன் ஆகியோரின் தனிப்பட்ட முயற்சிகள் வழியாக நடைபெறவுள்ளதொரு சந்திப்பே; கலந்துரையாடலே. அவ்விதமானதொரு தீர்மானத்தைத்தான் ஊடகங்களிலிருந்து எமக்குக் கிடைக்கப்பெறும் செய்திகளின் அடிப்படையில் தீர்மானிக்க முடிகிறது. அவ்விதமில்லாமல் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன், இலஞ்சப்பணத்தில் நடைபெறும் சந்திப்பு என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எஸ்.பொ.விடம் இருக்குமென்றால் அவற்றை உடனடியாக வெளியிட வேண்டும். அவ்விதம் வெளியிடுவதன் மூலம் மாத்திரமே எஸ்.பொ. தனது வாதத்திற்கும், சந்தேகங்களுக்கும் வலுச் சேர்க்க முடியும்.

மேலும் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனித்ததன் பின்னர் இலங்கை அரசிடமிருந்து விருதுகள் பெற்ற எழுத்தாளர்களை மேற்படி விருதுகளைத் திருப்பி அனுப்பும்படி எஸ்.பொ. கண்டிக்க வேண்டும். அத்துடன் அடிக்கடி இலங்கை சென்று இலக்கிய நிகழ்வுகள், நூல் வெளியீடுகளென்று கலந்து கொள்ளும் எழுத்தாளர்களை அவர் கண்டிக்க வேண்டும். அவ்விதமான பிரயாணங்களை அவர்கள் தவிர்க்க வேண்டுமென்று அவர் வலியுறுத்த வேண்டும். அவ்விதம் அவர் செய்யாது விட்டால் அவரது தற்போதைய குற்றச்சாட்டுகளெல்லாம் அர்த்தமற்றவையாகப் போய்விடும்.

எம்மைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் போர்ச் சூழல்களினால் பெரிய அளவில் ஈழத்துப் படைப்பாளிகளும், ஏனைய நாடுகளில் வாழும் படைப்பாளிகளும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவிருந்தன. தற்போது அதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதால் தனிப்பட்டரீதியில் எழுத்தாளர்கள் சந்திப்பதில் தவறில்லை. ஏனெனில் மேற்படி சந்திப்பானது அரசின் ஆதரவுடன், அரசின் அமைப்புகளினூடு நடாத்தப்படுமொரு சந்திப்போ அல்லது விழாவோ அல்ல. வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிவதற்கு இதனையொரு வாய்ப்பாகக் கருத முடியும். தமிழகத்திலிருந்து திருமாவளவன் செல்லவில்லையா? அந்தச் சந்திப்புடன் ஒப்பிடும்பொழுது இந்தச் சந்திப்பு அரசியல்ரீதியில் அஞ்சும் வகையிலானதல்ல.

தேவையற்ற சந்தேகங்களை வெளியிட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுவதை எஸ்.பொ. தவிர்க்க வேண்டும். அதே சமயம் அரசியல் பேச மாட்டோமென்று மேற்படி சந்திப்பின் ஏற்பாட்டாளர்கள் அடம் பிடிக்க கூடாது. மேற்படி ஒன்று கூடலில் தற்போதுள்ள ஈழத்தின் நிலைமைகளையிட்டு நியாயமான தமது கண்டனங்களை எழுத்தாளர்கள் வெளியிட்டு இறுதியில் அறிக்கை வெளியிட வேண்டும். வடகிழக்கின் அத்து மீறிய அரசின் குடியேற்றத் திட்டங்கள், இராணுவமயமாக்கல், தடுப்பு முகாமகளில், சிறைச்சாலைகளில் வாடும் மக்கள், மீளக்குடியேற்றப்பட்டவர்களின் ஆதரவற்ற நிலை, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்... இவை பற்றியெல்லாம் தங்களது கருத்துகளை எழுத்தாளர்கள் வெளியிட அனுமதிக்க வேண்டும். யுத்தக் குற்றங்கள் பற்றிய நியாயமான சர்வதேச, உள்ளூர் விசாரணைகளை வலியுறுத்த வேண்டும். இவ்விதம் செய்யாமல் ஒருவரையொருவர் சந்திப்பதற்காகத்தான் இந்தக் கலந்துரையாடலென்றால் அதற்கு அர்த்தமேயில்ல
என்.சரவணன்
எஸ்.பொ.வின் கட்டுரையை வாசித்ததிலிருந்து அதிலுள்ள அபத்தங்களையிட்டு வருந்திக்கொணடிருந்தேன். பிழையாக ஏனையோரை வழிநடத்தக்கூடிய அவரது கட்டுரையில் இருந்த முக்கிய புள்ளிகளை நான் எண்ணியதையும், அதற்கு மேலும் மாயவன் கவனமாக இங்கு பதிவு செய்திருக்கிறார்.

மாயவனுக்கு நன்றிகள்.

தமிழக எழுத்தாள நண்பர்களே... (ஏனையோருக்கும்) சில வேளைகளில் நீங்கள் இது விடயத்தில் அவசரப்பட்டு அணுகுவதை சிறிது கவனித்துக்கொள்ளுங்கள்... சரிபார்த்துக்கொள்ளுங்கள்....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.