5G அலைக்கற்றை ஒதுக்கீட்டில், 4.30 இலட்சம் கோடிக்கு ஏலம் போகும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்த்து இருந்த நிலையில் 1.50 இலட்சம் கோடிக்குத்தான் போயுள்ளது.அம்பானியின் ஜியோ நிறுவனம் அதிக அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளது. 30 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 5G சென்ற ஏலத்தை விட, 141 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் பல மடங்கு குறைவாக எப்படி ஏலம் எடுக்க முடியும்? சிறிது பின்னோக்கிப் பார்ப்போம்.
காற்றில் ஊழல், காற்றில் ஊழல் என்று 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரும் பரபரப்பில் ஊடகங்கள் பதைபதைத்தன, அன்று. வினோத் ராய் என்ற தணிக்கைத் துறை அதிகாரி இழப்பு என்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். 176 என்ற எண்ணுக்கு பின்னால் 10 சுழியங்களை இட்டு நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு என்று தலைப்புச் செய்திகள் வெளிவருகின்றன. அதற்குக் கீழ் அன்றைய தகவல் தொழில் நுட்ப அமைச்சரான ஆ.ராசா அவர்களின் படம் தவறாமல் இடம் பெற்றது. அன்று, ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ராசா என்று அழைக்கப் பட்டார்.
இப்போது அவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று கூடத் தெரியவில்லை. ஊழல் அதிகரித்துவிட்டதாக ஒரு பெரியவர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். ஆட்சி நிலைகுலையும் அளவிற்கு, வீதிகளில் இறங்கிக் கூப்பாடு இட்டனர். 30 மெகா ஹெட்ஸ்க்கு ஏலம் நடந்த 2Gக்கு இவ்வளவுதான் வரவா என்று வாய் கிழியப் பெருங்கூச்சல் இட்டவர்கள், 51000 மெகா ஹெட்ஸ் (51 ஜிகா ஹெட்ஸ்)க்கு மயான அமைதி காக்கின்றனர்.
அப்போது அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பதவி விலகினார். மேலும் சிறை சென்றார். தானே வாதாடி தனக்கான நியாயத்தை நிலை நிறுத்த 10 ஆண்டுகள் கடும் போராட்டத்தை நடத்தினார். பெரும் அவப்பெயரை அவரும், தி.மு.கழகமும் சந்திக்க வேண்டி இருந்தது. மேடைகள் தோறும் அவதூறுகள் அள்ளி வீசப்பட்டன. கிட்டதட்ட தி.மு.கழகம் சிலுவையில் அறையப்பட்டது எனலாம்.
தற்போது ஏதாவது ஒரு பெரிய ஊடகம் 28 என்ற எண்ணிற்கு அருகில் 11 சுழியங்கள் போட்டு இந்தியாவிற்கு இழப்பு என்ற தலைப்புச் செய்தியில் அல்லது குறைந்தது இன்றைய அமைச்சரின் பெயரான அஸ்வின் வைஷ்னவ்-வை குறிப்பிட்டு கேள்விகள் கேட்கிறார்களா அல்லது கேட்பார்களா? இது இல்லை. ஆளுக்கு ஒரு நியாயம் என்பதுதான் ஊடக அறமா?
அன்று போட்டியை உருவாக்கி விலையைக் குறைத்து, அதன் பயனை நிறுவனங்களுக்குக் கொடுக்காமல், மக்களை அடைய செய்தார் ஆ.ராசா அவர்கள். ஆனால் தற்போது 4 நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும் இதன் பலனை மக்களுக்குக் கொடுப்பார்கள் என்று கற்பனையாய்க் கூட எண்ணிப்பார்க்க முடியவில்லை.
முன்னாள் ஒன்றிய அரசின் அமைச்சர் ஆ.ராசா அவர்கள் சொல்கிறார் 5G அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரும் ஊழல் நடைபெற்று இருக்கிறது என்று.
ஊடகங்களும், ஊழல் எதிர்ப்புப் பேர்வழிகளும் வாய் திறப்பார்களா? அல்லது அவர்களின் தார்மீகக் கடமைகளை எப்படிச் செய்யப் போகிறார்கள்?
பொறுத்திருந்துப் பார்ப்போம்!
- மதிவாணன்